கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
வலையுலகின் சண்மதச் செல்வரும் வைணவ வாரியாருமாகிய திரு கே.ஆர்.எஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆகையால் நாம் அனைவரும் கூடி அவரை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். முருகனருள் இனிதே அமைய வணங்குவோம்.
முன்பொருமுறை காவடிச் சிந்து எழுதி அதை அன்பர்களைப் பாடித்தரச் சொல்லிக் கேட்டிருந்த போது கே.ஆர்.எஸ் பாடியனுப்பியிருந்தார். அந்தப் பாடலை இப்பொழுது அவருடைய பிறந்தநாள் அன்று முருகனருள் வலைப்பூவில் ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ்.
பாடலும் வரிகளும் கீழே.
வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்
புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்
பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்
அன்புடன்,
ஜிரா(எ) கோ.இராகவன்