Monday, February 26, 2007

028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது


குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது
தணிகை மலை தென்றலும் தாலாட்டு பாடுது
செந்தூரின் அலை ஓசை ஸ்ருதியாக மாறுது
(குமர மலை குயிலினம்)

தெள்ளு தமிழ் பாட்டிலே புள்ளி மயில் ஆடுது
வள்ளலவன் பேரைத் தினம் சேவலினம் பாடுது
சரவணபவாவென்ற சங்கீதம் பரவுது
ஆறுபடை வீடுடைய எழில் வேந்தன் நாமத்தை
(குமர மலை குயிலினம்)

பழமுதிரும் சோலையில் வண்டினம் முழங்குது
அழகன் அவன் அருளமுதம் தேனாகப் பாயுது
வள்ளியுடன் குஞ்சரியின் மணக்கோலம் காணுது
அன்னை உமை தந்தை சிவன் அருளாசி கேட்குது
திருமுருகன் நாமம் அதை பக்தியுடன் பாடும் போது
பழனி மலை பஞ்சாமிருதம் நாவினிலே இனிக்குது
(குமர மலை)

இராகம்: மாண்ட்
தாளம்: கண்ட சாபு
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: கே.எஸ். இரகு


பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Monday, February 12, 2007

027: சிங்கார வேலனே தேவா - ஒரு பின்னணி!

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த, ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!

பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள். கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சியாரின் வாசிப்பு அப்படி!

அப்படியே காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம்,
பாலைய்யாவின் கன ஜோரான வாசிப்பு பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் அழகே தனி!

karaikurichi

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, தெரியுமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை!
அவர் போட எண்ணிய பாட்டு, தேவாரப் பாடல்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு...

இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம், 'சிங்கார வேலனே தேவா' என்கிற மெட்டில்.

பின்னர் யாரோ ஒருவர், வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, ஜானகியம்மா வரவழைக்கப்பட்டார்.
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது; கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" என்று எழுதினார். ஜானகியம்மா பாடினார்.
ஆனால் காருக்குறிச்சியார் ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை.
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்.
ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி.

(ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது)



சரி, நாம் சிக்கல் சிங்காரவேலர் சந்நிதிக்குச் செல்வோம் வாருங்கள்!
நாகைப்பட்டினத்தில் இருந்து கூப்பிடு தூரம் தான்.

pic2

முருகன் கொள்ளை அழகு. வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்.
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை!
இங்கு உற்சவ மூர்த்தி மட்டும் தான்!
இக்கோவிலின் மூலமூர்த்தி சிவனார், நவநீத ஈஸ்வரர் - வேல் நெடுங் கண்ணி அம்மை.
சூர சம்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, ஒரு அதிசயம் காணலாம். என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது.

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!

சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா



படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா. பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு

026: மனம் இரங்காதோ ஐயா?




முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?

முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?
திருத்தணிகை வாழும் (முருகா)

வருக வருக நீ வண்ண மயில் ஏறி!
வாரண முகத்தோனே வணங்கும் சிவபாலன் (முருகா)

வையகம் போற்றும் வானவர் தலைவா!
வள்ளி மணவாளா வேலாயுதா கந்தா!
கைவிடுமாகில் யார் கதி எனக்கு?
கார்த்திகேயனே உன்னைச் சரணடைந்தேன்! (முருகா)


இராகம்: சண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ??
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Saturday, February 03, 2007

025: முருகா முருகா முருகா வா!

22 Nov 2016
அமரர். பாலமுரளி கிருஷ்ணா, தாமே எழுதி + பாடிய, முருகன் பாடல்!

 

முருகா முருகா முருகா வா!
மோகன குஞ்சரி பதியே வா!
முருகா முருகா முருகா வா!

மறைகளின் மூலப் பொருளினை ஓதி
பரசிவன் குருவான ஞானவரா - பேர்
அருள் நிறை விழியிலே அன்பு கொண்டிட வா
முருகா முருகா முருகா வா!

குன்று தோறாடும் குகனே வாராய்
குறை அகற்றிடும் சிவகுமரனே வாராய்
வென்றிட வல்வினை வேருடனே என் முன்
முருகா முருகா முருகா வா!

பெரும் இசை வித்தகர் திரு.பாலமுரளிகிருஷ்ணாவே இயற்றிப் பாடிய பாடல் இது.

இராகம்: குந்தளவராளி
தாளம்: ஆதி

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
(Changed the link to https://www.youtube.com/watch?v=f84-_28phLk )

***

அருஞ்சொற்பொருள்:

குஞ்சரி - தெய்வயானை
மறைகளின் மூலப்பொருள் - ஓம்காரம்
ஞானவரா - ஞானத்தில் சிறந்தவன்

Friday, February 02, 2007

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்
பாடியவர்கள்: பிரியா உடன்பிறந்தோர் (சகோதரிகள்)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Monday, January 29, 2007

023 : ஸ்ரீஸ்கந்த குரு கவசம் - 1




ராகம் : நாட்டை

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசந்தனை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகின்றேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள போற்றுகின்றேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சந் தீர்த்தென்னை ரட்சித்திடுவீரே!

Wednesday, January 10, 2007

022: முருகா நீ வரவேண்டும்!



முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!

நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! (நினைத்த)

கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)


பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைத்தவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்: என்.எஸ். சிதம்பரம்

Tuesday, January 09, 2007

021: யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!!!



யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!

அதிகோர சம்சாரத்தில் யாரே கதி?
குமரன் தாள் பணிந்தே துதி!

சமரம் தன்னில் சூரனை தாரகனோடு
சம்ஹாரம் செய்த சிங்கார சங்கர
குமரன் தாள் பணிந்தே துதி!

ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! பக்தர் ஹ்ருதய
வாசன்! சண்முக ராமதாசன் குலதெய்வ
குமரன் தாள் பணிந்தே துதி!

இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: D.K. பட்டம்மாள்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி


***

அருஞ்சொற்பொருள்:

அதிகோர சம்சாரம் - மிகக் கடுமையான உலக வாழ்க்கை
சமரம் - போர்
சூரன், தாரகன் - சூரபத்மனும் அவன் தம்பியும்

Sunday, January 07, 2007

020: முருகா முருகா முருகா - பாரதியார் பாட்டு



முருகா முருகா முருகா

வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலர் இங்கு உளரே
அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே - அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே (முருகா)

அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடி மேல்
பொறிவேலுடனே வளர்வாய் - அடியார்
புது வாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)

எஸ்.பி. இராம் இந்தப் பாடலைப் பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, December 26, 2006

019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!



அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்





குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்



நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்



மெட்டு: காவடிச்சிந்து
இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்
பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள்

Monday, December 18, 2006

018: பாரதியின் வேலன் பாட்டு!

பாரதியின் வேலன் பாட்டு

பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாடல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!


வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே


கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!



வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.


கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!


ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!


பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை

"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!

Sunday, December 03, 2006

017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)




திரைப்படம்: கந்தன் கருணை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


திருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்!

Thursday, November 23, 2006

016. வனவேடன் ஒருவன் வந்தான்

எத்தனையே அரிய பெரியவர்கள் கவி சமைத்துக் கந்தனைக் களித்திருக்கிறார்கள். அதை இசை வல்லுனர்கள் இனிமை கூட்டி உளமும் உயிரும் உருகிடப் பாடிப் புண்ணியம் செய்திருக்கிறார்கள். நாமும் முருகன் மேல் பாடல் எழுதி அதற்கு இசையும் கோர்த்தால் எப்படியிருக்கும் என்று நெடுநாள் ஆவல். ஆவல் பெருகினால் செயல்படுத்துவது கந்தனல்லவா. கவியும் தந்து அதைப் பாட ஷைலஜா அவர்களையும் அறிமுகப்படுத்தினான். இதோ பாடல். இதை இங்கே ஷைலஜா அவர்களின் இனிய மெட்டிலும் குரலிலும் கேட்கலாம்.



வனவேடன் ஒருவன் வந்தான்
எனைக் கணை போலும் விழியாலே
உருக்கியே நின்றான்
முருகன் என்னும் பெயரோடு (வனவேடன்

சிலை தொட்ட கை கண்டுச் சிலையாவதோ
மலை தோற்ற தோள் கண்டு மலைப்பாவதோ
தலையோடும் அறிவில் அவன் தலைப்பாவதோ
நிலைமாறி நான் இன்று தடுமாறவோ (வனவேடன்

வேல் கொண்ட கந்தன் எனக் காட்சி நின்றான்
கோள் தன்னை விரட்டி நல்ல ஆட்சி தந்தான்
பாலுள்ளம் பொங்கி எழ மாட்சி செய்தான்
கால் என்றன் தலை சூட்டி மீட்சி செய்தான் (வனவேடன்

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, November 18, 2006

015: என்னைக் கா வா வா! முருகா வா வா!

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)


ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!




இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி

Thursday, November 16, 2006

014 : தமிழுக்கு உரிமை உண்டு!!!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?

முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!





பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

Sunday, November 05, 2006

013 : எத்தனை கண் வேண்டுமைய்யா?

தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி


எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்

தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்

குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்

அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்

முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்

Sunday, October 29, 2006

012: நீயே சரண் ஷண்முகா


நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீ அருள்வாய் என நான்
நின் அடிமைக்கு (நீயே சரண்)

சேய் யாரிடமும் செல்லுமோ - ஈன்ற
தாய் அல்லால்
திருமால் மருகனே
வடிவேல் முருகனே (நீயே சரண்)

சுவாமிநாத மாமயூர வாஹ
சங்கர கௌரி குமார விசாக
ராமதாசன் பணியும் குஹா
சுரராச பூஜித வர முருகா (நீயே சரண்)

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இராகம்: காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

Wednesday, October 25, 2006

011 : மண்ணுக்கும் விண்ணுக்கும்....!

Photobucket - Video and Image Hosting

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)

குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ
குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்

Thursday, October 12, 2006

010. பழநி மலை மீதிலே

முருகன் பாடல் என்றால் கே.பி.சுந்தராம்பாள் பாட்டு இல்லாமலா! இதோ இன்றைய முருகனருளில்!



பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பழநி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படை வீடு கொண்ட முருகா

பால்
பழம்
தேனோடு
பஞ்சாமிர்தம் தந்து
பக்தரைக் காக்கும் முருகா
பக்தரைக் காக்கும் முருகா

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்
சக்தி வடிவுண்டு
மயிலுண்டு
கொடியுண்டு வேல் வேல்

வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
வடமிட்டப் பசுந் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற கரம் பல நூறு
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
இடை தொட்ட கை கொண்ட பிள்ளை
எங்கள் இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
இயலிசை நாடகத் தமிழுக்கு எல்லை முருகா
வேல் வேல் சக்தி வேல் வே
வெற்றி வேல் வேல்
ஞான வேல் வேல்
வடி வேல் வேல்

பாடியவர் : கேபி.சுந்தராம்பாள்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்
திரைப்படன் : துணைவன்
படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/K._B._Sundarambal

இந்தப் பாடலைக் கேட்க



அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, October 10, 2006

008 : முருகன்மேற் காதல்

"முருகன்மேற் காதல்" என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் இயற்றிய பாடல். ஒலி வடிவம் எனக்கு கிடைக்கவில்லை.

முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)


கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)

வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)


குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)


குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)


ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)


பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)


கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)


முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)


வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP