Wednesday, January 13, 2021

வங்கக் கடல்மேவு | முருகன் திருப்பாவை - 30

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனை...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-30

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


30/30 | வாழைப்பந்தல் மாதவிச்சொல்! 

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனைப்
பொங்கல் திருநாளில், பொங்குதமிழ்ப் புத்தாண்டில்
நங்கள் திருப்பாவை நோன்புகள் தாம்கழிந்து,
நுங்கு இதழ்ப்பெண்கள், நுண்ணிய அன்பாலே

அங்கப் பறைகொண்ட ஆற்றுப் படைதன்னைத்
தெங்கு வயல்வாழைப் பந்தலின் மாதவிசொல்
சங்கத் தமிழ்வாழ்த்தி இங்கு-இப் பரிசுரைப்பார்
எங்கும் முருகருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!   (30)


இத்துடன், முருகன் திருப்பாவை (நிறைவு) !
முப்பது நாளும் முருகன் திருப்பாவை வாசித்தமைக்கு நன்றி.


மகிழ் திகழ் பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ப் புத்தாண்டு - புத்தொளி வாழ்த்துக்கள்!



Tuesday, January 12, 2021

சிற்றஞ் சிறுகாலே | முருகன் திருப்பாவை - 29

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்து...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-29

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


29/30 | முருகா, எனக்கு நீயேநீ!

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்துக்
கற்றாபோல் நாங்கள் கசிந்துருகி நிற்கின்றோம்!
பெற்றாய், பெரியாய், பெருவாழ்வே, பெம்மானே,
மற்றேதும் வேண்டாம் முருகாநீ போதும்வா!
(மற்றே-எம் கொங்கை உனக்கே திருமுருகா)

இற்றைப் பறைமேலே கோவிந்தக் கந்தா-உன்
உற்ற உறவுக்குள் மூச்சாகிப் பேச்சாகி,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயேநீ!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!   (29)


முருகன் திருப்பாவை தொடரும்..

Monday, January 11, 2021

கறவைகள் பின்செல்லும் | முருகன் திருப்பாவை - 28

கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-28

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


28/30 | ஆதிகுடி மக்கள், இயற்கை வாழ்வு


கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்,
பறவைகள் பின்செல்லும் பார்குறிஞ்சி மக்கள்,
உறவுகள் கொண்டு உயர்ந்தோங்கி வாழ்வார்!
அறிவு-இயற்கை ஆதிகுடிச் செந்தமிழின் செல்வம்!

பிறவிக்கு வித்தாகும் பேர்-ஆசை நீக்கி,
அறத்துக்கு மாயோனும் சேயோனும் ஆகி,
குறையொன்று மில்லாத கோவிந்தக் கந்தா,
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!   (28)


முருகன் திருப்பாவை தொடரும்..

Sunday, January 10, 2021

கூடாரை வெல்லும்சீர் | முருகன் திருப்பாவை - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-27

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



27/30 | பாவை நோன்பு நிறைவு - கருப்பட்டிப் பொங்கல்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா,
கூடாரைக் கூட்டும்நம் காதல் திருமுருகா!
பாடிப் பறைகொண்டோம் பாருக்கு நன்னலங்கள்,
மூடிப் புதைத்திட்டோம் ஆன்மீகத் தன்னலங்கள்!

தேடி,வனப் புத்தட்டும், தெள்ளிய ராக்கொடியும்,
நாடி நலம்புனைந்து, நல்லாடை தானுடுத்தி,
பாடியே, பொங்கல் கருப்பட்டி தான்கலந்து,
கூடியே உண்போம்; குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!   (27)


முருகன் திருப்பாவை தொடரும்..

Saturday, January 09, 2021

மாலே மணிவண்ணா | முருகன் திருப்பாவை - 26

மாலே மணிவண்ணா மால்மருக வேல்முருகா!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-26

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


26/30 | பாவை நோன்பின் 6 பொருட்கள்!

மாலே மணிவண்ணா மால்மருக வேல்முருகா!
பாலேய் தமிழ்கொண்டு பாவைநல் நோன்புக்கு,
ஏலே எவைஎவை? செப்புவோம் கேட்டிதியோ!
கோலமும், தீபம், கொடிமயில், வெண்கடம்பும்,

வேலும், விழைநெஞ்சும்.. இவ்வாறும் அவ்வாறாம்!
சாலவும் நீபரிந்து சாற்றுக-எம் கோட்பறையை!
மேலோர்கள் நூல்தமிழை மேதினியில் நீடூழி
ஆல்போல் தழைத்து அருளேலோ ரெம்பாவாய்!   (26)


முருகன் திருப்பாவை தொடரும்..

Friday, January 08, 2021

ஒருத்தி முருகனாய் | முருகன் திருப்பாவை - 25

ஒருத்தி முருகனாய் ஓரிரவில் தொட்டு...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-25

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


25/30 | வள்ளி போற்றி!

ஒருத்தி முருகனாய் ஓரிரவில் தொட்டு
ஒருத்தி முருகனாய் வள்ளிக்கு ஆனாய்!
இருத்தி மனத்துள் உனக்கென்றே வாழ்ந்தாள்
இருத்தி அவளேநின் முத்தியும் ஈவாள்!

கருத்தில் புணர்ச்சிசெய்ய கந்தா வருக!
உருத்தி உடல்தந்து உன்னுயிரில் என்னைப்
பொருத்தும் பொருள்தந்து பொங்கல் தமிழாய்
வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (25)


முருகன் திருப்பாவை தொடரும்..

Thursday, January 07, 2021

அன்று-இவ் உலகம் | முருகன் திருப்பாவை - 24

அன்று-இவ் உலகம் அளந்த குறள்போற்றி!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-24

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


24/30 | தமிழ்ப் போற்றி!

அன்று-இவ் உலகம் அளந்த குறள்போற்றி!
நன்றுசெய் காதலாம் எட்டுத் தொகைபோற்றி!
பன்னு தமிழ்பத்துப் பாட்டு மறம்போற்றி!
மன்னுசொல் கீழ்க்கணக்கு நாலின் அறம்போற்றி!

கன்றுசிறும் ஐந்துபெருங் காப்பியங்கள் சீர்போற்றி!
இன்றுமுள நம்மொழிக்குத் தொல்காப் பியம்போற்றி!
என்றென்றும் புத்தம் புதுமொழியாய் ஓங்கிடவே
தொன்றுதிரு மால்முருகா வெல்லேலோ ரெம்பாவாய்!   (24)


முருகன் திருப்பாவை தொடரும்..

Wednesday, January 06, 2021

மாரி மலைமுழைஞ்சில் | முருகன் திருப்பாவை - 23

மாரி மலைமுழைஞ்சில் சிங்கம் உறங்குவதால்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-23

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



23/30 | தமிழ்நிலம் தூக்கம் கலைக்கச் ‘சீறிய’ சிங்கமாய் எழுவாய்!

மாரி மலைமுழைஞ்சில் சிங்கம் உறங்குவதால்,
பூரித்த குள்ளநரி நீள்-பிடரி ஒட்டிவரும்;
ஆரியம்போல் பார்-வழக்கு செத்துவிடாச் செந்தமிழின்
வீரியத்தில் ஒட்டி உறிஞ்சுதுகாண் பண்பாட்டை!

சீரிய சிங்கம்போல் சீறியெழு வேல்முருகா!
வேரி மயிர்பொங்க மாநிலத்தின் தூக்கத்தை,
மூரிக் கலைத்து, அறிவுற்றுத் தீவிழித்துக்
காரியங்கள் ஆற்ற எழு-ஏல்-ஓர் எம்பாவாய்!   (23)


முருகன் திருப்பாவை தொடரும்..

Tuesday, January 05, 2021

அங்கண்மா ஞாலத்தில் | முருகன் திருப்பாவை - 22

அங்கண்மா ஞாலத்தில், நம்குறிஞ்சி ஊர்த்தலைவர்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-22

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


22/30 | குறிஞ்சியின் ஊர்த் தலைவர்கள், 
தலைவர்க்குத் தலைவனாம், முருகனைக் காணல்


அங்கண்மா ஞாலத்தில், நம்குறிஞ்சி ஊர்த்தலைவர்,
பங்கு குற-வெற்பன், வேல்-சிலம்பன், மா-பொருப்பன்,
கொங்குக் கொடிச்சி, தமிழ்ப்பறையன் தொல்குடிகள்,
இங்கு திரண்டுள்ளார் பாராய் திருமுருகா!

செங்கண் சிறுமாணிக்க மாதுளையின் முத்துக்கள்
தங்கும் விழியாலே எங்கள்மேல் வி்ழியாவோ!
கங்குல் கலைந்து, கவின்பெற்று யாம்வாழ,
எங்கள்மேல் கந்தா இழிந்தேலோ ரெம்பாவாய்!   (22)


முருகன் திருப்பாவை தொடரும்..

Monday, January 04, 2021

ஏற்ற கலத்துக்கும் | முருகன் திருப்பாவை - 21

ஏற்ற கலத்துக்கும், ஏலாத எக்கலத்தும்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-21

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



21/30 | மதியார்க்கும் மதிப்பவர்க்கும் ஆற்றுப்படை செய்வாய்!

ஏற்ற கலத்துக்கும், ஏலாத எக்கலத்தும்,
தேற்ற மருந்தாகும்; தீம்பால் விருந்தாகும்
ஆற்ற அருந்தமிழ்ச் செல்வனே நீயெழாய்!
பேற்றைத் தவங்கள் அலங்கார நின்னிசை

ஏற்கும் குறிஞ்சிக்கு ஏந்தலே நீயெழாய்!
மாற்றாரை மாற்றும் முருகவேள் நின்னிடம்,
ஆற்றாது வந்தோம், தருகவே ஆறுதல்!
போற்றியெம் முத்தம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!  (21)


முருகன் திருப்பாவை தொடரும்..

Sunday, January 03, 2021

முப்பத்தும் பத்தும் | முருகன் திருப்பாவை - 20

முப்பத்தும் பத்தும் உடன்சேர்த்து ஒன்பதின்மர்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-20

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


20/30 | தமிழ் காக்கத் துயிலெழாய்!

முப்பத்தும் பத்தும் உடன்சேர்த்து ஒன்பதின்மர்,
தப்பாது ஏத்தும் முருகா துயிலெழாய்!
செப்பம் உடைய திருச்செந்தில் செவ்வேளே,
ஒப்பம் தமிழுக்குக் கந்தா துயிலெழாய்!

தெப்பம்போல் தொல்குடிக் காத்திடும் வள்ளிநீ,
நப்பின்னை வீட்டின் நலமே துயிலெழாய்!
அப்பமும் பிட்டும் அளிப்போம் குளிக்கவா,
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோ ரெம்பாவாய்!  (20)


முருகன் திருப்பாவை தொடரும்..

Saturday, January 02, 2021

குத்து விளக்கெரிய | முருகன் திருப்பாவை - 19

குத்து விளக்கெரிய, குங்கிலியம் உள்கமழ...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-19

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



19/30 | வள்ளீ, வழிகாட்டு!

குத்து விளக்கெரிய, குங்கிலியம் உள்கமழ,
முத்துச்சால் தொங்கணிகள், மேற்கூரை விண்மீன்கள்,
மெத்தெழினிக் கட்டிலிலே கண்வளரும் மென்வள்ளி
கொத்துத் தலையணையோ கந்தனுக்கு உன்கொங்கை?

எத்தனவன் சந்தமணம் உண்டு உறங்குதியோ?
முத்தைத் தருபத்தி வள்ளீ வழிகாட்டு!
சித்தமிக உன்பாலே வைத்து வருகின்றோம்!
தத்துவமோ அம்ம? தகவேலோ ரெம்பாவாய்!   (19)


முருகன் திருப்பாவை தொடரும்..

Friday, January 01, 2021

உந்து மயிலெழிலன் | முருகன் திருப்பாவை - 18

உந்து மயிலெழிலன், உள்ளத்தில் பண்பொழிலன்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-18

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



18/30 | மாதவிப் பந்தல் - வள்ளி வளைக்கரத்தால், இன்பவீடு திறத்தல்!

உந்து மயிலெழிலன், உள்ளத்தில் பண்பொழிலன்
கந்தவேள் கைப்பிடிச்ச வள்ளி மணவாட்டி!
செந்தமிழ் வாய்பொழிலி, சேலாடும் கண்ணெழிலி,
வந்து கடைதிறவாய்! வாஞ்சைமிகு மாதவிப்

பந்தல்மேல் பைங்கிளிகள், குக்கூ குயிலினங்கள்
முந்துமுந் தென்று முருகவேள் பேர்பாட,
அந்தமிழ் மாதவிப்பூ அம்முருகன் தோள்படர,
வந்து திறவாய்! மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (18)


முருகன் திருப்பாவை தொடரும்..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP