![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPv_sbFjofsuobQsFQ4Irvv1WQptMrtcPQ68F0YlPB5xitnJLsz-y0HNXyJqAyupTs5JxpjgCVQZ7z-3dsdkjKgD22BcDQ7UXs00trojQ2S1-QluIfPNL0Qs2nfwai5FUfHuBe/s400/ThiruthaniBSubramaniyaSwamy.jpg)
இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6JqBUfTbkDfc2BRo_dYEc9ml_GQmNobl9Bq8vWe4_ZoWfhJC47IPJxqLXreucDCmTpXY-fcGRf4KYYgOh0bxxbOFSTE92bC8hvfa7RuTH3PJyRTGyINxBHeTRRmN7Y_FbAApV/s400/180px-Nallur_Kumaran_Kavadi.jpg)
பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.
பாபநாசம் சிவனைவிட முருகனை அனுபவித்தவர் யாரும் கிடையாது . பல பாடல்கள் அழகன் முருகன் மீது புனைந்துள்ளார். அருணகிரியாருக்கும் சிவனுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் முருகனை நேரடியாக பாடமாட்டார்கள்.மால்மருகனை சொல்லிய பிறகுதான் மருகனைச் சொல்லுவார்கள்.
அவரின் பல பாடல்களில்என் மனத்தை கவர்ந்த பாடல் இது.
ராகம் :- நடபைரவி தாளம்:- கண்ட சாபு
பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது.. ........( கந்தா வந்தருள்)
அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தாகுலம் தீர நீ வலிய
வந்தால் உந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மணவாளா புள்ளி மயிலேரும்....(கந்தாவந்தருள்)
சரணம்
பச்சிளங் குழந்தையைப் பெற்ற தாய்
பரிந்தணைப்பது கடனன்றோ
பரம தயாகரன் என்று பேர் புகழ்
படைத்தவன் நீயன்றோ
ஸச்சிதானந்த மூர்த்தி சரவணோத்
பவ குஹனே சங்கரன் மகனே
தயவுடனே திருமால் மருகா-- மன
மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து...(கந்தாவந்தருள்)
கந்தனே எனக்குமுன் வந்து நின்று உன் அருள்மழையைப் பொழியக்கூடாதா.எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் கதி. திருச்செந்தூர் வளர் குஹா என்னுடைய சிந்தனையில் எப்போது இருக்கும் பயத்தை தீர்க்க வரக்கூடாதா உன்னை இவ்வளவுதூரம் வருந்தி வருந்தி நான் அழைத்தால் தான் வருவாயோ ஏன் என்மீது அன்பு கொண்டு
நீயே வலிய வந்து என்னைக் காத்தால் அதனால் உன் மஹிமை என்ன குறைந்துவிடுமோ. சிசுவை ரக்ஷிப்பது தாயின்கடமை. உனக்கு பரம தயாகரன் என்ற பேர் அதை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ண்ம் இருந்தால், திருமாலின் மருமகனே, நீயே மனமிரங்கி தயவோடு உன் அடிமையான என்னை காத்தருள வா என்று உரிமையோடு அழைக்கிறார் திரு.சிவன் அவர்கள்
சரி அழகன் தரிசனம் ஆயிற்று பாடலையும் பார்த்தாகி விட்டது இனி இந்தப்
பாடலை மும்பை ஜெய்ஸ்ரீ தன் இனிய குரலிசையால் உருகி உருகிப் பாடுவதை இங்கே கேட்டு மகிழுங்கள்">
எல்லாம்வல்ல திருத்தணிமுருகன் எல்லாருக்கும் நன்மைகளைத் தந்து அருளட்டும்.!