Showing posts with label கந்தர் சஷ்டி கவசம். Show all posts
Showing posts with label கந்தர் சஷ்டி கவசம். Show all posts

Sunday, February 03, 2013

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 14 - நிறைவு




நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!
இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

"சஷ்டி கவசத்தின் இறுதிப் பகுதி இது. இறைவன் திருவடிகளே சரணம் என்று போற்றி இந்தத் துதிப்பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.

நல்லவர்களான அடியவர்களின் நினைவில் நின்று என்றும் நடனம் செய்யும் திருவடிகள் எல்லா பகையையும் அழிக்கும் முருகப்பெருமானின் திருவடிகள். அவற்றை அறிந்து எனது உள்ளத்திலும் இருத்தினேன்.

அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக சூரபத்மனைத் துணித்தத் திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளில் கார்த்திகைக்கு உரிய தேவதைகளிடம் அமுது உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று எல்லா நட்சத்திரங்களுக்கும் பெருமை தந்த குருபரனான பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தையின் சிவந்த திருவடிகள் போற்றி!

நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!

தீய வழிகளில் நான் செல்லாமல் என்னைத் தடுத்து உனது அடியவனாக என்னை ஆட்கொள்வதற்காக நீயாகவே உன் கருணையினால் எனது உள்ளத்தில் நிறைந்த அழகிய வடிவு உடைய வேலவனே போற்றி!

தேவர்களின் சேனைத்தலைவனே போற்றி!

குறவர்களின் திருமகளான வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் தலைவனே போற்றி!

வலிமையுடைய தெய்வீகமான திருவுடலை உடையவனே போற்றி!

எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!

இடும்பைகள் என்னும் துன்பங்களை ஆயுதமாக உடையவனே! இடும்பைகளை நீக்குபவனே! போற்றி!

கடம்ப மாலை அணிந்தவனே போற்றி! கந்தனே போற்றி!

வெட்சி மாலை அணியும் தலைவனே போற்றி!

இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!

மிக உயர்ந்த கந்தகிரியில் இருக்கும் பொற்சபைக்கு ஒப்பில்லாத அரசனே! மயிலில் ஏறி நடனம் இடுபவனே! உனது மலர் போன்ற திருவடிகள் சரணம்! ஆறெழுத்து மந்திரத்திற்குத் தலைவனே சரணம் சரணம்! ஆறுமுகத்தரசே சரணம் சரணம்!

உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

இத்துடன் கந்தர் சஷ்டி கவசத்திற்கு பொருள் சொல்லி நிறைவுற்றது நண்பா. முழு நூலுக்கும் பொருள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக என்னுடன் இருந்ததற்கு நன்றி நண்பா. முருகனின் அடியவர்களான நம் இருவர் இடையிலும் எந்தக் காலத்திலும் எந்த பிரிவும் வராமல் முருகன் திருவருள் புரியட்டும். அப்படியே ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தாலும் அவை தானே விலகி ஓட திருமுருகன் திருக்கைவேல் அருளட்டும். வெற்றி வேல்! வீர வேல்!"

***

கந்தர் சஷ்டி கவசம் நூலுக்குப் பொருள் சொல்லப் பணித்த கவிநயா அக்காஇராகவன், இரவிசங்கர் முதலிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பணிச்சுமையாலும் வேறு வேலைகளாலும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

அண்மையில் காலம் சென்ற எனது தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் நினைவுக்கு இந்த சிறு பணி சமர்ப்பணம்

Sunday, January 20, 2013

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 13



கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

"கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இங்கே அடிகளார் சொல்கிறார்.

சஷ்டி திதிக்குரிய கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட விரும்பிய சிறுவனாகிய தேவராயன் என்னும் நான் பாடிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு, கந்தர் சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள், ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிய

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள். அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள்!

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!

எதிரிகள் எல்லோரும் வந்து வணங்குவார்கள். நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மைகள் அளித்திடுவார்கள். புதிதாக வந்த மன்மதன் என்னும்படி அழகு பெறுவார்கள். எந்த நாளும் ஈரெட்டு பதினாறு வயதுடன் இளமையுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!

கந்தனின் கையில் இருக்கும் வேலைப் போல் அடியவர்களைக் காக்கும் இந்த கந்தர் சஷ்டி கவசத்தின் ஒரு அடியை பொருளுணர்ந்து படித்தால் உண்மைப் பொருள் விளங்கும். இந்த நூலையும் நூலை ஓதியவர்களையும் கண்டால் பேய்கள் பயந்து ஓடும். இந்த நூல் பொல்லாதவர்களைப் பொடிப்பொடியாக்கும்.

கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா

(தொடர்ந்து பேசுவார்கள்)

Friday, December 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 12




"காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்! ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!
அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

கந்தனின் திருநாமங்களைப் பாடிய அடிகளார் அந்தத் திருப்பெயர்களைப் பாடியதோடு மட்டும் இல்லாமல் அன்பின் மிகுதியால் ஆடியதையும் சொல்கிறார்.

கருமையான தலைமுடியை உடைய கலைமகள் என் நாவில் நன்றாய் வீற்றிருப்பதால் நான் உன்னைத் தொடர்ந்து பாட முடிகின்றது!

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!

என்னை எப்பொழுதும் விடாமல் அருகிலேயே இருக்கும் என் தந்தையான முருகப்பெருமானை நான் பாடினேன்! அந்தப் பரவசத்தில் ஆடினேன் ஆடினேன் ஆடினேன்!

எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்!

திருவாவினன்குடியில் வாழும் குழந்தை வேலாயுதச் சுவாமியான உனது விபூதியை அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள, பாசவினைகளின் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும்!

ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!

வேலாயுதனே! அன்னமும் சொர்ணமும் போன்ற பலவித செல்வங்களும் நீ அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாய்!

அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!"

“மயில் வாகனத்தை உடையவனே வாழ்க வாழ்க! வடிவேலை ஏந்தியவனே வாழ்க வாழ்க! மலையில் வாழும் குருவே வாழ்க வாழ்க! மலைக்குறவர் திருமகளான வள்ளியுடன் நீடூழி வாழ்க வாழ்க! சேவற் கொடி வாழ்க வாழ்க! என் வறுமைகள் எல்லாம் நீங்க நீ வாழ்க வாழ்க!

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!

எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப் பெற்றவளான வள்ளியம்மையும், என்னைப் பெற்றவனும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! அது உங்கள் கடமையும் ஆகும்! பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம் வைத்து, மைந்தன் இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று உன் அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP