020: முருகா முருகா முருகா - பாரதியார் பாட்டு
முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலர் இங்கு உளரே
அவரை விடுவித்து அருள்வாய்
முடியா மறையின் முடிவே - அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடி மேல்
பொறிவேலுடனே வளர்வாய் - அடியார்
புது வாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
எஸ்.பி. இராம் இந்தப் பாடலைப் பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.
10 comments:
நல்ல பாடல், சுதா ரகுநாதனும் பாடியுள்ளார்....
மௌலி ஐயா. சுதா இரகுநாதன் பாடியதற்கு சுட்டி இருந்தால் தாருங்கள்.
//தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்//
இதை யார் எழுதியது என்று சொல்லாமல், யாரிடமாவது கொடுத்தால், கவியரசர் கண்ணதாசன் என்று கூடச் சொல்லலாம்!
எவ்வளவு எளிமை! எவ்வளவு சந்தம்!
பாரதி திரையிசைக் கவிஞர் ஆகி இருந்தால் தமிழ் சினிமாவையே வெளுத்து வாங்கியிருப்பார்!
ஆமாம் இரவிசங்கர். தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் நான் சொல்வது 'பாரதியார் கவிதைகளில் இருந்து தொடங்குங்கள்' என்பது தான். தற்காலத்தைப் போல் மிக மிக எளிமையாகவும் இருக்காது. மிக கடினமாகவும் இருக்காது. ஆனால் புரியும்.
குமரன், திரை இசையிலும் இந்தப் பாடல் வருகிறது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலில் 'காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்லபாட்டு' என்ற அடிகளுக்குப் பிறகு ஒரு சிறுவன் பாடுவதாக வரும்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் அனைத்து பாடல்களும் பாரதியாரின் பாடல்கள்தான்.
சுட்டி இருந்தால் போடுங்கள்.
கப்பலோட்டிய தமிழன் படத்தின் பாடல்களை இங்கு கேளுங்கள்
இந்த சுட்டியில் 'ஓடி விளையாடு பாப்பா' பாடலில் 'முருகா முருகா...' பாடல் மிக எளிய சந்தத்தில் முதல் சரணம் வரை பாடப்படுகிறது.
எளிமையே வார்த்தைகளில் வலிமையான வேண்டுகோள் விடுக்க பாரதியால் மட்டுமே முடியும். நல்ல பாடல் குமரன்.
ஷைலஜா
ஓகை ஐயா. கப்பலோட்டிய தமிழன் படப் பாடல்கள் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி. எல்லாப் பாடல்களும் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
முருகன் அருளே துணை..
நல்ல பாடல் நன்றி
நன்றி ஷைலஜா & எழில்.
Post a Comment