வேலனைப் பாடுவதே வேலை!
நீல
மயில் மீதில் ஏறி நித்தம் நித்தம் ஆடி வரும்
கோல
எழில் கொண்டவனே வேல் முருகா!
உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதென் வேலை முருகா!
பாலனாக
வந்து பர சிவனுக்கே பாடஞ் சொன்ன
பார்வதியின்
புத்திரனே வேல் முருகா!
உந்தன் புகழைத் தினம் பாடுவதென் வேலை முருகா!
வீறு
கொண்டு சூரன் தன்னை வேலைக் கொண்டு வீழ்த்தி விட்ட
வெற்றி
வடி வேலவனே வேல் முருகா!
உன்னைப் போற்றித் தினம் பாடுவதென் வேலை முருகா!
தேவர்
தம்மைக் காத்த பின்னே தேவ யானைத் தேவியைத் தன்
தாரமாகக்
கொண்டவனே வேல் முருகா!
உந்தன் தாள் பணிந்து பாடுவதென் வேலை முருகா!
காட்டுக்குள்ளே
வேடுவனாய் காதல் கொண்ட கிழவனாய்
வேடமிட்டு
வந்தவனே வேல் முருகா!
உந்தன் லீலைகளைப் பாடுவதென் வேலை முருகா!
ஆறு
படை வீடு கொண்டு அன்பு மிக்க பக்தருக்கு
ஆறுதலைத்
தருபவனே வேல் முருகா!
உன்னை அன்பு மீறப் பாடுவதென் வேலை முருகா!
--கவிநயா