Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Monday, January 24, 2011

கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்!

முருகனருள்-200 நிறைந்த நல்வேளையில், நல்லவர் பாடும் நல்ல பாடல் ஒன்றை இன்னிக்கி கேட்போமா?
இவருடைய பாடலில் நிறைவு உண்டு! ஆனால் இவருடைய வாழ்வில்?
- முருகா, என் கண்ணே...ஏன் இவளை இப்படிச் செய்து விட்டாய்?
இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS!
இன்று சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், அம்மையாரின் குரலை, "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்றெல்லாம் கேலி பேசினாலும், ஆதவனை அற்பத்தனம் கேலி பேசி மாளுமா?
சுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா?
1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்!
அப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய்! = கிட்டத்தட்ட 7700 சவரன்! :)

KBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா? விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா!
தமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்!

சுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக!
அப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்......கடைசியாக :)




Kodumudi. Balambal-இன் மகள் Sundarambal (KBS)
MS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே!

சிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது! நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே! ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்! :)
ஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள்! அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது!

எஸ்.ஜி. கிட்டப்பா - பெரும் புகழ் பெற்ற இன்னொரு மேடை நாடகக் கலைஞர்; இசை அறிஞர்! = Sencottah Gangadhara Iyer Kittappa = SG கிட்டப்பா!
பெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர்! ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது! கேரள-தமிழக எல்லை அல்லவா!

கிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள்! நாடகம் பார்க்க அல்ல! அவர் குரலைக் கேட்க! அப்படி ஒரு குரல் வளம்! இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்!

"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது! அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்!
"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா?" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர்! இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்! :)

ஒரே மேடையில் இருவருமே கலக்கினர்! வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு!
மோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம்! அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள்! இசைத்தட்டு விற்பனை!

ஆனால்...ஆனால்...ஆனால்,
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...
காதல்...காதல்....காதல்!


கலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா?
ஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்!
திருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார்! ஆனால் இலங்கையில் விளையாடியது விதி!

முறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே!
மோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ?
உள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது?
அதன் கதி, அதோ கதி! முருகா...அதோ கதி!
= கதியாய் விதியாய் வருவாய் குகனே!

கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்!
என்ன செய்ய? இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா? :) சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா? புகழா? அந்தஸ்தா?

சுந்தராம்பாள் ஒரு பேதை! அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை!
இயல்பிலேயே முருக பக்தி! விட்டுக் கொடுக்கும் போக்கு! ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு!

காதலே வென்றது! "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்!

பின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: "அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை! அது பதிவுத் திருமணமும் அல்ல! அது ஈசனருளால் நடந்த திருமணம்! ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!"


முருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்!

பிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது! நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்!
மேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள்! தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும்! :))

விதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில்! = பாலாழி பாய்ந்த பாதகனோ? :(
கிருஷ்ண லீலா என்னும் நாடகம்! என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்!

ஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....
அல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா! பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின!

கருத்து வேற்றுமை! இடைவெளி அதிகமாயிற்று!
= "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்ற சத்தியம்??? :(


பிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார்! ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்!

கிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார்! பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்!
வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை!

கிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது!
27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி! குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்! :(
சேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ? எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ? முருகா - இது உனக்குத் தகுமா?

அன்று பூண்டாள் துறவுக் கோலம்!
25 வயது தான்! காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான்! ஆனாலும் உடம்பில் வெள்ளாடை! நெற்றியில் வெண்ணீறு! கழுத்தில் துளசி மாலை!! - கண்ணா, பாவீ, தகுமா? :(

பால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை!
மேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை! மேடையிலும் தனிமை! வாழ்விலும் தனிமை!
சுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை! அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு!


இப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது!
அம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார்! காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.............ஊகூம்!
நந்தனாராக கே.பி.சுந்தராம்பாள்! அந்தணராக மகராஜபுரம்

அவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,
ஆகா...அதற்கும் கட்டுப்பட்டார் தயாரிப்பாளர்! அம்மையாரின் மனமே இளகிப் போனது!
யாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்!

பின்பு, வரிசையாகப் படங்கள்!
மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்!
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது!

முருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்!



தலைப்பு பற்றி ஒன்னுமே சொல்லலையே-ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது! :)
கலைஞர் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய படம் பூம்புகார்!
கண்ணகியின் கதை! வாழ்க்கை என்னும் ஓடம்-ன்னு சுந்தராம்பாள் பாடுவதைப் பார்த்து இருப்பீங்களே! யாரிடமாவது சிடி இருந்தால், பாடலைத் தயவு செய்து Youtube-இல் Upload செய்யுங்களேன்!

இந்தப் படத்தில், கவுந்தி அடிகளாக நடிக்க, கே.பி சுந்தராம்பாள் தான் சரியானவர் என்பது கலைஞரின் எண்ணம்! கண்ணகி-கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண் துறவி = கவுந்தி அடிகள்!

இளங்கோவடிகளின் கதையையே, தனக்கு ஏற்றவாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாற்றிக் கொண்ட கலைஞர், சுந்தராம்பாளை நடிக்க வைக்க மட்டும் பெரும்பாடு பட்டார்! :)

என்ன தான் அப்போதைய முன்னணி வசனகர்த்தா, கலைஞர் வசனத்தில் நடிப்பதே பெரிய பெருமை என்று பேசப்பட்டாலும், அதெல்லாம் யாருக்கு? யாசிப்பவன் இருந்தால் தானே, கொடுப்பவனுக்குப் பெருமை! இங்கே சுந்தராம்பாள் தான் யாசிக்கும் நிலைமையிலேயே இல்லையே!
பழுத்த முருக பக்தை! "சமணத் துறவியாக எப்படி நடிப்பேன்? மேலும் தான் பாடுவதோ விடுதலை இயக்க மேடை...எப்படி பகுத்தறிவுப் பாசறையில்...அதுவும் கருணாநிதியின் வசனத்தில்?"

இப்படியெல்லாம் சுந்தராம்பாள் கருத,
கலைஞரோ, கட்சிக்காக அல்ல, பகுத்தறிவுக்காக அல்ல ...தமிழுக்காக என்று சொல்ல....அம்மையாரும் தமிழுக்காகவே ஒப்புக் கொண்டார்! ஆனால், பல நிபந்தனைகளோடு!
சுந்தராம்பாளைப் பிற்பாடு சரி செய்து கொள்ளலாம் என்பது கலைஞரின் கணக்கு! ஆனால் வந்தது வேறு வினை - கருணாநிதிக்கு?

காதல்-கணவர் மறைந்த பின், நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீற்றை, மேக்-அப்புக்காகக் கூட அழிக்க மாட்டேன் என்று அம்மையார் உறுதியாக நிற்க...
கருணாநிதியோ, "அம்மா, கவுந்தியடிகள் என்பவர் சமணர், இது பாத்திரத்துக்கு ஒட்டாதே" என்று கெஞ்ச......

கற்பனை செய்து பாருங்கள்....கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கெஞ்சுவதை...வெற்றிகரமான வசனகர்த்தா, ஒரு சீனில் வந்து போகும் பெண்மணியிடம்...இத்தனை விண்ணப்பம்! :)

பின்னர், செட்டில் வேறு ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில்...
பட்டையாக விபூதி போட்டுக் கொள்ளாமல்.......
திருநீற்றையே மெல்லீசா, ஒத்தையாக....நாமம் போல் போட்டுக் கொண்டு....
அப்படியே நடித்தும் பாடியும் கொடுத்தார் சுந்தராம்பாள்! இன்றும் சினிமாவில் கவுந்தி அடிகளைப் பார்த்தால், ஒற்றை நாமம் தரித்தது போலவே இருக்கும்!

இதோடு முடியவில்லை கலைஞரின் கணக்குகள்....
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?
- என்று சிலப்பதிகாரத்தில் கூடப் "பகுத்தறிவு"ப் பாணியில் கேலியாக எழுத...
இறைவனைக் கேலி செய்யும் வரியைப் பாட மாட்டேன் என்று மறுத்து விட்டார் சுந்தராம்பாள்!

இறைவனை, "இல்லை" என்று மறுதலிக்கவே மாட்டேன் என்று அம்மையார் சொல்லிவிட...
வேறு வழியில்லாமல் கலைஞரும் - நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது! என்று பாட்டையே மாற்றிக் கொடுத்தார்:))
இது தான், கலைஞரையே மடக்கிய கேபி சுந்தராம்பாள் நினைவலைகள்!

அவர் தாம் மாசில்லாக் காதலோடு, முருகன் திருவடியில், சுந்தராம்பாள் என்றும் அமைதி கொள்ளட்டும்! தமிழ் இசையோடு நிலைத்து நிற்கட்டும்!!


இதோ, சுந்தராம்பாள் பாடும் மிக அழகான பாடல் ஒன்னு! கேட்டுக் கொண்டே பாட்டை வாசியுங்கள்!
முருகனருள் = பாடல்கள் வலைப்பூ! கட்டுரை வலைப்பூ அல்ல! :)

படம்: கந்தன் கருணை
வரிகள்: ஒளவையார் (இது இலக்கிய நூல்களில் இல்லை! ஒளவை தனிப் பாடல் திரட்டு)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி.மகாதேவன்

ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? = எங்கள் இனியது கேட்கின்!

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?
(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!


நாளும்.......மாசில்லாக் காதலையும், முருகத் தமிழையும், தமிழ் இசையையும் போற்றிய சுந்தராம்பாள் திருவடிகளே சரணம்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP