008 : முருகன்மேற் காதல்
"முருகன்மேற் காதல்" என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் இயற்றிய பாடல். ஒலி வடிவம் எனக்கு கிடைக்கவில்லை.
முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)
கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)
வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)
குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)
குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)
ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)
பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)
கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)
முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)
வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)
நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம்
7 comments:
நாமக்கல் கவிஞர் எழுதிய அருந்தமிழ்ப் பா ஒன்று. அதுவும் தமிழ்க் கடவுள் முருகனைப் புகழ்ந்து பாடியது. மிகவும் அரிதான பாடலை அரித்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் நாமக்கல் சிபி. ஊர்ப்பாசமா?
எதுவாயின் என்ன? நினைத்து நினைத்து சுவைக்க ஒரு பா.
இன்னொன்று...இந்தப் பாடலுக்கு இசை வடிவம் இருக்குமென்று நினைக்கவில்லை. வலைப்பூவில் இசையறிவு வாய்த்தோர் யாராயினும் இசையமைத்துப் பாடிக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
மிக அருமையான பாடல்கள்.
நன்றி
யோகன் பாரிஸ்
நல்ல பாடல். சிபியாரே!
காவடிச் சிந்தில் பாட முயற்சிக்கலாம்.
கொஞ்சம் அங்கே இங்கே தட்டுகிறது.
சரி செய்து பாடலாம்..... யாராவது!
இந்த பாட்டை கேட்டொரிக்கீங்களா ?
சின்ன சின்ன பாலன் சிவபாலன்
வண்ணமயில் ஏறும் வடிவேலன்
தன்னந்தனிமையில் மரத்தினிலே
அவ்வைக் கிழவி வந்தழைக்கயிலே
சுட்ட பழம் வேண்டுமா
சுடாப் பழம் வேண்டுமா
என்று கேட்டு அவ்வைக்கு அருள் புரிந்தான்
- சின்ன சின்ன பாலன் சிவபாலன்
:(( மிச்ச்மெல்லாம் மறந்து பொச்சு... வெள்ளிக் கிழமைகளில் பத்தாப்பு முடிக்கற வரைக்கு அப்பா கூட பாடின பாட்டு
ஞாபகம் வந்தா எழுதி போடுதேன்..
//குகனெனச் சொல்வதற் குள்ளே--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளே//
ரொம்பவே அனுபவிச்சு எழுதி இருக்கார் நம்ம நாமக்கல்லார்! (உங்கள சொல்லல சிபி, நான் இராமலிங்கம் பிள்ளையைச் சொன்னேன் :-))
அதை ரொம்பவே அனுபவிச்சு பதிவு இட்டார் நம்ம நாமக்கல்லார்!
(இது உங்களத் தான் சொன்னேன் சிபி :-))
அப்பறம் நேயர் விருப்பம் ஒன்று!
SKவின் "சந்ததம்" திருப்புகழ் பாடல் பதிவைப் பார்த்தவுடன்,
"சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை" -
"சிந்தனை செய் மனமே" பாடலும் நினைவுக்கு வந்தது!
ஆக "சிந்தனை செய் மனமே" நேயர் விருப்பம் ப்ளீஸ்!!!
சந்த நயம் மிக்கப் பாடல். தமிழ்க்கடவுளர்களில் முன்னவனான முருகனின் மேல் காதல் கொண்டவளின் கருத்துகள். ம்ம்ம். பாடலை அலுவலகத்திலேயே பார்த்தேன். ஆனால் வீட்டிற்குப் போன பின் ஒரு முறை வாய்விட்டுப் பாடினேன். எஸ்.கே. சொன்ன மாதிரி காவடிச்சிந்தில் பாடத் தான் முயன்றேன்.
Post a Comment