கந்த சஷ்டி 2: சிந்தனை செய் மனமே! திருத்தணிகை!
அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!
இது அம்பிகாபதியின் 100-வது பாட்டு; ஆனால் மற்றவர்க்கு இது 99-வது பாட்டு!
ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!
செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!
படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: பாபனாசம் சிவன் ? / KD சந்தானம் ?
ராகம்: கல்யாணி
பாடலை இங்கு கேளுங்கள்!
சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!
செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...
அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று பாடுகிறான் அம்பிகாபதி். ஆனால் அவன் காதலுக்கும் உயிருக்கும் உலை வைக்க, அதோ அந்தகன் வரப் போகிறான் என்று அறியாது பாடுகிறான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு! ஆரம்பத்தில் மெல்லிதாகத் தொடங்கும் பாடல், இறுதியில் உச்சத்துக்குச் செல்லும் போது, அவரும் நரம்பு புடைக்கப் பாடுவது போல், அப்படியே வாயசைப்பார்.
காதலியான அமராவதி, பாடல் முடிந்ததும் எழுந்து ஓடோடி வர,
பக்திப் பாடல் ஒரே நிமிடத்தில் காதலாகி விடும்! :)
சரவண பவ குகனை, சிந்தனை செய் மனமே என்பது மாறி, சற்றே சரிந்த குழலே அசைய-ன்னு பப்ளிக்கா அமராவதி வர்ணனை ஆகிவிடும்.
பொறுக்குமா ஆசார சீலர், கவிப் பேரேறு, ஒட்டக் கூத்தருக்கு? ஏற்கனவே கம்பன் என்றாலே அவருக்கு ஆகவே ஆகாது! போதாதா?
கம்பன்-ஒட்டக் கூத்தர் பிணக்கு பற்றி தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? உம்.... படிக்க வேண்டும்!
இருவர் சமயமும் வேறு! கொள்கைகளும் வேறு! ஆனால் தமிழால் ஒன்றுபட முடியாதா? சமயம் வேறானால் நட்பும் வேறாமோ? கொள்கை மாறானால் நட்பும் மாறாமோ?
இத்தனைக்கும் ஒட்டக் கூத்தர் சாதாரணமானவர் அல்ல! பெரும் புலவர்!
வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண் பாவிற்கு கம்பன் என்றால், உலாவுக்கு ஒரு கூத்தன்! தேவியின் அருள் பெற்றவர். சைவச் செம்மல். குலோத்துங்கனின் அந்தரங்க மதிப்புக்கு ஆளானவர்! ஆனால் பொது மக்கள் மதிப்பில் குறைந்தது ஏன் என்று தான் தெரியவில்லை!
கம்பனைத் தாண்டி, அவர் மகன் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான காதல் மீதும், வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன அப்படியொரு பகையுணர்ச்சி?
ஹூம்...தமிழ் வளரவாவது, தமிழன் தமிழனோடு ஒற்றுமை கொள்ளும் நாள் எந்நாளோ? தமிழ்க் கடவுளே! முருகா!
சரி, நாம் முருகனுக்கு வருவோம்! சிந்தனை செய் மனமே அருமையான கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது! ஜனனீ ஜனனீ-யும் அதே ராகம் தான்! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே-வும் கல்யாணி தான்!
பாட்டிலிருந்து சில கேள்விகள், வாசகர்களுக்கு!
1. முருகனை தேசிகன் என்று ஏன் அழைக்க வேண்டும்?
2. சந்ததம் மூவாசை என்றால் என்ன?
3. இராமாயணத்தில் குகன் இருக்கான். முருகனைக் குகன் என்பதன் பொருள் என்ன?
இன்றைய படைவீட்டுத் தகவல்கள் - திருத்தணிகை!
* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!
அந்தக் குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!
ஆனால் உபன்னியாசகர்களும், மற்ற புலவர் பெருமக்களும், சினம் தணிந்த கதையின் காரணமாகத், தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர். நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்! குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்! ஆனா நாம் தான் வாய்மையை விட்டுவிட்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்வோமே! எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)
திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)
குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!
ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(
அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!
களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
வாரியார் சுவாமிகள் பின்னாளில் தன் பேருரைகளில் எல்லாம் இதைத் தொட்டுச் செல்வார். இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!
வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!
இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று சொல்வது தணிகை ஸ்தல புராணம்!
* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்! உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!
* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!
அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! தியாகராஜர் கீர்த்தனைகளில் எளிமையும் உணர்ச்சியும் இருக்கும் என்றால், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளில் சொற்செட்டும், சந்தமும் மின்னும்!
சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!
* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!
* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது! மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்!
ஆனால் முடியவில்லை! ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!
* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!
* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)
திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்! (மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)
புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே! - முருகா!
* பதிவர் தி.ரா.ச அவர்கள் திருத்தணி முருகன் மீது அன்பு கொண்டவர்!
இன்று (Oct-31,2008) அவர் மகளுக்குச் சென்னையில் திருமண விழா!
மணமக்களை, நீங்காத செல்வம் நிறைந்தேலோ என்று வாழ்த்தி,
திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவோம்!