" சங்கரநாராயணா. திருமுறைப்பாடல்களின் அமைப்பை நீ கவனித்திருக்கிறாயா?"
"எந்த அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறாய் என்று புரியவில்லையே இராகவா!"
"அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகள் பாடிய தீந்தமிழ் பாடல்களுக்குத் தேவாரம் என்ற திருப்பெயர் வழங்குவதற்கு முன் திருப்பதியம் என்ற திருப்பெயர் வழங்கியிருக்கிறது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இன்றைக்கு அதே பெயரை திருப்பதிகம் என்று சொல்கிறோம். இத்திருப்பெயரின் காரணம் உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"
"தெரியும் இராகவா. மூவர் முதலிகள் ஒவ்வொரு திருத்தலங்க ளிலும் பாடிய பாடல்களைத் தொகுக்கும் போது பத்து பத்து பாடல்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அவற்றை திருப்பதிகங்கள் என்று அழைக்கிறார்கள்"
"ஆமாம். அப்படி பத்து பத்து பாடல்களாக வரும் போது கடைசி பாடலில் இந்த பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினால் என்ன என்ன பயன் விளையும் என்றும் பாடியிருக்கிறார்கள்"
"ஆமாம். வடமொழியிலும் அந்த வழக்கம் உண்டு. துதிப்பாடல்களின் இறுதிப் பாடல் அந்தப் பாடல்களைப் பாடிப் பரவுவதால் கிடைக்கும் பயன்களைச் சொல்லும். அதனைப் பலச்ருதி என்று அழைப்பார்கள்"
"அப்படி பதிகங்களின் இறுதியில் பயன்கூறும் பாடலைப் பாடுவது துதிப்பாடல்களின் அமைப்பு முறையாக இருக்கிறது"
"அருளிச்செயல்களாம் ஆழ்வார்ப் பாசுரங்களிலும் இந்த அமைப்பைப் பார்க்க முடிகிறது இராகவா"
"இந்த கந்தர் சஷ்டி கவசத்திலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம் நாராயணா. நூலின் இறுதிப்பகுதியில் மந்திர நூலான இதனை முப்பத்தாறு முறை உருவேற்றி திருநீறு பூசினால் என்ன என்ன பயன்கள் எல்லாம் விளையும் என்று தேவராய சுவாமிகள் கூறுகிறார்.
அப்படி வழக்கத்தை மாற்றாமல் பயன்களை நூலின் இறுதிப்பகுதியில் சொன்னாலும் புது வழக்கமாக நூலின் தொடக்கத்திலும் பயனைக் கூறும் ஒரு வெண்பாவை பாடியிருக்கிறார்"
"நீ சொல்வது புரிகிறது இராகவா. துதிப்போர்க்கு வல்வினை போம் என்று தொடங்கும் வெண்பாவினைத் தானே சொல்கிறாய்.
அது புது வழக்கமில்லை இராகவா. ஆழ்வார் பாசுரங்களின் தொடக்கத்தில் நூலையும் நூல் இயற்றியவரையும் அதாவது ஆழ்வாரையும் அவர்கள் ஊரையும் புகழும் வெண்பாக்கள் பிற்காலத்தவர் இயற்றி அதனை ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவதற்கு முன்னர் பாடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த வெண்பாக்களை தனியன்கள் என்று சொல்வார்கள்.
நீ கூட திருப்பாவைக்குப் பொருள் சொல்லும் போது அப்படி சில தனியன்களுக்கும் பொருள் சொல்லியிருக்கிறாய்.
எடுத்துக்காட்டாக இந்த தனியனை எடுத்துக் கொள்ளலாம்.
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு"
"ஆனால் தனியன்களுக்கும் சஷ்டி கவசத்தின் தொடக்கத்தில் வரும் வெண்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது நண்பா. தனியன்கள் நீ சொன்னதைப் போல் நூலையோ ஆசிரியரையோ ஊரையோ புகழும் போது இந்த வெண்பா கந்தர் சஷ்டி கவசம் தனை துதிப்போர்க்கு என்ன என்ன பயன் விளையும் என்று கூறுகிறது. இறுதியில் மட்டுமே ஆழ்வார் பாசுரங்களும் பயன்கூறு பாடல்களைப் பாடுகின்றன. இங்கே தொடக்கத்திலும் பாடுகிறார். அதனால் இதனை புதுமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்"
"நீ சொல்வதும் சரி தான். சரி. இப்போது இந்தப் பாடலின் பொருளைக் கூறு"
"பொருள் சொல்வதற்கு முன் அதனை ஒரு முறை பாடு சங்கரா"
"
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை"
"இந்த வெண்பாவை உரைநடையாகச் சொல்வதென்றால் எப்படி சொல்வாய் நண்பா?"
"நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்; நிஷ்டையும் கைகூடும்"
"அருமை. இப்போது பொருள் புரிந்திருக்குமே"
"பொருள் புரிகிறது இராகவா. ஆனாலும் சில சொற்களுக்கு இன்னும் விளக்கம் சொல்லலாம் போல் தோன்றுகிறதே. எடுத்துக்காட்டாக முதல் சொல்லான நிமலர் யாரைக் குறிக்கிறது?"
"உனக்குப் புரிவதை சொல் நண்பா. மேலும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்கிறேன்"
"கந்தர் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர் என்று தெரியும். அந்த கந்தனை அருளும் நிமலர் என்பதால் அங்கே முருகப்பெருமானைத் தோற்றுவித்த சிவபெருமான் என்று புரிந்து கொள்கிறேன். சரி தானா?"
"சரி தான் நண்பா. மலம் என்ற வடசொல் குற்றம் என்ற பொருளைத் தரும். நிமலர் என்றால் குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர் என்று பொருள் தரும். இங்கே அது சிவபரம்பொருளைக் குறித்து நிற்கிறது.
கந்தன் என்ற திருப்பெயருக்கும் பொருள் விளக்கம் உண்டு. சங்க காலத்தில் கந்து என்ற உருவில் இறைவனை வழிபட்டார்கள். அதிலிருந்து கந்தன் என்ற திருப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். ஸ்கந்தன் என்ற வடசொல் தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது என்று பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்ளும் பொருளில் பார்த்தால் கந்தன் என்பதற்கு இணைக்கப்பட்டவன் என்று பொருள்"
"இணைக்கப்பட்டவனா? அந்த பெயர் எப்படி முருகனுக்குப் பொருத்தம்?"
"ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தவனை உமையன்னை வாரி அணைத்த போது ஆறுருவும் ஓருருவாக இணைந்ததால் ஆறுமுகனுக்கு ஸ்கந்தன் என்ற பெயர் வந்ததாக கந்த புராணமும் பிற நூல்களும் கூறும் நண்பா."
"கந்தம் என்றால் நறுமணம், சந்தனம் என்றெல்லாம் கூட பொருள் உண்டல்லவா? நறுமணம் மிக்கவன், சந்தனக் குழம்பைப் பூசியவன் என்ற பொருள்களை எல்லாம் கூட இந்தப் பெயருக்குச் சொல்லலாம் இல்லையா?"
"ஆமாம். சொல்லலாம். ஆனால் அவை முதன்மைப் பொருள்கள் இல்லை"
"ஆகட்டும். நிமலரான சிவபெருமான் அருளும் கந்தனாகிய முருகப்பெருமான் மேல் இயற்றப்பட்ட சஷ்டி கவசம் என்ற நூல் இந்த நூல். செய்யுளின் கடைசி அடிக்குப் பொருள் சரி தானா?"
"சரி தான்.
உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.
ஓவ்வொரு நாளும் இந்த கவசத்தைச் சொல்லி உகந்து திருநீறு அணியலாம். சஷ்டி திதியில் ஓதினால் இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது"
"இப்படி ஒவ்வொரு சொல்லாக விளக்கிச் சொல்வதற்கு நன்றி இராகவா. இந்த வெண்பாவின் மற்ற அடிகளுக்கும் இப்படியே பொருள் சொல்"
"இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கும் நெஞ்சில் பதிப்போர்க்கும் என்ன என்ன பயன் விளையும் என்பதை மற்ற அடிகள் சொல்கின்றன.
துதிப்போர்க்கு வலிய வினைகள் போகும். பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களை இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தீவினைகள் துன்பமாகவும் நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறிப் பயன் தந்து கொண்டிருக்கின்றன.
இந்நூலைத் துதிப்போர்க்கு தீவினைப் பயன்களான துன்பங்கள் போகும் என்பதை வல்வினை போம் துன்பம் போம் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள்.
மீண்டும் மீண்டும் துதித்து இப்பனுவலை நெஞ்சில் பதிப்போர்க்கு நல்வினைப் பயன்களான இன்பமும் செல்வமும் பலித்து பயன் தந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல தலைமுறைகளாக ஓங்கி நிற்கும்.
இங்கே செல்வம் என்று சொன்னது இம்மையில் வேண்டும் பொருட்செல்வம் மட்டும் இல்லை; மறுமைக்கு வேண்டிய அருட்செல்வமும் தான்.
அந்த அருட்செல்வம் பலித்து கதித்து ஓங்கும் ஒரு வழி இறைவன் திருவடிகளிலேயே மனம் நின்று கிடைக்கும் ஆழ்ந்த நிஷ்டை தான். நெஞ்சில் பதிப்பவர்களுக்கு அந்த நிஷ்டையும் எளிதாகக் கை கூடும்"
"அடடா. இம்மை மறுமைப் பயன்களை அனைத்தும் தரும் பனுவலாக அல்லவா சஷ்டி கவசம் இருக்கிறது. மனம், மொழி, மெய்யாலே உந்தனைத் துதிக்க என்று அருளாளர்கள் சொன்னதை போல் இப்பனுவலை ஓதினால் இப்பயன்கள் எல்லாமே கிட்டும் கிட்டும்"
"நண்பா. இன்னும் நுண்ணிய பொருளைச் சொல்லாமல் சொல்லிவிட்டாயே. ஆமாம். மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களையும் இந்த வெண்பாவில் குறிக்கிறார் சுவாமிகள்.
துதிப்பது வாயால் செய்யும் செயல். அங்கே மொழியைக் குறித்தார்.
நெஞ்சில் பதிப்பது மனத்தால் செய்யும் செயல்.
அனைத்துப் புலன்களையும் அடக்கி நிஷ்டையில் அமர்வது உடலால் செய்யும் செயல். அங்கே மெய்யைக் குறித்தார்.
ஆக மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் கிட்டும் என்பது அவர் சொல்லும் செய்தி"
“
தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க
என்று கோதை சொன்னதைப் போல் இருக்கிறது இராகவா"
…
“புன்னகை மட்டும் தான் இதற்கு பதிலா இராகவா?
சரி தான். இன்னும் வேறு பொருள்களும் இந்த வெண்பாவில் இருக்கின்றனவா?"
"இதற்கு மேலும் ஆழ்ந்த பொருள் இருக்கலாம் நண்பா. இறையருளில் ஆழங்காட்பட்டவர்களிடம் தான் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்"
"அப்படியென்றால் அடுத்த வெண்பாவிற்குச் செல்லலாம் இராகவா"
(தொடர்ந்து பேசுவார்கள்)