நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை
முருகா....முருகா...முருகா...
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை... சுவாமிமலை
ஓம் ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவர்க்கு
சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு
நன்மைகள் உருவாகும்
(நாடறியும் ...)
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பித்துகுளி முருகதாஸ்
திரைப்படம்: தெய்வம்
இசை: குன்னகுடி வைத்தியநாதன்
15 comments:
அருமையான ஒளிப்பத்தி குமரன்.
அது என்னமோ சுவாமிமலை முருகனிடம் எனக்கு அப்படி ஒரு ஈடுபாடு...
SK-கிட்ட கூட சுவாமிமலைத் திருப்புகழ் தான் பெரும்பாலும் நேயர் விருப்பமாக் கேட்டிருக்கேன் போல!
//வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்//
பித்துக்குளி முருகதாசர் குரல்...அப்பப்பா! அத்தனையும் இங்கு வலையேற்றணும்!
திருவேரகம்....இரண்டு முறை சென்றிருக்கிறேன். வீட்டில் ஒரு முறை. நண்பர்களோடு ஒரு முறை. முருகன் அருள் இனியதா அங்கு கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலும் உளுந்த வடையும் பொங்கலும் இனியதா என்று போட்டி வைத்தால் முருகன் தோற்கக் கூட வாய்ப்பிருக்கிறது :) தஞ்சைக் கழநி அல்லவா....சுவையில் சிறப்பு. அருளில் பொறுப்பு.
அருமையான பாடல். பித்துக்குளி முருகதாஸ் திருப்புகழ் பாடிக் கேட்க வேண்டும்..கோனாடு சூழ் விராலிமலையுறை பெருமாளே முருகா...அப்படிப் பாடுகையிலேயே விராலி மலையில் பத்து முறை ஏறி இறங்கிய பலன் கிடைக்கும்.
சூதமிகவளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே..உனைப் பாடும் தமிழினை நாளும் பருகிட மகிழ்ந்திட அருள்வாயே!
வேறுபட்ட பாணிக்குரலில் கவரக்கூடிய பாடகர்.
இவர் பாடிய பல பாடல்களில் இதுவும் நல்லபாடல், அத்துடன் அவர்
பாடுவதைப் படமாகவாவது முதல் முதல் பார்த்தது, இப்பாடலுக்கே!
சிறுவயது முதலே திரு முருகதாஸ் அவ்ர்கள் கணீரென்ற குரலால் கவரப்பட்டவன்.ஹார்மோணியத்தில் இணைந்து பிசிறு தட்டாமல் ஒலிக்கும்
குருமலையான சுவாமி மலை முருகனை வியாழக்கிழமையன்று ஸஹஸ்ரதள மாலையுடன் பார்க்கவேண்டுமே அப்பப்பா.....
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினை அருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாலே
அருமையான பாடல்....திரு. முருகதாஸ் முருகன், மற்றும் கண்ணன் மேல் அழகான பல தமிழ்ப்பாடல்களை பாடியுள்ளார்.
இரவிசங்கர். இதுவரை ஒரே ஒரு முறை தான் சுவாமிநாதப்பெருமானைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. குன்று தோறாடும் குமரன் இந்தப் பெருமான் தானே?
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் அழகு. விதவிதமாகப் பாடல்வரிகளைப் பாடிச் சுவையை கூட்டிவிடுகிறார்.
நான் சின்னவயதில் ஒரு முறை சென்றது தான் இராகவன். சர்க்கரைப் பொங்கலையும் வடையையும் சுவைத்தேனா என்று நினைவில்லை. ஆனால் முருகனின் அழகுத் திருமுகத்தைச் சுவைத்த நினைவு இருக்கிறது இராகவன். :-)
யோகன் ஐயா. இலங்கைக்குப் பல முறை இவர் வந்து கச்சேரி செய்திருக்கிறாராம். நீங்களும் ஒரு முறை சொன்னதாக நினைவு. நீங்கள் சொன்னது போல் வேறுபட்டப் பாணிக்குரலில் பாடி மயக்குபவர் இவர்.
நீங்கள் தந்துள்ள பாடலைக் கேட்டிருக்கிறேன் தி.ரா.ச. பித்துகுளி முருகதாஸ் பாடியது தானா? அப்படித் தான் நினைக்கிறேன்.
தகப்பன் சுவாமியை ஒரே ஒரு முறை தரிசிக்கும் பாக்கியமே கிட்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் சொல்லும் சஹஸ்ரதள மாலையுடன் தரிசிக்கும் பாக்கியத்தை அவன் அருள வேண்டும்.
ஆமாம் மௌலி. முதன்முதலில் இவர் பாடி நான் கேட்டது 'ஆடாது அசங்காது வா கண்ணா' பாடல் தான். அருமையாகப் பாடியிருப்பார்.
எனக்கு ஒரு சந்தேகம்!!
குமரக்கோட்டம் போயிருந்தப்ப ஒரு புகைப்படம் பார்த்தேன்!
அதுல பத்மாசுரனை அழிப்பதற்காக மன்மதன் சிவன் மேல் அம்பு விட்டார்னும் அதுனாலதான் முருகர் அவதரித்தார் என்றும் கூறியிருக்காங்க!
உண்மையா? உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் வரலாறு?
தினேஷ் குமார். நல்ல கேள்வி கேட்டீர்கள். மன்மதன் சிவன் மேல் மலர்க்கணைகள் விட்டதாகச் சொல்லும் குமாரசம்பவ நிகழ்ச்சி பல புராணங்களில் குறிப்பாக கந்த புராணத்தில் இருக்கிறது.
தட்சனின் மகள் தாட்சாயினி மறைந்தபிறகு அவள் பார்வதியாகப் பிறக்கிறாள். அதே நேரத்தில் அசுரர்கள் கொட்டம் அதிகரிக்கிறது. அவர்களை அடக்க சிவபாலன் தோன்ற வேண்டும். அப்படி என்றால் தவத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதியை மணக்க வேண்டும். அந்த நேரத்தில் மதன் தன் மலர்க்கணைகளைத் தொடுக்கிறான் என்று புராணம் சொல்கிறது.
kumaran: could you please post about thirumuruga kiruapanantha variyaar?
Thanks
சோம்பேறி என்று பெயர் வைத்துக் கொண்டு எங்களை எல்லாம் சங்கடப்படுத்தும் நண்பரே. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றி ஒரு தனிப்பதிவே வைத்து நண்பர்கள் கோபி, பாஸிடிவ் ராமா, கானா பிரபா நடத்துகிறார்களே. பார்த்திருக்கிறீர்களா?
என்னை விட வாரியார் சுவாமிகளைப் பற்றி எழுத இராகவனும், மேலே சொன்ன நண்பர்கள் மூவரும், வெற்றியும், யோகன் ஐயாவும் இன்னும் பொருத்தமானவர்கள். இவர்கள் பல முறை சுவாமிகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் இன்னும் நிறைய சொல்லுவார்கள்.
http://variyar.blogspot.com/
"தந்தைக்கு உபதேசம் செய்த மலை.. எங்கள் தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிலை.." - இன்னமும் முருகன் என்னை அங்கே அழைக்கவில்லை. அழைக்கும் காலம் வரும். அதற்குத்தான் காத்திருக்கிறேன்.. முருகா.. உன்னை நோக்கி ஓடி வர அருள் புரிய வேண்டும்..
Post a Comment