ஜானகியா? சுசீலாவா? - சிங்கார வேலனே தேவா!
முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ந்த தொடர்ச்சியாக...
149 - உனக்கும் எனக்கும் கல்யாணமா!
150 - கவிக் காவடி
சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு!
இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது!
நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!
காட்சியை youtube-இல் ஓட்டாமல், மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம், கே.சாரங்கபாணியின் கன ஜோரான பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் ஸ்டைலே தனி!
"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா?
சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்!
* சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை?
* ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே?
* ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி!
* அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை?
யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :)
இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"!
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்!
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!
தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)
ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :)
சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு...
அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)
இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்?
இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்!
கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ:
* சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே..
* ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :)
* வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!
ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை!
ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!
அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :)
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்!
ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?
பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!
ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி
உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது!
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :)
பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?
அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க!
ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை!
அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)
மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)
மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்...
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா!
சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்!
முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்!
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்!
சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது...
அந்த இடது பக்க இதழோரமா.....
Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)
சிக்கல் சிங்கார வேலர்
(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே!
வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!)
இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்!
பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட!
இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!
சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)
பயப்படாதீங்க! சூப்பரா இருக்கு! ஜானகியே தான் பாடறாங்க! - "நீ லீலா பாடித தேவா, மனதே ஆலிஞ்ச வேடக தேவா!"-ன்னு தெலுங்கில் வருது! படம்: முரிப்பிஞ்சே முவ்வாலு! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா.பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
ராகம்: ஆபேரி
தமிழில்...
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!
செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!
சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்....
அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு,
முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்!
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!
படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:
Other Versions:
தவில் - வலையப்பட்டி:
கீ-போர்ட் சத்யா:
புல்லாங்குழலில்..விமல் என்ற இளங்கலைஞர்
மலையாளக் கலைஞர் Stephen Devassy on Keyboard:
மலையாளத் தொலைக்காட்சிப் போட்டி ஒன்றில்...அருணா மேரி:
கடைசீயா....நம்ம சின்மயி :)