கந்த சஷ்டி - 5: முத்தைத்தரு பத்தித் திருநகை! ( பாடும் முன் எச்சரிக்கை!)
சின்ன வயசுல பள்ளிக் கூடத்துல ஒரு போட்டி! ஏதோ கந்த சஷ்டியாம்! அதுவோ ஒரு சமணப் பள்ளிக்கூடம்; இருந்தாலும் தமிழாசிரியர் போட்டிய வச்சிட்டாரு! சரியாச் சொல்லணும்னா, ஆசிரியர் அல்ல! ஆசிரியை! ஆ+சிரியை = சிரிச்சிக்கிட்டே ரொம்ப அன்பா, அழகா இருப்பாய்ங்க! :-) தமிழ் விழா-ங்கிற பேருல, எங்க Group மாணாக்கர்களுக்கு மனப்பாடச் செய்யுளைப் போட்டியா வச்சிட்டாங்க! முத்தைத் தரு பத்தித் திருநகையை மனப்பாடமா, தவறில்லாம, படபட-ன்னு வேகமாச் சொல்லணும்! அப்படிப் பிரமாதமாச் சொல்லி முடிக்கறவங்களுக்கு, தோகை விரித்த மயில் பொம்மை பரிசு! கம்பியில் செஞ்ச மயிலு! நிஜமான மயில்தோகை இருக்கும்! Teacher, இப்படிச் சொன்னது தான் தாமதம், வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடியாந்தேன்! என் அத்தை படிக்கும் திருப்புகழ் புத்தகத்தை எடுத்து நோட்டம் விட்டேன்! முத்தைத் தரு பத்தி - எந்தப் பக்கத்துல இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டேன்! ஆனா ஒன்னுமே புரியலை! சும்மா வாய் விட்டுப் படிச்சிப் பாத்தேன்! வாய் குழறது! தக்கத் தக தக்கத் தக தக - குக்குக் குகு குக்குக் குகு குகு...... அட என்னடா இது! ரயில்ல எவனோ 'கூட்ஸ்' வண்டிக்காரன் எழுதின பாட்டைத் தான், அருணகிரி எழுதிட்டாரு-ன்னு மக்கள் சொல்லிப்பிட்டாங்களோ? :-) இப்படிச் சின்ன வயசுக்கே உரிய அலுப்பும், குறும்பும்! முதல் பத்தியை எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள தாவு தீந்து போச்சு! :-)
அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்! அப்படித் தோன்றியது திருப்புகழ் - முத்தைத் தரு பத்தித் திருநகை என்று அழகிய சந்தப் பாடலாக! முத்து = அருணகிரி சிறு வயதிலேயே பறிகொடுத்த அம்மா பேரு! முத்து = குற்றயலுகரம்; முத்தி = முற்றியலிகரம்! முத்து=முத்தி தரு பத்தித் திருநகை! இன்றைய சஷ்டிப் பதிவில் அதைக் கேட்டு இன்புறுவோம்! - கீழே அருணகிரிநாதர் படத்தில் இருந்து youtube வீடியோவும் இருக்கு, பாருங்க! முடிந்தால் கூடவே படிச்சிப் பாருங்க! பிடிச்சிப் போயிடும்! - அப்படி ஒரு சொற்கட்டு! தாளக்கட்டு! ஜதிக் கட்டு! பொதுவா வடமொழி மந்திரங்கள் தான் ஓசை முழக்கம்-னு சொல்லிச் சிலாகிச்சிப்பாங்க சிலபேரு! ஆனா இந்தத் தமிழ் மந்திரத்தின் ஓசையும் கேட்டுப் பாருங்க! அப்படி ஒரு முழக்கம்! * TMS பாடுகிறார், அருணகிரிநாதர் திரைப்படத்தில் ** வீணை இசையில் பிச்சுமணி (வாசிக்க எளிதாக இருக்கட்டுமே-ன்னு பதம் பிரிச்சு தந்துள்ளேன்; சந்தத்தோடு ஒட்டினாற் போல் சேர்த்துப் படிக்கவும்/பாடவும்!)
முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும் முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேணப் பத்துத் தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருது - ஒரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தர்க்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிரத்தப் பதம் வைத்துப் பயிரவி திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப் பரி அட்டப் பைரவர் தொக்குத் தொகு - தொக்குத், தொகு தொகு சித்ரப் பவுரிக்கு - த்ரி கடக ...... என ஓதக் கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு - குக்குக், குகு குகு குத்திப் புதை - புக்குப் பிடி என ...... முது கூகை கோட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டிப் பலி இட்டுக் குல கிரி குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
சில படங்களுக்கும், பாட்டின் பொருளுக்கும் நன்றி: kaumaram.com
பாட்டின் பொருளும் தெரிந்து கொள்ள ஆசையா இருக்கா? - இங்கு செல்லவும்! கந்தனருள் கனியும்! நாளை வியாழக்கிழமை, திருச்செந்தூர் முதலான தலங்களில், சூரசங்காரம்! திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - பாட்டுடன் சஷ்டிப் பதிவுகளை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க!! வெற்றி வேல் முருகனுக்கு 'அரகரோகரா'!
33 comments:
//அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்!
அப்படித் தோன்றியது திருப்புகழ் - முத்தைத் தரு பத்தித் திருநகை என்று அழகிய சந்தப் பாடலாக! //
இதுபோல் சேக்கிழாருக்கு சிதம்பரம் நடராஜன், 'உலகெல்லாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.
இதெல்லாம் நாமதான் நம்பனும், சிதம்பரம் தீட்சிதர்கள் நம்ப மாட்டார்கள்.
:)))
//கோவி.கண்ணன் said...
சேக்கிழாருக்கு சிதம்பரம் நடராஜன், 'உலகெல்லாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.
இதெல்லாம் நாமதான் நம்பனும், சிதம்பரம் தீட்சிதர்கள் நம்ப மாட்டார்கள்//
நம்பினவார்க்கு நடராஜா
நம்பாதவர்க்கு எமராஜா
ன்னு அவங்க சொன்னதை அவங்கிளுக்கே எடுத்து விட உங்களுக்குத் தெரியாதா என்ன, கோவி? :-))))
இன்னொரு முக்கியமான செய்தி!
கோவி அண்ணா புண்ணியத்தில்!
//அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்!
சேக்கிழாருக்கு சிதம்பரம் நடராஜன், 'உலகெல்லாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்//
இப்படி இறைவனால் ஒரு முழு அடியும் எடுத்துக் கொடுக்கப்பட்ட இன்னொரு தமிழ்ப் பெருந்தகையின் பிறந்த நாள் இன்று! (ஐப்பசி மூலம்)!
ஒரு காலத்தில் திருவரங்கத்தில், மொழியின் காரணமாகப் பெரும் சச்சரவு ஏற்பட்ட போது, தமிழை விட்டுக் கொடுக்கவே முடியாது என்றும்,
தமிழைப் பிரித்தால் அரங்கனே பிரிவான் என்று சொல்லிப் பெரும் புரட்சியைச் செய்தவர்! ஒரு கட்டத்தில் அதனால் மதமே பிளவுபடும் வரை போனது! அப்போதும் தமிழ் வேதத்தை விட்டாரில்லை இந்தப் பெரியவர்!
அவர் பெயர் மணவாள மாமுனிகள்!
வைணவத்தில் இராமானுசருக்குப் பின் வந்த கடைசி ஆசார்யர்!
அவர் பிறந்த நாள் என்று பதிவு போட எண்ணி இருந்தேன்! நேரமின்மையால், கோவி அண்ணா புண்ணியம் கட்டிக் கொண்டார்! இங்கேயே பதிவின் செய்தியைச் சொல்லி விட்டேன்!
//அவர் பிறந்த நாள் என்று பதிவு போட எண்ணி இருந்தேன்! நேரமின்மையால், கோவி அண்ணா புண்ணியம் கட்டிக் கொண்டார்! இங்கேயே பதிவின் செய்தியைச் சொல்லி விட்டேன்!//
ரவி,
கவலையை விடுங்க, குமரன் போட்டு இருக்கிறார்.
அங்கு நானும் என்பங்குக்கு பெருமாளுக்கு அர்சனை செய்து வந்திருக்கிறேன்.
:)
அருணகிரி முதலில் பாடிய முத்தான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.
அட! கோவாலுக்கு இவ்வளோ குசும்பா? :-)))
ஆகா. உங்களுக்கும் வாரியார் ஆசிகளும் அவர் தம் திருக்கைகளால் பரிசுகளும் கிடைத்ததா? ரொம்ப மகிழ்ச்சி. அதனால் தான் மனத்திற்குகந்தவன் திருமால் என்றாலும் நாமிருவரும் முருகனைப் போற்ற இந்த அளவிற்குப் போட்டி போடுகிறோமோ? இப்போது தானே புரிகிறது. :-)
நானும் சின்ன வயசுல இந்தப் பாட்டை மனப்பாடமா பாடி பலரிடம் அளப்பரை விட்டிருக்கேன்; பாராட்டுகளும் கிடைச்சிருக்கு. நல்ல வேளையா என் மனைவிக்கிட்ட வந்து சவால் விடலை; விட்டிருந்தா இரத்னேஷ் கதி தான் எனக்கும் கிடைச்சிருக்கும். :-)
//இதெல்லாம் நாமதான் நம்பனும், சிதம்பரம் தீட்சிதர்கள் நம்ப மாட்டார்கள்.
//
கோவி.கண்ணன். நீங்க இதெல்லாம் நம்புறீங்கன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். :-)
அதே போல் சிதம்பரம் தீட்சிதர்கள் நம்புறாங்களா இல்லையான்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அவங்க நம்பாமத் தான் திருமுறைகளைப் பாடிக் கொண்டு இருக்கிறார்களா? :-)
கொளுத்திப் போடுவதில் என்ன தான் உங்களுக்கு இவ்வளவு இன்பமோ? சில நேரங்களில் 'முக்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை'ன்னு திருவாதவூர் அடிகள் மாணிக்கவாசகர் பாடுனதைப் பாடணும் போல இருக்கு. ஆனால் கடைசியா ஒரு சிரிப்பானையும் போட்டுட்டுப் போயிடறீங்க. நானும் போட்டுக்கறேன். :-)))
//அங்கு நானும் என்பங்குக்கு பெருமாளுக்கு அர்சனை செய்து வந்திருக்கிறேன்.
//
கோவி.கண்ணன். உங்கள் அருச்சனையைப் பெருமாள் அன்போட ஏற்றுக் கொண்டார் போலத் தான் தெரிகிறது.
இந்த 'அருணகிரிநாதர்' திரைப் படத்தையும் அண்மையில் மதுரைக்குச் சென்ற போது வாங்கி வந்தேன் இரவிசங்கர். வழக்கம் போல் நானும் என் மகளும் பார்த்து மகிழ்ந்தோம். மகன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டும். :-)
//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன். நீங்க இதெல்லாம் நம்புறீங்கன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். :-)//
நாம என்பது நம்புபவர்களு குறித்து சொன்னேன். நீங்களும் கூட 'கற்குவியல்' என்று நான் சொன்னதை வைத்து 'நாம கற்குவியல்' என்று உங்கள் பதிவில் எனக்கு மறுமொழி சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக நீங்களும் கற்குவியல் என்று சொல்கிறீர்கள் என்று நான் பொருள் கொள்ள மாட்டேன்.
:)
//அதே போல் சிதம்பரம் தீட்சிதர்கள் நம்புறாங்களா இல்லையான்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அவங்க நம்பாமத் தான் திருமுறைகளைப் பாடிக் கொண்டு இருக்கிறார்களா? :-)
கொளுத்திப் போடுவதில் என்ன தான் உங்களுக்கு இவ்வளவு இன்பமோ? சில நேரங்களில் 'முக்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை'ன்னு திருவாதவூர் அடிகள் மாணிக்கவாசகர் பாடுனதைப் பாடணும் போல இருக்கு. ஆனால் கடைசியா ஒரு சிரிப்பானையும் போட்டுட்டுப் போயிடறீங்க. நானும் போட்டுக்கறேன். :-)))//
உங்களுக்கு சிதம்பரம் தீட்சிதர் என்றதும் நடப்பு மட்டும் நினைவுக்கு வருகிறது, நான் சொன்னது சைவ திருமுறைகள் தீட்சிதர்களால் பூட்டப்பட்டு கரையானுக்கு உணவாக்கியாது குறித்து.
:)
நான் கொளுத்திப் போட்டத்தில் நட்டம் இல்லை. தீட்சிதர்கள் கரையானுக்கு போடத்தில் தான் பல திருமுறைகள் கிட்டாமலே போனது.
எனக்கு எம்ஜிஆர் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' - இது உங்களைக் குறித்து அல்ல. :-)
உண்மை தான் கோவி.கண்ணன். நாம்/நமக்கு என்று நாம் இருவரும் மரியாதை நிமித்தமாக நமக்கு ஒப்புதல் இல்லாத ஒன்றிலும் நம்மை இணைத்துக் கொண்டு சொல்லியிருக்கிறோம். :-)
நீங்கள் சிதம்பரம் தீட்சிதர்களைப் பற்றிச் சொன்னதில் எனக்கு கால வேறுபாடுகள் தெரியவில்லை. அதனால் தற்காலத்தைத் தான் சொல்கிறீர்களோ என்று பதில் சொல்லிவிட்டேன். 'காலம்' உங்கள் சொத்து. நீங்கள் எந்தக் காலத்தைப் பற்றிச் சொன்னீர்கள் என்று நீங்கள் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். எனக்கு 'காலம்' எப்படி இருக்க வேண்டும், எந்தக் காலத்தைப் பற்றி எப்போது பேச வேண்டும் என்ற அறிவும் உரிமையும் கிடையாது. :-)
உங்களுக்கு நினைவுக்கு வந்த அதே பாடல் எனக்கும் நினைவிற்கு வருகிறது. எத்தனைக் 'காலம்' தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - ஆனால் கட்டாயமாக அது உங்களைக் குறித்து இல்லை. :-)
// அவங்க நம்பாமத் தான் திருமுறைகளைப் பாடிக் கொண்டு இருக்கிறார்களா? :-)//
குமரன்,
இப்போ பாடுவது வேறு வழியின்று வயிற்றுப் 'பாட்டுக்காக', திருமுறைகள் இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கை எனக்கு இல்லாதது குறையே இல்லை. அவர்களுக்கும் இல்லை என்பது ஏன் உங்களுக்கு குறையாக தெரிவதில்லை.
கோவி.கண்ணன்.
அவர்கள் காலம் காலமாகப் பாடி வந்ததை - சரி கரையான் அரித்தது போக மற்றவை கிடைத்தக் காலம் முதலாகப் பாடி வந்ததை - இன்னும் சொல்லப்போனால் இராஜராஜ சோழன் காலம் முதலாகப் பாடி வந்ததை - நீங்கள் வயிற்றுப் பாட்டிற்காக என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எல்லாமே வயிற்றுப் பாட்டிற்காகத் தானே நடக்கிறது. இராஜராஜனின் காலத்தில் வேண்டுமானால் அது 'வேறு வழியின்றிப்' பாடப்பட்டதாக இருக்கலாம்; ஆனால் அது இப்போதும் அப்படித் தான் என்று எப்படி சொல்ல முடியும்?
திருமுறைகள் இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? இங்கேயும் எனக்கு இப்போது ஒரு 'கால'க் குழப்பம் வருகிறது. இப்போது அவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா, இராஜராஜன் காலம் வரை இல்லாமல் இருந்தது என்று சொல்கிறீர்களா? நீங்கள் எழுதியவற்றில் இந்தக் காலக் குழப்பம் மீண்டும் மீண்டும் வருகிறது.
டிஸ்கி: தில்லையில் தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவரும் திருச்சிற்றம்பலத்தில் ஏறி தீந்தமிழ்ப் பனுவல்களைப் பாடும் உரிமை வேண்டும் என்பதே என் கருத்து. அதைப் பல முறை பல இடங்களில் சொல்லிவிட்டேன். அது கடந்த காலம் என்பதால் நிகழ் காலத்தில் இப்படி ஒரு டிஸ்கி போட்டு வைக்கிறேன். :-)
ஆகா. இந்தப் பின்னூட்டத்தில் தான் எத்தனை 'காலம்' வருகிறது. எல்லாம் நண்பர்களின் 'கூடலால்' வந்த நல்வினை. :-)
//கோவி.கண்ணன்.
அவர்கள் காலம் காலமாகப் பாடி வந்ததை - சரி கரையான் அரித்தது போக மற்றவை கிடைத்தக் காலம் முதலாகப் பாடி வந்ததை - இன்னும் சொல்லப்போனால் இராஜராஜ சோழன் காலம் முதலாகப் பாடி வந்ததை - நீங்கள் வயிற்றுப் பாட்டிற்காக என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எல்லாமே வயிற்றுப் பாட்டிற்காகத் தானே நடக்கிறது. இராஜராஜனின் காலத்தில் வேண்டுமானால் அது 'வேறு வழியின்றிப்' பாடப்பட்டதாக இருக்கலாம்; ஆனால் அது இப்போதும் அப்படித் தான் என்று எப்படி சொல்ல முடியும்? திருமுறைகள் இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? இங்கேயும் எனக்கு இப்போது ஒரு 'கால'க் குழப்பம் வருகிறது. இப்போது அவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா, இராஜராஜன் காலம் வரை இல்லாமல் இருந்தது என்று சொல்கிறீர்களா? நீங்கள் எழுதியவற்றில் இந்தக் காலக் குழப்பம் மீண்டும் மீண்டும் வருகிறது.
//
குமரன்,
காலம் காலமாக அவர்களில் பலரும் பாடவில்லை. ஞான சம்பந்தர் போல ஒரு சிலர் அத்தி பூத்தார் போல பாடி வந்தனர். அதுவும் சமண / பெளத்த சமயத்தால் வைதீகம் அழிந்துவிடும் என்ற அச்சத்தால், சைவ வேளார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் பாடிவந்தனர், அந்த இடத்தில் நம்பூதிரீகள் தீட்சிதர்களாக வேசம் கட்டிக் கொண்டு தாங்கள் 999 சிவகனங்கள் காசியில் இருந்து வந்ததாகவும், 1000 ஆவது சிவகனமாக சிவனே வந்திருப்பதாகவும் பொய்யைச் சொல்லி உள்ளே நுழைந்தனர், இன்னும் இதற்கும் உச்சமாக பின்னாளில் சிவலோகத்தில் தேரில் வந்து இறங்கியதாகவும் கதையளந்து சிதம்பரத்தை கைப்பற்றினர். அதன் பிறகு சைவ திருமுறைகள் பூட்டப்பட்டு சிவாச்சாரியார்கள், சிவனடியார்களை துறத்திய நிகழ்வு. வயிற்றுப்பாட்டுக்கு பாடியதெல்லாம் இராஜராஜன் ஆளுமைக்கு பயந்தேதான். பயபக்தியுடன் அல்ல. இன்று பார்பனர்களில் பலர் தமிழ் நீசபாசை என்று சொல்லுவது தாங்கள் அறியாததல்ல. தொடந்து தமிழை புறக்கணித்தால் துறத்தப்படுவோம் என்ற அச்சத்தினால் தான் இன்று வேறு வழியின்றி பாடிவருகிறார்கள்.
//டிஸ்கி: தில்லையில் தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவரும் திருச்சிற்றம்பலத்தில் ஏறி தீந்தமிழ்ப் பனுவல்களைப் பாடும் உரிமை வேண்டும் என்பதே என் கருத்து. அதைப் பல முறை பல இடங்களில் சொல்லிவிட்டேன். அது கடந்த காலம் என்பதால் நிகழ் காலத்தில் இப்படி ஒரு டிஸ்கி போட்டு வைக்கிறேன். :-) //
இதற்கெல்லாம் வேண்டுகோள் வைக்கும் கேவல நிலைதான் இந்த 'காலத்திலும்' தொடர்கிறது. இதெல்லாம் இறைவனின் சம்மதத்துடன் நடக்கிறது என்று சொன்னால் இதையெல்லாம் சம்மதிப்பவன் இறைவனா ? அல்லது அவன் பெயரில் சொய்யும் மோசடியா ? என்ற கேள்விகள் கூட ஞாயம் தான்.
கோவி.கண்ணன். நீங்கள் கடைசியாகச் சொன்னதில் சில உண்மைகள் இருக்கின்றன (அதாவது நானும் உண்மை என்று நினைப்பவை இருக்கின்றன); சில தவறான புரிதல்கள் இருக்கின்றன (அதாவது நான் அவை உண்மை இல்லை என்று நினைப்பவை இருக்கின்றன). அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பேச வேண்டாம். காலம் கனியும்; நம் கருத்துகள் மாறும். நீங்களும் இன்னும் படித்து அறிய வேண்டியது நிறைய இருக்கிறது. நானும் படித்து அறிய வேண்டியது நிறைய இருக்கிறது.
முருகனருளில் திருப்புகழைப் பற்றிப் பேசுவதை விட சிதம்பரத்தைப் பற்றிய பேச்சு அதிகமாகிவிட்டது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம் கோவி.கண்ணன். வருங்காலத்தில் (கடந்த காலம், நிகழ் காலம் சொல்லிவிட்டோம். வருங்காலம் மட்டும் சொல்லாமல் இருந்தென். இப்போது அதையும் சொல்லிவிட்டேன்) கட்டாயம் அதனைப் பற்றிப் பேச வாய்ப்புகள் கிடைக்கும். இந்தக் காலத்திலேயே பேசலாம் என்றால் கட்டாயம் பேசலாம் - இன்னொரு இடத்தில்.
இப்போதல்ல்வா தெரிகிறது தங்களது பக்தி எழுத்தாற்றலின் காரணம்....
காளிதாஸனுக்கும், மூகருக்கும், சம்பந்தருக்கும் அன்னை தாம்பூலத்தால், பாலால், பேச/பாட வைத்தது போல உங்களுக்கு வாரியார் ஸ்வாமிகள் ஹஸ்த தீக்ஷை அளித்திருக்கிறார்...
நல்லதொரு பாட்டு.
நயம்படச் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தினை நகைச்சுவைத் தேன் கலந்து!
கிருபானந்த வாரியாரிடம் பரிசு வாங்கினீர்களா? அடடா.. மகிழ்ச்சி! கண்ணெதிரே நிறுத்திப் பார்த்தேன் அந்தக் காட்சியினை.. பரவசம் அடைந்தேன்.
சுட்டிகளைத் தந்தமைக்கும், பாடலைப் பதம் பிரித்துச் சொன்னமைக்கும் நன்றிகள் பல.
தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.
முருகனருள் முன்னிற்கும்.
"பத்து தலை எத்த"
இராமாயனத்துக்கும் கந்த புராணத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என எங்கோ படித்த நினைவு.
அருணகிரியாருக்கும் அதன் பாதிப்பா?
//Seenu said...
"பத்து தலை எத்த"//
அது பத்துத் தலை, தத்த!
தந்தக் கணைகளால், பாணம் விட்டு பத்து தலைகளையும் அழித்த பெருவலியை அருணகிரி குறிப்பிடுகிறார்!
//இராமாயனத்துக்கும் கந்த புராணத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என எங்கோ படித்த நினைவு.
அருணகிரியாருக்கும் அதன் பாதிப்பா?//
ஹிஹி
ஜிரா, வந்து பதில் சொல்லுங்க!
ஆமாங்க சீனா
இராமாயணமும், கந்தபுராணமும் கதைநடையில் கிட்டத்தட்ட ஒட்டிச் செல்பவை தான்!
என்ன முன்னதில் தெய்வம் மனிதனாய் வந்தது
பின்னதில் தெய்வம் தெய்வமாய் வந்தது!
கதைப் பாத்திரங்களும், குறிப்பா அசுரர் பாத்திரங்கள் - தம்பிமாரும், தங்கை அசமுகியும்...ஒத்து வரும்!
இது பற்றித் தனிப் பதிவே போடலாம்!
என்ன சொல்றீங்க ஜிரா, செய்யலாமா?
//Raghavan alias Saravanan M said...
நல்லதொரு பாட்டு.
நயம்படச் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தினை நகைச்சுவைத் தேன் கலந்து!//
இந்தப் பாட்டு, பல பசங்களுக்கு அலர்ஜி-ங்க ராகவன்!
அதான் கொஞ்சம் நகைச்சுவை!
//அடடா.. மகிழ்ச்சி! கண்ணெதிரே நிறுத்திப் பார்த்தேன் அந்தக் காட்சியினை.. பரவசம் அடைந்தேன்//
மிக்க நன்றி.
//சுட்டிகளைத் தந்தமைக்கும், பாடலைப் பதம் பிரித்துச் சொன்னமைக்கும் நன்றிகள் பல//
பாடலின் பொருளை இன்னொரு பதிவில் சிம்பிளாக இடுகிறேன்.
SK ஐயாவின் திருப்புகழ் விளக்கங்களையும் பாருங்கள்!
//மதுரையம்பதி said...
இப்போதல்ல்வா தெரிகிறது தங்களது பக்தி எழுத்தாற்றலின் காரணம்....
காளிதாஸனுக்கும், மூகருக்கும், சம்பந்தருக்கும் அன்னை தாம்பூலத்தால், பாலால், பேச/பாட வைத்தது போல உங்களுக்கு வாரியார் ஸ்வாமிகள் ஹஸ்த தீக்ஷை அளித்திருக்கிறார்...//
ஆகா!
அடியேன் பெற்ற பேறு அது மெளலி!
அப்போது தெரியவில்லை! இப்போது புரிகிறது!
நறும் பூவோடு சேர்ந்த நார் ஆனேன் போலும்!
//சாத்வீகன் said...
அருணகிரி முதலில் பாடிய முத்தான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி//
அதான் முத்தான பாடலில் முத்துன்னே வந்து விட்டது...நன்றி சாத்வீகன்!
//துளசி கோபால் said...
அட! கோவாலுக்கு இவ்வளோ குசும்பா? :-)))//
ஹிஹி
டீச்சர், இது உங்களவர் இல்லை! :-))
இந்தப் பையன் இப்போ பரம சாது ஆயிட்டான்! நான் தான் வாலு ஆயிட்டேன்! :-)
பாருங்க,
அப்பவே எனக்கு "டீச்சர்" ன்னா ஃப்ரெண்டு தான்! :-)
//குமரன் (Kumaran) said...
ஆகா. உங்களுக்கும் வாரியார் ஆசிகளும் அவர் தம் திருக் கைகளால் பரிசுகளும் கிடைத்ததா? ரொம்ப மகிழ்ச்சி.//
குமரன்
உங்க மதுரைக் கோபுரப் பதிவில், வாரியார் சுவாமிகளிடம் நீங்கள் பரிசு பெற்றதைக் குறிப்பிட்டிருந்தீர்களே! அதைப் படித்த போதே நானும் இப்படித் தான் நினைத்துக் கொண்டேன்! - "நாமிருவரும் முருகனைப் போற்ற இந்த அளவிற்குப் போட்டி போடுகிறோமோ?" :-)))
//நல்ல வேளையா என் மனைவிக்கிட்ட வந்து சவால் விடலை; விட்டிருந்தா இரத்னேஷ் கதி தான் எனக்கும் கிடைச்சிருக்கும். :-)//
ஹிஹி - அங்க தான் நம்ம ரத்னேஷ் நிக்கறாரு! :-))
//கோவி.கண்ணன் said...
கவலையை விடுங்க, குமரன் போட்டு இருக்கிறார்.
அங்கு நானும் என்பங்குக்கு பெருமாளுக்கு அர்சனை செய்து வந்திருக்கிறேன்.
:)//
பாத்துட்டேன் கோவி!
அங்கு மட்டுமா அர்ச்சனை!
இங்கும் நடப்பதைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்! :-))
//குமரன் (Kumaran) said...
இந்த 'அருணகிரிநாதர்' திரைப் படத்தையும் அண்மையில் மதுரைக்குச் சென்ற போது வாங்கி வந்தேன் இரவிசங்கர். வழக்கம் போல் நானும் என் மகளும் பார்த்து மகிழ்ந்தோம். மகன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டும். :-)//
சூப்பர்! மீள்பதிவு மாதிரி மீள்படம் பார்த்தலா? கலக்குங்க!
நான் எப்பவோ பார்த்தது!
Youtube-இல் தேடணும் முழுப் படம் இருக்கான்னு! இல்லின்னா ஜிராவைக் கேட்கிறேன். இதுக்காகவே இங்கிட்டு ஓடியாந்து கொடுக்க மாட்டாரா என்ன! :-)
குமரன், கோவி
தீட்சிதர்கள் பற்றிய தங்கள் வாதங்களைக் கவனித்துக் கொண்டு தான் வந்தேன். இன்னொரு நாளில் இது பற்றித் தனியாகப் பேசுவோம்!
கோவி
தில்லை வாழ் அந்தணர்கள் = தீட்சிதர்கள் என்ற நினைப்பினால் நீங்கள் அப்படிச் சொல்லி இருக்கலாம்! ஆனால் உண்மை அதுவல்ல!
மேலும் திருமுறைகளைக் கரையானிடம் இருந்து காத்தவர் நம்பியாண்டார் நம்பி என்ற அந்தணர் தான்! சிவாச்சாரியார் அவர்!
வயிற்றுப் பிழைப்புக்காக அரை மனதாக அம்பலத்தில் பாடுவது எல்லாம் விடுங்கள்! இராஜராஜன், இராஜேந்திரன் மேலிருந்த பயம் இன்றும் உள்ளதா-ன்னு நமக்குத் தெரியாது!
ஆனா தில்லையில், அதே வளாகத்தில், கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் அதே தீட்சிதர்கள் தான் பணி புரிகிறார்கள்!
தமிழ் வேதங்களை அங்கு பாடியே ஆக வேண்டும்!
அவர்கள் மட்டுமில்லை! யார் வேண்டுமானாலும் பாடலாம்!
பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலில் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும், அவர்கள் ஆலய நுழைவு, வாழ்வு முறை பற்றியும் நிறைய சேதிகள் வரும்! படிச்சிப் பாருங்க! ஒங்களுக்குப் பிடித்து விடும்! :-))
@கே. ஆர். எஸ்,
//இந்தப் பாட்டு, பல பசங்களுக்கு அலர்ஜி-ங்க ராகவன்!
அதான் கொஞ்சம் நகைச்சுவை!//
நன்றாகச் சொன்னீர்கள். சரிதான். ஆரம்பத்தில் மிகவும் சிரமம் தான். சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டும்.
நானும் அந்த அளவிலேயே இருக்கிறேன். படிப்படியாக முன்னேறிக் கொண்டு..
//பாடலின் பொருளை இன்னொரு பதிவில் சிம்பிளாக இடுகிறேன்.
SK ஐயாவின் திருப்புகழ் விளக்கங்களையும் பாருங்கள்!
//
அவசியம் பார்க்கிறேன். நன்றி.
அன்பர்களே ! அருணகிரியாரின் திருப்புகழ் அமிர்தம் போல் இனிக்கிறது. கேட்கக் கேட்க இனிமை. எத்தனை முறை கேட்டு விட்டோம். திகட்டாதே!
பின்னூட்டங்களில் விவாதம் அதிகமாக இருக்கிறது. சுவாரசியமாகவுமிருக்கிறது. புதுப் புது செய்திகள் அறிந்து கொள்ள உதவுகிறது. இருப்பினும் பதிவின் நோக்கம் திசை மாறிச் செல்கிறதோ எனப் பயமாக இருக்கிறது.
பார்த்துக் கொள்ளுங்கள்
//cheena (சீனா) said...
புதுப் புது செய்திகள் அறிந்து கொள்ள உதவுகிறது. இருப்பினும் பதிவின் நோக்கம் திசை மாறிச் செல்கிறதோ எனப் பயமாக இருக்கிறது.
பார்த்துக் கொள்ளுங்கள்//
பயப்படாதீங்க சீனா!
நன்மையிலேயே முடியும்!
திசைகள் நடுவில் மாறினாலும்...போகிற இடத்துக்கு முருகனருளால் சரியாகப் போய்ச் சேர்ந்து விடலாம்! :-)
குமரனும் கோவியும் விவாதத்தை ஒத்தி வைத்துள்ளனர்! பாருங்கள்!
கவலையை விடுங்கள்!
அருமையான பதிவு.நகைச்சுவையாகவும்,பொருள் பொதிந்தும் உள்ள இடுகை.முருகன் தொடர்ந்து அருள் புரிவானாக.
அருமையான பதிவு.நகைச்சுவையாகவும்,பொருள் பொதிந்தும் உள்ள இடுகை.முருகன் தொடர்ந்து அருள் புரிவானாக.
Post a Comment