கந்த சஷ்டி - 4: தமிழில் அர்ச்சனை! நாதவிந்து கலாதி நமோநம!
இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்! - ஆலயத்தில் இந்த அறிவிப்புப் பலகை பற்றிய ஒரு சர்ச்சை, சில காலத்துக்கு முன் பதிவுலகில் எழுந்தது! அந்த "உம்" பல பேரை அசைத்துப் பார்த்தது! :-) இறை அறிவுக்கு, மொழி அறிவு தேவையா-ன்னு தொடங்கி, விவாதங்கள் பல திசையில் ஓடின!
இறைவனைப் போற்றவும், பூசிக்கவும் இது ஒன்று தான் மொழி என்பது கிடையவே கிடையாது! - இது பாமரனுக்கும் தெரியும், பண்டிதனுக்கும் தெரியும்!ஆனா நடைமுறைப் படுத்தும் போது தான், விவாதமும் அரசியலும் கலந்து, சூடு பிடிக்கின்றன! அதனால் பயன் விளைகிறதா? - ஆளுக்கொருவர் ஒரு கைப்பிடியாச்சும் அள்ளிப் போடுவார்களா?
போற்றிகள், பூசனைகள், வேள்விகள், உற்சவங்கள்-ன்னு மந்திரங்களை அனைவரும் அறியும் வண்ணம், பொருள் செய்து கொடுப்பார்களா?
இல்லை அப்படி ஏற்கனவே செய்த சிலவற்றையாவது கடைப்பிடிப்பார்களா?
இல்லை இது போன்ற முயற்சிகளுக்குத் துணை நிற்பார்களா?
பதிவுலகில் - தமிழில் தியாகராஜர், தமிழில் சுப்ரபாதம், தமிழ் வேதம் - திருவாய்மொழி எல்லாம்.....இது போன்ற சிறு சிறு முயற்சிகள் தான்! மிகவும் சிறிய முயற்சி என்று கூடச் சொல்லலாம்!
ஆனால் இதையும் தாண்டிப் பெரு முயற்சி ஒன்று உள்ளது!
அந்தப் பெரு முயற்சிகள் செய்தவர்கள் எல்லாம் விவாதப் புலிகள் அல்ல! அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லி மாளாது! - செயற்கரிய செய்வார் பெரியர் என்பது ஐயன் வாக்கு!
அப்படித் தமிழில் முதன் முதலில் அர்ச்சனை செய்தது யார் தெரியுமா?
"ஓம் திருவிக்ரமாய நமஹ" என்ற அர்ச்சனை மந்திரத்தை அப்படியே மாற்றிக் காட்டியவள் ஒரு பெண்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று, நமஹ என்ற அர்ச்சனையைப் போற்றி ஆக்கிக் காட்டிய அந்தப் பெண், ஆண்டாள்!
தமிழில் அர்ச்சனை என்பதை முருக வழிபாட்டிலும் நிறைவேற்றிக் கொடுத்த நல்லவர் ஒருவர் இருக்காரு!
அவரு சந்தக் கவி, நம் சொந்தக் கவி, கந்தக் கவி, அருள் முந்தக் கவி! - அருணகிரி!!! - அர்ச்சனை என்று பெயரிட்டே, சில அருமையான மந்திரங்களைச் செய்துள்ளார்!
அவற்றில் சில சமயம் வடமொழியும் கலந்து வரும்! ஆனால் உறுத்தாது!
பீஜாட்சர மந்திர ஓசைகள் தேவைப்படும் போது தான், தமிழ் அர்ச்சனையில் இவ்வாறு செய்துள்ளார்! - அப்படிப்பட்ட தமிழ் அர்ச்சனையில் ஒன்று, நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!
இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்!
இன்றைய கந்த சஷ்டிப் பாடலாக, தமிழில் அர்ச்சனை செய்யலாம் வாங்க!
இந்த "நமோ நம" திருப்புகழ் அர்ச்சனையால், நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்! - நீங்களும் ஓதுங்கள்!
இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :)
* எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடுவது
** உன்னி கிருஷ்ணன்
*** ஜலதரங்க வாத்திய இசை
**** புல்லாங்குழல் - மாலி
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்
மேலோட்டமான பொருள்:
நாத விந்து கலாதீ நமோநம = சிவ சக்தி தத்துவத்துக்குப் பொருளே நமோநம!
வேத மந்த்ர சொரூபா நமோநம = வேத மந்திர உருவமானவனே நமோநம!
ஞான பண்டித சாமீ நமோநம = ஞான பண்டித, சுவாமி நாதனே நமோநம!
வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம!
போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம!
நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!
பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம = சூரரைத் தண்டித்து விளையாடல் செய்தவனே நமோநம!
கீத கிண்கிணி பாதா நமோநம = இன்னொலி சதங்கைகள் கட்டிய பாதங்களைக் கொண்டவனே நமோநம!
தீர சம்ப்ரம வீரா நமோநம = தீரனே, போர்வீரனே, நமோநம!
கிரிராஜ = மலை அரசே
தீப மங்கள ஜோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம!
தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம!
தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம!
அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்!
இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே
தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!
திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்!
தீப மங்கள ஜோதீ நமோநம! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!
43 comments:
//நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி//
இது தமிழா ?
கெட்டுச்சு போங்க.
:)
//கோவி.கண்ணன் said...
இது தமிழா?
கெட்டுச்சு போங்க.
:)//
எது கெட்டுச்சுங்க கோவி? :-)
ஞானம் தமிழ் இல்லையா?
கிண்கிணி பாதா தமிழ் இல்லையா?
வெகுகோடி தமிழ் இல்லையா?
தூய அம்பலம் தமிழ் இல்லையா?
அருள்தாராய் தமிழ் இல்லையா?
பாட்டு தொடர்கிறதே! ஈதலும் பல கோலால பூசையும், ஓதலும்....
இது எல்லாம் தமிழ் இல்லையா?
:-)
அருணகிரியின் காலகட்டத்தில் தமிழில் அர்ச்சனைக்கு என்ன நிலை என்பதை யோசிச்சிப் பாருங்க! அப்ப விளங்கும்!
வெறும் சொல்லாடல் மட்டுமே வைத்துக் கொண்டு பார்த்தால்?
கந்த சஷ்டியின் நான்காம் நாள் பாடல் - எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் - ஒலி வடிவம் இல்லையென நினைக்கிறென்.
நாதவிந்து கலைமூலமே போற்றி போற்றி!
மறைபொருள் சொல்முதல் உருவே போற்றி போற்றி
அறிவுக்கு நல்லியல் ஆசானே போற்றி போற்றி
-வெகுகோடி
அப்பிடின்னு மாத்தினா மட்டும் தமிழ் அர்ச்சனை ஆயிடுமா? அதையும் சொல்லுங்க!! :-)
ஆண்டாள் சொல்கிறாள்
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!....
ஸ்டாப், ஸ்டாப், ஸ்டாப்...
சகடம்-னு வந்திருச்சே!
சோ, இதுவும் தமிழ் அர்ச்சனை கிடையாது அல்லவா? :-)
//நமஹ என்ற அர்ச்சனையைப் போற்றி ஆக்கிக் காட்டிய அந்தப் பெண், ஆண்டாள்!//
ரவி,
எனக்கு மந்திரம் குறிப்பிட்ட மொழியில் சொன்னால் தான் அதிர்வு என்பதில் நம்பிக்கை இல்லை. மந்திரம் சொல்லும் போது எச்சிதெறித்து பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதிர்வு தெரியலாம். :)
இருந்தாலும் நமஹாவுக்கு மாற்றான 'போற்றி' யைச் சொல்லும் போது தொண்டை, நா எல்லாம் அதிர அமைந்த சொல்.
சிவாயநம என்ற ஐந்தெழுத்தை விட சிவாயபோற்றி ஆறெழுத்து சிறப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
:)
அருணகிரியார் தம் பாடல்களை பெருமளவு வடமொழி கலந்த மணிப்பிரவாளமாகவே எழுதியுள்ளார். அதன் காரணமாகவே அவருடைய பாடல்கள் தமிழ் இலக்கியம் எனச் சொல்லப் படும் பக்தி இலக்கியங்களிலிருந்து சற்று விலகியே நிற்கிறது.
மணிபிரவாளமாக இருந்தாலும் சுப்பிரமணியனை பாடும் பாடல் எதுவும் மணியான பாடலே.
நன்றி.
--------------
//ஞானம் தமிழ் இல்லையா?//
இல்லை. :)
குமரன் / ரவி
கீழே உள்ள முருகன் படத்தில், வேல் தவிர்த்து தண்டாயுதம் போன்று கிளி அமர்ந்துள்ள கோல் ஒன்று இருக்கிறது, அதை நான் இதுவரை கண்டதில்லையா ? கவனித்ததில்லையா ? தெரியவில்லை, புதிதாக இருக்கிறது.
சேவல் கொடியா அது ? சேவல் போன்று இல்லையே
//எது கெட்டுச்சுங்க கோவி? :-)
ஞானம் தமிழ் இல்லையா?
கிண்கிணி பாதா தமிழ் இல்லையா?
வெகுகோடி தமிழ் இல்லையா?
தூய அம்பலம் தமிழ் இல்லையா?
அருள்தாராய் தமிழ் இல்லையா?
பாட்டு தொடர்கிறதே! ஈதலும் பல கோலால பூசையும், ஓதலும்....
இது எல்லாம் தமிழ் இல்லையா?
:-)//
நான் குறிப்பிட்ட வரிகளை பாருங்கள் அதில் 'வெகுகோடி' தவிர்த்து வேறெதும் தமிழென்று சொல்ல முடியாது. அதைவைத்துத்தான் இந்த பாடல் தமிழுக்காக எழுதப்பட்டது என்று அறிய முடியும்.
:)
கற்குவியலில் 4 நெல்லைப் போட்டு இது நெற்குவியல் என்று சொல்வது போல் இருக்கிறது.
:)
இந்தப் பாடல் மிக அருமையான பாடல்.
//கிரிராஜ தீபமங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம
அருள் தாராய்!"
நான் தினந்தோறும் கண்டிப்பாக இந்த வரிகளைச் சொல்லுவேன்.
நாங்கள் தைப்பூசப் பாதயாத்திரை செல்லும் வேளையில் ஒரு வருடம் பழநியை நெருங்கத் தாமதமாகி விட்டதால் திட்டமிட்டபடி இராஜ அலங்காரத்தை எங்களால் தரிசிக்க இயலவில்லை.
எனவே என் தந்தையார் இந்த வரிகளைச் சொல்லி மனதளவிலேயே இராஜ அலங்காரத்தைக் கண்டு களித்தோம். அன்று முதல் இந்தப் பாடலைத் தினந்தோறும் பூஜை செய்யும் வேளைகளில் உச்சரிப்பேன்.
அழகான, உள்ளத்தைக் கொள்ளை கவரும் எம்பெருமானின் இராஜ அலங்காரப் படம்!
நன்றி.
நல்ல பதிவு. பாடல் இன்னும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது.
ஓ.. சீசன் பாடலா? நல்லாருக்கு.
அதுசரி இந்த மூன்றுவரிச் செய்யுள்களை எவ்விதமழைப்பார்கள்?
நன்றி.
இது அடிக்கடி பாடும் பாடல் இரவிசங்கர். மனத்தை உருக்கும் பாடல் இது. கற்குவியலோ நெற்குவியலோ இல்லை இந்தப் பாடல். மணிப்பவளக் குவியல். இந்தப் பாடலில் வரும் இரு மொழிகளில் எந்த மொழி மணி எந்த மொழி பவளம் என்பதை அவரவர் விருப்பம் போல் எடுத்துக் கொள்வோம். :-)
//ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் //
நல்ல வழி செல்லும் மக்களின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாகப் பட்டியல் இடுகிறார் பாருங்கள் இங்கே. ஈதல், பூஜை, ஓதல், குணம், ஆசாரம், நீதி, ஈரம், குரு சீர்பாத சேவை என்று ஒவ்வொன்றும் இன்றியமையாதவை; ஒன்றிலிருந்து அடுத்தது தொடர்ந்து வருவது போல் தோன்றுகிறது. எல்லோரும் நல்வழியில் செல்லும் போது தொடங்குவது ஈதலில் தானே. இறுதியில் நிறைவது குரு சீர்பாத சேவையில் என்று சொல்கிறார் அருணகிரிநாதர்.
கோவி.கண்ணன். இந்தப் படம் பழனி முருகனின் சிறப்பு அலங்காரமான இராஜ அலங்காரம். பழனியாண்டவர் தண்டாயுதம் தாங்கியவர் தானே. அந்த தண்டாயுதத்தின் மேல் தான் கிளி அமர்ந்திருக்கிறது - இராஜ அலங்காரத்தில் மட்டும்.
//கோவி.கண்ணன் said...
எனக்கு மந்திரம் குறிப்பிட்ட மொழியில் சொன்னால் தான் அதிர்வு என்பதில் நம்பிக்கை இல்லை//
எனக்கும் அப்படியே கோவி!
மந்திரமாவது நீறு! என்று தமிழ் மந்திரத்துக்கு மிகப் பெரும் அதிர்வு இருந்ததால் தான் நோய் தீர்க்க முடிந்தது!
//மந்திரம் சொல்லும் போது எச்சிதெறித்து பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதிர்வு தெரியலாம். :)//
ஹிஹி
செம அனுபவம் போல!
//சிவாயநம என்ற ஐந்தெழுத்தை விட சிவாயபோற்றி ஆறெழுத்து சிறப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன்//
ஹூம்!
சில மந்திரங்களுக்கு மொழி என்பதே இராது; வெறும் ஓசை தான்! அதைத் தமிழில் சொல்லும் போதும் அதே ஒலி தான் பயின்று வரும்!
சிவாயநம! என்பது பற்றி நீங்கள் சொன்னதால் கேட்கிறேன்!
நம என்பது போற்றியாகி விட்டது சரி!
சிவ என்ன ஆகும்?
சிவம் என்பதற்குச் சொல் என்ன?
அதை என்னவாக்கலாம்?
//cheena (சீனா) said...
கந்த சஷ்டியின் நான்காம் நாள் பாடல் - எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் - ஒலி வடிவம் இல்லையென நினைக்கிறென்//
வாங்க சீனா!
ஒலி வடிவம் கேட்கிறதே! சுட்டிகள் வேலை செய்யவில்லையா?
//சாத்வீகன் said...
அருணகிரியார் தம் பாடல்களை பெருமளவு வடமொழி கலந்த மணிப்பிரவாளமாகவே எழுதியுள்ளார்//
ஹூம்; ஆரம்ப கால அருணகிரி பாடல்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும்! ஆனால் பின்னர் அது படிப்படியாகக் குறைந்து போய் விட்டது!
//அதன் காரணமாகவே அவருடைய பாடல்கள் தமிழ் இலக்கியம் எனச் சொல்லப் படும் பக்தி இலக்கியங்களிலிருந்து சற்று விலகியே நிற்கிறது//
விலகி நிற்கிறதா?
சந்தக் கவிகளில் அவர் பாடல்களும் தமிழ் இலக்கியம் தாங்க!
//மணிபிரவாளமாக இருந்தாலும் சுப்பிரமணியனை பாடும் பாடல் எதுவும் மணியான பாடலே//
ஹிஹி! உண்மை தான்!
//கோவி.கண்ணன் said...
கீழே உள்ள முருகன் படத்தில், வேல் தவிர்த்து தண்டாயுதம் போன்று கிளி அமர்ந்துள்ள கோல் ஒன்று இருக்கிறது//
பழனி முருகன் ஆண்டிக் கோலத்தில் இருப்பதால் மூலவர் திருவுருவில் தண்டாயுதம் மட்டும் தான் இருக்கும் கோவி!
வேல் சிலையோடு சேர்ந்தது அன்று!
இவர்களாகச் சார்த்தி இருப்பார்கள்!
//சேவல் கொடியா அது ? சேவல் போன்று இல்லையே//
சேவல் இல்லை!
ராஜ அலங்காரத்தில், ஆண்டி அரசனாகி விடுகிறாரே! வெறும் தண்டாயுதம் சரி வருமா? அதான் தண்டத்துக்கும் அலங்காரம் செய்து, தண்டாயுதம் செங்கோலாக மாறுகிறது!
அதில் உள்ளது தான் கிளி!
ஆண்டிக் கோல தண்டாயுதத்தில் கிளி இருக்காது!
//கோவி.கண்ணன் said...
கற்குவியலில் 4 நெல்லைப் போட்டு இது நெற்குவியல் என்று சொல்வது போல் இருக்கிறது//
கற்குவியல், நெற்குவியல் என்ற சொற்குவியல் இருக்கட்டும்!
பொற்குவியல் கண்டுள்ளீர்களா? :-)
பொன்னை உருக்கும் போதும், நகாசு செய்யும் போதும், துமிகள் பறக்கும்! பொற்சுண்ணப் பொடிகளோடு கூட, தாமிரம் வெள்ளி எல்லாம் சேரும்!
அருணகிரி தந்ததும் அதான்!
அவர் செய்தது துவக்கம் மட்டுமே!
தமிழ்ப் பொன்னைச் செய்து வைத்தார்! அது கொல்லன் உலையில் இருந்து இன்னும் வரவில்லை! துவக்க முயற்சி தான் அது! அந்தப் பொன் அப்படித் தான் இருக்கும்!
பொன் வெளிவந்து நீங்கள் கழுத்தில் அணியும் போது, எதுவும் கலவாத தமிழ் கேளுங்கள்! அப்போ சரியா வரும்!
கொல்லன் உலையிலேயே அணியும் பொன் கேட்டா எப்படி?
மங்களகரமான பாடல். மௌனமாக வழிபடும்போது எந்த மொழியில் வழிபடுவோம்.நல்லது எந்த மோழியாக இருந்தால் என்ன.
//Raghavan alias Saravanan M said...
எனவே என் தந்தையார் இந்த வரிகளைச் சொல்லி மனதளவிலேயே இராஜ அலங்காரத்தைக் கண்டு களித்தோம்.//
இராகவன்
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா-ன்னு வருது பாருங்க!
அதுவும் ராஜ அலங்காரம் தான்!
//அழகான, உள்ளத்தைக் கொள்ளை கவரும் எம்பெருமானின் இராஜ அலங்காரப் படம்//
நன்றி - சக்தி விகடன்; எப்பவோ சேமித்து வைத்தது!
//பாரதிய நவீன இளவரசன் said...
நல்ல பதிவு. பாடல் இன்னும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது.//
பாடலை நீங்களும் ஹம் பண்ணுங்க தலைவா!
இந்தப் பாடலைச் செஞ்சுருட்டி ராகத்துல பாடுறாங்க!
இதையே ஓதுவா மூர்த்திகள், மந்திரம் போலச் சொல்லுவாங்க!
அந்தச் சுட்டியைத் தான் முதலில் தேடினேன்; கிட்டவில்லை!
//மலைநாடான் said...
ஓ.. சீசன் பாடலா? நல்லாருக்கு.//
சஷ்டி சீசனா மலைநாடான் ஐயா? :-)
//அதுசரி இந்த மூன்றுவரிச் செய்யுள்களை எவ்விதமழைப்பார்கள்?//
ரெண்டு ரெண்டா வரும் இசைப் பாட்டு கண்ணி-ன்னு சொல்லுவாங்க! தெரியும்! (பராபரக் கண்ணி)
மூன்றடிக்கு?
இருங்க, யோசிச்சி சொல்லுறேன்!
//நல்ல வழி செல்லும் மக்களின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாகப் பட்டியல் இடுகிறார் பாருங்கள் இங்கே.
ஈதல், பூஜை, ஓதல், குணம், ஆசாரம், நீதி, ஈரம், குரு சீர்பாத சேவை என்று ஒவ்வொன்றும் இன்றியமையாதவை;
ஒன்றிலிருந்து அடுத்தது தொடர்ந்து வருவது போல் தோன்றுகிறது.//
ஆமாம் குமரன்
சரியாகக் காட்டினீங்க!
அதை "மறவாத" -ன்னும் சொல்லுறாரு பாருங்க!
ஆக இல்லறம், துறவறம் ன்னு எல்லா பாலருக்கும் பொதுவான அறம்! இல்லறத்தில் இருந்து துறவறத்திற்கு வந்தவரு அவரு! அங்கே செய்து விட்டு, இங்கே விட்டு விடலாமா-ன்னு கேட்டா இல்லை!
இங்கும் ஈதல் வேண்டும்!
அதனால் தான் மறவாத-ன்னு சொல்லுறாரு அருணகிரி!
//அதுசரி இந்த மூன்றுவரிச் செய்யுள்களை எவ்விதமழைப்பார்கள்?//
மலைநாடான் ஐயா
மூன்று வரி இசைப்பாட்டை தாழிசைன்னு அழைப்பாங்க! ஆசிரியத் தாழிசைன்ன்னு நினைக்கிறேன்!
கன்றுக் குணிலா கனியுகுத்த மாயவன்
இன்று்நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளோமோ தோழீ
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாதவன்
...
ஆம்பலந் தீங்குழல் கேளோமோ தோழீ
ன்னு சிலப்பதிகாரத்திலும் மூன்று மூன்றாய் வரும்!
மறு மொழிகள் முழுவதும் படித்தேன். ரசித்தேன்.செய்திகள் புதியவை - அறிந்து கொண்டேன். கேயாரெஸ், குமரன் - ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துகள்
//தி. ரா. ச.(T.R.C.) said...
மங்களகரமான பாடல்//
ஆமாம் திராச
தீப மங்கள ஜோதி-ன்னு வேறு வருதே!
//மௌனமாக வழிபடும்போது எந்த மொழியில் வழிபடுவோம்.நல்லது எந்த மோழியாக இருந்தால் என்ன//
நல்லது தாய்மொழியிலும் இருக்க வேண்டும் என்பது ஆசை!
மிகவும் நியாயமானதும் கூட!
ஆனா முன்பு சொன்னது போல், உலைக்களத்திலேயே முழு நகையும் வந்து விடாது! அதைப் புரிந்து கொண்டால் விளங்கி விடும்! :-)
//cheena (சீனா) said...
மறு மொழிகள் முழுவதும் படித்தேன். ரசித்தேன்.செய்திகள் புதியவை - அறிந்து கொண்டேன். கேயாரெஸ், குமரன் - ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துகள்//
மிக்க நன்றி சீனா ஐயா!
தங்கள் ஆசியும் அன்பும் என்றும் வேண்டும்!
அருணகிரியினைப் புரியாதார் புரியாதாரே. வடமொழி கூடவே போய்....தமிழை உள்ளே நுழைத்தவர். ஆரம்பத்தில் வடமொழியை நிறையத் தூவி விட்டு...போகப் போகக் குறைத்துக் கொண்டே போனார். தமிழை அந்த அளவுக்குக் கஷ்டப்பட்டு நுழைக்க வேண்டிய நிலமை இருந்தது என்றுதான் கருதுகிறேன். இன்றைக்கு இப்பிடி என்றால்..அன்றைய நிலையை நினைத்துப் பாருங்கள். அருணகிரி விளையாடுவார்....
சிகராத்ரி கூரிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ.... அவ்வளவுதான். சிகராத்ரின்னு வடமொழியில் தொடங்கி விட்டு...பட்டுன்னு கூரிட்ட வேலும்..செஞ்சேவலும்...செந்தமிழிலால் பகர் ஆர்வம் ஈ.
அருணகிரியின் நூல்கள் தமிழ் இலக்கியம் ஆகுமா என்றால் கண்டிப்பாக ஆகும். மு.வ அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுகையில் அருணகிரியையும் சேர்த்துத்தான் எழுதினார். ஏனென்றால் அருணகிரி என்ன செய்தார் என்று மு.வவிற்குத் தெரிந்திருந்தது.
//இராகவன்
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா-ன்னு வருது பாருங்க!
அதுவும் ராஜ அலங்காரம் தான்!
//
நன்றி கண்ணபிரான்! சரியாகச் சொன்னீர்கள்.
நீங்கள் தான் ஜிராவின் கதையில் வரும் கே.ஆர்.எஸ்-ஆ? இங்கு கேட்பது தவறு எனில் மன்னிக்கவும்.
எனக்கு நீண்ட நாட்களாக அது நாத "விந்து" வா அல்லது நாத "பிந்து"வா என சந்தேகம். ஏனெனில், "ஓம் காரம் பிந்து ஸம்யுக்தம் நித்யம் த்யாயந்தி யோகின:" என்ற பாடல். ஓம் காரத்தை "நாத ப்ரம்மம்" என்பர், அதனால்.
விளக்கம் தெரிந்தால் கூறவும்.
நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றிகள்.
//Raghavan alias Saravanan M said...
நீங்கள் தான் ஜிராவின் கதையில் வரும் கே.ஆர்.எஸ்-ஆ? இங்கு கேட்பது தவறு எனில் மன்னிக்கவும்///
ஹிஹி
இத நீங்க ஜிராவிடம் தானே கேக்கணும்! :-)
ஜிரா-வுக்கு என் கூட சீண்டி விளையாடணும்-னா அப்படி ஒரு அல்வா சாப்புட்ட சந்தோசம். அதுவும் தூத்துக்குடி அல்வா! :-)
அலோ, ஜிரா! போதுமாய்யா?
இப்ப ஒமக்குப் பரம திருப்தியா?
இதுல படத்தை வேறு morph பண்ணி போட்டிருக்காரு! இங்கிட்டு பாருங்க!
http://engineer2207.blogspot.com/2007/11/blog-post_14.html
//Seenu said...
எனக்கு நீண்ட நாட்களாக அது நாத "விந்து" வா அல்லது நாத "பிந்து"வா என சந்தேகம்//
வாங்க சீனு!
வடமொழியில் பிந்து!
தமிழில் சொல்லும் போது விந்து!
இரண்டுமே சரி தான்!
சிவசக்தி தத்துவமாக இருப்பது நாத விந்து (energy & sound)
சக்தியின் அசைவால் நாதம் எழ, அது பிந்துவாக வளர்ந்து, படைப்புத் தத்துவமாக பரிணமித்து, ஓங்காரத்தில் ஒடுங்குவதாக சொல்லப்படும்!
நீங்கள் குறிப்பிட்ட சுலோகமும் ஓங்கார சுலோகம் தானே!
அடுத்த வரிகள்
காமதம் மோக்ஷதம் சைவ ஓம்காராய நமோ நமஹ! என்று ஓங்கார ஒடுக்கத்தைச் சொல்ல வந்தது தான்!
//G.Ragavan said...
அருணகிரியினைப் புரியாதார் புரியாதாரே//
அருணகிரிக்கு மட்டுமில்லை ஜிரா!
ஏனைய நல்லன்பர்க்கும் இது பொருந்துமே!
கம்பனைப் புரியாதாரும் புரியாதாரே! :-)
//தமிழை அந்த அளவுக்குக் கஷ்டப்பட்டு நுழைக்க வேண்டிய நிலமை இருந்தது என்றுதான் கருதுகிறேன் இன்றைக்கு இப்பிடி என்றால்..அன்றைய நிலையை நினைத்துப் பாருங்கள். அருணகிரி விளையாடுவார்....//
மிகவும் உண்மை!
இதத் தான் நானும் கோவிக்குச் சொன்னேன்!
அமெரிக்காவில் மாகாணப் பல்கலை கழகத்தில், தமிழ் பற்றிய ஆய்வையும் ஆங்கிலத்தில் தானே விளக்கணும்!
அது போல மெத்தப் படித்து ஆக்ரமித்து இருந்து வடமொழிக் கூட்டத்தில், தமிழின் மாண்பை எப்படி நிறுத்துவது! இப்படித் தான் காட்ட வேண்டிய சூழல்! அதைத் திறம்படச் செய்தவர்கள் தான் அருணகிரியாரும் ஏனைய பக்தி இலக்கிய அன்பர்களும்!
//சிகராத்ரின்னு வடமொழியில் தொடங்கி விட்டு...பட்டுன்னு கூரிட்ட வேலும்..செஞ்சேவலும்...செந்தமிழிலால் பகர் ஆர்வம் ஈ.//
அனுபூதி வேண்டும் போது, அவர் முற்றிலும் தமிழுடன் நின்று விட்டார்-னு சிலர் சொல்லுவதுண்டு.
ஆனால் அதிலும்
உல்லாச நிராகுல யோகவித
சல்லாப விநோதனும் நீஅலையோ
என்றும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே
என்றும் பாடுகிறார்
இறுதிப் பாடலின் போது கூட,
நதி புத்திர ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று சொல்லி விட்டுத் தான்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்கிறார்!
//மு.வ அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுகையில் அருணகிரியையும் சேர்த்துத்தான் எழுதினார்//
டாக்டர் மு.வ மட்டுமில்லை!
இன்னும் பல ஆசிரியர்களும், இயற்றமிழ், இசைத்தமிழ் இலக்கியத்துக்கு அருணகிரியும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்த அருந்தொண்டைக் குறிப்பிடாது செல்லவே முடியாது!
// அனுபூதி வேண்டும் போது, அவர் முற்றிலும் தமிழுடன் நின்று விட்டார்-னு சிலர் சொல்லுவதுண்டு.
ஆனால் அதிலும்
உல்லாச நிராகுல யோகவித
சல்லாப விநோதனும் நீஅலையோ
என்றும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே
என்றும் பாடுகிறார் //
முற்றிலும் தமிழில் என்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலும் தமிழில். தொடக்கத்தில் வடமொழி நிறைய இருக்கும். அதன் அடர்த்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் குறைந்த்து அநுபூதியில் முன்னின்றது தமிழ்.
// இறுதிப் பாடலின் போது கூட,
நதி புத்திர ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று சொல்லி விட்டுத் தான்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்கிறார்!//
நதிபுத்திர இறுதிப் பாக்கு முந்தைய பா. இறுதிப்பா உருவாய் அருவாய்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//G.Ragavan said...
அருணகிரியினைப் புரியாதார் புரியாதாரே//
அருணகிரிக்கு மட்டுமில்லை ஜிரா!
ஏனைய நல்லன்பர்க்கும் இது பொருந்துமே!
கம்பனைப் புரியாதாரும் புரியாதாரே! :-) //
அது சரி. அருணகிரிக்குத் தமிழை உள்ளே நுழைக்க வேண்டிய தேவை இருந்தது. கம்பருக்கு எதை நுழைக்க வேண்டிய தேவை?
ரவி சங்கர்.
எனக்கும் இத் திருப்புகழ் பிடிக்கும், இந்தக் கிளி, அருணகிரியாரைக் குறிக்கிறதா??
அவர் கூடுவிட்டு கூடுபாய்ந்து கிளியுருவானதாகப் படித்தேன். படத்திலும் அப்படியே காட்டினார்கள்.
யோகன் ஐயா. சரியாகச் சொன்னீர்கள். இது வரை இப்படி எண்ணிப் பார்த்ததில்லை. வேலவன் கையில் இருக்கும் கிளி அருணகிரிநாதக் கிளியாகத் தான் இருக்க வேண்டும். :-)
//நதிபுத்திர இறுதிப் பாக்கு முந்தைய பா.
இறுதிப்பா உருவாய் அருவாய்.//
ஜிரா
நானும் அதைத் தான் சொல்லியுள்ளேன்; பாருங்கள்!
//திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று சொல்லி விட்டுத் தான்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்கிறார்//
சரி...உங்களிடம் இன்னொரு கேள்வி
இறுதிப் பாவில் வரும்...
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
இதில் வரும் விதி, குரு
இவை இரண்டும் தமிழ்ச் சொற்களா?
//G.Ragavan said...
அது சரி. அருணகிரிக்குத் தமிழை உள்ளே நுழைக்க வேண்டிய தேவை இருந்தது//
அப்படியா? எதை வைத்துச் சொல்கிறீர்கள்!
அவருக்குத் தமிழை நுழைக்கும் தேவை மட்டுமா? இல்லை முருகனை மொழியும் தேவையும் கூடவா?
//கம்பருக்கு எதை நுழைக்க வேண்டிய தேவை?//
இதையும் நீங்களே சொல்லுங்களேன்!
கம்பருக்குத் தமிழை நுழைக்கும் தேவையும், தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒத்தாற் போல் சொல்லும் தேவை இருந்ததா என்ன?
மாறன் சடகோபன் மறையைப் படித்து, தத்துவங்களை இன்னும் சிறப்பித்துக் கதையில் சொல்லும் தேவை இருந்ததா என்ன, கம்பனுக்கு?
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்தக் கிளி, அருணகிரியாரைக் குறிக்கிறதா??//
அருமையான சிந்தனை யோகன் அண்ணா!
கிளியை அருணகிரியாய் எண்ணிப் பார்க்கவே இனிக்கிறது!
ஆனால் ஜிரா, இந்தக் கிளிக் கதைக்கு என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை!
அருணகிரியின் காலம் பிந்தைய காலம்! அதற்கு முன்பு அலங்காரத்தில் கிளியைப் பயன்படுத்தினார்களா என்றும் தெரியாது! :-)
யோகன் அண்ணா
தண்டத்திலும் செங்கோலிலும் கிளி அமரும் வழக்கம், பொதுவா அனைத்து ஆலயங்களிலும் இருக்கு!
திருமலை, திருவரங்கத்திலும் செங்கோலில் கிளி இருக்கும்!
இதற்கு விளக்கம் சொல்லும் படி ஆசிரியர்கள்...
இறைவன் மன்னனாய் நீதி பரிபாலனத்தில் கொலு இருக்கிறான்!
அதனால் என் மனத்து அன்பு தெரியவில்லை போலும்!
அவனிடம் சென்று என் மனத்தைச் செப்பு, என்று தலைவி தூது விடுகிறாள்! கிளியும் அவனிடத்தில் சென்று உரைக்கிறது! அந்தப் பக்தனின் மனமே கிளி ஆகிறது என்பார்கள்!
இப்படி நம் மனமே அந்தக் கிளி!
அப்படிப் பார்த்தால் நீங்கள் சொன்னது போல் அருணகிரியும் கிளியே!
அடியார் எல்லாம் கிளியே!
நம் மனம் எல்லாம் கிளியே தான்!
முருகனருள் என்றும்கிடைக்கட்டும்.//சித்ரம்
Post a Comment