037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை
ஒரு பாடல் இசையமைக்கப்பட வேண்டும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட படக்காட்சிக்கு. படக்காட்சியின் நீளம் கிட்டத்த பத்தரை நிமிடங்கள். அந்தப் படக்காட்சியும் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுத்தது. ஆகவே காட்சிகள் ஒழுங்குக்குள் வராமல் இருக்கும். தேங்காய் உடைப்பார்கள். சூடம் காட்டுவார்கள். காவடி தூக்குவார்கள். அலகு குத்துவார்கள். நடுநடுவே கதாநாயகனும் நாயகியும் கூட்டத்தில் தென்படுவார்கள். இப்படி ஒரு படச்சுருளை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்தார் இயக்குனர் சங்கர். சொன்ன வேலையைச் செய்வார் என்ற நம்பிக்கை.
மெல்லிசை மன்னரும் மலைக்கவில்லை. கவியரசர் கண்ணதாசனின் தமிழ் உதவிக்கு இருக்கையில் என்ன கவலை? பாடல் பிறந்தது. மெட்டும் போட்டாகி விட்டது. ஆனால் யார் பாடுவது? பத்தரை நிமிடங்களுக்கு? சரி. ஒருவர் பாடினால் அலுத்து விட்டால்? அறுமுகனைப் போற்றி ஆறுபேர் பாடினால்? ஆம். மெல்லிசை மன்னர், டீ.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரம்ணியம்மாள், இசையரசி பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி ஆகிய அறுவரும் பாடிப் பதிவானது பாடல். படச்சுருளுக்கு மிகப் பொருத்தமாக.
வருவான் வடிவேலன் என்ற திரைப்படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் திரைப்படம் பெருவெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இயல்பிலேயே மெல்லிசை மன்னர் முருகபக்தராம். இந்தப் பாடலில் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
சீர்காழி கோவிந்தராஜன்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்
டி.எம்.சௌந்தரராஜன்
சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி
தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே
அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
எல்.ஆர்.ஈசுவரி
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
அரோகரா அரோகரா
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி
சீர்காழி: முருகா முருகா முருகா முருகா
எல்.ஆர்.ஈசுவரி
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி
டி.எம்.சௌந்தராஜன்
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி
டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்து
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
பி.சுசீலா
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா
வானத்தில் உன்னொளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
டி.எம்.சௌந்தரராஜன்
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பி.சுசீலா
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணையைப் பொழிவதும் முருகனடி
சீர்காழி கோவிந்தராஜன்
தண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
மெல்லிசை மன்னர்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
ஆனந்த தரிசனம் காணுகிறோம்
அவன் அழகிய தேரினை வணங்குகிறோம்
ஞாலத்து தேசிகன் மார்பினிலே
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
அனைவரும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
பெங்களூர் ரமணியம்மாள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில்
வாடிய பயிரை தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
இடம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல்
வரம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
அனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலா
பெங்களூர்: தெய்வானைக் காவலா
அனைவரும்: வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா
இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் விரும்பினேன். ஆனால் பாடலின் நீளம் அதை வலையேற்ற விடாமல் தடுக்கிறது. ஆனால் பாடலை மெயிலில் அனுப்ப முடியும். பாடலைக் கேட்க விரும்புகிறவர்கள் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடலனுப்பவும். பாடலை நான் அனுப்புகிறேன்.
இந்தப் பாடலுக்குப் படமும் போட்டால் நன்றாக இருக்குமே! அதுவும் நான் இந்தக் கோயிலுக்குச் சென்ற பொழுது எடுத்த படங்களை இங்கே கொடுத்தால்! இதோ கொடுக்கிறேன். பத்துமலை முருகன் கோயிலில் நான் சமீபத்தில் அறுபடை வீடுகளில் கூட அனுபவிக்காத ஒரு ஆனந்த அனுபவத்தைக் கண்டேன். மலேசியத் தமிழர்களே இந்தத் திருக்கோயிலை இப்படியே சிறப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துமலை முருகனின் பேருருவம். அளவிட முடியாத அருளுடையானுக்கு மனிதர்களால் அளவிட முடிந்த உயரத்தில் திருவுருவம்.
அதே முருகன். ஆனால் பின்புலத்தில் மலையோடும்...முன்புலத்தில் மக்களோடும் மண்டபங்களோடும்.
திருக்கோயிலுக்கும் வாழ்விற்கும் உயர்த்தி விடும் படிக்கட்டுகள்.
வரையேறி வருவோரை வரவேற்கும் வடிவேலன்.
அதே வரவேற்பு. ஆனால் குகையின் முகப்புத் தோற்றத்தோடு.
பத்துமலை முருகன் குடிகொண்ட கருவரை. இங்கு புகைப்படும் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது. அது சுற்றுலாத்தலம். அதனால் அப்படி என்று சொல்கிறவர்கள் பண்டரீபுரத்திலும் படமெடுக்க அனுமதிக்கப்படுகிறது என்ற தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.
பத்துமலை முருகன் தங்கப்பத்து அலங்காரத்தோடு.
உள்ளே எழுந்திருக்கும் மற்றொரு முருகன் கோயில்.
வள்ளி தெய்வானையுடம் அமர் சோலை. அது மலேசியப் பத்துமலை எனும் சோலை.
அன்புடன்,
கோ.இராகவன்






































