இன்று தோழன், கோ. இராகவன் (எனும்) ஜி.ரா. அவர்களின் பிறந்தநாள். வழமை போல், ஒவ்வொரு May 27 அன்றும், இந்த முருகனருள் வலைப்பூவில்.. பிறந்தநாள் பாடலாக ஒரு வாழ்த்துப் பாடல் ஈட்டம்; முருகன் சினிமாப் பாடல்.
மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா. Happy Birthday Ragava. Many Happy Returns of your day.
இந்தத் தமிழ்ப் பாடலிலும், ஆங்கில வாழ்த்தாக.. "Happy Birthday" என்று முருகனை நோக்கி வருகிறது, மழலை மொழியாக!
1970-80 -களின் நடிகர் AVM ராஜன், ஒரு கட்டத்தில்.. பல முருகன் படங்களில் தோன்றி நடித்துள்ளார். (துணைவன், தெய்வம், திருவருள், முருகன் அடிமை, முருகன் காட்டிய வழி..)
இவரது இயற்பெயர் சண்முக சுந்தரம், 'ராஜா' என்று அறிமுகம் ஆகி, 'நானும் ஒரு பெண்' எனும் AVM தயாரிப்பில் வெளியான படத்தின் மூலம் AVM ராஜன் என்று புகழ் பெற்றார். 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக தானும் அவருடன் நாதசுரம் வாசிக்கும் கதைமாந்தராகத் தோன்றினார்.
நடிகை புஷ்பலதா அவர்களைக் காதலித்து மணந்து கொண்ட பின், பல காலம் (25 ஆண்டுகள்) கழித்து, மனைவியின் சமயத்தை ஏற்று, இந்த முருக பக்தர், முழு நேரக் கிறித்துவப் போதகராக மாறினார். இன்றும், குடும்பத்தினர் விவிலிய நற்செய்திப் போதகர்களாக உள்ளனர். ஆயினும், இவரது முருகன் படங்கள் மிகப் பரவலாக வெளிவந்தன. முருகன் மீதான அச் சினிமாப் பாடல்களும், மிக்க புகழ் பெற்றன.
*மருதமலை மாமணியே முருகய்யா *திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் *குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் *மருதமலை மீதிலே / பழனிமலை மீதிலே *கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? *மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க *உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே *கந்தன் காலடியை வணங்கினால்
என்று பல முருகன் திரைப் பாடல்கள், இவர் திரைத்தோற்றத்தில் வந்தன. அதில் பல பாடல்களை, முருகனருள் வலைப்பூவில் முன்பே இட்டுள்ளோம். இன்று, 'முருகன் காட்டிய வழி' எனும் படத்திலிருந்து, மற்றுமொரு பாடல்.
இந்தப் படம், நடிகை ஸ்ரீபிரியா அவர்களின் முதல் படமும் கூட! பின்பு, பல வெற்றிப் படங்களில் நடித்து, திரையில் தனியிடம் பெற்றார்.
படம்: முருகன் காட்டிய வழி குரல்: S. ஜானகி இசை: G.K. வெங்கடேஷ் வரி: கவிஞர் கண்ணதாசன்
இயக்கம்: P. மாதவன் நடிகர்கள்: AVM ராஜன், விதுபாலா, ஸ்ரீ பிரியா (அறிமுகம்) ------------------------------------------------------------------------------------------
முருகா வடிவேலா, உன்னை அறிவேன் தெய்வபாலா. சேவல் கொடியைக் கண்டேன்; உன் தோகை மயிலைக் கண்டேன்; நான் ஏவல் செய்ய வந்தேன்.
(Chorus: Happy Birthday Muruga Happy Birthday to you)
(முருகா வடிவேலா)
பன்னிரண்டு கைகள் அங்கே, பலகோடி கைகள் இங்கே. ஈராறு கண்கள் அங்கே, நீரோடும் கண்கள் இங்கே. நீ உலகம் பார்த்த பிள்ளை, நான் உன்னைத் தேடும் கிள்ளை.
திருச்செந்தூர், முருகனின் ஆற்றுப்படை வீடுகளில் ஒன்று என்று பலருக்கும்
தெரியும்.
ஆனால் அதே திருச்செந்தூர், வள்ளியின் சிறப்பு பெற்ற தலம் என்பதும் தெரியுமா?
சொல்லப் போனால், திருச்செந்தூரின் தொன்மையில், இன்றைய முருகனை விடவும்,
வள்ளிக்கு ஏற்றம்!
மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு இராகவா. உடல் நலனும் உள்ள நலனும் உறவேலோர் எம்பாவாய்!
திருச்செந்தூர் என்பது இன்றைய பெயர்.
செந்தில் என்பதே மிகப் பழமையான பெயர். செந்து+இல் = செந்தில்.
*வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்(புறநானூறு)
*சீர் கெழு செந்திலும் செங்கோடும்
(சிலப்பதிகாரம்)
செந்து என்பது செம்மை குறித்த சொல். நலம்/சிறப்பு என்பது பொருள்.
செம்மை என்ற சொல்லை.. நல்ல/சிறப்பான என்ற பொருள் வரும்படித் தமிழில்
பயன்படுத்துகிறோம். இன்றளவும், பேச்சுத் தமிழில் கூடச் ”செம்மையா இருக்கு”
என்ற பழந்தமிழ்ப் பயன்பாடு உள்ளதே?
ஒன்றைச் சிறப்பிக்க, அதன் கூடவே ”செம்” சேர்த்தால் போதும்;
செந்தமிழ், செம்மாப்பு, செவ்வழி.. இப்படிப் பல செம்மைகள்!
அவ்வகையில், நலம் மிக்க முருகனின் ஊர், சிறப்பான ஊர் ஆதலால்,
செந்து+ஊர் = செந்தூர் ஆனது.
அதிகம் அலைகள் ஆர்ப்பரிக்காது, சீரான அலைகள் மோதுவதால்,
சீர்+அலை+வாய் என்றும் பெயர்.
ஊரின் வடக்கே (மேலே), முகவை (இராமநாதபுரம்) வளைந்த குடா அமைந்துள்ளதாலும், ஊரின்
கிழக்கே, ஈழத்தின் புத்தளம் பகுதியில், மன்னார் வளைகுடா அமைந்துள்ளதாலும், திருச்செந்தூரில்,
அலைகள் அதிகம் மோதுவதில்லை; ஆழிப் பேரலையின் (Tsunami) போது கூட, அதிகமான தாக்கம்
இல்லை.
எப்போதும் சீரான அலைகளே மோதும் நிலத்தின் வாய்ப்புறத்தில் செந்தூர்
அமைந்துள்ளதால்,
சீரலைவாய் என்று சங்கத் தமிழின் தொல்பழங் காலத்திலேயே, இயற்கையாகப் பெயர்
வைத்தனர்.
*உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்
சீர்-அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே
(திருமுருகாற்றுப்படை) *திரு மணி விளக்கின் அலைவாய்
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே (அகநானூறு)
செந்து+ஊர் = செம்மை மிக்க சிறப்பான ஊர், செந்தூர். செந்து என்றொரு பண்
(ராகம்) உள்ளது. அதுவும் சிறப்பான பெரும்பண்.
பின்னாளில், தமிழில்
சம்ஸ்கிருதம் மிகுதியாகக் கலக்கப்பட்ட போது,
செம்மை என்ற தமிழ்ப் பொருள் விலகி, ஜந்து (जन्तु) -> செந்து
ஆனதாகப் பொருத்தமே இல்லாமல் பொருள் திரித்து,
உலகிலுள்ள ஜந்துக்களுக்கு அருள் பாலிக்கும் சுப்ரமண்யக் கடவுளாகப்
பெயர் மாற்றம் செய்தார்கள்; ஜெயந்திபுரம் என்ற ஊர்ப்பேரும் சேர்த்தார்கள்.
இன்றும், கோயில் உற்சவரின் பெயர் ஜெயந்திநாதர் என்றே உள்ளது.
ஆனால், செம்மை மிக்க செந்தூரின் பெயரை அழிக்க முடியவில்லை! இன்றளவும்,
மக்களிடையே செந்தில்/செந்தூர் தான் வழக்காடுகிறது.
இன்றைய திருச்செந்தூரை, மதம்/அதீத தன்னலமான பக்தி கலவாமல்,
இயற்கையாகப் பார்த்தால், பல புவியியல் உண்மைகள் தெரிய வரும்! தமிழாகப்
பார்த்தால், வரலாற்றுத் தொல்லியல் உண்மைகள் தெரிய வரும்!
செந்தூரின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிறிய மலைப் பகுதி போன்ற மணற்பாறையில்,
இயற்கையான குடைவரை ஒன்று அமைந்துள்ளது. ’வள்ளி குகை’ என்று அதற்குப்
பெயர்.
அங்கே சிறிய குடைவரைக் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. தொன்மையானது தான். (இன்று
Concrete மண்டபம் முதலான பகுதிகள் கட்டப்பட்டு, குடைவரையின் இயற்கை அழகை
மறைக்கின்றன).
எப்படி, கடல் மட்டத்தின் சற்றுக் கீழ் அமைந்துள்ள செந்தூர்க் கருவறையான
முருகனின் கோட்டம் குறுகலானதோ, அதே போல், இந்த வள்ளிக் குகையும்
குறுகலானது தான்.
செந்தூர் முருகன் கோட்டத்துக்கு இணையாகச் செந்தூர் வள்ளிக் குகையும்
உள்ளது.
இந்த வள்ளிக் குகையில், முதலாம் வரகுணனின் கல்வெட்டு (7th Century CE)
காணப்படுகிறது. இவன் இடைக்காலப் பாண்டிய அரசன்.
குடைவரையின் கருவறையைச் சுற்றி வலம் வர, குறுகலான பாதை இவன் காலத்தில்
குடையப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால் அதற்கும் முன்பே, வள்ளி பழமையானவள்!
செந்தூர் முருகனைப் போலவே, செந்தூர் வள்ளி பழமையானவள்.
சங்கத் தமிழின் பத்துப்பாட்டு நூல் தொகுப்புகளுள் ஒன்றான
திருமுருகாற்றுப்படையில், சம்ஸ்கிருத மொழிக் கலப்பு காணப்பட்டாலும், அதில்
கூட...
தேவஸேனா (தெய்வயானை) என்ற பெயரைச் சொல்லாது, முருகனோடு வள்ளியை மட்டுமே பெயரிட்டுக் குறிப்பிடுகிறார்,
அதுவும் திருச்செந்தூரைப் பற்றிப் பாடும் பகுதியில்.
இப்படி வள்ளியோடு மட்டும் கூடிய முருகனைத் தான் திருச்செந்தூரில் படம் பிடித்துக்
காட்டுகிறது, சங்கத் தமிழ்!
இந்த வள்ளி-முருகன், குறிஞ்சி நில மக்களின் தொன்மம். குடி காத்த
மூதாதையர்களையே, வள்ளி-முருகனாக வணங்கி வந்தனர்.
முல்லை/குறிஞ்சி
(காடு/மலை) நாகரிகத்தை விட்டு, *ஆற்றுநீர் பாயும் வயல்வெளி நாகரிகத்துக்கு
இடம்பெயர்ந்த போதும்
*ஆற்றோரமாகவே ஊர் அமைத்து, வேளாண்மை (மருதம்) பழகிய போதும் *பின்பு, அதே
ஆறுடன் பயணித்து, கடல் நாகரிகம் (நெய்தல்) கண்ட போதும், தங்களின் மூதாதைத்
தொன்மங்களான - வள்ளி முருகனையும் இந்தப் புதிய நாகரிக நிலப்பகுதிகளுக்கும்
எடுத்துச் சென்றார்கள் மக்கள்!
அப்படி வழிவந்ததே குறிஞ்சி
வள்ளி-முருகன், நெய்தல் நிலச் செந்தூருக்கு! சீரலைவாய்க் குடைவரையின் தாழ்வரையில் இன்றும் காட்சி தருகிறார்கள்.
சொல்லப் போனால், முருகன் சிலை பல முறை மாற்றப்பட்டுள்ளது.
இயற்கையான இரண்டு கை முருகன், நான்கு கை முருகன் ஆகிவிட்டான். பழமையான
வேல்வழிபாடு, இன்று அடையாளமின்றி ஒழிந்து போனது. காஞ்சி மடத்து மஹா பெரியவா,
புதிய சிலைகளை நிறுவியுள்ளார்.
ஆனால், வள்ளி மட்டும், இயற்கையாக அப்படியே நிற்கிறாள்!
இரண்டு கைகள் மட்டுமே, இயற்கையான பழங்குடிப் பெண்ணாக.. குடைவரையில்,
பாறையோடு ஒட்டியுள்ளமையால், முருகனை மாற்றியது போல், வள்ளியை
மாற்றமுடியவில்லை போலும்!
வள்ளிக் குகை - வள்ளி மூலவர்
செந்தூர்க் கோட்டம் - முருகன் மூலவர்
நெடிய வரலாறு விடுத்து, இனிய பாடலுக்கு வருவோம்.
அதுவே இன்றைய பிறந்தநாள் பாடல். சினிமாப் பாடல் என்றாலும், திருப்புகழ்ப்
பாடலும் கூட!
காவியத் தலைவன் என்றொரு படம் வந்தது, 2014-இல். படம்,
19-20ஆம் நூற்றாண்டு நாடகப் பாணியில் அமைந்தாலும், நடித்தது என்னவோ,
இக்காலக் கலைஞர்கள் தாம். ஆனாலும், படம் சரியாக ஓடவில்லை; பெரிய வரவேற்பு
இல்லை. மக்கள் ஆர்வம் (ரசனை) மாறி விட்டது போல?
பாகுபலி படத்தின் பெருவீச்சு (பிரம்மாண்டம்) இதில் இல்லை.
எனினும், சில சுவையான பகுதிகள், இப்படத்தில் அரங்கேறின. அதில் ஒன்று
தான், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் திருப்புகழ்! அமரர் வாணி
ஜெயராம் அம்மாவின் தீம்பால் தெவிட்டாத குரலில், மிகச் சுருக்கமாக, ஒரு
15th century CE பாடலை மீளுருவாக்கம் செய்தார்கள்.
அக் காட்சியையும், பாடலையும் ஒருசேரத் துய்த்து மகிழுங்கள்.
(அம்பு போல் கூர்விழிப் பெண்களைக் கூடுவதையே கொண்ட
குற்றம் மிக்க மூடனை, நன்னெறி பேணாதவனை
ஈனத்தனம் மிக்க வீணனை, கல்விச் செல்வத்தில் கவனம் செல்லாத
ஏழையை, தற்காக்கத் திறமில்லாத வீரமற்ற கோழையை...)
(அகலாத நீண்ட வினைப்பயன் மூடிய நோய்பிணி கொண்டவனை,
வாய்மை இல்லாதவனான என்னை இகழ்ந்து ஒதுக்காமல்
மணிகள் ஒலிக்கும் சிலம்பு பூட்டிய குளிர்ந்த பாதங்களைத் தந்து
என்றாவது ஒரு நாள், எனக்கு நல்வாழ்வு அருள்வாயே!)
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் - குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே
(நாவில் திறம் கொண்டு பாடும் இசைநூல் வல்லுநர்கள் அடியொற்றி
நாரதமுனி வந்து ஆற்றுப்படுத்திய குறமகள் வள்ளியைக்
காட்டில் விரும்பிச் சென்று காதலித்த சேவகநாயகனே, முருகா! அழகிய மயிலை உடைய குறிஞ்சித் தலைவனே...)
(தேவியாகிய கொற்றவைத் தாயான குடிமூத்தவள்
தேன் போல் இனிமையாகப் பேசும் அவள் பெற்று வளர்த்த இளைஞனே!
நீண்ட உயரமான சோலையின் நிழலில் திகழ்கின்ற
சீர்+அலை+வாய் எனும் திருச்செந்தூரில் வருகின்ற முருகப் பெருமானே!)
பாடலின் விரிவான பொருள்:
பொதுவாக,
அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் பலவும், பயணப் பாடல்கள்.
ஒவ்வொரு தலமாகச் சென்று பாடிய பாடல்களே! பயணக் கட்டுரைகள் போல், பயணப்
பாடல்கள். ஆனால், சந்தம் மிக்கவை.
அதிலும், அவை யாவும் ஒரு வகையான Confession (குற்ற ஒப்புகை) பாடல்கள். கவிதையின்
முதல் பகுதியில் தன் கடந்த கால வாழ்க்கைத் தவறுகளை ஒப்புக் கொண்டும், கவிதையின்
இரண்டாம் பகுதியில், அத் தவறுகளுக்கான கழுவாயாக முருகனின் அருளை வேண்டி
நிற்பதும் என்று இந்த Theme-இல் (கருப்பொருள்) தான் மிகுதியாக இருக்கும்.
நடுநடுவே, சில புராணச் செய்திகளும் வரவி வரும்.
ஒரு சிலருக்கு, இது Repetition (கூறுவது கூறல்) போல் தோன்றலாம்; ஆனால், சந்தம்
பயின்று வரும் அழகில், அதெல்லாம் மறந்து, முருகனின் அழகைப் போலவே பாடலின்
அழகில் சொக்கிப் போய் விடுவர்.
திருப்புகழ் அல்லாத பிற பாடல்களில், அருணகிரி இப்படிச் செய்ய மாட்டார்.
அவற்றில் தத்துவம் (மெய்ப்பொருள்) தெறிக்கும். இயற்றமிழ் இயலும். நாம் இந்தப்
பயணப் பாடலின் பொருளைக் காண்போம். திருச்செந்தூரில் பாடியது.
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏவு = பாய்ந்து செல்லும் போர்க் கருவி; இக் காலத்தில் ஏவுகணை; அக்
காலத்தில் அம்பு; ஏவுவதால், ஏவு - காரணப் பெயர்; வினையே பெயராகவும்
நின்றதொரு தொழிற்பெயர்; விகுதி குன்றிய தொழிற்பெயர்.
ஓர் அம்பை எப்படி எதிர்கொள்வது? இன்னோர் அம்பால் எதிர்கொள்ளலாம்; அந்த அம்பு,
பெண்ணின் கண்கள்:) ஏவினை -> நேர் <- விழி! ஆசை என்னும் ஏவினை
எதிர்கொள்ளும் அம்பு போல் கண்கள்; இப்படிக் கண்ணழகு வாய்ந்த பெண்கள் பலரிடமும்
மயங்கிக் கிடந்தேன் என்ற Confession (குற்ற ஒப்புகை) செய்கிறார் அருணகிரி.
ஏதனை மூடனை - நெறிபேணா
ஏதம் = அயல்; ”ஏதிலார் குற்றம் போல் தன் குற்றமும் காண்க” என்று ஐயன்
வள்ளுவனும் சொல்வார். தன்னோடு பொருந்தாத எதுவுமே அயல் தான்; அதனால்
பொருத்தமே இல்லாத Defect (குற்றம்-குறை) யையும், ஏதம் என்றனர். ஏதம்=குற்றம். மூடம்
= வலிந்த அறிவின்மை. இயல்பான அறிவு இருந்தாலும், அதையும் மீறி ஆசையால் முட்டாள்
ஆவது தான் மூடம். இப்படி, குற்றங் குறையுமாய், மூடம் வளர்த்துக் கொண்டு,
ஒழுக்க நெறிகள் எதுவும் பேணாமல் திரிந்த அருணகிரி.
ஈனனை வீணனை ஏடெழுதா
ஈனம் = கீழ்மை; கீழான குணங்களோடு வீணாய்ப் போன ஒருவனை; ஏடு எழுதா = ஏட்டில்
எழுதிப் பயிலாமல், கண்டதே காட்சி என்று இழிந்து போய்..
முழு ஏழையை மோழையை -
மோழை = கொம்பு இல்லாத விலங்கு (பொதுவாக மாடு); தற்காத்துக் கொள்ள இயற்கையான ஒரு
பொருள் தான் கொம்பு. அது இல்லாத மாட்டை மோழை என்றனர். “மூத்தது மோழை, இளையது காளை” என்ற பழமொழியும் அதையொட்டியே!
ஏழையாக இருந்தாலும், மோழையாக இருக்கக் கூடாது. ஆனால், அருணகிரியோ,
பொருளெல்லாம் பெண்களிடம் இழந்து, கல்வி நெறி இழந்து, தன்னைக் காத்துக் கொள்ளக்
கூட முடியாத நிலைக்குச் சென்று விட்டார்; ஏழையாகவும் மோழையாகவும் ஒருசேரச்
சோர்ந்து விட்டார்.
அகலா நீள் மா வினை மூடிய
மா வினை = பெரும் வினைப்பயன் (கர்மா); அகலா நீள் வினை = என்ன
கழுவாய் (பரிகாரம்) செய்தாலும் போகாத நீண்ட வினைப்பயன் (செய்த தீச்செயல்களின்
விளைவு); அது வந்து, வாழ்வினை மூடிக் கொண்டது.
நோய்
என்பது காய்ச்சல், வீக்கம், வயிற்று வலி போன்றது. நோவு (வலி) இருக்கும்; ஆனால்,
குணப்படுத்தி விடலாம். பிணி என்பது Cancer, Alzheimer's, Liver
Disease போன்றது. பிணித்துக் கொள்ளும்; விலக்குவது கடினம், கட்டுக்குள் சிலநாள்
வைக்கலாம். இப்படிக் குணப்படுத்த முடிந்தும் முடியாமலும், தவிக்கும்
அருணகிரியார்.
வாய்மை இலாதனை -
*வாய்மை = வாயால் மட்டுமே சொல்வது *மெய்ம்மை = உடலாலும்
நடந்து காட்டுவது *உண்மை = உள்ளத்தாலும் நெறியுடன் நிற்பது
வாயாலும்,
மெய்யாலும் மற்றவர்கள் முன்னிலையில் நெறியுடன் நடப்பது வேறு; ஆனால், பிறர் அறிய
முடியாவிட்டாலும் கூட, நம் உள்ளத்துக்குள் நெறியுடன் நிற்பது என்பது
வேறு!
அதான், வள்ளுவனும் “பொய்ம்மையும் வாய்மை இடத்த” என்று
மட்டுமே சொன்னார். “பொய்ம்மையும் உண்மை இடத்த” என்று சொல்லலை. சில நேரங்களில்
சில நன்மைக்காகப் பொய் சொல்லும் சூழல் வந்தாலும், அதை வாயோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும். உள்ளத்துக்கு உள்ளே கொண்டு சென்று விடக் கூடாது! இப்படிக் கூர்மையாக அறம் செப்பியது தமிழ் - 3 வெவ்வேறு சொற்களாக! வாய்-மை,
மெய்-ம்மை & உள்-மை!
இகழாதே - மாமணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒருநாளே!
இப்படியெல்லாம் நெறி மறந்து, வாய்மை இல்லாது போன அருணகிரியை இகழாமல், முருகன்
அரவணைத்துக் கொண்டான். பெரிய மணிகள் ஒலிக்கும் சிலம்பு (நூபுரம்)
அணிந்துள்ள முருகன், அவன் குளிர்ச்சியான திருவடிகளைக் காட்டி அருள்
தந்து, தனி வாழ்வான (கைவல்ய நிலை) வீடு பேற்றை, என்றாவது ஒருநாள்
எனக்குத் தருவாயா? என்று உருகிக் கேட்கிறார்.
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நா+வலர்= நாவலர்; நாவால் படைப்பதில் வல்லவர்; அது பேச்சோ, பாடலோ, இசையோ..
நாவால் படைக்கும் திறன். அதில் ஒன்று பாடல்/இசை. அந்த இசை நூல்
நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், தமிழிசையை வளம் செய்தனர். ஆதி
தமிழிசையில் இருந்து தான், பின்னாளில் கர்நாடக இசை முதலான இசைப்பிரிவுகள் கிளை
விட்டன.
நாரத னார்புகல் - குறமாதை
அத் தமிழிசையால் வந்த, பிற இசைக்காரரான வடமொழி நாரத முனிவர், முருகனிடம்
சென்று குறமகள் வள்ளி பற்றிக் கூறினார் என்பது புராணம்.
நாடிய கானிடை கூடிய
முல்லைத் தமிழ் மகள் வள்ளியை, குறிஞ்சித் தமிழ் மகன் முருகன், அவளின் காட்டுப்
பகுதிக்குச் சென்று, காதலித்துக் கூடினான்.
சேவக நாயக மாமயில் உடையோனே
நாயகி வள்ளிக்குப் பணி செய்து காதல் வாழ்வை நடத்துவதில், நாயகன் முருகன் எந்தப்
போலிப் பெருமையும் பார்க்கவில்லை. சேவக நாயகனாய், குறிஞ்சிப் பறவையான மயிலைக்
கருப்பொருளாய் உடைய முருகன்!
தேவி மனோன்மணி ஆயி பராபரை
ஆயி
= அம்மா; ஆவதால்/ஆக்குவதால் ஆயி. யாயும் ஞாயும் யார் ஆகியரோ
(குறுந்தொகை) இரவுக்கு ஆயி = இராக்கு ஆயி, ராக்காயி. இவை யாவும்,
காரணம் பொதிந்த அழகான தமிழ்ப் பெயர்கள்!
தேவி என்பதும் தமிழ்ப்
பெயரே! தேவு, தேவன், தேவி, தெய்வம். தீ வடிவிலான செம்மை நிறத்தால், தீ
-> தே -> தேவு. மனத்தாலேயே மணி போல் ஒளிர்வதால், மனோன்மணி; பரன்
என்ற ஆண்பால் பெயர்; பரை என்ற பெண்பால் பெயர்.
தேன்மொழி யாள்தரு சிறியோனே
தந்தையாகவும் தாயாகவும் ஒருசேர விளங்கும் பரா-பரை, கொற்றவை! அவள் தேன் போல்
இனிய மொழி (தமிழ்) பேசுபவள். அந்தக் கொற்றவை மைந்தனாக விளங்கும்
இளைஞன் முருகனே!
சேணுயர் சோலையில் நீழலிலே திகழ்
சேய்மை (தொலைவு) மிக்க, உயரமான மரங்கள் கொண்ட சோலையின் நிழலிலே
திகழ்கின்ற முருகனே
சீரலை வாய்வரு பெருமாளே.
சீரான அலைகள் மோதும், சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் வந்து
நிற்கும் வள்ளியுடன் கூடிய முருகப் பெருமானே! வாழ்வுற ஈவதும்
ஒருநாளே.. நல்ல வாழ்வினை (இராகவனுக்கு) அருள்வாயே!
சங்கத் தமிழில், முதல் பொழுதே.. மாலை தான்! காலை அல்ல!:)
காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
அவ்வண்ணமே, கழுத்தில் சூடும் மாலையும்,
அழகால் மயக்கும் பொருளிலேயே வருவது!
எத்தனை நகைகள் சூடிக் கொண்டாலும்,
மாலை சூடிய கழுத்து என்பது, தனி மயக்கம் தானே?:)
ஏனெனில், பூமாலை இயற்கை ததும்பும் மயக்க அழகு! மணம் மட்டுமல்ல, குணமும் உண்டு மாலைக்கு! 1) கண்டு, 2) உண்டு, 3) உயிர்த்து, 4) உற்று.. என நான்கு உணர்ச்சியும் ஒருசேரக் கொண்டது பூமாலையின் இன்பம்! மாலை பேசாது என்பதால், 5) கேட்டு என்ற உணர்ச்சி மட்டும் இல்லை!
ஐந்து உணர்ச்சியும் அமைவது காதலன்/காதலியிடம் மட்டுமே என்பது குறள்!
தார் - மாலை
மாலை என்றாலே பெண்கள் சூடுவது தான்!:)
ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் அச்சொல்லையே புழங்குகிறோம். பல வகை மாலைகள், நம் அழகுத் தமிழில் உண்டு!
தார்= ஆண்கள் அணிவது (இரு புறமும் தொங்கும்)
மாலை= பெண்கள் அணிவது (தொங்காது இணைக்கும்)
கோதை= ஆண்/பெண் இருவரும் அணிவது (கோத்த தொகுப்பு)
கண்ணி= தலையில் சூடுவது
தெரியல்= தெரியப்படுத்தச் சூடுவது (அடையாளம்)
தொடையல்= தொடுத்துச் சூடுவது
ஒலியல்= வளைத்துச் சூடுவது
தாமம்= நாரினால் அமைத்துச் சூடுவது
படலை
அலங்கல்
அணியல்
பிணையல்
வாசிகை
சிகழிகை
கத்திகை
சுருக்கை
சூட்டு
இலம்பகம்
என்று இத்தனை வகை மாலைகள், தமிழில் உண்டு! ஒவ்வொன்றுமே ஓர் அழகு!
ஒலியல்
திருவருள் என்றொரு படம் வந்தது, 1975-இல்!
தேவரின் திருவருள் என்று தான் விளம்பரம் செய்வார்கள்.
ஏனெனில், தயாரிப்பு: சாண்டோ சின்னப்பா (தேவர்).
அப்போதெல்லாம் பல சாமிப் படங்கள் வந்தவொரு காலம்; இப்போது இல்லை!:)
சில வடமொழிப் புராணம், சில மூட நம்பிக்கை, சில உண்மையான பக்தி..
என்று கலவையாகப் பக்திப் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது!
அப்படி வந்த ஒரு முருகன் படம் திருவருள்.
அக்கால இதழொன்று எழுதிய விமர்சனம் (மதிப்புரை), இதோ வாசித்துப் பாருங்கள்!
கதையைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!:) ஆனால் சுருக்கமாக..
இது ஒரு கணவன் - மனைவிக் கதை!
கணவனோ, பெரும் முருக பக்தன்; மனைவியோ, பெரும் பண பக்தை!:)
அவள் உழைத்த பணம் அல்ல! அவன் உழைத்த பணம் தான்! ஆனாலும், சில பெண்களுக்கு, பிறர் உழைப்பும், தங்களுக்கே!..
என்ற பேராசை (அ) அறியாமை, எப்படியோ மேலோங்கி விடுகிறது!
சிறந்த பாடகனான அவனுக்குக் குவியும் பணமே..
அவர்களின் குடும்ப வாழ்வைப் பிரித்துப் போடுகிறது!
முருகன் பணிக்கு அவன் ஒதுக்கும் பணத்தில், நேரத்தில், பணிகளில் தலையிட்டு
ஒரு கட்டத்தில், முருகனின் வேலுக்கான தங்கம்/ வைரத்தையே
திருடும் அளவுக்குப் போய் விடுகிறாள், அந்தப் பேராசை மிக்க பெண்!
அவனின் உற்ற தோழனே, அப்பழியை ஏற்றுக் கொண்டு
அவர்கள் குடும்பம் சிதையாது காக்க முயல்கிறான்!
ஆனால், வாரியார், வாரியாராகவே திரையில் தோன்றி
வீடு தேடி வந்து, அவர்களிடம் நன்கொடை கேட்கும் போது
அவரையே அவமதிப்பு செய்து திருப்பி அனுப்பி விடுகிறாள்!:(
இதனால், மனைவியையும் வீட்டையும் உதறிச் செல்கின்றான் அவன்!
மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள்? வாரியார் தோன்றிச் சேர்த்து வைப்பதே கதை!
”தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்ற பெரிய புராணக் காட்சியெல்லாம் கூட
இந்தப் படத்தில் சோடிக்கப்பட்டு இருக்கும்:)
படத்தில், மயில் தத்தித் தாழப் பறக்கும் காட்சிகள் சுவையாக இருக்கும்! இது வரை காணாவிட்டால், கட்டாயம் காண்க! கண்டிருந்தாலும், மீள்காணுங்கள்!
அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார்,
பல படங்களில் தோன்றி நடித்துள்ளார்!
சில படங்களுக்கு, உரையாடல் (வசனம்), கதையும் எழுதியுள்ளார்!
சிவகவி – கதை வசனம் மட்டுமே
தெய்வம்
துணைவன்
திருவருள்
சண்முகப்ரியா
கந்தர் அலங்காரம்
மிருதங்கச் சக்கரவர்த்தி
நவகிரக நாயகி
ஆனால், துணைவன் & திருவருள் படங்களில் மட்டும், வாரியார் வரும் காட்சிகள் மிக நீளமானவை!
இன்று, சில காட்சிகள் பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.
குறிப்பாக, மருத்துவத்தை ஒதுக்கும் பக்திக் காட்சிகள்.
ஆனால், அந்நாளில் அது மக்களுக்கு ஏற்புடையதாகவே இருந்தது!:)
வாரியாருக்கு, சினிமா நடிப்பு என்று தனியாகச் சொல்லித் தரத் தேவையில்லை!
ஏனெனில், அவரின் ஓவ்வொரு பேருரையுமே, நாடகம் போல் தான் இருக்கும்!
குரலின் தனிக் கம்பீரம் (வீறு), இசை, உரையாடல், பாடல்கள், கையசைவுகள்..
என்று ஒரு மேடை நாடகத்தையே, அவர் மேடைக் கச்சேரிகளில் காணலாம்!
அதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்/சிறுமியர் முதல், அகவை மூத்த வயசாளிகள் வரை,
வாரியார் கச்சேரிக்கு, மயங்காதவர்களே இல்லை எனலாம், நாத்திகர்கள் உட்பட!:)
ஆச்சாரம் மிக்கவர்களின் Bore அடிக்கும் உபந்நியாசங்களை விட
வாரியார் போன்றோரின் பேருரைகள் தான், சமயத்தைக் கூடக் காப்பாற்றின!
மதம் பரவச் செய்ததில், மஹா பெரியவர்களின் பங்கை விட, வாரியார் பங்கு அதிகம்!
*நல்ல உணவும், நளி மிகு உடையும், *இசை தவழும் உறையுளும், *வெற்றி மிகு பணியும், *நீடு உடல் நல வாழ்வும், *மாறிலா உறவும், திருப் புகழும், நின்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!
ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில், முருகனருளில் ஒரு சினிமாப் பாடல் இடம்பெறும். இன்றோ, நாதசுரம் ஒலிக்க, திருப்புகழ் இசைப் பாடல்.
இந்தப் பாடல், இசைக்கு மட்டும் பரவல் (பிரபலம்) அல்ல! அதன் மாறுபட்ட, ”முருக விளி”-க்கும் மிகப் பரவலானது!
பொதுவாகச் சில காதலிகள், தங்கள் காதலனை அன்புச் சினத்தால் வசைப்பது போல் இசைப்பதுண்டு! அப்படியே அருணகிரியும், இத் திருப்புகழில், செய்கிறார்!
எத்துணை நேரம் தான் காத்திருப்பது? எப்போது வருவாயோ? *அடேய், மாயக் காரா, வேலைக்காரா.. என்று திட்டுவது போல் *அன்புமிகு நேயக் காரா, என் ஆண்மைக் காரா.. என்று ஒருவிதக் கொஞ்சல்!
-காரன் என்பது, தமிழ் வழக்கில் இன்று ஏனோ, வசை போலாகி விட்டது! அத்துணை மதிப்பு (மரியாதை) மிக்க விளி அல்ல! தையல் காரன், Paper காரன், வேலைக் காரன் என்று சொல்லாது, தையலாளர், இதழாளர், பணியாளர் என்று சமூகநீதிக்கு மாறி விட்டோம்! குறைந்த அளவேனும், -காரன் விட்டு, -காரர் எ. சொல்லுக்கு மாறலே நலம்!
ஆனால், காதலர் இருவருக்கிடையே செல்லமான கொஞ்சல்களில் ஏது சமூகநீதி?:) அங்கெல்லாம்.. வாடா, போடீ, -காரன், -காரி தான், நெருக்கம் கூட்டும்! காதல் கணவனையும், வீட்டுக்’காரர்’ என்பது தானே வழக்கம்?:) அதே போல், வரிசையாக முருகனைக் -கார விளி, விளிக்கிறார் அருணகிரி!
-காரா, -காரா.. என்று ’கார’மான அருச்சனை!:) என்னென்ன -காரன், முருகன்? நீங்களே பாருங்கள்!
இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! ”முந்து தமிழ் மாலை கோடி கோடி”! வடசொல் ஆங்காங்கு இருப்பினும், தமிழை ’முந்துதமிழ்’ என்று போற்றுவது! குண்டும்-ஒல்லியும் இல்லாத அளவான இளமை மொழி தானே முந்தி ஓடும்?
தமிழ் மொழிக்கு 247 எழுத்துக்கள் அல்ல!
புதிதாகக் கற்றுக் கொள்வோர்/ குழந்தைகளுக்கு, பெரிய எண்ணிக்கை சொல்லி, எடுத்த எடுப்பிலேயே அச்சமூட்டாதீர்!
தமிழில், 30 எழுத்துக்கள் மட்டுமே!
உயிர் எழுத்து= 12; மெய் எழுத்து= 18
எழுத்து எனப்படுப
அகர முதல ... னகர இறுவாய்,
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)
*தனி எழுத்துரு பெற்று விட்டதாலேயே (ஃ, கொம்பு, கால், பிற..)
இப்படி Context-க்கு ஏற்றவாறு ஒலிப்பு மாறும் நுட்பமே,
*தமிழ் ஒல்லியாகவும் இல்லாமல்,
*தமிழ் குண்டாகவும் இல்லாமல்
இளமையாக, வளமையாக உள்ளது!
क ख ग घ ङ (ka kha ga gha ṅa); च छ ज झ ञ (ca cha ja jha na) என்று ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் எழுத்து வைத்து மொழியை மிகவும் குண்டாக்கி விடாது.. ச என்ற ஒரே எழுத்தே, சூழலுக்கு ஏற்றாற் போல் (Context based Phonology) cha (chol), sa (isai), ja (manjaL) என்று ஒலிக்கவல்ல ஒயிலான மென்மொழி, தமிழ்!
குண்டு மொழியால் ஓட முடியாது! தமிழ்மொழி முந்தி ஓடும்! வெல்லும்! "முந்து தமிழ்" மாலை கோடி கோடி!
நாதசுரத்தில் பாடலைக் கேட்டு மகிழுங்கள்: MPN சேதுராமன் - பொன்னுசாமி அய்யாக்களின் உருக்கமான வாசிப்பு! நாதசுரம் என்றாலே.. எந்தவொரு பாடலுக்கும் பெருவீறு (கம்பீரம்) வந்து விடும்!
அதே பாடலை, சேலம் செயலட்சுமி அம்மாவின் தீங்குரலில் கேட்டு மகிழ்க! Salem S Jayalakshmi, மிகச் சிறந்த மரபிசை & மக்களிசைப் பாடகர்! அம்மாவின் அரிய ஒலிப்பேழை (1976) தன்னில் கிட்டிய இப் பாடல்!
முந்துதமிழ் மாலை கோடிகோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே
முந்தை வினையே வராமற் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக முந்து அடிமையேனை ஆளத் தானும் - முனைமீதே
சிந்துரம் இன் மேவு போகக் கார விந்தை குற மாது வேளைக் கார செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான
செஞ் சமரை மாயும் மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!
(பாடலின் பொருளின் எளிதே; சில அரிய சொற்களுக்கு மட்டும் பொருள்:
*முஞ்சர்= அழிவுப் பாதையில் செல்வோர் *முனை மீதே= என் முன்னிலையில் *செஞ் சிறிய கால்= சிவப்பான சிறிய காலுள்ள மயில் *துங்க அநுகூலம் (வடமொழி)= தூய்மையான பலன்கள் *அந்தண்= தமிழ்ச் சான்றோர் (பிராமணர் என்ற பொருளல்ல) *அண்டர்= வானவர் *ரூபம் (வடமொழி)= உருவம் *சிந்துரம்= செந்நிற மணப் பொடி *வேளைக்காரன்= காவலன் *வாரக்காரன்= அன்புள்ளவன் *செஞ்சமர்= குருதி மிகு போர் *துங்கரண சூர= போர்வெறி மிக்க சூரன் *சூறை= பெருங்காற்று *செந்தில் நகர்= திருச் செந்தூர்)