ஆறு நாட்களில் ஆறு பதிவுகளில் ஆறு முகனுக்கு சஷ்டி சிறப்புப் பதிவுகளில் முருகனருள் முன்னிற்கிறது.
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் முகம் ஒன்றே வள்ளியயை மணம் புரிய வந்த முகம் ஒன்றே
என்று ஆனந்த பைரவியில் கண்ட சாபு தாளத்தில் அருணகிரி பாடிய ஆறுமுகமான பரம்பொருளை ஆறு பதிவுகளில் பாடிடக் கேட்டோம்:
* சரவணபவ என்னும் திருமந்திரம் ஷண்முகப்பிரியாவில் ஷண்முகன் புகழ் பாடியது. * பரம்பொருள் அகரம் முதல் அனைத்தும் ஆனதை திருப்புகழில் புகழ்ந்தது. * முருகு என உருகிடும் இன்பம்போல் வேறுண்டோ என சீர்காழியார் குரல் கேட்டது. * நாத, வேத, ஞான பண்டிதனை ராஜ அலங்காரத்திலும் பார்த்தது. * முதல் சொல் தந்து முக்திக்கு வித்தானவனை அருணகிரியாரின் சொற்சுவையில் பருகியது. * தியான நிலையில் அகமுருகி நின்றார்க்கு அருள் பாலித்திடும் செந்தில்நாதனைப் போற்றியது.
இப்படியாக, குமரனும், கே.ஆர்.எஸ் உம் தாங்கள் தேர்ந்தெடுத்த தேனான பாடல்களை கேட்பதற்கு தோதாக தந்திட, கைமாறென்ன செய்வேன்? நன்றியோடு சேர்த்து வேறென்ன தரலாம்? பதிவு தரலாமா? வள்ளி திருமணமும், மங்களமும் கொடுத்து சஷ்டி பதிவுகளுக்கு இனிதான நிறைவினைத் தரலாமா!
வள்ளி திருமணத்தினை இசை நாடகமாக வெளியிட்டிருக்கிறார்கள் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலனின் குழுவினர். இணையத்தில் அதனை இசைக்கோப்பாக வெளியிட்டுள்ளார்கள் சிஃபி தளத்தினர். நீங்களே கேட்டு மகிழுங்கள்.
போயிருக்கீங்க சரி...சூர சம்ஹாரம் என்னும் சூரனுக்கு அருளலைத் திருச்செந்தூரில் யாராச்சும் பார்த்திருக்கீங்களா? பார்க்கலைன்னா, பதிவின் இறுதியில் அசைபடத்தில் (வீடியோவில்) காணுங்கள்! வாரியார் சுவாமிகளின் இளமைக் குரலும் கடைசியில் கேட்கிறது!
சரி, அது என்ன திருச்-சீர்-அலை-வாய்? "வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" என்று புறநானூறு சொல்கிறது. வெள்ளலைகள் வீசி வீசி அலைக்கும் வாய்ப்புறம் = அலைவாய்! -"திரு" என்னும் வெற்றித் திருமகள் விளங்க, -"சீர்" (புகழ்) பெற்று -"அலைவாயிலே" ஊர் விளங்குகிறது!
ஆம். இந்த ஊர் வெற்றிப் பட்டினம்! அதுவே இந்தச் செந்தில்! ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன. இப்படி ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது. ஏமகூடத்தில் போர் நடந்தாலும், திருச்சீர்+அலைவாயின் கரையோரத்தில் தான், தமிழ்வேள் முருகன் பெற்ற அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது!
சூரன் ஆணவ மலம்! மும்மலங்கள்=ஆணவம், கண்மம், மாயை; இதில் ஆணவம் மட்டும் வந்து விட்டால், மற்ற ரெண்டும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்துரும்! செய்தது தவறு என்று தெரிந்த பின்னரும் கூட, ஆமாம்டா, செஞ்சேன்; இப்ப அதுக்கு என்னாங்குற-ன்னு பேச வைப்பது ஆணவம்! குறைந்த பட்சம், குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்ற விடாது தடுப்பது தான் இந்த ஆணவம்!
இதுவே இராவணன், சூரன் ஆகியோரின் இயல்புகளாகச் சொல்லப்பட்டது! சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே, உயிர்கள் இந்த மும்மலங்களை அறுத்து இறைவனிடம் சேர வேண்டும் என்பது தான். அதற்கும் இறைவன் அருள் தேவை! - அதைத் தான் முருகன் செய்தான். ஆணவத்தால் ஆடி விட்டுக், கடைசியில் தனி மரமாய் நின்றவனை, மருள் செய்து அருளினான். ஆணவம் அழிந்ததால், அவனடி தெரிந்தது.
திருச்செந்தூர் தலத்துக்கு இதுவரையிலும் செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை. அப்படியே மனத் திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!
திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :-) சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்! முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;
பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்! பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்! பாலமுகம்! சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும், திருப்பவளச் செவ்வாயுமாய்... தோள்களில் வெற்றி மாலை தவழ, அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ... கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே! கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!
உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட! செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!
இன்று கந்த சஷ்டி இறுதி நாள்! இதோ இன்றைய பாட்டு! கேட்டு மகிழுங்கள்! - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் TMS-உம், சீர்காழியும் சேர்ந்து பாடுவது! தெய்வம் படத்துக்காகத் திருச்செந்தூரிலே படமாக்கப்பட்டது! குன்னக்குடி இசையில், கண்ணதாசன் எழுதியது!
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
சின்ன வயசுல பள்ளிக் கூடத்துல ஒரு போட்டி! ஏதோ கந்த சஷ்டியாம்! அதுவோ ஒரு சமணப் பள்ளிக்கூடம்; இருந்தாலும் தமிழாசிரியர் போட்டிய வச்சிட்டாரு!
சரியாச் சொல்லணும்னா, ஆசிரியர் அல்ல! ஆசிரியை! ஆ+சிரியை = சிரிச்சிக்கிட்டே ரொம்ப அன்பா, அழகா இருப்பாய்ங்க! :-)
தமிழ் விழா-ங்கிற பேருல, எங்க Group மாணாக்கர்களுக்கு மனப்பாடச் செய்யுளைப் போட்டியா வச்சிட்டாங்க!
முத்தைத் தரு பத்தித் திருநகையை மனப்பாடமா, தவறில்லாம, படபட-ன்னு வேகமாச் சொல்லணும்!
அப்படிப் பிரமாதமாச் சொல்லி முடிக்கறவங்களுக்கு, தோகை விரித்த மயில் பொம்மை பரிசு! கம்பியில் செஞ்ச மயிலு! நிஜமான மயில்தோகை இருக்கும்!
Teacher, இப்படிச் சொன்னது தான் தாமதம், வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடியாந்தேன்! என் அத்தை படிக்கும் திருப்புகழ் புத்தகத்தை எடுத்து நோட்டம் விட்டேன்!
முத்தைத் தரு பத்தி - எந்தப் பக்கத்துல இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டேன்! ஆனா ஒன்னுமே புரியலை! சும்மா வாய் விட்டுப் படிச்சிப் பாத்தேன்! வாய் குழறது!
தக்கத் தக தக்கத் தக தக - குக்குக் குகு குக்குக் குகு குகு......
அட என்னடா இது! ரயில்ல எவனோ 'கூட்ஸ்' வண்டிக்காரன் எழுதின பாட்டைத் தான், அருணகிரி எழுதிட்டாரு-ன்னு மக்கள் சொல்லிப்பிட்டாங்களோ? :-)
இப்படிச் சின்ன வயசுக்கே உரிய அலுப்பும், குறும்பும்! முதல் பத்தியை எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள தாவு தீந்து போச்சு! :-)
அத்தை கிட்ட போயி, அந்தப் பாட்டைச் சொல்லித் தருமாறு கேட்டேன்! அவங்க மயக்கம் போட்டு விழாத குறை தான்!
பின்னே, காலங்காத்தால எழுந்து, பாலும் தெளிதேனும்-னு சொல்றதுக்கே மோரும் 'போர்ன்வீட்டாவும்'-னு சொல்ற பையன் நானு! :-)
பள்ளியில் எப்படியும் எனக்குத் தான் பரிசு தரணும் - அதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க அத்தை-ன்னு கெஞ்சிக் கூத்தாடி...கடைசியில் அந்தப் பொறுமையின் சிகரம், பாதிப் பாட்டை எனக்குச் சொல்லிக் கொடுத்தே...ஓடாய்த் தேஞ்சிப் போயிட்டாங்க!
நானும், சும்மா இல்லாம, நண்பர்கள் கிட்ட அளப்பற வுடலாம்-னு...பாட்டை அவிங்க முன்னாடி மனப்பாடமா எடுத்து வுட்டேன்!
பசங்க கதி கலங்கிப் போயிட்டாங்க! எப்படிடா ஒரே நாள்-ல இப்படிக் கொட்டு கொட்டு-ன்னு கொட்டற-ன்னு ஒரே பாராட்டு மழை!
நானும் அதுல நனைஞ்சி போயி, பாதிப் பரிசு அப்பவே கிடைச்சுட்டதா நினைச்சுகிட்டேன்! ஆனா வந்தது பாருங்க ஒரு வினை! கோபால்-ங்கிற பையன் ரூபத்துல!
இந்தப் பாட்டை அட்சரம் பிசகாம அப்படியே பாடினா...
ஏதாச்சும் ஒரு பறவை, கிளியோ குருவியோ.....
பாட்டைக் கேட்டு அப்படியே கீழே விழுந்து செத்துப் போகுமாம்!
இப்படி-ன்னு குண்டைத் தூக்கிப் போட்டான்!
அருணகிரி பாடினப்போ ஒரு கிளி விழுந்துச்சாம்டா...இன்னிக்கும் திருவண்ணாமலையில கிளி கோபுரம்னு ஒன்னு இருக்காம்-னு எடுத்து விட்டான் ஒரு Bitஐை!
எனக்கு ஒரே சங்கடமாப் போச்சுது!
இயற்கையிலேயே எனக்கு ரொம்பக் கருணைச் சுபாவம் பாருங்க! மனசே கேக்கலை! போட்டியிலிருந்து பேரை விலக்கிக்கிட்டு, அப்படியே வந்துட்டேன்;
அத்தை, என்னடா விசயம்?; மீதிப் பாட்டை எப்ப கத்துக்கப் போற?-ன்னு கேட்க, விசயத்தைச் சொன்னேன்!
ஒரு உயிரைக் கொன்னு, அப்படி என்ன சாமிப் பாட்டு வேண்டிக் கிடக்கு?
ஒன்னும் தேவையில்லை! போங்க அத்தைன்னு....
சொல்ல, அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாய்ங்க!
அடப் பாவி...உன்னைப் போட்டியில் இருந்து ஒதுக்க, நல்லாவே கதை விட்டுருக்கான் அந்தப் பையன்!
அது புரியாம கோக்கா மாக்கானா இருக்கியே நீயி-ன்னு சொன்னதும்...ரோசம் பொத்துக்கினு வந்திருச்சு!
அடப் பாவி கோபாலு...நீ கோபாலா, கோயபெல்ஸா?
மீதிப் பாட்டை அன்னிக்கே கஷ்டப்பட்டு உருப் போட்டேன்! பொருளும் சொல்லிக் கொடுத்தாங்க அத்தை! ஆனா அதெல்லாம் யாருக்கு வேணும்?
போட்டி நடந்தது!!! பொருள் என்னன்னே தெரியாம, கடகட வென்று ஏத்த எறக்கத்துடன் கொட்டித் தீர்த்தேன்!
இடி இடிச்சு முடிஞ்சாப்பல இருந்துச்சாம்! நண்பர்கள் சொன்னாய்ங்க!
பாடி முடிச்சவுடன் மறக்காம சுற்றும் முற்றும் பார்த்தேன். எந்தப் பறவையும் கீழே விழவில்லை! :-)
எனக்கே முதல் பரிசு! கையெழுத்துப் போட்டியில் இன்னொரு பரிசு! ஹைய்யா!
பரிசு கொடுக்க மேடைக்குக் கூப்பிட்டாங்க...
வாரியார் கையால பரிசு-ன்னா சும்மாவா? ஒரே டென்சன்...அவரு சிரிச்சிக்கிட்டே கொடுத்தாரு சான்றிதழ்களையும், மயில் பொம்மைகளையும்!
ரெண்டு பரிசா?...கை நிறைய இருந்துச்சா? வாங்குற பதற்றத்துல நான் மயிலைக் கீழே போட, போச்சுடா!
கோபாலு சொன்னது சரி தான்! பாட்டைப் பாடினா, பறவை கீழே விழும்-னான்! விழுந்திடிச்சி!:)))
நல்ல காலம் பொம்மை ஒடியலை! கம்பி மயிலு பாருங்க!
வாரியார் காலடியில் குனிஞ்சு பொம்மையை எடுத்த போது...சிரிச்சிக்கிட்டே தூக்கி, தலையைத் தடவிக் கொடுத்தது...இன்றும் இனிக்கிறது!
அடே கோபால், உன்னால தான்டா இந்த ஆசீர்வாதம் கிடைச்சுது...
இன்னிக்கு அவனும் அமெரிக்காவுல தான் இருக்கான்! இன்றும் இது பற்றிப் பேசிச் சிரித்துக் கொள்வோம்! :-))
கந்த புராணத்தை அவர் சொல்ல, அதிலொன்றை மறுத்து நான் சொல்ல.. அப்பவே பெரியாரைத் தெரியாமலேயே பெரியாரிசம்:)
உற்பத்திக் காண்டமும், அசுர காண்டமும், இந்தத் துக்குனூண்டு பையன் இப்படி ஒப்பிச்சி மடக்குறானே-ன்னு நினைச்சாரோ என்னமோ,
அவர் கையால் என் வாழ்நாள் முருகப் பரிசும் கிட்டிற்று! ஈதே என் தோழா பரிசிலோ ரெம்பாவாய்!
அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்!
அப்படித் தோன்றியது திருப்புகழ் - முத்தைத் தரு பத்தித் திருநகை என்று அழகிய சந்தப் பாடலாக! முத்து = அருணகிரி சிறு வயதிலேயே பறிகொடுத்த அம்மா பேரு!
முத்து = குற்றயலுகரம்; முத்தி = முற்றியலிகரம்! முத்து=முத்தி தரு பத்தித் திருநகை!
இன்றைய சஷ்டிப் பதிவில் அதைக் கேட்டு இன்புறுவோம்! - கீழே அருணகிரிநாதர் படத்தில் இருந்து youtube வீடியோவும் இருக்கு, பாருங்க!
முடிந்தால் கூடவே படிச்சிப் பாருங்க! பிடிச்சிப் போயிடும்! - அப்படி ஒரு சொற்கட்டு! தாளக்கட்டு! ஜதிக் கட்டு!
பொதுவா வடமொழி மந்திரங்கள் தான் ஓசை முழக்கம்-னு சொல்லிச் சிலாகிச்சிப்பாங்க சிலபேரு! ஆனா இந்தத் தமிழ் மந்திரத்தின் ஓசையும் கேட்டுப் பாருங்க! அப்படி ஒரு முழக்கம்!
* TMS பாடுகிறார், அருணகிரிநாதர் திரைப்படத்தில்** வீணை இசையில் பிச்சுமணி(வாசிக்க எளிதாக இருக்கட்டுமே-ன்னு பதம் பிரிச்சு தந்துள்ளேன்; சந்தத்தோடு ஒட்டினாற் போல் சேர்த்துப் படிக்கவும்/பாடவும்!)
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்
முக்கண் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேணப்
பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருது - ஒரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தர்க்கு இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளேதித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிரத்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பைரவர்
தொக்குத் தொகு - தொக்குத், தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு - த்ரி கடக ...... என ஓதக்கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு - குக்குக், குகு குகு
குத்திப் புதை - புக்குப் பிடி என ...... முது கூகை
கோட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குல கிரி
குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
சில படங்களுக்கும், பாட்டின் பொருளுக்கும் நன்றி: kaumaram.com
பாட்டின் பொருளும் தெரிந்து கொள்ள ஆசையா இருக்கா? - இங்கு செல்லவும்! கந்தனருள் கனியும்!
நாளை வியாழக்கிழமை, திருச்செந்தூர் முதலான தலங்களில், சூரசங்காரம்! திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - பாட்டுடன் சஷ்டிப் பதிவுகளை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க!!
வெற்றி வேல் முருகனுக்கு 'அரகரோகரா'!
இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்! - ஆலயத்தில் இந்த அறிவிப்புப் பலகை பற்றிய ஒரு சர்ச்சை, சில காலத்துக்கு முன் பதிவுலகில் எழுந்தது! அந்த "உம்" பல பேரை அசைத்துப் பார்த்தது! :-) இறை அறிவுக்கு, மொழி அறிவு தேவையா-ன்னு தொடங்கி, விவாதங்கள் பல திசையில் ஓடின!
இறைவனைப் போற்றவும், பூசிக்கவும் இது ஒன்று தான் மொழி என்பது கிடையவே கிடையாது! - இது பாமரனுக்கும் தெரியும், பண்டிதனுக்கும் தெரியும்!ஆனா நடைமுறைப் படுத்தும் போது தான், விவாதமும் அரசியலும் கலந்து, சூடு பிடிக்கின்றன! அதனால் பயன் விளைகிறதா? - ஆளுக்கொருவர் ஒரு கைப்பிடியாச்சும் அள்ளிப் போடுவார்களா?
போற்றிகள், பூசனைகள், வேள்விகள், உற்சவங்கள்-ன்னு மந்திரங்களை அனைவரும் அறியும் வண்ணம், பொருள் செய்து கொடுப்பார்களா?
இல்லை அப்படி ஏற்கனவே செய்த சிலவற்றையாவது கடைப்பிடிப்பார்களா?
இல்லை இது போன்ற முயற்சிகளுக்குத் துணை நிற்பார்களா?
பதிவுலகில் - தமிழில் தியாகராஜர், தமிழில் சுப்ரபாதம், தமிழ் வேதம் - திருவாய்மொழி எல்லாம்.....இது போன்ற சிறு சிறு முயற்சிகள் தான்! மிகவும் சிறிய முயற்சி என்று கூடச் சொல்லலாம்! ஆனால் இதையும் தாண்டிப் பெரு முயற்சி ஒன்று உள்ளது! அந்தப் பெரு முயற்சிகள் செய்தவர்கள் எல்லாம் விவாதப் புலிகள் அல்ல! அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லி மாளாது! - செயற்கரிய செய்வார் பெரியர் என்பது ஐயன் வாக்கு! அப்படித் தமிழில் முதன் முதலில் அர்ச்சனை செய்தது யார் தெரியுமா?
"ஓம் திருவிக்ரமாய நமஹ" என்ற அர்ச்சனை மந்திரத்தை அப்படியே மாற்றிக் காட்டியவள் ஒரு பெண்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று, நமஹ என்ற அர்ச்சனையைப் போற்றி ஆக்கிக் காட்டிய அந்தப் பெண், ஆண்டாள்! தமிழில் அர்ச்சனை என்பதை முருக வழிபாட்டிலும் நிறைவேற்றிக் கொடுத்த நல்லவர் ஒருவர் இருக்காரு! அவரு சந்தக் கவி, நம் சொந்தக் கவி, கந்தக் கவி, அருள் முந்தக் கவி! - அருணகிரி!!! - அர்ச்சனை என்று பெயரிட்டே, சில அருமையான மந்திரங்களைச் செய்துள்ளார்!
அவற்றில் சில சமயம் வடமொழியும் கலந்து வரும்! ஆனால் உறுத்தாது!
பீஜாட்சர மந்திர ஓசைகள் தேவைப்படும் போது தான், தமிழ் அர்ச்சனையில் இவ்வாறு செய்துள்ளார்! - அப்படிப்பட்ட தமிழ் அர்ச்சனையில் ஒன்று, நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!
இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்! இன்றைய கந்த சஷ்டிப் பாடலாக, தமிழில் அர்ச்சனை செய்யலாம் வாங்க!
இந்த "நமோ நம" திருப்புகழ் அர்ச்சனையால், நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்! - நீங்களும் ஓதுங்கள்!
இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :)
வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம! போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம! நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!
கிரிராஜ = மலை அரசே தீப மங்கள ஜோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம! தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம! தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம! அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்!
இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில் ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே
தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!
திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்! தீப மங்கள ஜோதீ நமோநம! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!
முருகனைப் பற்றிய இசை என்றால் பல பாடகர்கள் நினைவுக்கு வந்தாலும், படேரென்று பலருக்கும் நினைவுக்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் தான்! - ஏன்?
இசைப் பேரறிஞர், பத்ம ஸ்ரீ போன்ற பட்டங்கள் பெற்றவர் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்! - அவர் தமிழிசைக்கு செய்த தொண்டு அளப்பரியது! ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரி என்று பல பாடல்கள், இவரின் குரலில் இசை வடிவம் பெற்றன!
திருவையாறு தியாகராஜர் உற்சவ சபையின் செயலராகவும் பல தொண்டுகள் செய்தார்! பிபிசி, ரூபவாகினி என்ற வெளிநாட்டு மீடியாக்களும், பக்திப் பாடல்கள் மீது கவனத்தைத் திருப்பிய பெருமை சீர்காழிக்கு உண்டு!
இசை மட்டுமா? நடிப்பும் தானே! அகத்தியர், ராஜ ராஜ சோழன் படங்களை மறக்க முடியுமா? தசாவதாரத்தில் நாரதர் வேடம்! வா ராஜா வா படத்தில் சி.ஐ.டி போலீஸ் வேடம்! தனக்குக் கிடைத்த விருதுகளின் பணத்தில், தன் குருநாதர் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையின் பேரில், அறக் கட்டளைகள் நிறுவினார்! தனது 55ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த சீர்காழியின் இறுதி வாசகம்: "உலகம் வாழ்க!"
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்! தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!! - என்று சொல்வதைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டும்! வணங்கினால் என்ன என்ன இன்பம் வரும்?
அந்தக் கடவுளை வணங்கினால் செல்வம் வரும்! இந்தக் கடவுளை வணங்கினால் படிப்பு வரும்!! கந்தக் கடவுளை வணங்கினால் வீரம் வரும்-னு பல பேரு சொல்லுவாங்க! பொதுவா உலகியலுக்குச் சொல்லுறது தான் அது! ஆனா உயர்ந்த பக்தியிலோ, காதலிலோ எது வரும், எது வராது என்ற கணக்கு முன்னே வராது! :-)
வணங்கினால் என்ன இன்பம் வரும்? வணக்கம் என்ற இன்பம் தான் வரும்! இன்பத்தில் எல்லாம் இன்பம், இறை இன்பம்! வணங்கினால் அந்த இன்பமே வரும்! அதனால் தான் -- வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம் -- என்று பாடுகிறார்!
இது ஒரு சிறந்த திருப்புகழ் பாடல். எல்லா திருப்புகழ் பாடல்களும் ஓசை நயம் மிக்கவை தான். அவற்றுள் இந்தப் பாடல் தாள கதியில் மிக மிகச் சிறந்து விளங்குகின்றது.
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
தீபாவளி, அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்குகிறது கந்த சஷ்டித் திருவிழா! ஆறு நாட்கள்! ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்! - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் பார்ப்போம்! ஆறாம் நாள் "திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்" பாட்டை இடுகிறேன்!(பித்துக்குளி முருகதாசர் பாடல்கள் இணையத்தில் எங்கு கிடைக்கிறது என்று அன்பர்கள் யாராச்சும் சொன்னால் மிகவும் மகிழ்வேன்!)
சரவண பவ என்பது திருவாறெழுத்து! சடாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவர்! அதைப் பற்றிய பாடல் ஒன்றை, இன்று சஷ்டி முதல் நாளில் கேட்கலாம்! பாபநாசம் சிவன் எழுதிய பாடல், சண்முகப் ப்ரியா என்னும் ராகத்தில்! - சண்முகனுக்குப் ப்ரியமான ராகத்தில்!
வஞ்சப்புகழ்ச்சி என்று தமிழிலும் நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும் சொல்லுவார்கள். வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது; நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது. இந்தப் பாடல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
சிவபெருமானையே வணங்கி வரும் ஒரு புலவரிடம் முருகப்பெருமானைப் பற்றி பாடச் சொன்ன போது இந்தப் பாடலைப் பாடுவதாக சிவகவி திரைப்படத்தில் வருகிறது. நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அந்தப் படத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி வரும் என்பதைப் படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். ஆனால் பாடலை மட்டும் கேட்டுப் பார்த்தால் முருகனைப் பாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே முருகனைப் போற்றுவதாக இந்தப் பாடல் இருக்கின்றது என்று தோன்றுகிறது.
***
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ? வெள்ளிமலை (வள்ளலை) எந்தன் சுவாமியைப் பாடும் வாயால் தகப்பன் சாமியைப் பாடுவேனோ?
அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ? என் அம்மை அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ? வள்ளியின் கண் வலை வீழ் சிலை வேடன் கள்ளனை பாடுவேனோ?
அம்பிகை பாகன் என்னும் அகண்ட ஸ்யம்புவைப் பாடும் வாயால் தும்பிகையான் தயவால் மணம் பெறும் தம்பியைப் பாடுவேனோ?