"தல" பில்லா 2007! முருகப் பெருமான் குத்துப்பாட்டு!!
தல பில்லா படம் இதோ நாளைக்கு ரிலீசாகப் போகுது! முருகனருள் வலைப்பூவில் ஒரு குத்துப்பாட்டு போட்டா முருகன் கோவிச்சுக்குவாரா என்ன?
பில்லா 2007 படத்தில், "சேவல் கொடி பறக்குதடா"-ன்னு இந்த முருகன் பாட்டைக் கேட்டவுடன், என் மனசு ஜிவ்வுன்னு ஒரே உசரத்துக்குப் போயிடிச்சி!
பாட்டின் வரிகளை இணையத்தில் தேடினேன்...கிட்டவில்லை!
சரி, நாமளே உக்காந்து எழுதிடுவோம்-னு கேட்டுக் கேட்டு எழுதிட்டேன்!
அப்படியே மனப்பாடமா ஆகிப் போச்சு! - பின்னே வூட்டுல யாருக்கும் தெரியாம, கதவை சாத்திப்புட்டு, வால்யூமை ஃபுல்லா ஏத்தி வச்சி, ஆடு ஆடு-ன்னு ஆடிக்கிட்டே எழுதினேன்-ல! மனப்பாடம் ஆகாம என்ன செய்யும்? :-)
பால் வடியும் பால முகம், அமைதியான பையன் (அட...என்னைப் போலவே) - இப்படி எல்லாம் பேரு எடுத்த விஜய் ஏசுதாஸ் என்னமா குத்துப்பாட்டைக் குத்திக் குத்திப் பாடுறான்!
எலே, ஏசுதாஸ் பய புள்ள! கலக்கிட்ட போ! ஒன் கச்சேரி பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன். அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடப் போகுது இந்தப் பாட்டு!
பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய், பாட்டு வரிகள்-ல பிச்சி ஒதறி இருக்காரு! குத்துப்பாட்டில் கந்த சஷ்டிக் கவசமும், அருணகிரியும் கொண்டு வரணும்-னா சும்மாவா?
இசை = நம்ம யுவன்!
சும்மா நாதஸ், தவிலு, குத்திசைன்னு, கலக்கி இருக்காரு! அப்பா தான் நாதசுரம் தவிலுன்னு பல சமயம் கலந்து கொடுப்பாரு! பையனும் அடிச்சி ஆடி இருக்கான்!
குத்து குத்து கூர்வடி வேலால்!
குத்து குத்து குத்துப் பாட்டால்!! :-)
பாட்டின் வரிகளைக் கேட்டுக் கொண்டே படிங்க! ஆடணும்-னு நெனச்சாலும் தப்பில்லை! கொஞ்சம் அக்கம் பக்கம் பாத்துட்டு ஆடுங்க மக்கா! :-)
Seval Kodi.mp3 |
பாட்டை மேலே கேக்க முடியலைன்னா, இதோ MusicIndiaOnline சுட்டி
வேல்! வேல்!! வேல்! வேல்!!
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!
வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?
விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! - வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! - வேல் வேல்!!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)
பாட்டைக் கொஞ்சம் அசை போடலாம், வாரீயாளா?
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!
= இது அப்படியே கந்த சஷ்டிக் கவசம்!
காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட...ன்னு அதே வரிகள்!
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்!
= மிக அருமையான வரிகள்! தமிழ்க் கடவுள்-னு முருகனைச் சொன்னாலும், கடவுளையும் தாண்டி ஒரு பரம்பரைத் தலைவன் - பாட்டன் கணக்காத் தான் - எளிய மக்கள் முருகனைக் கருதறாங்க! காவடி தூக்கி ஓடியாறாங்க!
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
= முருகன் காட்டுக்குள்ள வள்ளியை டாவடிக்க நடமாடினாரு! தெரியும்!
ஆனாக் கா(நா)ட்டுக்குள்ள எப்போ முடி சூடினாரு? வந்து சொல்லுங்க ஜிரா! :-)
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு! = ஹிஹி - நெஜமாலுமே சூப்பரு!
இனி, திருச்செந்தூரில், சூர சம்ஹாரம்-னு சொல்றதுக்குப் பதிலா,
"சூரன் சுளுக்கெடுத்தல்"-னு அழகாத் தமிழ்லயே சொல்லலாம்! :-)
ஆதித் தமிழன் ஆண்டவனானான்!
மீதித் தமிழன் அடிமைகளானான்!!
= ஐயகோ! கவிஞர் இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறாரே!
முருகா, நீ ஆண்டானாப் போயிட்ட! நாங்க எல்லாம் ஒத்துமையில்லாம அடிமையாப் போனோமா? - ஈழத்துல, தமிழன் ஆண்டாண்டு காலமா அல்லல்படுவதைப் பார்த்தும் கூட, போகட்டும் அடிமைகள்-னு எங்கள எல்லாம் நீ விட்டுட்டியோ?
மனுஷன்தான் முருகனோட அவதாரம்! - என்ன ஒரு ஒற்றுமை, ஆழ்வார்கள் கருத்துடன்!
மனிதனாய் அல்லவோ இறைவன் வருகிறான்! சிறையில் பிறக்கிறான், புழுதியில் வளர்கிறான், தாய் தந்தை இல்லாமல் தவிக்கிறான்; நண்பர்களோடு லூட்டியும் அடிக்கிறான், காதல்-னா என்னன்னு கற்றும் கொடுக்கிறான்!
மனிதன் தான் இறைவனோட அவதாரம்! மனித குல மேம்பாடே இறைப்பணி!!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்! = பார்வதிக்கு எங்கூர்ல சிவதாரம்னு நாட்டு வழக்காச் சொல்லுவாய்ங்க! சிவதாரம் பெரியம்மா எங்க வூட்டுக்கு நாலு வூடு தள்ளி இருந்தாங்க!
சிவதாரம் வயித்துல பெக்காம, சிவன் கண்ணில் பெத்ததால், முருகனைத் "தத்து எடுத்தா சிவதாரம்"-னு கவிஞரு சிம்பிளாச் சொல்லிபுட்டாரு!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்! தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
= அருமை! அருமை! அப்படியே திருவிழா கண்ணு முன்னால வருது!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?
= நச்சுன்னு கேட்டாருப்பா!
பார்வதி பிரிய நந்தனாய நமஹ-ன்னு சொல்லுறவங்க சொல்லிக்கட்டும்! நம்ம புள்ளை முருகனை அடுத்தவங்க செல்லமாக் கூப்பிட்டா, அவிங்கள போடா டேய்-ன்னு சொல்லுவோமா? - ஆனா, நம்ம வூட்டுக்குள்ளார சிவதாரப் புள்ளையாண்டானே-ன்னு தாராளமாக் கூப்பிட எவன் வந்து தடை சொல்றது?
நம்ம புள்ளைய, பேச்சு வழக்குல, நம்ம வூட்டுல கூப்பிடாம, வேற எங்கன போயிக் கூப்புடப் போறோம்?
பெருமாக் கோயில்ல கூட, இடையறாது தமிழ்-ல ஓதறாங்க! - நீராட்டம் துவங்கி நிவேதனம் வரை பாசுரங்கள் ஓதக் காணலாம்! உற்சவப் புறப்பாடுகளில் தமிழ் முன்னால்...இறைவன் பின்னால்...அதற்கும் பின்னால் வடமொழி வேதங்கள்!
ஆனா தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லிக்கிட்டு முருகன் கோயில்ல மட்டும்...ஹூம்! இங்கும், தமிழ் இடையறாது ஒலிக்கும் நாள் எந்த நாளோ? முருகா, மனசு வையிப்பா, என் செல்வமே!
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா! நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
= பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்; உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்-ன்னு கண்ணதாசனும் பாடினாரு!
ஆனா, "நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா"-ன்னு லோக்கலாப் பாடும் போதும், அதே கிக்கு இருக்கத் தான் செய்கிறது! என்னா சொல்றீங்க மக்களே?
குத்துப் பாட்டு முருகனுக்கு அரோகரா! பத்து மலை முருகனுக்கு அரோகரா!!