Thursday, November 16, 2006

014 : தமிழுக்கு உரிமை உண்டு!!!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?

முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ நீ இப்படி இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!





பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்

12 comments:

G.Ragavan November 16, 2006 1:58 PM  

"தேனொழுகு செந்தமிழ்க் கனியைப் பிழிந்து தெளிந்திட எடுத்த ரசமே" என்று சீர்காழியார் குரலில் டி.ஆர்.பாப்பா அவர்களின் இசையில் ஒரு பாடல் உண்டு. அதைத்தான் நினைவு கூற வைக்கிறது இந்தப் பாடல். கே.பி.எஸ் அம்மையின் அருங்குரலும் கே.வி.எம்மின் நல்லிசையும் கவியரசரின் தீந்தமிழும் கூடிப் பிறந்த ஒரு சிறந்த பாடல். முருகன் அடியவர் அனைவரும் உருகிக் கேட்கும் சிறந்த பாடல். நினைவில் கொடுத்தமைக்கு நன்றி குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) November 16, 2006 2:51 PM  

//உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!//

இது; இங்க தான் நம்ம பாட்டியின் பாட்டிலே அழுத்தம்! தமிழுக்கு இல்லாத உரிமையா?

"என்னுடன் ஓடி வா நீ!" என்று
முருகனுக்கு ஆணையிடுவது ஆகட்டும், இல்லை
"உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள்" என்று அவன் மாமனுக்கும் ஆணையிடுவது ஆகட்டும், தமிழ் அல்லால் வேறு உஆருக்கு இந்த உரிமை!

எத்தனை முறை, எத்தனை வடிவில் கேட்டாலும் கண்டாலும் திகட்டுமோ இப்பாடல்; பிதாமகன் படத்தில் கிண்டலாக வரும் பகுதியைக் கூட நிறுத்தி நிறுத்தி ரசித்துள்ளேன்!

முருகனருள் வலைப்பூவில் முதல் ஒலி/ஒளிப் படம்; நன்றிகள் குமரன்!

கோவி.கண்ணன் [GK] November 16, 2006 8:29 PM  

குமரன்,
திரைப்பட பாடல் என்றாலும் அதைத் தாண்டிய தீம்தமிழ் தெய்வீகப் பாடல் !
தமிழே முருக கடவுள் என்கிற போது, கண்ணதாசன் உரிமை விளையாட்டு நன்றாகவே விளையாடி உணர்த்தியிருக்கிறார்.

ஞானவெட்டியான் November 16, 2006 11:32 PM  

அன்பு குமரன், கண்ணபிரான்,
//"என்னுடன் ஓடி வா நீ!" என்று
முருகனுக்கு ஆணையிடுவது ஆகட்டும், இல்லை "உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள்" என்று அவன் மாமனுக்கும் ஆணையிடுவது ஆகட்டும், தமிழ் அல்லால் வேறு யாருக்கு இந்த உரிமை!//

தமிழுடன் இணைந்த பக்தியால்தானே இவ்வுரிமை கிட்டியது!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) November 16, 2006 11:55 PM  

பக்தியோடு கலைகள் கலக்கும் சமயம் அந்தக் கலையின் வெளிப்பாடு எப்பொழுதும் அற்புதமாகத் தான் இருக்கிறது. அற்புதமான பாடல் வீடியோவுடன் கொடுத்ததற்கு நன்றி.

தமிழின் பெயரால்
"ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?" என்று தமிழ் கடவுளுக்கே அவ்வை கட்டளையிடுவது போல இருப்பது அற்புதம்.

Anonymous November 17, 2006 1:08 AM  

//ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!//
இந்த வரிகளை படித்தபோது, கே.பி.ஸின் குரல் எனது செவியில் தேனாகப் பாய்ந்தது என்று சொன்னால் அது மிகையில்லை

அனுசுயா November 17, 2006 3:53 AM  

இனிய பாடல் தந்துள்ளீர்கள். சென்ற வாரம்தான் தி‍ருவிளையாடல் DVD வாங்கினேன். விற்பனை செய்பவர் ஒருபடம்தான் உள்ளது என்று கொடுத்தார். ஆனால் முருகன் அருளினால் தெய்வம் திரைப்படமும் அதில் இணைந்தே வந்தது. கந்தனின் கருணை மிகப் பெரியது. :)

குமரன் (Kumaran) November 17, 2006 7:43 AM  

அன்புக் குமரனுக்கு!
என் புள்ளக்கர் சிக்கலில் உள்ளதால்;தங்களுக்கு நேரே பின்னூட்டமுடியவில்லை.
இப்பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்; கே.பி.எஸ் சின்குரலில் வந்த ஓர் முத்து.அழகுதமிழ் எழுத்து;அருள் இசை.....இப்படிப் பாடல்கள் இனி வரா!!!!!ம்ம்ம்ம்ம்
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) November 24, 2006 2:10 AM  

பாடலை கேட்டும் பார்த்தும் அனுபவித்தவர்களுக்கு மிக்க நன்றி.

Anonymous January 11, 2007 7:18 AM  

//ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் //
படித்தவுடன், எனக்கு நம்ம ஐஸ்வரியா ராய் நினைவு தான் வந்தது :-D

நல்ல பாட்டு :) நல்ல படத்துண்டு :)

VSK January 11, 2007 2:15 PM  

திகட்டாத தீந்தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என்று ஒரு வரிசை வருமானால், அதில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்!

அத்தனையும் சேர்ந்த அருமையான பாடல்!

ச்ரீதேவி, சரி, ரவி சொன்ன லைலா கூட சரி....ஐஸ்வர்யாராய்??????
:)(

Unknown July 27, 2019 9:08 PM  

இப் பாடலின் ராகம் என்ன?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP