மக்கா, இன்னிக்கி கொஞ்சம் ஸ்பெஷல்! பழனி ஸ்பெஷல்! ஆன்மீகக் குத்துப் பாட்டுக்குப் புகழ் பெற்ற ரமணி அம்மாள் பாட்டு!:)) குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - பாட்டை அறியாதவர்கள் தான் யார்? அது போன்ற உற்சாகப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் பெங்களூர் ரமணி அம்மாள். சிறந்த முருக பக்தை!
பஜனை என்றாலே அது கண்ணன் பாடல்கள் தான் என்பது போய், அய்யன் முருகன் மேலும் பஜனைப் பாடல்கள் என்று ஒரு தனி இயக்கம் போலவே நடத்திக் காட்டினார் ரமணி அம்மாள்! கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்!
திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி,/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார். வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்!
கண்ணனைத் தலைவன்-கடவுளாகவும், முருகனைக் காதலன்-குழந்தையாகவும் அடியேன் காண்பது போல, ரமணி அம்மாள், முருகனைத் தலைவன்-கடவுளாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் கண்டவர்! அம்மாள், கண்ணன் குழுப் பாடல்கள் (பஜனை) பலவும் பாடியுள்ளார்.
இன்னிக்கி அம்மாளின் சிறப்பான ஒரு காவடிப் பாட்டு! பழனி-ன்னாலே காவடி தானே! அங்கு பிறந்த காவடி தானே, மற்ற படைவீட்டுக்கெல்லாம் பரவி, இன்று சிங்கை, மலேசியா, இலங்கை, பர்மா, பாரீஸ், அமெரிக்கா என்று காவடி பரவியுள்ளது!
ரமணி அம்மாள், பால் காவடி, பன்னீர் காவடி, சர்ப்பக் காவடி என்று அத்தனை காவடிகளையும் பட்டியல் போட்டுச் சொல்கிறார்! நீங்களே கேளுங்கள்! இதோ!
பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!
பாரைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்! - பழனி
மலையைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்!
முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே! - அப்பப்பா!
முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே!
எங்கும் தேடி, உன்னைக் காணா, மனமும் வாடுதே!
முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே!
தேன் இருக்குது, தினை இருக்குது, தென் பழனியிலே!
தெருவைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!
பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!
மலையைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
அதோ வராண்டி, பழனி ஆறுமுகன் தாண்டி!
அவன் போனா போறாண்டி, முருகன் தானா வாராண்டி!
வேல் இருக்குது, மயில் இருக்குது, விராலி மலையிலே!
மலையைச் சுற்றி, மயிலின் ஆட்டம், தினமும் நடக்குதாம்! - விராலி
மலையைச் சுற்றி, மயிலின் ஆட்டம், தினமும் நடக்குதாம்!
முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே! (கண்டேனே)!முடிக்கும் போதும் "எங்கும் காணேனே!" என்று அம்மாள் முடிப்பதால், கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு, "எங்கும் கண்டேனே" என்று மாற்றி விட்டேன்! :)
பாட்டு எப்படி இருந்திச்சி மக்கா? எழுந்திரிச்சி ஆடினீங்களா? நான் ரெண்டு தபா ஆடினேன்! :)
பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
மலையைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!
வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
பழனி ரகசியங்களைப் போட்டு உடைப்போமா? ஹூம்...பழனியாண்டவர் உருவச் சிலையே ஒரு தெய்வ ரகசியம் தானே?* திருத்தணிக்குச் சொன்னது போலத் தான்! பழனி என்பது ஒரு படைவீடே கிடையாது!
திருவாவினன்குடி என்பது தான் அறுபடை வீட்டுள் ஒன்று!
திரு+ஆ+இனன்+குடி = இலக்குமி, காமதேனு, அக்னி ஆகியோர் வணங்கிய தலம்! ஆவினர்கள் என்னும் சிற்றரசர்கள் ஆண்ட குடி என்றும் சொல்லுவர்.
இந்தப் படை வீடு, மலையின் கீழ் உள்ள ஆலயம்! குழந்தை வேலாயுத சாமி என்று இறைவனுக்குப் பெயர். கோபமாக, மயில் மேல் அமர்ந்த குழந்தைக் கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறான். சரவணப் பொய்கையும் உண்டு.
பின்னாளில் சித்த புருஷரான போகர், தண்டபாணி சிலை வடித்த பின்னர், மலை மேல் உள்ள ஆலயம் பிரபலமாகி விட்டது. தண்டாயுதபாணியும் அழகும் பேரழகே!
அடுத்த முறை பழனி செல்லும் போது, மேலே உள்ள குழந்தையும் கண்டு, கீழே படைவீட்டில் உள்ள குழந்தையையும் கண்டு வாருங்கள்!
* பழனி என்றால் முதலில் எது? பஞ்சாமிர்தமா? முருகனா?? :)
சிறிய விருப்பாச்சி என்னும் வாழைப்பழங்களால் செய்வதே பஞ்சாமிர்தம். எல்லா வாழைகளும் போட முடியாது. நீர்ப்பதம் குறைவாய் உள்ள வாழை தான் ரொம்ப நாள் கெடாமல் தாங்கும். சர்க்கரை, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் - இவ்வளவு தான்! இதுக்கு மேல் கண்டதையும் சேர்க்கக் கூடாது!
*
கொடைக்கானல் மலையில் உள்ள
குறிஞ்சி ஆண்டவர் ஆலயமும், பழனிக்கு உட்பட்டதே! கொடைக்கானல் மலைகளில் இருந்து இறங்கும் போது, பழனி மலையின் அழகையும், கோயிலின் தூரப் பார்வையும் கண்டு களிக்கலாம்!
* முருகனுக்கு உரிய கடம்ப மலர், பூத்துக் குலுங்கும் தலம் பழனி!
* சித்தபுருஷர் போகர் பெருமானின் நிர்விகல்ப சமாதி அமைந்த தலமும் இதுவே! அடுத்த முறை ஆலய வளாகத்துள் இருக்கும் போகர் குகைக்குச் சென்று வாருங்கள்! மரகத லிங்கம், நவ துர்க்கை என்று அவர் வழிபட்ட மூர்த்திகளும் சமாதியில் உள்ளன.
காலங்கி நாதரின் சீடர் போகர்! தன் குரு தீர்க்கதரிசனத்தால் பின்னாளில் நோய்கள் மலியும் என்று சொன்னதால், பாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களை மருந்தாகக் கலந்து, பழனியாண்டவர் சிலையை வடித்தார், தன் சீடர் புலிப்பாணி உதவியுடன்! பாஷாண உருவத்தின் மேல் அளவாக தீர்த்தமாட்டப்படும் பாலில், மருந்துப் படிமங்கள் படிந்து, நோய் தீர்க்கும் என்பது சித்தரின் மருத்துவக் கணக்கு! Perkin-Elmer Atomic Absorption/Adsorption என்று Spectrometer வைத்து ஆய்வு செய்த பின்னர் கூட, முருகப்பெருமானின் மூலக் கூற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை!
பேராசைப் பெருமகன்களாலும், அரசியல்-பணக் காரணங்களாலும், கணக்கே இல்லாமல் பால் குட அபிடேங்கள்! பழனியாண்டவர் சிலையைச் சேதார நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர் நம்ம ஆட்கள்! சித்தரின் மருத்துவக் கணக்கு, பால் கணக்கால், அடிபட்டுப் போகிறது. பாவம், போகரே இதை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்! ஒரு மாதத்தில் 700 குளியல்களா?
போதாக்குறைக்கு சித்த மருத்துவர்கள், பூசையே செய்யாத அந்தணர்கள்/அர்ச்சகர்கள் என்று கண்டவரும் கருவறை நுழைவு! பாஷாணம் சுரண்டிக் களவாடப்பட்டது என்று சொல்வார் கூட உண்டு!
ஆகமங்கள்-லாம் எதுக்கு, எனக்கும் முருகனுக்கும் எப்பமே direct contact என்று கேலி பேசுகிறார்கள் சிலர்! ஆனால் ஆலயம் என்பது ஒருத்தருக்கு மட்டும் அல்லவே! நமக்கு Direct Contact! நாம் கிளம்பிப் போன பிறகு யார் Contact?
பொதுச் சொத்து அல்லவா? பல சந்ததிகளுக்கும், முருக உருவத்தைக் காத்துக் கொடுக்கும் பொறுப்பு உள்ளதே?
இத்தனை உயர மூர்த்திக்கு, இத்தனைக் குடம் தான் அபிடேகம் போன்ற Work Instruction-கள் தான் ஆகமம். ஆறு காலப் பூசை, ஆறாறு குட முழுக்காட்டு என்று வரையறுக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிப் பேராசை பட்டதால் இன்று பழனிக் குழந்தை, கால்கள் எல்லாம் சூம்பிப் போன நிலையில், ஓடாய்த் தேய்ந்து நிற்கிறான்!
அர்ச்சகர்களே, அபிடேகத்தின் போது, கையைக் கிழித்துக் கொள்வோமோ, என்று பயந்து பயந்து செய்யும் நிலைமை!
பழனியில், அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில், குழந்தையைக் கண்டு கண் கலங்கியவர்களில் அடியேனும் ஒருவன்.
யாரும் விஸ்வரூம் பார்த்து விடாதீர்கள். குழந்தை எந்த அலங்காரமும் இன்றித் தனியாகத் தெரிவான்! குச்சி போல் மெலிந்த கோலம் கண்டு மனமே ஒடிந்து விடும்! அவர்களே, நமக்கு அதிகம் காட்டாது, பரபரவென்று முடித்து விடுகிறார்கள்! ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் என்று அலங்கரித்த முருகனையே கண்டு வாருங்கள்!
*
மலைக்குச் செல்ல நான்கு பாதைகள் உண்டு. யானைப்பாதை சிரமம் இல்லாதது. வயதானவர்களும் செல்லலாம். படிகள் கம்மி. தீர்த்தப் பாதை, ஆலய நீர்த் தேவைக்கு மட்டும். ரோப்-கார் என்னும் இழுவை ரயில் ஒரு தனி அனுபவம் தான்! ஆனால் மலையை அனுபவிக்க முடியாது, நொடிகளில் ஏறி விடும்! ரயிலில் கூடப் பொது வழி, சிறப்பு வழி-ன்னு நம்ம தர்ம-நியாயங்கள்! :)
மொத்தம் 697 படிகள் தானே! படிகளில் ஏறிச் செல்லுங்கள்! அதன் அழகே தனி!
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் படிகளில் செல்லும் போது தான் கிடைக்கும்!
அடிவாரம் பாத விநாயகரை வணங்கி, பாதி வழியில் இடும்பனை வணங்கி, சிவ கிரி-சக்தி கிரியைக் கண்டு, இடும்பனுக்கு உள்ள தனி மலையைக் கண்டு, பழனியின் வயல்வெளிகளைக் கண்டு, சண்முக நதியின் ஓடும் அழகைக் கண்டு.....இதெல்லாம் ரோப்-காரில் கிடைக்காது!
வேண்டுமானால், ரோப்-காரில் ஏறுங்கள்; இறங்கும் போதாவது படிகளில் வாருங்கள்! ஏறுதலை விட இறங்குதல் எளிது! மூச்சு முட்டாது, வயதானவர்க்கும் எளிது!
*
நகரத்தார்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு, பழனி ஆலயத்துக்கும்,
பழனிப் பாத யாத்திரைக்கும். பங்குனி உத்திரம் தான் மிகப் பெரும் விழா! காவடிக் கடல்! அடுத்து தான் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி எல்லாம்!
* பழனி ஆலயம், வருமானத்தில், தமிழ்நாட்டின் திருப்பதி! இதற்கு மேல் நான் ஒன்னும் சொல்லலை! கல்லூரி, சித்த மருத்துவமனை - இதாவது நடக்கிறதே! மகிழ்ச்சி!
TTD, தெலுங்கு இலக்கியங்களை எல்லாம் டிஜிடைஸ் செய்து முடித்து விட்டு, அடுத்து ஆழ்வார் பாசுரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக் கொண்டார்கள்! சமூக முகாம்கள், தலித் கோவிந்தம், சுவடி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, நீர் ஆதாரங்கள் என்று ஒரு தெலுங்கு நிறுவனம் தமிழ் வளர்ச்சி செய்யட்டும்! எங்கள் அருணகிரியையும் டிஜிடைஸ் செய்யுங்க-ன்னு அவங்களிடம் போய்க் கேக்க முடியுமா? நம்ம கிட்டத் தான் அறநிலையத் துறை பாத்து பாத்து கவனிக்கும் பழனி இருக்கே! :(
*
தமிழர்கள் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பல பக்தர்கள் வந்து செல்லும் தலம் பழனி! மலையாள அறிவிப்புப் பலகைகளைப் பழனியில் காணலாம்!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி பற்றித் தான் பேசுகிறார். பழனி பற்றியோ, மலைக்கோயில் ஆலயம் பற்றியோ பேசவில்லை!
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று - என்று பாடுகிறார்!
அறுபடை வீடுகளுள், மிக அதிக விவரணங்கள்/வரிகள் ஆவினன்குடியை பற்றித் தான் வருகிறது!
*
அருணகிரியார் மிக அதிகமாகப் பாடிய தலம் பழனித் தலம். மொத்தம் 97 திருப்புகழ்கள் ஆவினன்குடி மீது! பிரபலமானவை இதோ:
- நாத விந்து கலாதீ நமோ நம
- சிவனார் மனங்குளிர
- தகர நறுமலர்
- திமிர உததி
- வசனம் மிகவேற்றி மறவாதே
*
பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே! வேல் தோள்களில் தான் சார்த்தி வைக்கப்பட்டு இருக்கும்!
சொல்லப் போனால், ஆறுபடை வீட்டில், எந்த வீட்டிலும், முருகப் பெருமான் கைகளில் வேல் கிடையாது! சக்தி என்னும் குறுவேல், ஜபமாலை, தண்டம் - இவற்றில் சில தான்!
*
பழனி மலை என்பது மொத்தம் இரண்டு மலைகள்!சிவ கிரி = பழனியாண்டவர் இருப்பது!
சக்தி கிரி = இடும்பன் மலை = 13 அடி உயர இடும்பன் சிலை உள்ள சிறு ஆலயம்.
இரு மலைகளும் அருகருகே தான்! இடும்பன் மலைக்குச் சென்றால் இடும்பனையும் காணலாம்! பழனி மலையை, அதன் பசுமையை, விதம் விதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கவும் சரியான ஸ்பாட்!
*
எப்போதுமே என்னை கை நீட்டி அடிக்காத அப்பா, என்னை முதல் முறையாக அடித்த இடம் பழனி மலை தான்! :)
பழனியில் உள்ள கடையில் முருகனின் ஆறுபடை வீட்டுப் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொன்றிலும் ஒன்னொன்னு கேட்டிருக்கேன்! பஞ்சாமிர்தம், தின்பண்டம், குட்டிப் பொம்மை, சொப்பு-ன்னு எதுக்கும் மசியாமல், முருகன் தான் வேண்டும் என்று நான் அடித்த லூட்டிக்கு, விழுந்த பளார், இன்னும் ஞாபகம் இருக்கு! :))
உனது பழநி மலை எனும் ஊரைச் சேவித்து அறியேனே!
விறல் மறவர் சிறுமி திருவேளைக் காரப் பெருமாளே!
பழனி மலை-வேலனுக்கு அரோகரா!
பழனி மலை-முருகனுக்கு அரோகரா!
பழனி மலைக்-கந்தனுக்கு அரோகரா!
பழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்), சின்னக்குமாரர் (உற்சவர் புகைப்படம்)