"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -4
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'
'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு!
அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி
வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?
துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ,
பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை!
தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!
ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை!
எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை!
என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ!
வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!
ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'
என்றிவ்விதம் யோசித்து,
தேவராட்டி, வெறியாட்டாளன்
இருவரையும் வரவழைத்து,
நடந்த கதை சொல்லிவைத்து
குறி சொல்லக் கேட்டிருந்தேன்.
அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க,
பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!
'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்!
விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும்
அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'
அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க
அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல்,
செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!
'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள்,
தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து,
சீக்கிரமாய் என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'
'மனவேடன் கூற்று':
'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய்,
அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ
மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!
தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு
தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து,
தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!
காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக்,
காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி
காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!
காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில்
ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன்
கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன்
அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!
'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து,
ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக!
என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!
கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும்
நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து,
காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!
தாவியவள் பக்கலிலே தயவாக யானமர,
தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.
'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும்
கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது!
கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'
என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக்
கொடியெனவே அள்ளிக்கொண்டு,
யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!
களவு மணமா கந்தனுக்கு?
'நம்பிராஜன் கூற்று ':
சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை!
கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.
'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம்.
கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!
அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்!
அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!
'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து
என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!'
எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.
கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல்
தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்!
மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும்
சல்லாபம் செய்திட்ட காட்சியது!
'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை!
விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய,
என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!
'வனவள்ளி கூற்று':
ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன்,
என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க,
அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.
'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்!
என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.
'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி
என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய்
குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!
அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே,
உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே
அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!
மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து,
வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!
அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து,
'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும்
முறையல்ல' எனச் சொல்ல, 'என் மனையாட்டி பெருமையினை
உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,
'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல,
'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!'
என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!
'நம்பிராஜன் கூற்று':
உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில்,
மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!
மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே,
மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து,
'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!
மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க,
கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை
எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து
முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'
எனச் சொல்லி வேண்டிநின்றேன்!
அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்!
அனைவருமே மகிழ்ந்திருந்தார்!
எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி,
அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க,
இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!
வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய,
வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க,
சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க,
தென்றலது அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர,
தீ வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க,
ஐம்பூத சாட்சியாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின்
வலதுகையைப் பற்றிக் கொண்டான்!
'மனவேடன்':
அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர,
தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,
பலகாலம் தவமிருந்து,இருவேறு இடம் வளர்ந்து,கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,
இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!
ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை!
இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி
அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............
மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!
கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!
அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்
கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]
கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!
கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!
காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!
முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************
எங்கள் நண்பர் திரு. ராமச்சந்திரன் [சித்ரம்] தனது ஒரு கவிதையை இந்த சஷ்டி நன்நாளில் திருமுருகனுக்கு அர்ப்பணிக்க வேண்டி அனுப்பியதை இங்கு பதிகிறேன். "கரை கண்ட முருகன்!"கண்ணான முருகனைக் காணவாகரைகண்ட முருகனைத் தேடவா திகட்டாத நின் அருளை வேண்டவாதினை மா மருகனைப் பாடவாஆறு குன்று கண்ட ஆறுமுகாஅசுரர் குலம் களைத்த வேல்வீரா சங்கடங்கள் தீர்க்கவல்ல சரவணபவாசஷ்டியில் வந்தெனக்கு அருள்வாயா!!