முன்பு பதிவிட்ட, பழமுதிர் சோலை ரகசியங்களைப் பார்ப்போமா?
பழமுதிர்-ச்-சோலை ன்னு சொல்லாதீங்க! "ச்" வராது!
பழம் உதிர் சோலை = பழங்கள்...உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை என்னும் அழகிய வினைத் தொகை!
நம் வினையும் தொகைந்து விடும் முருக வினைத் தொகை!
பழமுதிர் சோலை ஆலயம்
* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்!
கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார் திருமுருகாற்றுபடையில்!
* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!
* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்களின் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!
* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது,
பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!
* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!
* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே!
மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!
* மாமன் திருமால் கீழே, காட்டில்! மருகன் முருகன் மேலே, மலையில்!
சோலைமலை, அழகர் கோயில்!
* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்!
இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?
* பலரும் அறிந்த பழமுதிர் சோலை திருப்புகழ்-கள்
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல்
* இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே - என்று பழமுதிர்சோலையில் தான் முருகாற்றுப்படை முடிகிறது!
திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!
வாடா முருகா! என் முன்னே...ஓடி வாடா....எத்தனை காலம் ஏங்குவேன்? முருகாஆஆஆ!