017: அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(அறுபடை)
பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை)
வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை)
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை)
தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை)
குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை)
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை)
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை (அறுபடை)
திரைப்படம்: கந்தன் கருணை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
திருக்கார்த்திகைத் திருநாளில் கார்த்திகேயன் புகழைப் பாடுவோம்!
19 comments:
குமரன்!
அருமையான பாடல்; என் அபிமான வித்துவான் ;என் சிறு இசையனுபத்துக்காசான் ; சீர்காழியாரின் அட்ரசசுத்தமான குரல் ;இனிய இசைக்கரசர் மகாதேவன்; இயல்பான கவியரசர் தமிழ்....சிவகுமார் முன்னாள் முதல்வர்; விஜயாவின் அழகுத் தோற்றம்.
ஆகா!!!! ஆனந்தம்...கேட்டுக் கேட்டு எழுதுகிறேன்.
யோகன் பாரிஸ்
அருமையான பாடல் குமரன்
தாங்கள் இங்கு தந்தமைக்கு மிக்க நன்றி.
கந்தனை கார்த்திகேயனை இக்கார்த்திகை திருநாளில் தொழுதிடுவோம்.
திருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
குமரன்,
இங்கெ வந்து திட்டம் செய்து கேட்பது சில பாடல்களே.
இப்படி மனதை உருக்கும் குரலும் முருகனும் கணினியில் வந்தால் இன்பத்துக்கு அளவேது.
செண்டிமெண்ட் என்று உங்கள் பதிவில் எழுதத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும்
இந்தப் பாட்டுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
எனக்கு மிகவும் ஆகிவந்த பாடல்.
கார்த்திகை மைந்தனுக்கு, திருக்கார்த்திகை நன்நாளில்,
இனிய பாடலுடன் வந்தனம்!
நன்றி, குமரன்!
சீர்காழியின் வெண்கலக் குரலில், திருக்கார்த்திகை அன்று அறுபடை வீட்டு தீபத்துக்கும் அழைத்துச் சென்றீங்க, குமரன்! மிக்க நன்றி!
(படம் எனக்குத் திருச்செந்தூர் வரை தான் வருகிறது; நண்பர்களுக்கு எப்படி?)
வீடியோ போட்டு கார்த்திகை கொண்டாடினதல மகிழ்ச்சி குமரா! சீர்காழின்னா சீர்காழி தான்!
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
படம் எனக்கு "கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு" வரை வருகிறது
தீபத் திருநாளன்று கார்த்திகைப்
பெண்களின் மைந்தனைக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியமைக்கு நன்றி.
நல்ல பாட்டுங்க.
தீப திருநாளுக்கேற்ற பாட்டு....நன்றி முருகனருள் எல்லோரையும் காக்கட்டும்...
அண்ணா,
அருமையான பாட்டு.
ஆறு படைவீடுகளின் பெயர்களை மட்டும் வேறு வண்ணத்தில் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஓம்!
ஓ! தான் போட்டேன் அதுவாக ஓம் என்று ஆகி விட்டது(எல்லாம் பழக்க வழக்கம்). வண்ணம் மாற்றியமைக்கு நன்றி.
தமிழ்சார்ந்த இந்த பக்தியை வரவேற்கிறேன். வாழ்க வளர்க.
பாடலைக் கேட்டு அனுபவித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி யோகன் ஐயா.
கார்த்திகைக்கு பதிவான பாடல்களை தைப்பூசத்தன்று கேட்டு முருகனை வணங்கினேன். எல்லா பாடல்களையும் கேட்டேன், முருகனை தரிசித்தேன்.நன்றி
குமரன்,
அருமையான பாடலொன்றை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
கவியரசரின் தெவிட்டாத தமிழ், சீர்காழி கோவிந்தராஜனின் மதுரக்குரல், பாடப்பட்ட தெய்வம் முருகப்பெருமான்... ஆகா, இப்பாடலைக் கேட்கும் போது எனை மறந்து என் ஊரில் இருக்கும் கடம்பமரத்தின் நிழலில் இருக்கும் வேல் தான் ஞாபகத்திற்கு வரும்[அங்கு கடம்பமரத்தின் அடியில் வேல் தான் இருக்கிறது. முருகனின் உருவச் சிலை அல்ல]
மிக்க நன்றி குமரன்.
மிகவும் அருமையான பாடல். கேட்கக் கேட்க பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் முருகனின் திருவுருவக் காட்சி உள்ளத்தில் மேவும்.
அதிலும் சீர்காழியாரின் கணீர்க் குரலில் பாடல் மிகவும் இனிமை. கவியரசரின் கனிந்த தமிழ். திரையிசைத்திலகத்தின் பொருத்தமான இசை. அவருக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாங்கித் தந்தது. அதாவது கந்தன் கருணையால் மகாதேவனுக்குக் கிடைத்தது விருது.
நன்றி
நன்றி முருகா
Post a Comment