இன்று கிருத்திகை திருநாள். இன்றுதான் திருவண்ணாமலையில் தீ வடிவாக இருக்கும் அருணாசல ஈஸ்வரனுக்கு தீபத்திருவிழா.காணக் கண்கோடி வேண்டும். மற்ற தலங்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருவண்ணாமலைக்கு உண்டு. மற்றதலங்களுக்கு சென்றாலோ அல்லது பிறந்து அல்லது இறந்தாலோதான் முக்தி கிடைக்கும். அருணாசலத்தை நினைத்தாலே போதும் முக்தி நிச்சியம்.ஆதி சங்கரர். திருவண்ணாமலைக்கு வந்தபோது அந்த ஊரையே சிவலிங்கமாகக் கண்டு ஊரில் கால் படாமல் ஊரையும் மலையையும் சுற்றி வணங்கினார் என்ற கூற்றும் உண்டு.சுப்பனை பாடும் வாயால் ஆண்டி அப்பனை பாடுவேனோ என்று இல்லாமல் இரண்டு பேரையும் வணங்குவோம்.
பல்லவி
வேல்முருகா வெற்றி வேல் முருகா
வேறு துணை இங்கு யார் முருகா... (வேல் முருகா...)
அனுபல்லவி
பால்வடியும் உந்தன் வதனத்தை காணவே
பறந்தோடி வந்தேன் மால் மருகா...(வேல் முருகா....)
சரணம்
கோலவிழியாள் குறவஞ்சி ஒருபுறம்
தேவகுஞ்சரி பாங்குடன் மறுபுறம்
நீலமயில்மீது ஏறி நீ வந்திட வேண்டும்
நின் பதமலர்கள் தந்திட வேண்டும் ,...(வேல் முருகா...)
இனி அப்பனைப் பார்ப்போமா
சிவனைப் பற்றிய பாடலை தமிழ்த் தியாகைய்யாவான பாபநாசம் சிவனின் கீர்த்தனையை இதே தேதியில் நம்மை விட்டு மறைந்த பாரத ரத்னா திருமதி எம் எஸ் அம்மாவின் குரலில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பாடிய பாரத் பர பரமேஸ்வரா என்ற வாசாஸ்பதி ராகப் பாடலை பார்த்து கேட்டு ரசிப்போமா.
"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2 [ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன் சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன் என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன் என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்
தம்பிகள் இருவரும் அழிந்ததினால் தமையனும் கோபம் மிகக் கொண்டான் தானே போருக்குச் சென்றிடவே சூரனும் வாளை எடுத்துவிட்டான்
அருமைமகனும் அருகில் வந்தான் தன்னை அனுப்பிடக் கேட்டுக்கொண்டான் [காலையில்]
தனயன் இருக்கையில் தந்தை செல்லல் முறையல்லவெனவே பணிந்துநின்றான் சிறுவனை அழித்திடச் சிங்கமிங்கு செல்வது தவறென வாது செய்தான்
தெய்வானை என்னும் திருமகளை முருகன் துணையாய்க் கொண்டானே [காலையில்]
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன் சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன் என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன் என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன் *************************************************** [இத்துடன் "கந்தன் கருணை" முதல் பாகம் நிறைவடைந்தது. புதுப் பொலிவுடன், வித்தியாசமான நடையில், இரண்டாம் பாகம் திங்கள் முதல் தொடரும்! இதனை எழுத எனக்கு ஊக்கம் அளித்த என் துணைவிக்கு இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]
"ஆத்திகம்" வலைப்பூவில் நான் எழுதிவரும் "கந்தன் கருணை"யை இங்கும் பதிய ஆவல்! முடிந்ததும் போடலாம் என்றிருந்தேன். இடையில் இந்த இரு நாட்கள் கிடைத்ததால், முதல் பாகத்தை.... முருகன் பிறப்பு முதல் சூர சம்ஹாரம் முடித்து தேவசேனா திருக்கல்யாணம் வரை.... இன்றும், நாளையுமாய்ப் பதிகிறேன். இரண்டாம் பாகம் விரைவில் வரும்!அங்கு படிக்காதவர்கள் படிக்கலாமே! முருகனருள் முன்னிற்கும்!
"கந்தன் கருணை" -1 ['ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்']
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன் சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன் என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன் என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்
கந்தன் கருணையைப் பாடிடவே கணபதி தாளினை நான் பிடித்தேன் தடைகளைத் தாண்டி கருணைவெள்ளம் மடைதிறந்திங்கே பாய்ந்திடுமே
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன் சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன் என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன் என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன் ********************************* [கந்தன் கருணை நாளை தொடரும்!]
மக்கா, கந்த சஷ்டி நேற்றே (திங்கள்) நிறைவுற்றது. எனினும், இதோ விட்டுப் போன ஒரு பதிவு!
பதிவு விட்டாலும் பரங்குன்றான் விடுவானா என்ன?
இன்னிக்கி திருப்பரங்குன்றத்து ரகசியங்கள் மற்றும் பாடல் - "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"!
* பொதுவாக வள்ளித் திருமணம்= "பேச" மட்டுமே படும் விரிவுரையாளர்களால்
* ஆனால் தேவானைத் திருமணம்? = எல்லா ஆலயங்களிலும் "செய்"விக்கப்படுகிறது!= இது ஏன்?
பரங்குன்றச் சிற்பம் - தேவானைத் திருமணம்
தமிழ் ஈழம்-ஏமகூடத்தில் வென்று, செந்தூர் வந்து ஈசனைத் துதித்து, தணிகையில் அசுரர் பால் கனன்ற கோபம் தணிந்து,
பின்னர் பரங்குன்றில் அம்மையை மணந்தான் முருகன் = இது "கதை"
போர் முடிந்த அடுத்த நாளே திருமணம் நடைபெற்றிடவில்லை! ஐப்பசி எல்லாம் கடந்து, பங்குனி உத்திரத்தில் தான் முருகன்-தேவானையம்மைத் திருமணம்!ஆனா, ஆலயங்களில் இன்று நாம் காண்பது, அடுத்த நாளே திருக்கல்யாண உற்சவம்!
தெய்வயானை அம்மை பற்றிய தனியான பதிவினைப் பின்னொரு நாள் இடுகிறேன்.
இது பற்றிப் பதிவுலகில் சிற்சில விவாதங்கள் நடைபெற்றதுண்டு! அவரவர் மனோநிலையின் படிப் பலரும் உரையாடினார்கள்!
ஆனால் வாரியார் சுவாமிகள் "நுட்பமாகத்" தேவானை அம்மையைப் பற்றி முன்வைத்துள்ள "சூட்சுமம்", பதிவுலகில் வைக்கப்படவே இல்லை!
சரி, இன்று அழகனுக்கும்-அம்மைக்கும் திருமண விழா அல்லவா! சும்மானாச்சும் வாழ்த்து சொல்லுங்க மக்கா! :)
திருப்பரங்குன்றம் - திருக்கல்யாண வைபவம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்! - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதன் முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்!
கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க!
இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, அவர் குன்னக்குடியைக் கேட்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
(திருப்பரங்குன்றத்தில்)
சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்) திருப்பரங்குன்ற ரகசியங்கள் இதோ: * திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது. முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள். மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு, பின்னாள் "ஒட்டு வேலைகளும்" உண்டு)
மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள். விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள் என்று பலரும் உண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள். இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகக் கருவறை உள்ளது!
* இங்கு முருகனுக்கு அபிடேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிடேகங்களும் திருக்கை வேலுக்கே!
* கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்! எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!
நக்கீரரும் முருகனும்
கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது!
ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!
நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!
உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.
தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.
= இது "கதை":)
= ஆனால், பாடல்= உண்மை!
* திருமாலின் புதல்வியர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் முருகனை விரும்பிச் சரவணப் பொய்கையில் தவம் இருந்தனர்.
அவதார (உதித்த) நோக்கம் நிறைவேறிய பின்னர் தாமே வேட்டு அவர்களை மணப்பதாக உறுதி அளித்தான் முருகன்!
அதன்படி அமிர்தவல்லி அமரர் தலைவன் இந்திரன் மகளாகத் தோன்றி, ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்படுகிறாள்;
சுந்தரவல்லி சிவமுனியின் புதல்வியாகத் தோன்றி நம்பிராஜனால் வளர்க்கப்படுகிறாள்!
சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்.
முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் பரங்குன்றில் மணக்கிறார்.
பின்னர், அவ்வண்ணமே, வள்ளி அம்மையையும் வேட்டு, திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
=இதுவும் "புராணக்" கதையே:)
இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும் மனமும் களிக்கின்றான் முருகன்! முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!
* பரங்குன்ற மலை மேலும் ஆலயம் ஒன்று உள்ளது. இஸ்லாமிய தலம் ஒன்றும் உள்ளது. அல்-சிகந்தர் என்றும் செகுந்தர் என்றும் சி-கந்தர் என்றும் கொண்டாடுகிறார்கள்
முருகனின் தோழராகக் கருதப்படுகிறார். கதிர்காமத்தில் காணப்படுவதும் இவரே!
ஆனால் அண்மைக் காலங்களாக, கார்த்திகை தீபத்தின் போது, மதப் பிரச்சனைகள் கிளம்புகின்றன.
இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை ஊதி அணைப்பதும் தகுமோ? * கதிர்காமத்து முருகன் ஆலயத்திலும் தேவானை அம்மைக்குத் தனியான ஆலயம் பின்னாளில் எழுப்பினார்கள்!
* திருப்பரங்குன்ற ஆலயத்தில் இருப்பது முருகனே அல்ல! அது ஒரு சமணத் தெய்வம், இல்லீன்னா ஜேஷ்டா தேவி!
= இறைவனின் முகத்தில் பெண் சாயல் தெரிகிறது என்று ஒரு பிரச்சனையும் கிளம்பியது.
தரமுள்ள ஆதாரங்கள் ஏதுமின்றி, திருப்பதி-திருமலையில் இருப்பது முருகன் தான் என்று முன்பு கிளப்பி விட்டதைப் போலவே,
பரங்குன்றத்து இறைவன் முருகன் அல்லன் என்றும் கிளப்பி விடப்பட்டது.
ஆனால், முருகன் இருப்பது, முருகன் கருவறையிலேயே... அருகனோ, மலை மேல் முழைகளில்!
முருகன்-அருகன் = இரண்டு மரபுகளும், பரங்குன்றில் உண்டு!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் தரும் குறிப்பு: மறுவில் கற்பின் வாணுதற் கணவன் - திருப்பரங்குன்றம் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் - திருவாவினன்குடி
இதை= "தேவானை" என்பார்கள் சிலர்; பேரே இல்லாமல் எப்படித் தான் சொல்கிறார்களோ?:)
வள்ளியம்மை பற்றித் தரும் குறிப்பு குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே - திருச்சீரலைவாய்!
வள்ளியைப் பேர் சொல்லிப் பாடும் நக்கீரர், தேவானையை அப்படிப் பாடாதது ஏனோ?
மடந்தை/ கற்பின்-கணவன் என்பதெல்லாம் பொதுப் பெயரே!
அவை= தேவானையைக் குறிப்பது ஆகாது!
--- திருப்பரங்குன்றின் பிரபலமான திருப்புகழ்கள் சில இதோ:
- கருவடைந்து பத்துற்ற திங்கள்
- சந்ததம் பந்தத் தொடராலே
- மன்றல் அம் கொந்து மிசை
- உனைத் தினம் தொழுதிலன்
சஷ்டிப் பதிவுகள் இத்துடன் நிறைந்தன! முருகா!
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் திருப் பரங் கிரி தனில் உறை சரவணப் பெருமாளே.
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-3)!
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் எண்ணப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால்...சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
என்னடா இது, இவன் புதுசாக் கெளப்பறான்-னு பாக்கறீங்களா மக்கா?:) ஹா ஹா ஹா! வாங்க பார்க்கலாம்!
இனி, கீழ் வருபவை... கச்சியப்பரின் கந்த புராணப் போர்க் காட்சிகள்!
வடகயிலையில்....
அம்மையிடம் வேலும், அப்பனிடம் 11ஆயுதங்களும் வாங்கிய முருகன், தெற்கு நோக்கிச் செல்கிறான்.
அவனைக் கண்டு, முருகன் புன்னகை பூக்க, தாருகனுக்கு முருகனை எதிர்க்க மனம் வரவில்லை!
அதனால், கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி, படைகளை வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மலையரணுக்குள் அழுத்திச் சிறைகொண்டு விடுகிறான் தாருகன்!
தன்னுடன் வந்து அடியவரைச் சிறை மீட்க, முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்கிறது; தாருகன் அழிகிறான்! தாருகனே = வேலுக்கு முதல் பலி!
(* தாருகன் = மாயா மலம்;மெய் ஞானம் பெற வேண்டின், முதலில் புறத்தே உலக மாயை அறுபட வேண்டும் என்று தத்துவமாகவும் சொல்லுவார்கள்; பிறகு பார்ப்போம்)
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்புகிறான்.
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறான் முருகப் பெருமான்.
ஈசனும், முருகன் முன் தோன்றி, பாசுபதம் என்னும் இன்னொரு படையும் (அஸ்திரம்) அளிக்கின்றார்.
திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரனின் முழுக் கதையை, அனைவரும் அறியச் சொல்லுமாறு கேட்கிறான் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் வீர மகேந்திரபுரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது!
வீரபாகு, முதலில் சிறைக்குள் புகுந்து, இந்திரனின் மகன் செயந்தனுக்கு, முருகனின் செய்தியைச் சொல்லி, ஆறுதல் சொல்கிறார்!
பின்பு சிறையில் உள்ள அமரர்களை நோக்கி, "நீங்கள் ஈசனை மதிக்காத தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் தான் இத்தனை துன்பமும்";
இப்போது உணர்ந்து கொண்டதால், சிறை மீட்க, ஈச வடிவமேயான முருகன் வந்திருப்பதாகச் சேதி சொல்கிறார்.
பின்னர் அவைக்குச் சென்று, ஆங்கே சூரனிடம் தூது உரைக்கிறார்
= அமரரைச் சிறை விடுத்து, முருகனைப் பணிந்து, நன்றே வாழ் என்பதே தூது பொருள்!
ஆனால், அசுரனின் ஆணவப் பேச்சால் தூது முறிகிறது.
கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் அங்கேயே கொல்லப் படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறார்.
இனியும் தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கைக்குச் செல்கிறான் முருகப் பெருமான் = ஏமகூடம்!
அங்கிருந்தே போர் துவங்குது; லட்சத்து ஒன்பது வீரர்கள்! (நவ வீரர்கள் + 1,00,000 அமரர்-பூதப் படை)
பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறான்.
சிறந்த சிவ பக்தனான பானுகோபன், மாண்டு போகிறான்!
பின்னரே, சூரனின் இன்னொரு தம்பியான சிங்கமுகன், போர்க்களம் வருகிறான்!
சிங்கமுகன் அறிவிற் சிறந்தவன்; முருகனுடன் ஏன் போர் செய்யலாகாது? என்று பல தரவு கொடுத்தும், உறவு ஏற்கவில்லை!
வரம் கொடுத்தவர்களையே எதிர்ப்பது அறம் அன்று... என்று சொல்கிறான் சிங்கன்! ஆனால், சூரனின் காதறுந்த ஊசியில் நூல் நுழையவில்லை!
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சிங்கமுகன் களம் நுழைய, போர் வலுக்கிறது;
சிங்கனின் சிரம், அறுக்க அறுக்க முளைக்கும் வல்லமை பெற்றது;
அதனால் அவன் மேல் வேல் எய்யாது, குஞ்சம் ஏவி, நெஞ்சைப் பிளக்கிறான் முருகன்!
( * சிங்கன் = கன்ம மலம் என்று தத்துவ இயலார் சொல்வார்கள்)
----------------
கடைசியில்...
சூரனே களம் புக, பலப்பல படைகள் ஏவிப் போர் புரிகிறான்!
* ஈசனால் வழங்கப்பட்ட இந்திர ஞாலம் என்னும் தேரில், படைகளைச் சூரன் கடத்த, தேரைத் தன் வசம் ஆக்குகிறான் முருகன்
* சூலப் படையை ஏவ, பாசுபதம் கொண்டு தடுக்கிறான் முருகன்!
சுற்றார், தேர், ஆயுதம் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் சூரன், வந்திருப்பது யார் -என உணர்கிறான்! ஆனாலும்...... மானம் தடுக்கிறது! தன்-மானம் தடுக்கிறது!
காலில் கூட விழ வேணாம்; தன்-மானத்தையும் விட வேண்டாம்;
= ஒரே ஒரு சொல் - "ஏதோ நடந்து விட்டது; முருகா, நாம் பேசலாமே"?
= ஆனால், சூரனுக்கு வாய் வரவில்லை!
= மனத்திலே கருணை இல்லை, அதனால் வாயிலே சொல்லும் இல்லை:(
"என்ன வேண்டும் முருகா உனக்கு? கேள், தருகிறேன்" -ன்னு அதிகாரமாகச் சொல்லி இருந்தாலும்...
முருகன் சிரித்துக் கொண்டே, பணிவான-கனிவான சொல்லால்,எடுத்துச் சொல்லியிருப்பான்;
ஆனால் "தான்-மனம்" என்பதை, "தன்-மானம்" என்ற போர்வையால் மறைத்துக் கொண்டான் சூரன்!
கடலாய், இருளாய் மாறி மாறிப் போர்! - தனி ஒருவன்!
எதுவுமே உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நின்று கொண்டான்!
கொக்கு, தலையை மண்ணுக்குள் விட்டுக் கொண்டால், உலகமே மறைந்து விடுமா என்ன??
மரத்துப் போய் நிற்றல் என்பார்களே... அது போல நிற்க... கூர் வேல் சூரைப் பிளக்கிறது! சூர சங்காரம் நடந்து முடிகிறது!!
பிளவுண்டு மரத்த-மரித்த நிலையில் உள்ள சூரன் மனங் கசிந்து கை தொழ...
* மனத்-தீரம் = மனத்து ஈரமாய் மாற...
* கண் ஈரம் = கந்தன் ஈரமாய் மாற...
* மாமரக் கூறுகள், சேவலும் மயிலுமாய் மாற....
மாமயில் ஊர்தியாய், சேவலங் கொடியாய், முருகன் பால் என்றும் நீங்காது நிலைக்கின்றன! அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கை வேல் போற்றி போற்றி!
சைவ சித்தாந்த - தத்துவப் பொருள்:
சூர சங்காரத்துக்கு, சமய அடிப்படையிலே, அதீத தத்துவப் பொருள் சொல்வாரும் உளர்!
* தாருகன் = மாயா மலம்
* சிங்கன் = கன்ம மலம்
* சூரன் = ஆணவ மலம்
(மலம் -ன்னா குற்றம்)
ஒரு உதாரணமாப் பார்க்கலாமா?
(நானாச் சும்மாச் சொல்லுற உதாரணம்; பிழை இருப்பின் மன்னிக்க!)
இருட்டு அறையில் ஒருவனை அடைத்து.. அவன் கண்ணையும் இறுக்கக் கட்டியாகி விட்டது! = அவனால் ஏதாச்சும் பார்க்க முடியுமா?
1) மாயா மலம் = இருட்டு அறை;
என்ன தான் கண் கட்டை அவிழ்த்தாலும், இருட்டா இருந்தா ஒன்னும் தெரியாதே!
=> உலக இன்பங்கள் = மாயை!
அதனால் முதலில் மாயை போக்க வேண்டும்! அதான் தாருகன் முதலில் அழிந்தான்!
2) கன்ம மலம் = கண் கட்டு
அடுத்து, கண் கட்டை அவிழ்த்தா, அறையில் இருப்பது தெரியும்!
=> செய்த வினைகள் = கன்மம்
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்! வினையைப் போக்கணும்! அதான் அடுத்து சிங்கமுகன் அழிந்தான்!
3) ஆணவ மலம் = "தான்" என்ற உணர்ச்சி
என்ன தான் அறையில் விளக்கேத்தி, கண் கட்டை அவிழ்த்தாலும், நாம கண்ணைத் தொறக்கணுமே!
கண்ணத் தொறக்கவே மாட்டேன், கூசுது ன்னு அடம் புடிச்சா? = ஆணவ மலம்! = தான், தான் = சூரன்
இருக்குறதலேயே, இதான் மோசமானது! இதை அழிச்சாத் தான் = வெளிச்சத்தின் பலன் கிடைக்கும்!
எப்படி அழிப்பது? = "ஞான" வேல் கொண்டு! = அதான் சூரன் இறுதியா அழிந்தான்!
* வேல் = மெய் ஞானம்
அந்த ஞானம், ஆணவத்தைப் பிளக்க...
தான் தான் என்ற சப்தம் நீங்கி, ஓம் ஓம் என்ற சப்தம் எழுகிறது!
* மயில் = விந்து; சேவல் = நாதம்
இரண்டும் சேர்ந்து = நாத-விந்து-கலாதீ = ஓங்காரம்!
ஆகவே சேவலும்-மயிலும் = ஓம் என்பதைக் குறிக்கும்!
தத்துவம் போதும்:) நாம, கதைக்கு வருவோம்....
ஆக, போர் நடந்தது ஈழத்து ஏமகூடத்தில்-ன்னு பார்த்தோம்!
ஈழத்துக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பினைக் கண்டு, அடியேன் மனம் என்னமோ செய்கிறது! ஈழத்தின் இன்பத்துக்கும் அந்த முருகவேளே முன்னிற்க, முன்னிற்க!
இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளங் கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி எவ்வம தடைந்த தொல்லை இலங்கை யங் குவடு நீங்கி மைவரை புரைசூர் மேவு மகேந்திர புர முன் போந்தான்
ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
----------------------
முருகனின் ஆணைப்படி, மொத்த வீர மகேந்திரபுரியும், வருணன், கடலுள் மூழ்கடிக்க, போர் முடிகிறது!
(குறிப்பு: இது கச்சியப்பர்/ தீவிர சமயவியலார் கூற்று மட்டுமே - தனிப்பட்ட முறையில் எனக்கு ஒப்புதல் இல்லை - என் முருகன் கருணை மிக்கவன்; அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்பது வெறும் வசனமே; என்னவனுக்குக் குடி கெடுக்கத் தெரியாது; அவன் முகம் பொழி "கருணை" போற்றி!)
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்!
போரின் மனக்கேதங்கள் தீர...
முன்பு கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜப மாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்.
அப்போது, மக்கள் பலரும், அங்கு குழுமி, அவனை வணங்க...
பாதிப் பூசையின் நடுவிலே...
ஒரு கையில் செபமாலையும், இன்னொரு கையில் அர்ச்சிக்கும் தாமரைப் பூவுமாய்...
"என்ன நலமா?"... என்று நம் பால் முகம் திருப்பிச் சிரிக்கும் திருக்கோலம்!
= இந்தக் கோலமே இன்றும் நாம் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
மூலத்தானத்து முதல்வன் நிற்க....
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!
அச்சோ ஒருவா அழகியவா! என் காதல் முருகா பழகியவா! உன் வாசல் படியாய்க் கிடந்து - உன் பவள வாய் காண்பேனே! உன் திருவறைக்கு எதிர் நின்று - உன் திருமேனி தின்பேனே! இன்றைய சஷ்டிப் பாடல்...
படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
முருகா!!!
சஷ்டியின் ஆறு நாள் பதிவுகளில், ஒரு நாள் பதிவு விட்டுப் போனது. அதை நாளை திருப்பரங்குன்றப் பதிவாய் இட்டு, திருமணப் பதிவாய் நிறைவு செய்கிறேன்!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் என் நன்றி!
கந்த சட்டி காணும் வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா! நண்பர்கள் அனைவர்க்கும் கந்த சட்டி வாழ்த்துக்கள்! திருச்செந்தூர் தலம் பற்றிய ரகசியக் குறிப்புகளைச் சென்ற ஆண்டு சஷ்டியின் போதே கொடுத்திருந்தேன். இங்கு காணலாம்!
மக்கா, இன்னிக்கி கொஞ்சம் ஸ்பெஷல்! பழனி ஸ்பெஷல்! ஆன்மீகக் குத்துப் பாட்டுக்குப் புகழ் பெற்ற ரமணி அம்மாள் பாட்டு!:)) குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - பாட்டை அறியாதவர்கள் தான் யார்? அது போன்ற உற்சாகப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் பெங்களூர் ரமணி அம்மாள். சிறந்த முருக பக்தை!
பஜனை என்றாலே அது கண்ணன் பாடல்கள் தான் என்பது போய், அய்யன் முருகன் மேலும் பஜனைப் பாடல்கள் என்று ஒரு தனி இயக்கம் போலவே நடத்திக் காட்டினார் ரமணி அம்மாள்! கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்! திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி,/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார். வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்! கண்ணனைத் தலைவன்-கடவுளாகவும், முருகனைக் காதலன்-குழந்தையாகவும் அடியேன் காண்பது போல, ரமணி அம்மாள், முருகனைத் தலைவன்-கடவுளாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் கண்டவர்! அம்மாள், கண்ணன் குழுப் பாடல்கள் (பஜனை) பலவும் பாடியுள்ளார். இன்னிக்கி அம்மாளின் சிறப்பான ஒரு காவடிப் பாட்டு! பழனி-ன்னாலே காவடி தானே! அங்கு பிறந்த காவடி தானே, மற்ற படைவீட்டுக்கெல்லாம் பரவி, இன்று சிங்கை, மலேசியா, இலங்கை, பர்மா, பாரீஸ், அமெரிக்கா என்று காவடி பரவியுள்ளது!
ரமணி அம்மாள், பால் காவடி, பன்னீர் காவடி, சர்ப்பக் காவடி என்று அத்தனை காவடிகளையும் பட்டியல் போட்டுச் சொல்கிறார்! நீங்களே கேளுங்கள்! இதோ!
பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே! பாரைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்! - பழனி மலையைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்!
முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே! - அப்பப்பா! முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே! எங்கும் தேடி, உன்னைக் காணா, மனமும் வாடுதே! முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே!
தேன் இருக்குது, தினை இருக்குது, தென் பழனியிலே! தெருவைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்! பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்! சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்! சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்! மலையைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!
வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! அதோ வராண்டி, பழனி ஆறுமுகன் தாண்டி! அவன் போனா போறாண்டி, முருகன் தானா வாராண்டி!
வேல் இருக்குது, மயில் இருக்குது, விராலி மலையிலே! மலையைச் சுற்றி, மயிலின் ஆட்டம், தினமும் நடக்குதாம்! - விராலி மலையைச் சுற்றி, மயிலின் ஆட்டம், தினமும் நடக்குதாம்! முருகா, உன்னைத் தேடித் தேடி, எங்கும் காணேனே! (கண்டேனே)!
முடிக்கும் போதும் "எங்கும் காணேனே!" என்று அம்மாள் முடிப்பதால், கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு, "எங்கும் கண்டேனே" என்று மாற்றி விட்டேன்! :)
பாட்டு எப்படி இருந்திச்சி மக்கா? எழுந்திரிச்சி ஆடினீங்களா? நான் ரெண்டு தபா ஆடினேன்! :) பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்! மலையைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! பழனி ரகசியங்களைப் போட்டு உடைப்போமா? ஹூம்...பழனியாண்டவர் உருவச் சிலையே ஒரு தெய்வ ரகசியம் தானே?
* திருத்தணிக்குச் சொன்னது போலத் தான்! பழனி என்பது ஒரு படைவீடே கிடையாது! திருவாவினன்குடி என்பது தான் அறுபடை வீட்டுள் ஒன்று! திரு+ஆ+இனன்+குடி = இலக்குமி, காமதேனு, அக்னி ஆகியோர் வணங்கிய தலம்! ஆவினர்கள் என்னும் சிற்றரசர்கள் ஆண்ட குடி என்றும் சொல்லுவர்.
இந்தப் படை வீடு, மலையின் கீழ் உள்ள ஆலயம்! குழந்தை வேலாயுத சாமி என்று இறைவனுக்குப் பெயர். கோபமாக, மயில் மேல் அமர்ந்த குழந்தைக் கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறான். சரவணப் பொய்கையும் உண்டு.
பின்னாளில் சித்த புருஷரான போகர், தண்டபாணி சிலை வடித்த பின்னர், மலை மேல் உள்ள ஆலயம் பிரபலமாகி விட்டது. தண்டாயுதபாணியும் அழகும் பேரழகே! அடுத்த முறை பழனி செல்லும் போது, மேலே உள்ள குழந்தையும் கண்டு, கீழே படைவீட்டில் உள்ள குழந்தையையும் கண்டு வாருங்கள்!
* பழனி என்றால் முதலில் எது? பஞ்சாமிர்தமா? முருகனா?? :) சிறிய விருப்பாச்சி என்னும் வாழைப்பழங்களால் செய்வதே பஞ்சாமிர்தம். எல்லா வாழைகளும் போட முடியாது. நீர்ப்பதம் குறைவாய் உள்ள வாழை தான் ரொம்ப நாள் கெடாமல் தாங்கும். சர்க்கரை, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் - இவ்வளவு தான்! இதுக்கு மேல் கண்டதையும் சேர்க்கக் கூடாது!
* கொடைக்கானல் மலையில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் ஆலயமும், பழனிக்கு உட்பட்டதே! கொடைக்கானல் மலைகளில் இருந்து இறங்கும் போது, பழனி மலையின் அழகையும், கோயிலின் தூரப் பார்வையும் கண்டு களிக்கலாம்!
* முருகனுக்கு உரிய கடம்ப மலர், பூத்துக் குலுங்கும் தலம் பழனி!
* சித்தபுருஷர் போகர் பெருமானின் நிர்விகல்ப சமாதி அமைந்த தலமும் இதுவே! அடுத்த முறை ஆலய வளாகத்துள் இருக்கும் போகர் குகைக்குச் சென்று வாருங்கள்! மரகத லிங்கம், நவ துர்க்கை என்று அவர் வழிபட்ட மூர்த்திகளும் சமாதியில் உள்ளன.
காலங்கி நாதரின் சீடர் போகர்! தன் குரு தீர்க்கதரிசனத்தால் பின்னாளில் நோய்கள் மலியும் என்று சொன்னதால், பாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களை மருந்தாகக் கலந்து, பழனியாண்டவர் சிலையை வடித்தார், தன் சீடர் புலிப்பாணி உதவியுடன்! பாஷாண உருவத்தின் மேல் அளவாக தீர்த்தமாட்டப்படும் பாலில், மருந்துப் படிமங்கள் படிந்து, நோய் தீர்க்கும் என்பது சித்தரின் மருத்துவக் கணக்கு! Perkin-Elmer Atomic Absorption/Adsorption என்று Spectrometer வைத்து ஆய்வு செய்த பின்னர் கூட, முருகப்பெருமானின் மூலக் கூற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை!
பேராசைப் பெருமகன்களாலும், அரசியல்-பணக் காரணங்களாலும், கணக்கே இல்லாமல் பால் குட அபிடேங்கள்! பழனியாண்டவர் சிலையைச் சேதார நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர் நம்ம ஆட்கள்! சித்தரின் மருத்துவக் கணக்கு, பால் கணக்கால், அடிபட்டுப் போகிறது. பாவம், போகரே இதை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்! ஒரு மாதத்தில் 700 குளியல்களா? போதாக்குறைக்கு சித்த மருத்துவர்கள், பூசையே செய்யாத அந்தணர்கள்/அர்ச்சகர்கள் என்று கண்டவரும் கருவறை நுழைவு! பாஷாணம் சுரண்டிக் களவாடப்பட்டது என்று சொல்வார் கூட உண்டு!
ஆகமங்கள்-லாம் எதுக்கு, எனக்கும் முருகனுக்கும் எப்பமே direct contact என்று கேலி பேசுகிறார்கள் சிலர்! ஆனால் ஆலயம் என்பது ஒருத்தருக்கு மட்டும் அல்லவே! நமக்கு Direct Contact! நாம் கிளம்பிப் போன பிறகு யார் Contact? பொதுச் சொத்து அல்லவா? பல சந்ததிகளுக்கும், முருக உருவத்தைக் காத்துக் கொடுக்கும் பொறுப்பு உள்ளதே?
இத்தனை உயர மூர்த்திக்கு, இத்தனைக் குடம் தான் அபிடேகம் போன்ற Work Instruction-கள் தான் ஆகமம். ஆறு காலப் பூசை, ஆறாறு குட முழுக்காட்டு என்று வரையறுக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிப் பேராசை பட்டதால் இன்று பழனிக் குழந்தை, கால்கள் எல்லாம் சூம்பிப் போன நிலையில், ஓடாய்த் தேய்ந்து நிற்கிறான்! அர்ச்சகர்களே, அபிடேகத்தின் போது, கையைக் கிழித்துக் கொள்வோமோ, என்று பயந்து பயந்து செய்யும் நிலைமை!
பழனியில், அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில், குழந்தையைக் கண்டு கண் கலங்கியவர்களில் அடியேனும் ஒருவன். யாரும் விஸ்வரூம் பார்த்து விடாதீர்கள். குழந்தை எந்த அலங்காரமும் இன்றித் தனியாகத் தெரிவான்! குச்சி போல் மெலிந்த கோலம் கண்டு மனமே ஒடிந்து விடும்! அவர்களே, நமக்கு அதிகம் காட்டாது, பரபரவென்று முடித்து விடுகிறார்கள்! ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் என்று அலங்கரித்த முருகனையே கண்டு வாருங்கள்! * மலைக்குச் செல்ல நான்கு பாதைகள் உண்டு. யானைப்பாதை சிரமம் இல்லாதது. வயதானவர்களும் செல்லலாம். படிகள் கம்மி. தீர்த்தப் பாதை, ஆலய நீர்த் தேவைக்கு மட்டும். ரோப்-கார் என்னும் இழுவை ரயில் ஒரு தனி அனுபவம் தான்! ஆனால் மலையை அனுபவிக்க முடியாது, நொடிகளில் ஏறி விடும்! ரயிலில் கூடப் பொது வழி, சிறப்பு வழி-ன்னு நம்ம தர்ம-நியாயங்கள்! :)
மொத்தம் 697 படிகள் தானே! படிகளில் ஏறிச் செல்லுங்கள்! அதன் அழகே தனி! வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் படிகளில் செல்லும் போது தான் கிடைக்கும்! அடிவாரம் பாத விநாயகரை வணங்கி, பாதி வழியில் இடும்பனை வணங்கி, சிவ கிரி-சக்தி கிரியைக் கண்டு, இடும்பனுக்கு உள்ள தனி மலையைக் கண்டு, பழனியின் வயல்வெளிகளைக் கண்டு, சண்முக நதியின் ஓடும் அழகைக் கண்டு.....இதெல்லாம் ரோப்-காரில் கிடைக்காது!
வேண்டுமானால், ரோப்-காரில் ஏறுங்கள்; இறங்கும் போதாவது படிகளில் வாருங்கள்! ஏறுதலை விட இறங்குதல் எளிது! மூச்சு முட்டாது, வயதானவர்க்கும் எளிது! * நகரத்தார்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு, பழனி ஆலயத்துக்கும், பழனிப் பாத யாத்திரைக்கும். பங்குனி உத்திரம் தான் மிகப் பெரும் விழா! காவடிக் கடல்! அடுத்து தான் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி எல்லாம்!
* பழனி ஆலயம், வருமானத்தில், தமிழ்நாட்டின் திருப்பதி! இதற்கு மேல் நான் ஒன்னும் சொல்லலை! கல்லூரி, சித்த மருத்துவமனை - இதாவது நடக்கிறதே! மகிழ்ச்சி! TTD, தெலுங்கு இலக்கியங்களை எல்லாம் டிஜிடைஸ் செய்து முடித்து விட்டு, அடுத்து ஆழ்வார் பாசுரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக் கொண்டார்கள்! சமூக முகாம்கள், தலித் கோவிந்தம், சுவடி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, நீர் ஆதாரங்கள் என்று ஒரு தெலுங்கு நிறுவனம் தமிழ் வளர்ச்சி செய்யட்டும்! எங்கள் அருணகிரியையும் டிஜிடைஸ் செய்யுங்க-ன்னு அவங்களிடம் போய்க் கேக்க முடியுமா? நம்ம கிட்டத் தான் அறநிலையத் துறை பாத்து பாத்து கவனிக்கும் பழனி இருக்கே! :(
* தமிழர்கள் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பல பக்தர்கள் வந்து செல்லும் தலம் பழனி! மலையாள அறிவிப்புப் பலகைகளைப் பழனியில் காணலாம்! * நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி பற்றித் தான் பேசுகிறார். பழனி பற்றியோ, மலைக்கோயில் ஆலயம் பற்றியோ பேசவில்லை! தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று - என்று பாடுகிறார்! அறுபடை வீடுகளுள், மிக அதிக விவரணங்கள்/வரிகள் ஆவினன்குடியை பற்றித் தான் வருகிறது!
* அருணகிரியார் மிக அதிகமாகப் பாடிய தலம் பழனித் தலம். மொத்தம் 97 திருப்புகழ்கள் ஆவினன்குடி மீது! பிரபலமானவை இதோ: - நாத விந்து கலாதீ நமோ நம - சிவனார் மனங்குளிர - தகர நறுமலர் - திமிர உததி - வசனம் மிகவேற்றி மறவாதே
* பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே!வேல் தோள்களில் தான் சார்த்தி வைக்கப்பட்டு இருக்கும்! சொல்லப் போனால், ஆறுபடை வீட்டில், எந்த வீட்டிலும், முருகப் பெருமான் கைகளில் வேல் கிடையாது! சக்தி என்னும் குறுவேல், ஜபமாலை, தண்டம் - இவற்றில் சில தான்!
* பழனி மலை என்பது மொத்தம் இரண்டு மலைகள்! சிவ கிரி = பழனியாண்டவர் இருப்பது! சக்தி கிரி = இடும்பன் மலை = 13 அடி உயர இடும்பன் சிலை உள்ள சிறு ஆலயம். இரு மலைகளும் அருகருகே தான்! இடும்பன் மலைக்குச் சென்றால் இடும்பனையும் காணலாம்! பழனி மலையை, அதன் பசுமையை, விதம் விதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கவும் சரியான ஸ்பாட்!
* எப்போதுமே என்னை கை நீட்டி அடிக்காத அப்பா, என்னை முதல் முறையாக அடித்த இடம் பழனி மலை தான்! :) பழனியில் உள்ள கடையில் முருகனின் ஆறுபடை வீட்டுப் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொன்றிலும் ஒன்னொன்னு கேட்டிருக்கேன்! பஞ்சாமிர்தம், தின்பண்டம், குட்டிப் பொம்மை, சொப்பு-ன்னு எதுக்கும் மசியாமல், முருகன் தான் வேண்டும் என்று நான் அடித்த லூட்டிக்கு, விழுந்த பளார், இன்னும் ஞாபகம் இருக்கு! :))
"மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா" என்பதை TMS அழுத்திப் பாடும் போது, நம் மனதில் திருநீறும் சேர்ந்தே அழுந்தி விடும் அல்லவா! அப்படி என்ன பெருசா மகிமை இருக்குதுங்க திருநீறில்? பின்னூட்டதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! (க்ளூ வேணும்னாக் கொடுக்கறேன்! - சம்பந்தர் திருவாலவாயன் திருநீறு-ன்னு பாடிய வரிகளை எடுத்துக்கிட்டா, மகிமை-1, மகிமை-2...அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே வந்து விடும்!)
திருநீறுக்கு ஐஸ்வர்யம் என்ற இன்னொரு பேரு இருக்கு தெரியுமா? வாரியார் சுவாமிகள், தென் மாவட்டத்தில் ஒரு ஊருக்குப் போன போது, சில பழங்குடி மக்கள், அவரிடம், "ஐஸ்வர்யம் கொடுங்க சாமீ"-ன்னு கேட்டனர். வாரியாருடன் போன பழுத்த சைவர்கள் சிலர், சரி ஜனங்க ஏதோ துட்டு கேக்குதுங்க போல-ன்னு நினைச்சிகிட்டாங்களாம்! வாரியார் அவர்களை எல்லாம் திருத்தினார்.
"ஐஸ்வர்யம்=திருநீறு என்பது நமக்கே இப்பல்லாம் தெரியறதில்லை! விபூதி என்றால் செல்வம்! நித்ய விபூதி என்று தான் வைணவர்கள் குறிப்பிடுவார்கள்! அது எப்படி இந்த ஆதிவாசி ஜனங்களுக்குத் தெரிந்தது?"-ன்னு மிகவும் வியந்தாராம் வாரியார்!
விபூதி என்னும் அழியாப் பெருஞ்செல்வம்! நித்ய விபூதி, லீலா விபூதி என்றெல்லாம் கீதையில் வரும்! மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு! சுந்தரம் ஆவதும் நீறு! துதிக்கப்படுவதும் நீறு! இன்னிக்கி திருநீற்றைப் பற்றிய ஒரு பாட்டு! கூடவே மிகவும் வாசனை மிக்க சுவாமிமலை ரகசியங்கள்!
கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் - மனப்பாடம் செய்ய எளிதான பூசைப் பாடல்! TMS வெங்கலக் குரலில் கேட்டு, படித்து மகிழவும்! பாடலை இங்கே கேட்கவும்!
குரல்: TMS வரிகள்: MP Sivam
கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
(கந்தன்)
அது என்னாங்க சாமி மலை? குழந்தை மலை தானே அது?
சிவபெருமான் தானே சாமி?
இளைய வயது பிருகு முனிவர், பிரணவ மந்திரத்தை சதா ஜெபித்து ஜெபித்து, அவர் தலையில் பிரணவ அக்னி கிளம்பியது. சிறியவர்கள் எல்லாம் பிரணவ ரகசியம் அறிந்து கொள்வதா என்று பயந்து போன சிவபெருமான், அந்தப் பிரணவாக்னியைத் தம் கையால் அணைத்து விட்டார். பிரணவம் அவருக்கும் சற்றே மறந்து போனது!
பின்னாளில், பிரம்மன் செருக்கினை அடக்குவது போல ஒரு காட்சியை உருவாக்கி, தந்தைக்குப் பிரணவப் பொருளினைத் தெளிய உரைத்தது முருகக் குழந்தை!
எல்லாரும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னான், பொருள் சொன்னான் என்று தான் சொல்கிறோமே தவிர, அந்தப் பிரணவத்துக்கு என்ன பொருளைச் சொன்னான்? என்று சொல்கிறோமா? ஹிஹி! பிரணவம் என்றால் என்ன? பந்தலில் பின்னொரு நாள் சொல்கிறேன்!
இளையவர் அறிவதா என்று நினைத்த சிவனாருக்கு, இளையனாரே பொருள் சொல்ல வேண்டி வந்தது! சிவனார் மனம் குளிர, உபதேச மந்திரம், இரு செவி மீதிலும் பகர்ந்தான்!
இப்படிச் சாமிக்கே சாமியானவன் சாமிநாதன்!
அந்தச் சாமி நாதனின் மலையானதாலே, அது சாமி மலை! (சுவாமி மலை)!
திருவேரகம் என்பது பண்டைத் தமிழ்ப் பெயர்! மக்கள் வழக்கில் சாமி மலையானது!
* சரி, திருவேரகம் = திரு+ஏர்+அகம் என்றால் என்ன? ஏன் இந்தப் பெயர்? சொல்லுங்க பார்ப்போம்
* சுவாமி மலையில் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் மலையே கிடையாது!ஹா ஹா ஹா! அப்பறம் எப்படி சுவாமி மலை ஆச்சு?
சுவாமி மலை என்பது செயற்கையான ஒரு குன்று போல் அமைப்பு! கொஞ்சம் உயரமான தளம் கொடுத்து, அறுபது படிக்கட்டுகள் வைத்துக் கட்டி இருக்காங்க! இந்து ஆண்டுகளான பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுகளைக் குறிக்க!
* முருகப் பெருமானின் வாகனமாக இங்கு மயில் கிடையாது! பிணிமுகம் என்ற யானை தான்! கோயில் முகப்பிலும் அதுவே இருக்கு!
* கீழ்த் தளத்தில் ஒரு பிரகாரம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். முப்பது படிக்கட்டுகள் ஏறி இரண்டாம் பிரகாரம். மலையைச் சுற்றி வருவது போல். மீண்டும் முப்பது படிக்கட்டுகள் ஏறினால் மூன்றாம் பிரகாரம். கருவறையைக் கொண்டது! கருவறை மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது!
* சுவாமிமலை, காவிரி பாயும் மிகவும் அழகிய ஊர்! பச்சைப் பசேலென திருவலஞ்சுழி என்னும் பிள்ளையார் கோயிலும் அருகில் தான்! குட காவிரிக்கு வட பாலார், திருவேரகத்தில் உறைவா என்று பாடுகிறார் அருணகிரி!
* சுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர்! Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி/நகாசு வேலைகள் இங்கு சிறப்பு. ஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய! வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள்!
காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு! கைரேகையைக் கூடத் துல்லியமாகப் பிரதி எடுக்க வல்ல மண் என்பதால், உலோகச் சிற்பங்கள் அத்தனை அழகாக அமைகின்றன!
* ராஜன் கலைக் கூடம் இன்று ராஜன் என்னும் தலித் ஒருவரால் நடத்தப்படுகிறது! பரம்பரை பரம்பரையாக இல்லாது, ஆர்வம் உள்ளவர் அனைவருக்கும் உலோகச் சிலை வடிக்கும் கலையைச் சொல்லிக் கொடுக்கிறார் ராஜன்.
புதிய வர்த்தக உத்திகள் கடைப்பிடிப்பதால், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் உண்டு! மரபு அறிவோடு, புதிய தொழில் நுட்பமும் சேர்ப்பதால், வேலை நேர்த்தியும் அட்டகாசம்!
ஜீயர்கள் பலர், திவ்யதேச வாகனங்கள் எல்லாம் செய்ய, இவர் குழுவைத் தான் நியமித்துள்ளனர்! தலித் ஒருவர் உருவாக்கிய எம்பெருமானின் திருவுருவங்கள் தான், பல ஆலயக் கருவறைகளை அலங்கரிக்கின்றன!
எதிர்ப்புகள் குறைந்து போய், இன்று பல புதிய ஆலயங்களில், சாமி சிலைகள் செய்ய சுவாமிமலை ராஜனையே பலரும் நாடுகிறார்கள்! திருமணமே செய்து கொள்ளாமல், இறைத் திரு உருவங்கள் செய்தே பணியாகக் கொண்டுள்ளார் ராஜன்! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
* நக்கீரர், பழமுதிர் சோலையில் எப்படி வேடுவர்கள் முருகனைப் பூசை செய்ததைக் காண்பித்தாரோ, அதே போல் சுவாமி மலையில், அந்தணர்கள் பூசை செய்வதைக் காட்டுகிறார்! உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்து உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று என்பது திருவேரகத்துத் திருமுருகாற்றுப்படை!
* சுவாமி மலையைப் போலவே, தில்லி வாழ் தமிழர்கள், தில்லியில் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள்! மலை மந்திர் என்பது லோக்கல் பெயர். உத்தர (வடக்கு) சுவாமி மலை என்பது சிறப்புப் பெயர்!
* பிரபலமான சில சுவாமி மலைத் திருப்புகழ்ப் பாடல்கள் இதோ:
- பாதி மதி நதி, போது மணி சடை,
- காமியத்து அழுந்தி இளையாதே,
- சரண கமலாலயத்தில்,
- செக மாயை உற்று,
- மருவே செறித்த குழலார் மயக்கின்
இதில் எனக்கு மிகவும் பிடித்தது, வாணி ஜெயராம் பாடும் பாதி-மதி-நதி பாடல். எம்.எஸ்.வி இசையில் மிகவும் அருமையாக இருக்கும்! இலக்கண இசையாகவோ, அருணகிரியின் வழக்கமான சந்த இசையாகவோ இல்லாமல், மெல்லிசையாக இருக்கும்! சூத மிக வளர் சோலை மருவிடு சுவாமி மலை தனில் உறைவோனே!
* ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற அம்மா-அப்பாவின் மணிவிழாவின் போது, அனைவரும் தில்லைக்கும், சுவாமி மலைக்கும் சென்று வந்தோம். அப்போ, பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தப் பயணக் குறிப்பு, மாதவிப் பந்தலில், வெகு விரைவில்! :)
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த, தனி ஏரகத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில், சமர் வேல் எடுத்த பெருமாளே! - முருகா!!
அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே! இது அம்பிகாபதியின் 100-வது பாட்டு; ஆனால் மற்றவர்க்கு இது 99-வது பாட்டு!
ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே! சிவகாமி மகனை, சண்முகனை சிந்தனை செய் மனமே!
செந்தமிழ் தரும் ஞான தேசிகனை, செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை சிந்தனை செய் மனமே!
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை! சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை! அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? ஆதலினால் இன்றே...
அருமறை பரவிய சரவண பவ குகனை சிந்தனை செய் மனமே!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று பாடுகிறான் அம்பிகாபதி். ஆனால் அவன் காதலுக்கும் உயிருக்கும் உலை வைக்க, அதோ அந்தகன் வரப் போகிறான் என்று அறியாது பாடுகிறான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு! ஆரம்பத்தில் மெல்லிதாகத் தொடங்கும் பாடல், இறுதியில் உச்சத்துக்குச் செல்லும் போது, அவரும் நரம்பு புடைக்கப் பாடுவது போல், அப்படியே வாயசைப்பார்.
காதலியான அமராவதி, பாடல் முடிந்ததும் எழுந்து ஓடோடி வர, பக்திப் பாடல் ஒரே நிமிடத்தில் காதலாகி விடும்! :)
சரவண பவ குகனை, சிந்தனை செய் மனமே என்பது மாறி, சற்றே சரிந்த குழலே அசைய-ன்னு பப்ளிக்கா அமராவதி வர்ணனை ஆகிவிடும். பொறுக்குமா ஆசார சீலர், கவிப் பேரேறு, ஒட்டக் கூத்தருக்கு? ஏற்கனவே கம்பன் என்றாலே அவருக்கு ஆகவே ஆகாது! போதாதா? கம்பன்-ஒட்டக் கூத்தர் பிணக்கு பற்றி தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? உம்.... படிக்க வேண்டும்! இருவர் சமயமும் வேறு! கொள்கைகளும் வேறு! ஆனால் தமிழால் ஒன்றுபட முடியாதா? சமயம் வேறானால் நட்பும் வேறாமோ? கொள்கை மாறானால் நட்பும் மாறாமோ?
இத்தனைக்கும் ஒட்டக் கூத்தர் சாதாரணமானவர் அல்ல! பெரும் புலவர்! வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண் பாவிற்கு கம்பன் என்றால், உலாவுக்கு ஒரு கூத்தன்! தேவியின் அருள் பெற்றவர். சைவச் செம்மல். குலோத்துங்கனின் அந்தரங்க மதிப்புக்கு ஆளானவர்! ஆனால் பொது மக்கள் மதிப்பில் குறைந்தது ஏன் என்று தான் தெரியவில்லை!
கம்பனைத் தாண்டி, அவர் மகன் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான காதல் மீதும், வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன அப்படியொரு பகையுணர்ச்சி? ஹூம்...தமிழ் வளரவாவது, தமிழன் தமிழனோடு ஒற்றுமை கொள்ளும் நாள் எந்நாளோ? தமிழ்க் கடவுளே! முருகா!
சரி, நாம் முருகனுக்கு வருவோம்! சிந்தனை செய் மனமே அருமையான கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது! ஜனனீ ஜனனீ-யும் அதே ராகம் தான்! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே-வும் கல்யாணி தான்!
பாட்டிலிருந்து சில கேள்விகள், வாசகர்களுக்கு! 1. முருகனை தேசிகன் என்று ஏன் அழைக்க வேண்டும்? 2. சந்ததம் மூவாசை என்றால் என்ன? 3. இராமாயணத்தில் குகன் இருக்கான். முருகனைக் குகன் என்பதன் பொருள் என்ன? இன்றைய படைவீட்டுத் தகவல்கள் - திருத்தணிகை!
* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர். இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!
அந்தக் குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை! திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு! பதி எங்கிலும் இருந்து விளையாடி "பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!
ஆனால் உபன்னியாசகர்களும், மற்ற புலவர் பெருமக்களும், சினம் தணிந்த கதையின் காரணமாகத், தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர். நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்! குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்! ஆனா நாம் தான் வாய்மையை விட்டுவிட்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்வோமே! எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)
திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)
குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :) பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!
* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்! ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே! ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(
அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான், இங்கு வந்து தான், நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த, வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!
களவு மணமாவது? கற்பு மணமாவது? களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா? எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
வாரியார் சுவாமிகள் பின்னாளில் தன் பேருரைகளில் எல்லாம் இதைத் தொட்டுச் செல்வார். இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!
வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்! சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே, முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!
* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா! இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)
இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று சொல்வது தணிகை ஸ்தல புராணம்!
* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்! உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!
* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்! முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!
அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி! அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! தியாகராஜர் கீர்த்தனைகளில் எளிமையும் உணர்ச்சியும் இருக்கும் என்றால், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளில் சொற்செட்டும், சந்தமும் மின்னும்!
சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல! * திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!
* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது! மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு! சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்! ஆனால் முடியவில்லை! ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!
* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே! - முருகா! * பதிவர் தி.ரா.ச அவர்கள் திருத்தணி முருகன் மீது அன்பு கொண்டவர்! இன்று (Oct-31,2008) அவர் மகளுக்குச் சென்னையில் திருமண விழா! மணமக்களை, நீங்காத செல்வம் நிறைந்தேலோ என்று வாழ்த்தி, திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவோம்!