Saturday, May 27, 2023

கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? ’துணை’ வந்தது! தமிழ் வந்தது!


முருகனருள் பாடல்-வலைப்பூ அன்பர்கட்கு, வணக்கம்! 

இன்று முருகனருளில், ’கூப்பிட்ட குரலுக்கு’ என்றொரு சினிமாப் பாடல்!
’துணைவன்’ என்ற படத்தில், KBS Amma எனும் கே.பி. சுந்தராம்பாள் பாடியது!

இது போல், பாடல் ஒரு துணை. ”விழிக்குத் துணை” என்பார் அருணகிரி.
’துணை’ என்ற தமிழ்ச் சொல்லின், உண்மையான பொருள் என்ன?

இவ்வாண்டும், தோழன் கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27),
ஓர் அழகிய தமிழ்ப் பாடல் நடை பயில்கின்றது. துணை பயில்கிறது.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வருவார்கள்? துணைவன் தான் வருவான்.
நமக்கு என்றுமே துணையாக வருவோர் தாம், துணைவன்/துணைவி!

’துணை’ என்பதே மிக அழகான ஒரு தமிழ்ச் சொல்!
ஆண்/பெண் பேதமில்லாத பொதுச்சொல்!
’வாழ்க்கைத் துணை நலம்’ என ஐயன் வள்ளுவன் சொல்வது பொதுச்சொல்!

* ’துண்’ என்பதே வேர்ச்சொல்; துணவு/துண்ணுதல் = விரைந்து வருதல்.
* யார், நமக்காக விரைந்து வருகிறார்களோ, அவரே துணைவர்!

துணை இருத்தல் என்றால்.. எப்போதும் அருகிலேயே இருத்தல் அல்ல!
அப்படி இருக்கவும் முடியாது! அது மனித இயற்கையும் அல்ல.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழல்கள், பணிகள், குணங்கள், கணங்கள்.

ஆனால், மெய்யான தேவை என்று வரும் போது, விரைந்தோடி வரும் குணம்.
அதுவே துணைக் குணம், துணையிருக்கும் குணம், துணைவர்களின் குணம்.

விரைந்தோடி வருதல் என்பது..
நேரிலும் இருக்கலாம், அல்லது மனத்திலும் இருக்கலாம்.
துணைவர், நேரடியாக விரைந்து வருவது ஒரு வகை ஆறுதல் எனில்,
அத் துணைவர், துன்பச் சூழலில், நேரடியாக வருவதற்கு முன்பே..
நம் மனசுக்குள் விரைந்து வந்து விடுகிறாரே! அது இன்னொரு வகை ஆறுதல்!

இன்னல் மிக்க சூழலில், நம் மனம்.. 
நம்மையறியாமலேயே, அத் துணைவரைத் தானே நினைக்கிறது?
நேரடியாக வரும் முன்பே, அவர் மனத்தளவில் வந்து விடுகிறாரே?
அப்படி விரைந்து வருவதே துணை!
துணை வந்து விட்டால்,  துன்பம் குறைந்துவிடும், தெம்பு பிறந்துவிடும்!

இப்போது தெரிகிறதா, 
ஏன் முருகன் ’துணை’ (அ) தெய்வம் ’துணை’ என்று எழுதுகிறார்கள் என்று?
பகுத்தறிவாளருக்கும், அவர்களின் தலைவன் ’துணை’ (அ) நண்பன் ’துணை’.
நம் மெய்யான தேவையின் போது, மனத்தின் துணை!
மனசுக்குள் உடனே ஓடி வரும் ’துணை’! அதுவே  துணை-வன்!

*பொன்றுங்கால் பொன்றாத் துணை
*நல்லாற்றின் நின்ற துணை
*இல்வாழ்வான் என்பான் துணை
*வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
*மறத்திற்கும் அஃதே துணை
*தேரினும் அஃதே துணை
*ஒற்கத்தின் ஊற்றாந் துணை
என்று ஐயன் வள்ளுவன், ’துணை துணை’ என்று தமிழால் அடுக்கும் அழகு!



துணைவன் என்றொரு படம் வந்தது!
இன்றைய திகதிக்கு அது பழைய படம் தான்:) ஆனாலும் பார்க்கலாம்.
கே.பி.சுந்தராம்பாள் அம்மா பாடும் உணர்ச்சிப் பாடல்கள்!
வாரியார் சுவாமிகளும், இந்தப் படத்தில் நடிச்சி இருப்பாரு.

*சிவகவி (வாரியார் கதை வசனம் மட்டுமே)
*தெய்வம்
*சண்முகப்ரியா
*கந்தர் அலங்காரம்
*மிருதங்கச் சக்கரவர்த்தி
*நவகிரக நாயகி...
எனப் பல படங்களில் வாரியார் நடித்திருப்பினும், அவை சிறுசிறு காட்சிகளே!
*துணைவன்
*திருவருள்
இவ்விரு படங்களில் தான், வாரியார் காட்சிகள் நீளமானவை:)

படம் முழுதும், பல காட்சிகளில், வாரியார் வந்து வந்து போவாரு.
வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல துவக்கக் காட்சி இருக்கும்;
ஆனால் அதெல்லாம்.. “பொய், பொய், யாரும் நம்பாதீங்க”-ன்னு
நாயகன், AVM Rajan வெள்ளித் திரைக்குள் உள்ளே நுழைவாரு:)

பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை.
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்;
வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;

அறிவியல்/மருத்துவத்துக்கு மாறாகச் சில காட்சிகள் அமைந்து உறுத்தினும்,
அவற்றைக் கடந்து விட்டு, கற்பனை என்றெண்ணிப் படத்தைப் பார்க்கலாம்.
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனில்,
மருத்துவ உதவியைத் தான் முதலில் நாட வேண்டும்!
கடவுள் பார்த்துக் கொள்வார் என்று மருத்துவத்தைப் புறக்கணிக்கலாகாது!


*ஆழ்வார்கள்: 108 திருத்தலம் (திவ்யதேசம்)
*நாயன்மார்கள் (குரவர்கள்): 274 பாடல் பெற்ற தலம் என்பன போல்
*அருணகிரிநாதர் பாடிய கோயில்கள் மொத்தம் 168.
இவையே திருப்புகழ்த் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. 
காண்க: முன்பு Murugan.org தளத்தில், நான் செய்தளித்த Thirupugazh Atlas.
ஈழம் & தமிழ்நாடு - இரண்டிலுமே உள்ள திருப்புகழ்த் தலங்கள்.

இந்தப் படத்தில், மொத்தம் 28 முருகன் ஆலயங்கள் வரும்.
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;

வாருங்கள், பாடலைச் சுவைத்துக் கொண்டே காணுங்கள்.
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? துணைவன் தான் வருவான்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது? - என்
நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?

யார் வந்தது? யார் வந்தது?

அன்று நீ வேலூன்றி, 
நீரெடுத்த நாழிக் கிணறு தான்
இன்று நின் மணி விழுந்து, 
நீராகக் கருணை வெள்ளம் தான் வந்ததோ?

கண்ணீரும் கவலையும், 
கந்தா நீ ஊற்றெடுத்த தண்ணீரால் மறையக் கண்டோம்!
கை அசைய, கால் அசைய,
வாய் பேசப் பிள்ளைக்குக் கருணை செய் செந்தில் வேலா!

படம்: துணைவன்
வரி: கவிஞர் கண்ணதாசன் ?
(அதே படத்தில், கவிஞர். அ.மருதகாசி-யாகவும் இருக்கலாம்)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி. மகாதேவன்


’துணை’ என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் அறிந்தது போல்,
’துணைவன்’ என்ற படத்தின் பாடலைச் சுவைத்தது போல்,
தோழன் இராகவனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்வோம்!

விழிக்குத் துணை, மொழிக்குத் துணை!

*விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள்.
*மொழிக்குத் துணை, முருகா எனும் திருப்பெயர்கள்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP