Saturday, November 06, 2010

கந்த சஷ்டி 2: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

இரண்டாம் நாள் சஷ்டிப் பதிவான இன்று, ஒரு சூப்பர் ஹிட் சினிமாப் பாடலைப் பார்ப்போமா? சினிமாவில்-திருப்புகழ் என்பதை நாளை பார்ப்போம்! ஓக்கே-வா? :)

மருதமலை முருகன்

நேற்று சுவாமி மலை முருகன்! இன்று மருத மலை முருகன்!
அது நான்காம் படைவீடு! இது ஏழாம் படைவீடு!
படைவீடுகள் மொத்தமே ஆறு தான் என்றாலும் தேவர் ஃபிலிம்ஸார், பாச மிகுதியால் தாங்களாகவே அப்படிச் சொல்லிக் கொள்வது! :)
ஐந்தாம் படைவீடான குன்று தோறாடல் -அதிலேயே மருதமலையும் வந்து விடும்!


கொங்கு மணித் திருநாட்டின் மருத மலையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளது! கோவைக்குச் சுமார் 15 கிமீ மேற்காக, ஜிலுஜிலு என்று இருக்கும் மலை! கச்சியப்பரின் பேரூர் புராணத்திலும் இந்த மலை சொல்லப்படும்! பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து வழிபட்ட மலை!

சரீ...அது என்ன "மருத" மலை?
மலை-ன்னாலே "குறிஞ்சி" தானே? எப்படி "மருதம்" ஆகும்?

மருத மரங்கள் அதிகம் உள்ள மலையாதலால் மருத மலை! மருத மரம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! வாசனை மிக்கது!
Myrtle என்று ஆங்கிலத்திலும், அர்ஜூன மரம் என்று வடமொழியிலும் சொல்லப்படும்! மல்லிகா-அர்ஜூனம் என்று ஆந்திரத்தில் உள்ள சிவபெருமான் கோயிலும் இதே மருத மரங்கள் நிறைந்த வனம் தான்!
மருத மரம்

நீட்டு நீட்டான இலை! வெண்மையும் ஊதாவும் கலந்த அழகிய மருதப் பூக்கள்! கொத்துக் கொத்தாய்ப் பூக்கும்!
எங்கள் கிராமத்திலும் இந்த மரத்தைப் பார்த்து இருக்கேன்! தீபாவளி நோன்புக்கு - (கேதார கெளரி நோன்பு) இதைப் பறித்துத் தான் அம்மா கலசம் நிறுத்திப் பூசை செய்வார்கள்! நாம மருதமலைக்கு வருவோம்...

பச்சைப் பசேல் என்ற மருதமலையின் அழகே அழகு! திருமலை-திருப்பதி போல் அவ்வளவு பெரிய மலை இல்லை, சிறு குன்று தான்! Approx 800 steps! எனவே நடந்தே செல்லலாம்! நடந்து சென்றால் தான் பசுமையின் குளிர்ச்சி தென்படும்!

தான்தோன்றி விநாயகரை வணங்கிப் படியேறும் முன்னால், மூன்று விதமான கற்களைக் காணலாம்! ஆலய நகைகளைத் திருடிய கள்வர்களை, குதிரையின் மேல் சென்று துரத்தி, காலத்துக்கும் கல்லாய்ப் போகுமாறு முருகன் சபித்ததாக ஒரு கதை உண்டு! :) என் முருகனுக்குச் சபிக்கத் தெரியுமா என்ன? :)

திருடர்களை அவன் சபித்தான் என்றால், என்னை ஆயுசுக்கும் திருடிக் கொண்டானே! அவனை நான் சபிக்கட்டுமா? :)
"டேய் பாவி...என் அசடா, கசடா, கந்தவேளே...உன் தன்னோடு உறவேல் எனக்கு! அந்த உறவு ஒழிக்க ஒழியாது! என்னை இப்படி ஆழித் துரும்பெனவே அலைகழிக்கிறாயே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு எனக்கு ஆயிரம் பல்லாண்டு! நீயும்-நானுமாய் நமக்குப் பல்லாண்டு பல்லாண்டு! :)"


பாம்பாட்டிச் சித்தரால் பிரபலம் அடைந்த மலை மருதமலை!

பாம்பு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டவர் பாம்பாட்டிச் சித்தர்; "வெறும் பாம்பைப் பிடிக்கிறாயே, உடல் பாம்பை (குண்டலினி) பிடித்து அடக்கப் பார்" என்று சட்டை முனி இவருக்கு யோக நெறியைக் காட்டினார்!

ஒரு நாள், தாகம் தாளாமல் இங்குள்ள மருத மருத்தின் கீழே வீழ்ந்த போது, அதிலிருந்து ஊற்றாய்ப் பாய்ந்து தாகம் தணிவித்தான் தணிகையான்!
அன்றிலிருந்து இங்கேயே தங்கி, முருகனின் புதிய உருவச் சிலையை உருவாக்கி, பாம்புகளோடு தானும் ஆடி, அவற்றையும் ஆட்டுவித்து, முருகனை வழிபட்டவர் பாம்பாட்டிச் சித்தர்!

ஆலயம் 12-13ஆம் நூற்றாண்டு! திருமுருகன் பூண்டி ஆலயத்தில், மருதமலைக்கான கல்வெட்டுகளைக் காணலாம்! ஆலயக் கருவறை பெரிது கிடையாது! சிறிய மண்டபம் தான்! ஆனால் அதிலுள்ளவன் பெரியவன்! பெரிய கள்வன்! உள்ளம் கவர் கள்வன்!

பழனி மலையானைப் போலவே கொஞ்சும் தோற்றம்! ஆனால் அவனை விட இவன் இன்னும் உயரம் = ஆறடி! என்னைப் போலவே! :)
பழனிக்கும் மருதமலைக்கும் ஒரே வேறுபாடு = மருதமலையானுக்குத் தலைப்பாகை உண்டு! ஒரு சிறு குடுமியும் உண்டு! பழனியில் வெறும் மொட்டை தான்! :)

கையில் தண்டம் மட்டுமே! வேலை மார்பில் தாங்கி நிறுத்தி உள்ளார்கள்! இன்னொரு கை இடுப்பில்!
பொடி புனை நெற்றி! காந்தக் கண்கள்!
கூரிய நாசி! கொவ்வைச் செவ்வாய்!
பரந்த மார்பு! வளைந்த இடுப்பு!
அதற்கும் கீழே.....
இக பர வளைவு! மணக்கும் கோவணம்! :)
கருவறை முழுக்க என்னவனின் வாசனை தான்! அந்த நீறின் வாசனையில் நிரம்பி...கிறங்கி...ஐயோ முருகாஆஆஆ!!!


பாம்பாட்டிச் சித்தர் செய்த முருக வடிவத்துக்கு முன்னமேயே, வேல் வடிவில் இயற்கையாக முருக வழிபாடு இருந்தது இங்கே!
ஆதி மூலத்தானம் என்று இன்றும் அதைக் காணலாம்! நடுகல் போல் முருக வடிவம் இருக்க, அருகில் என்னைப் போலவே உயரமாக வள்ளி, சற்றே குள்ளமாக தேவானை அம்மை! :)

மருதமலைக்கு பின்புறம் அதே மலையில் இன்னொரு ஆலயம், அனுவாவி முருகன் ஆலயம்! இங்கே பெருமாளும்-அனுமனும் உண்டு!
ஆலய முகப்பு வளைவிலேயே இதைக் காணலாம்! ஆனால் ஏனோ பலர் இங்கே செல்வதில்லை!

மருதமலையின் மறுபுறம் ஏறி இறங்கினால் அனுவாவி! ஆனால் காட்டுப் பாதை! இயற்கை அழகும் மயிலும் யானையும் கொஞ்சும்!
கோவையில் இருந்து நேரடியாகவும் செல்லலாம்! அதுவே வசதியானதும் கூட!

மருதமலையைக் காட்டிலும் அனுவாவி மலை நடுவாந்திர அழகு!
பச்சை மா மலை போல் மேனியின் நடுவே, வெள்ளை ஆலயம் பளிச்-சென்று தெரியும்! வெளிப் பூச்சுக்கள் இல்லாத இயற்கை!
அடுத்த முறை சென்றால் மிஸ் பண்ணாதீங்க! மேலே படத்தைப் பாருங்க! அந்த அழகுக்கு, உங்கள் கால் உங்களைத் தானே இழுத்துச் செல்லும்!


இன்றைய பாட்டுக்கு வருவோமா?
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி! தேவர் ஃபிலிம்ஸ்! குன்னக்குடி இசையில்...
மருதமலை முருகனைச் சிறப்பித்து என்றே வந்த படம்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே படத்தில் தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் தோன்றி, மருதமலை முருகனைப் பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! முருக வெறியர் என்று கூடச் சொல்லலாம்! :)
நல்ல குரல் வளம் அவருக்கு! அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, அவருக்குத் தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க, வெறும் பாடகர் AVM ராஜன், பெரும் பாடகர் ஆகி விடுகிறார்!

ஒன்று வந்தால் இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்! ஆனால் முருக அன்பர்கள்??
AVM ராஜன் முருகனையும் எளிமையையும் விடவே இல்லை! பழசை மறக்கவில்லை! ஆனால் அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்!

முன்பு கோவிலின் வெளியே பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி, புதுக்காரி ஆகி விட்டாள்! சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ஆகி விட்டாள்! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
முருகன் Vs ஆசை என்று வந்து விட்டால், முருகனா முக்கியம்? தத்தம் ஆசை தானே முக்கியம்?? :)

முருகனையே எண்ணிக் கைப் பற்றியவனுக்கும், பண முதலின் எண்ணிக்கை பற்றுபவளுக்கும் உறவு முறிந்ததா?
முருகன் முறிப்பானா என்ன? அவன் மனது வைத்தால்....நடவாதனவும் நடந்திடாதா என்ன? இசையாதனவும் இசைந்திடாதா என்ன? பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
என்று அத்தனையும் TMS-இன் கணீர் சொத்து! சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை-என்று பாடி இருப்பாங்க! சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! முத்துத் திருப்புகழைச் செப்பி விட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை-என்று கம்பீரமாக இழுப்பார்!

இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன....நம்மையெல்லாம் "அதிகாரம்" செய்பவனா முருகன்? அல்லவே!
இது திருக்குறள் அதிகாரம்-சிலப்பதிகாரம் போல, அந்த அதிகாரம்! ஒவ்வொன்றும் நமக்காக முருகன் பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
அவனே எனக்குப் பதியான பதிகாரம்! கதிகாரம்! விதிகாரம்! என் உடலுக்கும் உள்ளத்துக்குமான அதிகாரம்!


பாடலை இங்கே கேட்டுக் கொண்டே படியுங்கள்!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே! - உந்தன்
வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன்
மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - உன்
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!


படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

15 comments:

குமரன் (Kumaran) November 05, 2010 10:39 PM  

கோவையில் படிக்கும் காலத்தில் எத்தனையோ முறை மருதமலைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அனுவாவி கோவிலுக்குச் சென்றதே இல்லை. ஏன் யாருமே அந்தக் கோவிலைப் பற்றி எனக்குச் சொல்லவில்லையோ தெரியவில்லை. :-(

கோவைக்கு முதன்முதலில் சென்ற போது மருதமலைக்குச் சென்றேன். அப்போது திருப்பணி நடந்து கொண்டிருந்ததால் பாலாலயத்தில் முருகன் இருந்தான். பக்கத்தில் நின்று பல நிமிடங்கள் பார்க்க முடிந்தது. கூட்டம் இல்லாததால் யாரும் விரட்டவும் இல்லை.

இந்தப் படத்துப் பாடல்கள் எல்லாம் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் என்று இது வரை தெரியாது.

sury November 05, 2010 11:08 PM  

மருதமலை முருகன் சன்னிதானத்தில் எனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அற்புதம்.

1985 அல்லது 1986 ம் வருடம். என் அலுவலக வேலை குறித்து கோவை சென்றிருந்தபோது எனது நண்பர் என்னை
இங்கு அழைத்துச் சென்றார்.

முருகன் சன்னதியில் தீப ஆராதனை நடக்கிறது. முருகா..முருகா என கோஷங்கள் !!

ஏதோ ஒரு பெரியவர், மிகவும் முதிர்ந்தவர் ! எனது அருகில் நிற்கிறார் !! என்னைத் தொடுகிறார் !!

உனக்கு கணபதி மந்திரம் உபதேசிக்கப்பட்டிருக்கிறது என்றார் !!

நான் அவரைப்பார்த்தேன். " நீ அதைச் சரிவரச் செய்வதில்லை.."

திக்கிட்டுப்பார்த்தேன்.

பரவாயில்லை. நான் சுப்பிரமணிய மந்திரம் தருகிறேன். அதையும் சேர்த்துச் சொல் என்றார்.

" ஓம் சம் சரவணபவ "

முருகா, முருகா, முருகா, கோஷங்கள், கற்பூர தீபம் அருகில் வந்தது க்ண்களில் ஒத்திக்கொள்ள. கூட்டம்
நெருக்கியது. முதியவரைக் காணவில்லை.

அச்சிறிய கோவிலைச் சுற்றி சுற்றி வந்தேன். அவரை காணேன்.
மந்திரம் மனதில் நின்றது.

ஓம் சம் சரவணபவ.

சுப்பு ரத்தினம்.

என்.ஆர்.சிபி November 05, 2010 11:33 PM  

பரவாயில்லை. நான் சுப்பிரமணிய மந்திரம் தருகிறேன். அதையும் சேர்த்துச் சொல் என்றார்.

" ஓம் சம் சரவணபவ "

முருகா, முருகா, முருகா, கோஷங்கள், கற்பூர தீபம் அருகில் வந்தது க்ண்களில் ஒத்திக்கொள்ள. கூட்டம்
நெருக்கியது. முதியவரைக் காணவில்லை.

அச்சிறிய கோவிலைச் சுற்றி சுற்றி வந்தேன். அவரை காணேன்.
மந்திரம் மனதில் நின்றது.

ஓம் சம் சரவணபவ.

சுப்பு ரத்தினம்.
//

"ஓம் சம் சரவணபவ"!

Athan Murugan! Nammai thedi avane Varuvan!

Guruvai! Nanbanai! Thaayai! Thanthaiyaa! Pillaiyaai! ....!

என்.ஆர்.சிபி November 05, 2010 11:39 PM  

//ஏன் யாருமே அந்தக் கோவிலைப் பற்றி எனக்குச் சொல்லவில்லையோ தெரியவில்லை. //

Naan Poirukkiren Kumaran! Iyarkai soozhalil amanitha arputhama thalam adhu! But Naan poi servatharkul Koil Sathi vittargal! Koduppinai illaiyenmdru veliye irunthee parthuttu vanthen!

http://kadalodi.baranee.net/?p=190

Kumaran! Neenga Ange Comment Kooda Pottirukkenga Parunga!

குமரன் (Kumaran) November 06, 2010 12:08 AM  

அந்த இடுகையில் பின்னூட்டம் இட்டது நினைவிருக்கிறது சிபி. ஆனால் கோவையில் இருக்கும் போது இந்தக் கோவிலுக்குச் செல்லமுடியவில்லை சிபி. கடலோடியின் பதிவைப் படிப்பதற்கு முன்னர் சக்திவிகடனின் இந்தக் கோவிலைப் பற்றி படித்திருக்கிறேன் சிபி. ஆனால் அது கோவையிலிருந்து கிளம்பிய பிறகு சிபி. :-)

அருணையடி November 06, 2010 2:45 PM  

/அந்த இடுகையில் பின்னூட்டம் இட்டது நினைவிருக்கிறது சிபி. ஆனால் கோவையில் இருக்கும் போது இந்தக் கோவிலுக்குச் செல்லமுடியவில்லை சிபி. கடலோடியின் பதிவைப் படிப்பதற்கு முன்னர் சக்திவிகடனின் இந்தக் கோவிலைப் பற்றி படித்திருக்கிறேன் சிபி. ஆனால் அது கோவையிலிருந்து கிளம்பிய பிறகு சிபி. :-)
/

:))

குமரன் (Kumaran) November 06, 2010 4:55 PM  

ஹை. அருணையடி. புதுப்பெயர் நல்லா இருக்கே. :-)

அருணையடி November 06, 2010 11:58 PM  

//ஹை. அருணையடி//

Arunagirikku Adiyavan!

Anonymous November 11, 2010 8:47 PM  

மருத மலை பாம்பாட்டி சித்தர் குகிக்கு சென்றும் வழிபாடு செய்துள்ளேன். அதுபோல் சங்கரன்கோவில் அருகில் உள்ள சித்தர் பீடமும் சென்றுள்ளேன்.
உங்களின் எழுத்துக்கள், என்னை மறுபடியும்
மானசீகமாக அழைத்து சென்றது. நன்றிஉ.
அன்புடன்
ராகவன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) November 13, 2010 12:12 AM  

//கோவையில் படிக்கும் காலத்தில் எத்தனையோ முறை மருதமலைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அனுவாவி கோவிலுக்குச் சென்றதே இல்லை. ஏன் யாருமே அந்தக் கோவிலைப் பற்றி எனக்குச் சொல்லவில்லையோ தெரியவில்லை. :-(//

ஏன்னா அனுவாவியில் ஆஞ்சநேயரும் இருப்பார்! அதான் சொல்லலை போல! :) வேணும்-ன்னா வடபழனியில் முருகனைப் பார்த்து, அவரைப் பார்க்காமல் வந்தது போல், வந்து விடலாம்! என்ன சொல்றீங்க? :)

ச்ச்சும்மா...அனுவாவி என்ன தான் மருதமலைக்குப் பின்னால் இருந்தாலும், மருதமலையில் இருந்து செல்வது கடினம்! மறுபடியும் கோவை வந்து செல்வதே உசிதம்! அதான் பலரும் செல்வதில்லை போலும்!

//கோவைக்கு முதன்முதலில் சென்ற போது மருதமலைக்குச் சென்றேன். அப்போது திருப்பணி நடந்து கொண்டிருந்ததால் பாலாலயத்தில் முருகன் இருந்தான்//

அது என்ன பால் ஆலயம், குமரன்?

//இந்தப் படத்துப் பாடல்கள் எல்லாம் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் என்று இது வரை தெரியாது//

நீங்க இன்னும் நிறைய முருகன் படம் பார்க்கணும்!
ஏபி நாகராஜன், கே.சங்கர், தேவர் ஃபிலிம்ஸ் படங்கள் நிறைய பாருங்க! :)

வருவான் வடிவேலன்
தெய்வம்
திருவருள்
மனிதனும் தெய்வமாகலாம்
திருமலை தென்குமரி
திருமலைத் தெய்வம்
-ன்னு லிஸ்ட்டு நெறைய இருக்கு! அனுப்பி வைக்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 13, 2010 12:17 AM  

//அச்சிறிய கோவிலைச் சுற்றி சுற்றி வந்தேன். அவரை காணேன்.
மந்திரம் மனதில் நின்றது.

ஓம் சம் சரவணபவ.//

சூரி சார்...இப்படியும் ஒரு நிகழ்வா? குரு முகமாகத் தான் "ஓம் சம் சரவண பவ" எல்லாம் கேட்கணும்! பீஜாட்சரங்கள் இருக்கு, மேலோட்டமான பொருள் கூட அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் சொல்ல முடியாது-ன்னு எல்லாம் சிலர் கருதினாலும்...

யாரோ முன் பின் தெரியாத ஒருவர், இப்படி உங்களுக்குச் சொல்லி விட்டுப் போனதை என்னவென்று சொல்ல!

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 13, 2010 12:19 AM  

இந்த இடுகையில் தான் என்.ஆர்.சிபி -> அருணையடி ஆனார், என்பதை வரலாற்றில் பொறித்து வைக்கிறேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) November 13, 2010 12:20 AM  

//Athan Murugan! Nammai thedi avane Varuvan!

Guruvai! Nanbanai! Thaayai! Thanthaiyaa! Pillaiyaai! ....!//

சிபி அண்ணா...
எல்லாம் சொல்லி, ஒன்னை மட்டும் விட்டுட்டீங்க!....

ஆருயிர்க் காதலனாய்.... :))

kannabiran, RAVI SHANKAR (KRS) November 13, 2010 12:29 AM  

// Anonymous said...
மருத மலை பாம்பாட்டி சித்தர் குகிக்கு சென்றும் வழிபாடு செய்துள்ளேன்.
உங்களின் எழுத்துக்கள், என்னை மறுபடியும் மானசீகமாக அழைத்து சென்றது//

எழுதுவதே இந்த மானசீ்கத்துக்குத் தானே!
அடியார்கள் அவனில் திளைத்திருக்க வேண்டி, எழுதும் பணியே பணியாய் அருள்வாய்!

ராகவன்-ன்னு உங்க பெயரில் நீங்க இதைச் சொல்லியதைப் பார்த்ததும், என் தோழன் ராகவன் என் கூடச் செல்லச் சண்டை போட்டது போலவே ஒலித்தது! :) ரத்னேஷ் என்பவர் அடியேன் செந்தூர்ப் பதிவைப் படித்து விட்டு, திருச்செந்தூருக்கு நேரில் போனால் கூட, இப்படி நுணுக்கமாகச் சேவித்ததில்லை! உங்க பதிவில் தான் திருச்செந்தூரின் முழு தரிசனமும் கண்டேன்-ன்னு சொல்லி வைக்க...அதை ராகவன் பார்த்து வைக்க...என்னைப் பிடித்து வைக்க...அடித்து வைக்க... :)))

அருணையடி November 21, 2010 1:14 PM  

//இந்த இடுகையில் தான் என்.ஆர்.சிபி -> அருணையடி ஆனார், என்பதை வரலாற்றில் பொறித்து வைக்கிறேன்! :)
//

:))

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP