மாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்?
மாசி மகம் என்பது பொதுவாக ஒரு நீராடல் விழா! இந்த ஆண்டு, இன்று!(Feb 21, 2008).
இந்த நீராடல் விழா பழந்தமிழ் வழக்கமாக இருக்கலாம் என்று இராம.கி ஐயாவும் தன் நட்சத்திரப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் கண்ணுற்றால் கூட, இது சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
மாசி மகம் அன்று செய்யப்படும் நீராடலுக்கு (தீர்த்தவாரி),
சைவ-வைணவ ஆலயங்களில் இருந்து ஊருலா மூர்த்திகள் (உற்சவர்கள்),
குளம்/நதி/கடல் கரைகளுக்கு தத்தம் வாகனங்களில் கொண்டு வரப்படுவது வழக்கம்!
அனைத்து ஆலய பக்தர்களும் பேதமில்லாமல், அடுத்தடுத்து நின்று கொண்டு செய்யும் தீர்த்தவாரிக் காட்சி, கண் கொள்ளாக் காட்சி தான்!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!
பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!
* திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!
* கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு!
* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!
* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!
* எங்கள் கிராமம் வாழைப்பந்தலில், செய்யாற்றங்கரையில் எழுந்தருளும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, ஊர் மாதா கோவிலில் இருந்து பட்டும், பன்னீரும், ரோஜா மாலைகளும் தரப்படும்!
மாசி மகம் அன்று எல்லாருக்கும் பொதுவில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? அதுவும் இங்கே அமெரிக்கக் கடுங்குளிரில்? :-)
ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!
மனத்து ஈரமும், கண் ஈரமும் வரவழைக்கும் ஒரு எளிமை இனிமையான பாட்டை, மாசி மகத்தன்று, முருகனருள் வலைப்பூவில் கேட்டு மகிழ்வோம்!
T.N. ராமையா தாஸ் எழுதிய ஒரு சில பாடல்களில் இது மிகவும் புகழ் பெற்ற பாடல்-அதிசயத் திருடன் என்ற படத்துக்காக! இன்னொன்று மாயா பஜார் - கல்யாண சமையல் சாதம்! :-)
முருகா என்றதும் உருகாதா மனம்...மோகன குஞ்சரி மணவாளா
பாடலை இங்கு கேட்கலாம், TMS அவர்களின் குழையும் குரலில்! யூட்யூப் அசைபடம் கீழே!
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
(உருகாதா)
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
(உருகாதா)
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
(உருகாதா)
ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமும் பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
(உருகாதா)
வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்
இசை: K. பிரசாத் ராவ்
படம்: அதிசயத் திருடன்