சென்னையில் மேகலா தியேட்டரில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.
ஆனால் எந்தப் படமானாலும் சரி, அன்றைய விளம்பரம், காட்சி இவை எல்லாம் தொடங்கும் முன்னர், ஒரு பாடல் ஒலிக்க விடுவார்கள்! அது ஒலித்துக் கொண்டே தான் திரைச்சீலையும் மேல் எழும்பும்!
அது "உள்ளம் உருகுதய்யா"!
சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் மேல் மாடி. அப்போ, வாடகை வீட்டில் குடியிருந்த காலம். உறவினர்கள் வந்து விட்டால், வீட்டுக்குள் நடக்க முடியாது! நிற்கத் தான் வேண்டும்!
ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு அந்தத் தானா தெருவில்! :-) வேண்டுமென்றால் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்!
மழை பெய்தால் சில்லென்று வீட்டுக்குள் சாரல் அடிக்கும்! ஆனால் மழை தான் அப்போது பெய்யவில்லையே! தண்ணீர் கஷ்டம் சென்னையின் சொத்தாயிற்றே அப்போது!
வாளியிலும் குடத்திலும் தண்ணீர் பிடிப்பது பெரும் பிரச்சனை என்றால், அதை விடக் கஷ்டம், குடத்தை மாடியில் ஏற்றுவது! படிக்கட்டில் ஏற்ற ஏற்ற பெண்டு கழண்டி விடும்!
அப்போது கஷ்டம் தெரியாமல் கைகொடுத்த பாடல் என்றால் அது இது தான்! தோளில் குடத்தை வைத்துப் படியேறும் போது, "வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா" ன்னு ஒலிக்கும் பாருங்க...கிடுகிடு என்று படியேறி விடுவேன்! :-)
அப்போது தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிலோனில் இருந்து Sharp டேப் ரிக்கார்டர் வாங்கி வந்து கொடுத்த காலகட்டம்! குடும்பத் தெய்வமான முருகப் பெருமான் பாடல்கள் தான் பெரும்பாலும் டேப்பில் பதிவு செய்வார்கள், அம்மாவும் அப்பாவும்!
TDK-90, TDK-60 என்று விதம் விதமான டேப்புகள்!
நான் கேட்கும் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி படப் பாடல்களைப் பதியாமல், எப்ப பார்த்தாலும் முருகன் பாட்டையே பதிஞ்சா, எனக்குக் கோபம் வராதா என்ன? :-)
அதுவும் ஒவ்வொரு டேப்பிலும், "உள்ளம் உருகுதைய்யா" என்று தான் தொடங்கும்! இப்படி ஒரே பாட்டை எல்லா டேப்பிலும் பதியறீங்களே-ன்னு சண்டை போட்ட காலம் எல்லாம் உண்டு!
ஒரு முறை ஸ்ரீதேவி பாடும் "வடிவேலன் மனசை வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி" என்கிற பாட்டு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது! அதை நானும் காசெட்டில் ரெக்கார்ட் செய்து விட்டேன்! அப்புறம் தான் தெரியும், நான் அப்படிப் பதிஞ்சது "உள்ளம் உருகுதைய்யாவின்" மேலேயே என்று!
விஷயம் தெரிஞ்சி, வீட்டில் அப்பா என் மேல் பதியோ பதி என்று பதிய, ஒரே கலாட்டா! அப்பறம் பாட்டி வந்து "வடிவேலன் மனச வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா!
அதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க-ன்னு பாட்டின் விவரம் தெரியாமல் என்னைச் சப்போர்ட் செய்ய,
வீடே கொல்லென்று....சிரிக்க...
வீடுகள் வெறும் செங்கற்களால் கட்டப்படுகின்றன!
இல்லமோ இனிய இதயங்களால் கட்டப்படுகின்றன!!
இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், முருகப் பெருமானோடு சேர்ந்து, பழைய நினைவுகளும் இனிக்கும்!
டி.எம்.எஸ் மிகவும் உருகிப் பாடிய பாட்டுகளில் இது மிகவும் பிரபலமான பாடல். ஆரம்ப இசையே அமர்க்களமாய்த் தொடங்கும்! மெலிதான இசை மட்டுமே பின்புலத்தில்! வயலின்-வீணை இவற்றோடு தாளக் கட்டை! ஒவ்வொரு பீட்டிலும், தாளம் தட்ட தட்ட, நம் மனத்தையே தட்டுவது போல இருக்கும்!
எழுதியவர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. சிலர் தண்டபாணி தேசிகர் என்றும் சொல்கிறார்கள்! சிலர் வாலி என்றும் சொல்கிறார்கள்! அறிந்தவர் சொல்லுங்கள்!
(பிற்சேர்க்கை:
ஆண்டவன் பிச்சை (எ) முருகப் பெண் துறவியே இப்பாடலை எழுதியது!)
பாடலைக் கேட்டு உருக, இங்கே சொடுக்கவும்
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா....
(உள்ளம் உருகுதய்யா)
பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)
பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)
ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)
ஈழத்தில், நல்லைக் கந்தசுவாமி ஆலயத்தில் நடக்கும் திருமஞ்சத் திருவிழா! மஞ்சள் ஜொலி ஜொலிப்பில் ஜொலிக்கும் முருகப் பெருமானின் திருவுருவப் படங்கள் என்று நண்பர் கானா பிரபா, தமது பதிவில் ஒவ்வொரு நாளும் விழாவாக இடுகிறார். இதுவரை காணவில்லை என்றால், ஓடிப் போய் கந்தனைக் காணுங்க!
இதோ...