027: சிங்கார வேலனே தேவா - ஒரு பின்னணி!
சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த, ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!
பாடு சாந்தா, பாடு!
இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள். கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சியாரின் வாசிப்பு அப்படி!
அப்படியே காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம்,
பாலைய்யாவின் கன ஜோரான வாசிப்பு பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் அழகே தனி!
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை!
அவர் போட எண்ணிய பாட்டு, தேவாரப் பாடல்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு...
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம், 'சிங்கார வேலனே தேவா' என்கிற மெட்டில்.
பின்னர் யாரோ ஒருவர், வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, ஜானகியம்மா வரவழைக்கப்பட்டார்.
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது; கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" என்று எழுதினார். ஜானகியம்மா பாடினார்.
ஆனால் காருக்குறிச்சியார் ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை.
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்.
ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி.
(ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது)
சரி, நாம் சிக்கல் சிங்காரவேலர் சந்நிதிக்குச் செல்வோம் வாருங்கள்!
நாகைப்பட்டினத்தில் இருந்து கூப்பிடு தூரம் தான்.
முருகன் கொள்ளை அழகு. வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்.
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை!
இங்கு உற்சவ மூர்த்தி மட்டும் தான்!
இக்கோவிலின் மூலமூர்த்தி சிவனார், நவநீத ஈஸ்வரர் - வேல் நெடுங் கண்ணி அம்மை.
சூர சம்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, ஒரு அதிசயம் காணலாம். என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது.
சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா
செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா
படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா. பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
21 comments:
இந்த பாடலை முதலில் எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாடுவதாக இருந்ததாம்,பிறகு கை நழுவி ஜானகி அம்மாளிடம் விழுந்தது.இது அவரை மேலும் அடையாளம் காட்டிய பாடல் கூட.
சிக்கல்- இன்னும் ஒரு கிராமமாகவே இருக்கிறது.2 தெருவை கடந்துவிட்டால் வயல்வெளி தான்.வாழ ரம்மியமான இடம்.
பாடல் பற்றிய செய்தி இது வரை அறிந்திராதது. Urban Legend ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் கூட.
உங்கள் கேள்விக்கு விடை சிங்கார வேலருக்கு உடல் வியர்த்துப் போகும். சரிதானே?
காரைக்குறிச்சி அல்ல ஸ்வாமி - அவருடைய ஊரின் பெயர் காருக்குறிச்சி' தான்.
மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைத் தட்டிப் பார்க்கவும்!
http://archives.aaraamthinai.com/special/apr2000/apr21.asp
அன்புடன்,
SP.VR. சுப்பையா
மிகவும் அருமையான பாடல். அதிலும் காருகுறிச்சி அருணாச்சலத்தின் நாத மழை. அடடா! இது அந்தக்காலத்து டிராக் முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காருகுறிச்சியார் வாசித்ததும் ஜானகி அவர்கள் பாடியதும் தனித்தனியாம். இரண்டும் ஒன்றாக்கிப் பதிந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது இப்பொழுதுதான் தெரியும்.
//SP.VR.சுப்பையா said...
காரைக்குறிச்சி அல்ல ஸ்வாமி - அவருடைய ஊரின் பெயர் காருக்குறிச்சி' தான்.//
பிழையை மன்னிக்கவும் சுப்பையா சார். இதோ பதிவிலும் மாற்றி விடுகிறேன்.
இவ்வளவு நாள் காரைக்குறிச்சி என்று தான் எண்ணியிருந்தேன். பலரும் சொல்லும் போது அப்படியே சொல்லுவார்கள். நீங்கள் சுட்டிக் காட்டியது நல்லதாகப் போயிற்று.
ஆமாம்..காருக்குறிச்சி எங்குள்ளது? - யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.
//வடுவூர் குமார் said...
இந்த பாடலை முதலில் எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாடுவதாக இருந்ததாம்,பிறகு கை நழுவி ஜானகி அம்மாளிடம் விழுந்தது.இது அவரை மேலும் அடையாளம் காட்டிய பாடல் கூட.//
ஆமாம் குமார் சார்...
ஜானகியம்மா இந்தப் பாட்டுக்கு அப்புறம் மிகப் பிரபலம் ஆனார்கள்.
//சிக்கல்- இன்னும் ஒரு கிராமமாகவே இருக்கிறது.2 தெருவை கடந்துவிட்டால் வயல்வெளி தான்.வாழ ரம்மியமான இடம்.//
ஒத்தையடிப் பாதை, ஓடும் பசுமாடுகள்...எளிய மக்கள்...எனக்குப் பிடித்த இடமும் கூட
வேளாங்கண்ணிக்கு வரும் போதெல்லாம், அப்படியே திருவாரூர், நாகைக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஆஜர்.
//இலவசக்கொத்தனார் said...
பாடல் பற்றிய செய்தி இது வரை அறிந்திராதது. Urban Legend ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் கூட//
எனக்கும் இந்தச் சந்தேகம் இருந்தது கொத்ஸ். ஆனால் சொன்னது யார் தெரியுமா? கவிஞர் கு.மா.பா தான்.
//உங்கள் கேள்விக்கு விடை சிங்கார வேலருக்கு உடல் வியர்த்துப் போகும். சரிதானே?//
சரியே!
அதானே விக்கிப்பையனான உங்களுக்குத் தெரியாததா என்ன? :-)
அது சரி, கானா உலகநாதன் எப்ப தமிழ்ப் பதிவு என்னும் அருமையான வீடு கட்டிக் கொத்தனார் ஆனார்? :-))
//ஆமாம்..காருக்குறிச்சி எங்குள்ளது? - யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.//
நெல்லை மாவட்டம்தானுங்கோ!
//G.Ragavan said...
அடடா! இது அந்தக்காலத்து டிராக் முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காருகுறிச்சியார் வாசித்ததும் ஜானகி அவர்கள் பாடியதும் தனித்தனியாம்//
ஆமாம் ஜிரா.
ஆனால் கேட்கும் போது நம்மால் கண்டு பிடிக்கத் தான் முடியுமா? அப்பவே சூப்பர் கட் & பேஸ்ட்!
பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாதா என்ன?:-)
ஆனா ஒன்னு கவனிச்சீங்களா?
நாதஸ்வரம் சம்பந்தமா வரும் தமிழ்ப்படம் எல்லாம் "சிக்கலாரைச்" சுற்றியே வருகிறது!
என்ன சிக்கலாரே! சரி தானா? :-)
//அது சரி, கானா உலகநாதன் எப்ப தமிழ்ப் பதிவு என்னும் அருமையான வீடு கட்டிக் கொத்தனார் ஆனார்? :-))//
கொத்தனார் எப்பவும் கொத்தனார்தான். ஆனா அந்த படத்தை எடுத்து நமக்கு ஒரு முகம் தந்தது வ.வா.சங்க சிங்கங்கள். அட்லஸ் வாலிபராக இருந்த பொழுது.
புதிய பிளாக்கருக்கு மாறியவுடன் செய்த மாற்றங்களில் ஒன்று அந்த படத்தை நம்ம வலைப்பூவில் ஏற்றியது. :))
உங்க படத்திலயே கீழ பாருங்க. Karukuruchi அப்படின்னுதான் போட்டு இருக்கு. காரைகுறிச்சி இல்லை! :)
சிங்காரவேலன் என்பது சிக்கலாரைக் குறித்தாலும், பாட்டின் களம் முழுதும் செந்தூரானைச் சுற்றித்தானே வருகிறது?
அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி, ரவி!
// இலவசக்கொத்தனார் said...
//ஆமாம்..காருக்குறிச்சி எங்குள்ளது? - யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.//
நெல்லை மாவட்டம்தானுங்கோ! //
பழைய நெல்லை மாவட்டம் கொத்ஸ். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம். கோயில்பட்டியில் இவருக்குச் சிலையொன்று உள்ளது. அதை ஜெமினியும் சாவித்திரியும் வந்து திறந்து வைத்ததாக அந்தக் கல்வெட்டு சொல்கிறது.
//இலவசக்கொத்தனார் said...
உங்க படத்திலயே கீழ பாருங்க. Karukuruchi அப்படின்னுதான் போட்டு இருக்கு. காரைகுறிச்சி இல்லை! :) //
அதானே!
மனம் ஒன்றைப் பிடித்துக் கொண்டால், கண்கள் கூட மனம் வழியாத் தான் பாக்குது பாருங்க!
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...
நெஞ்சம் எங்கே, கண்களும் அங்கே :-))
இப்படித் தான் தெய்வம் கண்ணுக்குத் தெரிந்தும்....தெரியாமல் வாழ்கிறோமோ(றேனோ)?
காணாமல் கண்டுணரும்
காட்சியதும் எந்நாளோ என்று தானே பாடி வைத்தார்!
//SK said...
சிங்காரவேலன் என்பது சிக்கலாரைக் குறித்தாலும், பாட்டின் களம் முழுதும் செந்தூரானைச் சுற்றித்தானே வருகிறது?//
உண்மை தான் SK ஐயா!
செந்தூர் வேலனும் சிங்காரன் தானே!
அங்கு மூலவர் சிங்காரமாய் உள்ளான்
இங்கு சிங்காரன் உற்சவராய் உள்ளான்!
ஆனா நான் சொல்ல வந்தது, தமிழ்ச் சினிமாவில் - தில்லானா மோகனாம்பாள், கொஞ்சும் சலங்கை இப்படி எல்லாம் சிக்கல் ஊரைச் சுற்றியே வருகிறது, பாருங்க!
//G.Ragavan said...
பழைய நெல்லை மாவட்டம் கொத்ஸ். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்.//
ஆகா,
கொத்ஸ் மாவட்டதில் இருந்து
ஜிரா மாவட்டம் எடுத்துக் கொண்டதா? :-)
அருமையான பாடல் இரவிசங்கர். பலமுறை கேட்டேன். எனக்கென்னவோ தேவாரத்திற்கு இசைத்த நாதசுர இசை போல் தோன்றவில்லை. அது உண்மையென்றால் வெட்டி ஒட்டியதைச் செய்தவர் மிக மிகச் சிறந்த திறமைசாலியாக இருக்கவேண்டும். :-)
தூத்துடிகாரரே,
என்ன இந்த ஆட்டம் ஆடுதீரு? எல்லாருக்கும் தெரிஞ்ச பேரு அப்படின்ன உடனே உம்ம பக்கம் சேத்துக்கிடுவீரோ?
அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம் தெரியும்ல்லா. நல்லாப் பாரும்வோய், காருகுறிச்சி எங்க நெல்லைச் சீமைதான்வோய்!!
//குமரன் (Kumaran) said...
அருமையான பாடல் இரவிசங்கர். பலமுறை கேட்டேன். எனக்கென்னவோ தேவாரத்திற்கு இசைத்த நாதசுர இசை போல் தோன்றவில்லை. அது உண்மையென்றால் வெட்டி ஒட்டியதைச் செய்தவர் மிக மிகச் சிறந்த திறமைசாலியாக இருக்கவேண்டும். :-) //
முதலில் நானும் அப்படி தான் எண்ணினேன் குமரன்.
உடனே உங்கள் திருநீற்றுப் பதிகம் பதிவு சென்று,
மந்திர---மா வது--நீ--று
வானவ்ர்---மேல் அது--நீ--று
என்று முழக்கிப் பாடிப் பாத்தேன்!
சரியாகத் தான் வருகிறது!
காருக்குறிச்சியார் வரலாறு எங்காச்சும் கிடைச்சால், மேல் விவரங்கள் அறியலாம் என்று நினைக்கிறேன்.
சன் டிவியில் நம் விருந்தினர் நிகழ்ச்சியில் இந்த உண்மை பதிவாகி உள்ளது
எங்கள் தந்தை கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய "சிங்கார வேலனே தேவா..." (கொஞ்சும் சலங்கை) பாடல் குறித்தப் பதிவுக்கு மிக்க நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் எம்.வி.இராமன், தந்தையாருடன் ஏவி.எம் நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்தப் பாடலுக்கு குரல் தேர்வு நடந்தபோது அவர் லதா மங்கேஷ்கரைக் கூட பாடவைக்கலாமா? என்றும் எண்ணியிருந்தாராம். ஏன் எனில் அவர் இந்திப் படங்களும் இயக்கி பிரபலமானவர். முடிவில் பாடகி பி.லீலா, அப்பா ஆகியோர் பரிந்துரையில் ஜானகி அம்மா பாடினார்கள். இதன் வெற்றியே சவுண்டு இஞ்சினியர் ஜீவா அவர்களின் சமயோசித ஒலிப்பதிவு முறை தான். பம்பாயில் ஜானகியின் குரலைத் தனியாகப் பதிவுசெய்து சேர்த்தார்கள். தங்கள் பதிவில் தவில் வாசித்தவர் நடிகர் பாலையா என்று குறிப்பிட்டது தவறு. அவர் கே.சாரங்கபாணி என்பதே சரி. திருத்தம் செய்க. பதிவை அனுப்பிய கவிஞர். வான்முகில் ஐயாவிற்கும் நன்றி.
Post a Comment