முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் வரவேற்கிறேன்.
என்றைக்குமே தமிழ் என்றாலே முன்னால் நிற்பது முருகனே. பிரெஞ்சு லாத்தீன் மொழிகளை விடுங்கள். ஏன் கன்னடக் கடவுள் என்றோ தெலுங்கு தேவுடு என்றோ பெங்காலி பகவான் என்றோ அஸ்ஸாமி ஆண்டவன் என்றோ இல்லையென்று யோசித்தீர்களா? அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லையென்றா பொருள்? இல்லையே. அப்படியிருக்க முருகனை மட்டும் ஏன் தமிழ்க் கடவுள் என்று சிறப்பு அடைமொழி கொடுத்து தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கின்றார்கள்?
வெறுமனே தமிழர் வணங்கும் கடவுளாக மட்டும் இல்லாமல் தமிழாக நின்ற தனிப்பெருங்கருணை முருகப் பெருமான். அதாவது தமிழன் தான் வணங்கும் கடவுளை மொழியின் வடிவமாகவே கண்டதன் விளைவு முருகப்பெருமானுக்குத் தமிழ்க் கடவுள் பட்டத்தைத் தந்துள்ளது. அது பெயரிலேயே தெரியும். முருகு என்று மூன்றெழுத்து. அதில் மகரம் என்ற மெல்லினத்தில் தொடங்கி ரகரம் என்ற இடையினத்தை நடுவில் வைத்து ககரம் என்ற வல்லினத்தில் முடிகின்றது பெயர். இப்படி எழுத்துக்களின் மூன்று இனத்தை வைத்துச் சொன்ன பெயருக்குப் பொருள் "குன்றாத இளமை".
அப்படியிருக்கும் பொழுது... தமிழில் வலைப்பூக்கள் எழுதத் தொடங்கிய வேளையில் முன்னின்றது எதுவாக இருந்திருக்கும்? முருகனருள் முன்னிற்கும். ஆம். முதன்முதலில் தமிழில் எழுந்தது முருகனருள் வலைப்பூவே.
வாரியார் சுவாமிகள் சொன்ன கதையொன்று நினைவிற்கு வருகிறது. அறுவை சிகிச்சையில் நிபுணர் அவர். மகப்பேறு மருத்துவத்தில் சிறந்தவர் அவரது மனைவி. இருவருக்கும் பிறந்தது ஒரு குழந்தை. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியைக் கொஞ்சிக் கொண்டாடுவதில் பொழுது பறந்தது. அப்பொழுது மகளை மடியில் வைத்து அப்பா கேட்டார். "செல்லம். கண்ணெங்கே?" சிரித்துக் கொண்டே கண்ணைத் தொட்டுக் காட்டியது குழந்தை. இப்பொழுது அம்மா கேட்டாள். "தங்கம்...மூக்கெங்கே?" கிணிகிணியென்று சிரித்து விட்டு மூக்கைத் தொட்டுக் காட்டியது மகளின் பிஞ்சுக் கை. மறுபடியும் அப்பா கேட்டார். "வைரம். வாய் எங்க இருக்கு?" பறக்கும் முத்தம் கொடுப்பது போல வாயைத் தொட்டுக் காட்டினாள் மகள். உடலைத் திறந்து மூடிச் சரி செய்யும் அறுவை சிகிச்சையாளருக்காத் தெரியாது சிமிட்டும் கண்ணெங்கே என்று! குழந்தை கருவாகி அதன் ஒவ்வொரு அங்கங்களும் உருவாகி..நல்லதொரு பொழுதாகிப் பிறப்பது எப்படியென்று தெரிந்து அதற்கு மருத்துவமும் பார்க்கும் அம்மைக்கா தெரியாது நாசி எதென்று! அனைத்தும் அறிந்தும் மகவின் வாயில் அதைச் சொல்லிக் கேட்பதில் எத்தனையெத்தனை ஆனந்தம். மகிழ்ச்சி. "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கட் மழலை சொல் கேளாதவர்" என்றாரே வள்ளுவர்.
இந்த நிலை அருணகிரிக்கும் வந்தது. கணிகையரைக் கட்டிலில் கூடும் பணியே பணி என்றிருந்த நிலை மாறி முருகனருள் கிட்டிய பிறது பாடச் சொல்கிறார் முருகன். முத்துமுத்தாகப் பாடச் சொல்கிறார். திருப்புகழ் பிறக்கிறது. அப்படி அருணகிரி வாயில் திருப்புகழ் கேட்டு மகிழ்ந்த முருகன் எங்கள் வழியாகப் பதிவுகள் காண விரும்பினான் போலும். எது எப்படியானாலும் "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"
இந்த முயற்சியை முன்னின்று தொடங்கிய சிறப்பு நாமக்கல் சிபியையே சேரும். 9-12-2006ல் மூன்று பாடல்களைப் பதிந்து முருகனருள் வலைப்பூ முருகன் பாடல்களை தமிழன்பர்களிடன் கொண்டு செல்லத் தொடங்கியது. விநாயகனை வணங்கிய சிபி, சொல்லாத நாளில்லைச் சுடர்மிகு வடிவேலா என்று பதிந்தார். பின்னாலேயே தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி. அதைத் தருவதுதான் முருகா உன் சந்நதி என்று ஜிரா தொடர்ந்தார். ஊர் கூடித்தானே தேர் இழுபடும். குமரன், கே.ஆர்.எஸ், தி.ரா.ச, சுப்பையா ஐயா, வி.எஸ்.கே என்று ஊரும் கூடியது. தேரும் ஓடியது.
நூறு பதிவுதான் இலக்கா? இந்தக் கேள்விக்கு விடை "இல்லை". எண்ணிக் கைகூடிச் செய்யும் இந்தச் செயலில் எண்ணிக்கை கூடுவதில் மகிழ்ச்சியே என்றாலும் எல்லாப் பதிவுகளும் ஒரே தரத்தில்தான் எண்ணப்படுகின்றன. ஆனாலும் ஏன் இந்தப் பதிவு? எல்லா நாளும் நல்லநாள் என்றாலும் நடுநடுவே திருநாள் என்றால் கொண்டாட்டம் தானே. அதற்காகத்தான். (எல்லாம் ஒரு வெளம்பரந்தான்)
சரி. நூறாவது பதிவு. அதற்கு என்ன செய்ய வேண்டும்... அட.. என்ன செய்தோம் என்பதைக் கே.ஆர்.எஸ் தொடர்வார்.
நன்றி ராகவா!...
காவடி-ன்னா என்னாங்க? அட, காவடி பல பேருக்குத் தெரியும்! ஆனால் எத்தனை பேர் காவடி எடுத்திருக்கீங்க? உம்...ஹூம்...ஹூஹூம்....
சரி, பரவாயில்லை! இவ்வளவு நாள் முருகனருளை வாயினால் மட்டுமே பேசி மகிழ்ந்தோம்!
முருகனருள்-100ஆம் இடுகையில், பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்றாய்ச் சேர்ந்து காவடி எடுப்போம் வாரீகளா?முருகனருள் குழு-வலைப்பூவின் அன்புப் பதிவர்கள் பலர். இன்று அவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு காவடிச் சிந்தினைப் பாடித் துதிக்கப் போகிறார்கள்!
முருகனருள்-100 மகிழ்ச்சியில், ஆறுபடை முருகன்களும் ஒரே வரைபடத்தில் கிடைப்பார்களா? என்று கூகுள் இமேஜில் தேடத் துவங்கினேன்!
"
ஆறு படைக்கு ஒரே படம் எதற்கு? ஒரே பாட்டாய் வரட்டுமே!
ஒரு படைக்கு ஒரு சிந்தாக, அறு படைச் சிந்து - எனக்குப் பாட்டாய் எழுதிக் கொடுடா கேஆரெஸ்!" - என்று கேட்டான் போலும்!
வேலன் மருங்கே இருக்க, ஒருங்கே வந்து விழுந்தன வரிகள்!
மருகன் முத்தமிழ் கொடுக்க, காவடிச் சிந்தை என் சிந்தையில் வைத்தான்!
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில், முற்பட எழுதிய முதல்வோன் தந்திடக் காவடிச் சந்தம்! அதைப் பயிலவே வேண்டாம்! பாட்டில் தானே அமைந்து விடும்!
நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள்! கால்கள் தானே ஆடுகிறாதா என்றும் பார்த்து விடுங்கள்! :-)
வாழ்க்கையின் பாரத்தை இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி!
எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்! ஆண்கள்-பெண்கள் என்று பேதமில்லாமல் எல்லாரும் எடுக்கும் காவடி!
(கிராமத்தில் எடுக்கும் காவடி நிகழ்ச்சியை அப்படியே வார்த்தைகளில் தந்துள்ளேன்! அசைபடம் முயன்றோம்; உடனே கிட்டவில்லை; காவடியின் வகையைப் பொறுத்தும், அலகு குத்தல் போன்ற நேர்ச்சைகளைப் பொறுத்தும் ஊருக்கு ஊர் காவடி பூசை வேறுபடும்!)
முந்தி முந்தி வினாயகரே! முப்பத்து முக்கோடி தேவர்களே!
வந்து வந்தனஞ் சொன்னோமைய்யா! கந்தக் காவடி கொண்டோமைய்யா!* அரசரடிப் பிள்ளையாரையும், நாக கன்னிகைகளையும், பச்சையம்மனையும், அவள் அண்ணன் மாயோன் எனும் மாயாண்டித் தேவரையும், வாமுனி-செம்முனி எனும் முனீஸ்வரனையும், சுடலைமாட சாமியையும், கம்பத்து ஆஞ்சநேயரையும், ஊர் முன்னோர்களையும் பறை அறைந்து, தீபம் காட்டிக் கும்பிட்டு...
* விரதம் இருந்து, விபூதி பூசி, செவ்வாடை-மஞ்சளாடை கட்டிக் கொண்டு, எலுமிச்சை-செவ்வரளி மாலை சூட்டிக் கொண்டு,
* நேர்ச்சை கொண்டோர் மட்டும் முருகாஆஆஆ என்று அலறி அலகு குத்திக் கொள்ள,
* மணமாகாத விடலைப் பெண்களும் விடலைப் பையன்களும், ஆடுவோர் கால்களில் சதங்கைகளைக் கட்ட,
* ஊரிலேயே பெரிய தாயி-தகப்பன் மற்றும் மணியக்காரர், பூசையில் வைத்த மயில் காவடிகளை ஆண்களுக்கும், பால் காவடிகளைப் பெண்களுக்குமாய் எடுத்துக் கொடுக்க,
* தவில் கொட்ட, நாதசுரம் முழங்க.....ரெண்டும் சேர்ந்து ஒரு சந்தத்தை மெள்ளமாய் உருவாக்க,
* எங்கள் ஆயா, கடைசிக் காவடியை எடுத்துக் கொடுத்து, அரோகரா என்று கூவ....வயதானாலும் தன் கணீர்க் குரலில் பாட்டெடுக்க.....
பச்சைக் கலைமயில் ஆட்டம் - புகழ் பாடும் அடியவர் கூட்டம்
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா! என வருவார்
பல கோடி அருள் தேடி....* வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தலையினால் வந்தித்து, கையினால் சுற்றி, தோளினால் ஏற்றி, காலினால் ஆடி,
சுழன்றுச் சுழன்று, காவடி ஆடுவோம், வாருங்கள் நண்பர்களே! - இதோ ஆறுபடை வீட்டுக்கும் பொதுவான காவடிச் சிந்து! அருமை நண்பர்களின் குரலில்!
* என் வாசகம் -
ஜீவாவின் குரலில்!
* ஆத்திகம்
VSK ஐயா இசைப்பது!
* கெளசிகம்
திராச ஐயாவின் சிந்திசை!
* நம்
ஜிராவின் குரலில்
* கூடல்
குமரனின் குரலில்
* அடியேன், கேஆரெஸ் குரலில்....
ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!
முருகன் அருளினை ஆக்கி - வலைப்
பூவினில் காவடி தூக்கி - நல்ல
அடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட
வாராய் அருள் தாராய்!மன்றத்தில் மாலையைச் சூடி - பரங்
குன்றத்தில் பாவையைக் கூடி - என்றன்
மனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்
மயிலே பூங் குயிலே!செந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் - கந்த
வேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய
வீரா அதி தீரா!பழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்
கழனி உழும் வய லாளன் - எங்கள்
சீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்
ஆண்டி அவன் தான்டி!
சாமி மலை எனும் வீடு - பொன்னி
தாவி வரும் வயற் காடு - அங்கே
தப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய
வேதன் சாமீ நாதன்!
வில்லிய மான் மகள் வள்ளி - அவள்
மெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை
கரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட
பணிகை திருத் தணிகை!
மாமனின் சோலையின் மீதில் - மட
மங்கையர் காதலை ஓதில் - நாவல்
படுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என
மாலை உதிர் சோலை!
ஆறு படை களில் வீடு - அங்கு
ஆறு முகங் களில் கூடு - அந்தச்
சேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி
ஆடு சிந்து பாடு!
காவடி யாடு சிந்து பாடு! காவடி யாடு சிந்து பாடு!வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரகரோகரா!
கதை இல்லாமல் நூறாம் பதிவா?இடும்பன்! முருகனிடம் பக்தி பூண்டவன்! அகத்தியரின் மாணாக்கன்! ஆனால் குருவால் முருகனைக் காண முடிந்து, சீடனால் முருகனைக் காணவே முடியவில்லை!
அகத்தியரோ சிவகிரி-சக்திகிரி என்னும் இரு குன்றுகளைத் பொதிகையில் கொண்டு போய் தம் இருப்பிடத்தில் வைக்குமாறு அவனைப் பணித்து விட்டார்!
நெடுங் கோலின் இரு முனைகளிலும் கட்டினான் குன்றுகளை! தோன்றிற்று காவடி! வந்தான் ஆவினன்குடிக்கு!
அந்த நேரம் பார்த்து அங்கேயே வருகிறான் பழத்துக்குச் சினங் கொண்ட ஆண்டி!.....வந்தவன், சொல்லாமல் கொள்ளாமல், பாரம் இறக்கியவனின் மலையில் போய் நின்று கொண்டான்!
பாரத்தை மீண்டும் தூக்கியவனுக்குப் பாலனையும் சேர்த்து, தூக்கிச் செல்லும் உரிமை இல்லையே! பிள்ளை பிடிக்கிறான் என்று யாராவது சொல்லிவிட்டால்?.....எவ்வளவு சொல்லியும் இறங்கிச் செல்ல மாட்டேன் என்கிறான் பாலகன்! அவன் தான் கயிலை மலைக் கோபத்தில் உள்ளானே!
அந்த மலை தான் இல்லை! இந்த மலையுமா எனக்கு இல்லை?
அந்த மலை, இந்த மலை எனாது, எந்த மலையும் கந்தன் சொந்த மலை அல்லவா?
இடும்பனின் பந்த மலையைத் தனக்குச் சொந்தமாக்க வந்த மலை! அந்தக் கந்த மலை! மனம் உந்த மலை! அருள் தந்த மலை!
மாணாக்கனின் நெடுநாள் வேட்கையைத் தீர்த்து வைக்க இதுவே தக்க சமயம்! பாரம் தூக்குவோனுக்குக் கோபத்தை உண்டாக்கித் தாபத்தைத் தீர்த்து வைத்தான் வடிவேலவன்!
இன்றும் சிவ கிரியில் சிறுவன் ஆண்டியாய் நிற்கிறான்!
சற்றுத் தள்ளி சக்தி கிரியிலும் ஓர் ஆலயம் நிற்கிறது!!
அந்தப் பழனியில் தோன்றிய காவடி,
ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...
இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!
பதிவர் ஜீவா-வின் வாழ்த்துச் செய்தி
"சரி, நூறாம் இடுகையை நிறைக்கும் முன்னர் ஒரு கேள்வி! - முருகனுக்கு மொத்தம் எத்தனை முகம் நண்பர்களே?""என்ன கேஆரெஸ் இது விளையாட்டு? பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் முருகனுக்கு ஆறுமுகம்-னு! உனக்குத் தெரியாதா?"
"ஓ! அடியேனுக்குத் தெரியாதே! எங்க ஆறுமுகனுக்கு ஆறு முகமா?
ஆறு முகம் இல்லீங்க! இன்னிக்கி செல்லக் குழந்தைக்கு நூறு முகம்!
முருகனருள் வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையும் அவன் சிங்காரத் திருமுகம் தானே!
ஆறுமுகம் ஆன பொருள், நூறு பதிவருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
இந்த நூறாம் இடுகை பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல கோடி நூறாயிரம் முகங்களாகப் படர்ந்தோங்கி,
ஒவ்வொரு பதிவும் அவன் திருமுகத்தையே காட்டி அருள் புரியுமாறு அருள் புரிவானாக!
சரணம் சரணம் சரவண பவ ஓம்! சரணம் சரணம் சண்முகா சரணம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரோகரா!