Saturday, January 26, 2013

தைப்பூசம்: நீராடிப் பட்டுடுத்தி..

அன்பர்களுக்குத் தைப்பூச வாழ்த்துக்கள்!


(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
 

உள்ளம் உருகாதா? - எந்தன்
ஊனும் உருகாதா?
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)

தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

கந்தா.... அழகுத் திருக்குமரா
செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)

நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

வேலா.... கருணை மழை முகிலே
பாலா.... பழநி மலை அரசே

(கர்த்தர் மேல பாட வேண்டியவளை, கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு தப்பா நினைக்காதே-ம்மா;
= வீணாப் போனவள் வீணை ஏந்தினாலும், வாரானோ அந்த வயலூரான்!)
---------

திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்


Sunday, January 20, 2013

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 13



கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

"கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இங்கே அடிகளார் சொல்கிறார்.

சஷ்டி திதிக்குரிய கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட விரும்பிய சிறுவனாகிய தேவராயன் என்னும் நான் பாடிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு, கந்தர் சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள், ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிய

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள். அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள்!

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!

எதிரிகள் எல்லோரும் வந்து வணங்குவார்கள். நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மைகள் அளித்திடுவார்கள். புதிதாக வந்த மன்மதன் என்னும்படி அழகு பெறுவார்கள். எந்த நாளும் ஈரெட்டு பதினாறு வயதுடன் இளமையுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!

கந்தனின் கையில் இருக்கும் வேலைப் போல் அடியவர்களைக் காக்கும் இந்த கந்தர் சஷ்டி கவசத்தின் ஒரு அடியை பொருளுணர்ந்து படித்தால் உண்மைப் பொருள் விளங்கும். இந்த நூலையும் நூலை ஓதியவர்களையும் கண்டால் பேய்கள் பயந்து ஓடும். இந்த நூல் பொல்லாதவர்களைப் பொடிப்பொடியாக்கும்.

கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP