037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை
ஒரு பாடல் இசையமைக்கப்பட வேண்டும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட படக்காட்சிக்கு. படக்காட்சியின் நீளம் கிட்டத்த பத்தரை நிமிடங்கள். அந்தப் படக்காட்சியும் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுத்தது. ஆகவே காட்சிகள் ஒழுங்குக்குள் வராமல் இருக்கும். தேங்காய் உடைப்பார்கள். சூடம் காட்டுவார்கள். காவடி தூக்குவார்கள். அலகு குத்துவார்கள். நடுநடுவே கதாநாயகனும் நாயகியும் கூட்டத்தில் தென்படுவார்கள். இப்படி ஒரு படச்சுருளை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்தார் இயக்குனர் சங்கர். சொன்ன வேலையைச் செய்வார் என்ற நம்பிக்கை.
மெல்லிசை மன்னரும் மலைக்கவில்லை. கவியரசர் கண்ணதாசனின் தமிழ் உதவிக்கு இருக்கையில் என்ன கவலை? பாடல் பிறந்தது. மெட்டும் போட்டாகி விட்டது. ஆனால் யார் பாடுவது? பத்தரை நிமிடங்களுக்கு? சரி. ஒருவர் பாடினால் அலுத்து விட்டால்? அறுமுகனைப் போற்றி ஆறுபேர் பாடினால்? ஆம். மெல்லிசை மன்னர், டீ.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரம்ணியம்மாள், இசையரசி பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி ஆகிய அறுவரும் பாடிப் பதிவானது பாடல். படச்சுருளுக்கு மிகப் பொருத்தமாக.
வருவான் வடிவேலன் என்ற திரைப்படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் திரைப்படம் பெருவெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இயல்பிலேயே மெல்லிசை மன்னர் முருகபக்தராம். இந்தப் பாடலில் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
சீர்காழி கோவிந்தராஜன்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்
டி.எம்.சௌந்தரராஜன்
சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி
தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே
அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
எல்.ஆர்.ஈசுவரி
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
அரோகரா அரோகரா
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி
சீர்காழி: முருகா முருகா முருகா முருகா
எல்.ஆர்.ஈசுவரி
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி
டி.எம்.சௌந்தராஜன்
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி
டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்து
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
பி.சுசீலா
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா
வானத்தில் உன்னொளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
டி.எம்.சௌந்தரராஜன்
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பி.சுசீலா
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணையைப் பொழிவதும் முருகனடி
சீர்காழி கோவிந்தராஜன்
தண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
மெல்லிசை மன்னர்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
ஆனந்த தரிசனம் காணுகிறோம்
அவன் அழகிய தேரினை வணங்குகிறோம்
ஞாலத்து தேசிகன் மார்பினிலே
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
அனைவரும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
பெங்களூர் ரமணியம்மாள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில்
வாடிய பயிரை தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
இடம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல்
வரம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
அனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலா
பெங்களூர்: தெய்வானைக் காவலா
அனைவரும்: வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா
இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் விரும்பினேன். ஆனால் பாடலின் நீளம் அதை வலையேற்ற விடாமல் தடுக்கிறது. ஆனால் பாடலை மெயிலில் அனுப்ப முடியும். பாடலைக் கேட்க விரும்புகிறவர்கள் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடலனுப்பவும். பாடலை நான் அனுப்புகிறேன்.
இந்தப் பாடலுக்குப் படமும் போட்டால் நன்றாக இருக்குமே! அதுவும் நான் இந்தக் கோயிலுக்குச் சென்ற பொழுது எடுத்த படங்களை இங்கே கொடுத்தால்! இதோ கொடுக்கிறேன். பத்துமலை முருகன் கோயிலில் நான் சமீபத்தில் அறுபடை வீடுகளில் கூட அனுபவிக்காத ஒரு ஆனந்த அனுபவத்தைக் கண்டேன். மலேசியத் தமிழர்களே இந்தத் திருக்கோயிலை இப்படியே சிறப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துமலை முருகனின் பேருருவம். அளவிட முடியாத அருளுடையானுக்கு மனிதர்களால் அளவிட முடிந்த உயரத்தில் திருவுருவம்.
அதே முருகன். ஆனால் பின்புலத்தில் மலையோடும்...முன்புலத்தில் மக்களோடும் மண்டபங்களோடும்.
திருக்கோயிலுக்கும் வாழ்விற்கும் உயர்த்தி விடும் படிக்கட்டுகள்.
வரையேறி வருவோரை வரவேற்கும் வடிவேலன்.
அதே வரவேற்பு. ஆனால் குகையின் முகப்புத் தோற்றத்தோடு.
பத்துமலை முருகன் குடிகொண்ட கருவரை. இங்கு புகைப்படும் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது. அது சுற்றுலாத்தலம். அதனால் அப்படி என்று சொல்கிறவர்கள் பண்டரீபுரத்திலும் படமெடுக்க அனுமதிக்கப்படுகிறது என்ற தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.
பத்துமலை முருகன் தங்கப்பத்து அலங்காரத்தோடு.
உள்ளே எழுந்திருக்கும் மற்றொரு முருகன் கோயில்.
வள்ளி தெய்வானையுடம் அமர் சோலை. அது மலேசியப் பத்துமலை எனும் சோலை.
அன்புடன்,
கோ.இராகவன்
21 comments:
பாடலை மிகவும் சிறப்பாகப் பதிந்துள்ளீர்கள் நண்பரே!
இவ்வள்வு பாடகர்கள் பாடிய தமிழ்
பக்திப் பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானா?
// SP.VR. சுப்பையா said...
பாடலை மிகவும் சிறப்பாகப் பதிந்துள்ளீர்கள் நண்பரே! //
நன்றி ஐயா.
// இவ்வள்வு பாடகர்கள் பாடிய தமிழ்
பக்திப் பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானா? //
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நவக்கிரகநாயகி என்ற படத்தில் நவகிரகங்களையும் போற்றி ஒரு பாடல் வரும். அதில் எத்தனை பேர்கள் பாடியிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
இன்னொரு ஐவர் பாட்டு இருக்கிறது. அது தாய்மூகாம்பிகை படத்தில். பாலமுரளிகிருஷ்ணா கலைமகளுக்குப் பாடுவார். அடுத்து மெல்லிசை மன்னர் அலைமகளுக்குப் பாடுவார். அதைத் தொடர்ந்து சீர்காழி மலைமகளைப் பாடுவார். அது முடிந்ததும் மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் மூகாம்பிகையைப் பாடுவார்கள். இதற்கு இசை இளையராஜா. ஆனால் இதில் ஐவர்தான். பத்துமலைப் பாடலில் அறுவர். அதிலும் புகழ்பெற்ற அறுவர்.
மேலே நான் குறிப்பிட்ட பாடல்கள் கொண்ட படங்கள் அனைத்தையும் இயக்கியவர் கே.சங்கர்.
பக்தி பாடலும், பத்துமலை முருகனின் படங்களும் அருமை. :-)
என்ன சொல்லிப் போற்றுவது!
எப்படி உம்மைப் புகழ்வது?
முருகா முருகா முருகா!
//பத்துமலை முருகன் கோயிலில் நான் சமீபத்தில் அறுபடை வீடுகளில் கூட அனுபவிக்காத ஒரு ஆனந்த அனுபவத்தைக் கண்டேன்//
ஜிரா
"அறுபடை வீடு கொண்ட திருமுருகா" - பாடலை இப்படி அறுவரை வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் புகழ் பத்துமலைக்குத் தான் செல்ல வேண்டும் என்று மருகன் மனம் வைத்தான் போலும்!
புதியனவற்றுக்குத் தானே புகழொளியைத் தூண்டி விட வேண்டும்! இயற்கையாய் அமைந்து விட்டது!
இனியது கேட்கின்-இல் இனி எது கேட்க விழைந்த போது, இனி அது இங்கும் கேட்க வழி செய்தீர்கள்! நன்றி!
//மலேசியத் தமிழர்களே இந்தத் திருக்கோயிலை இப்படியே சிறப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்//
காதில் விழுந்ததா நண்பர்களே! :-)
வாராது வந்த மாமணி இந்தக் கோவில். பொக்கிஷம் அல்லவா! நிச்சயம் அவன் அருளால் அனைவராலும் காக்கப்படும்!
இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன் இராகவன். இந்தப் பாடலில் கடைசியில் அவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார்களே. அது மிக அருமையாக இருக்கிறது.
உங்கள் தயவால் குகையில் அமர்ந்திருக்கும் குகனைத் தரிசித்தேன். மிக்க நன்றி.
ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவிலில் தமிழ் வருடப் பிறப்பன்று மிகவும் கோலாகலமாக இருக்கும். தெப்பம்பட்டியில் குறவர் காவடி வரக் காத்திருந்து, அவர்கள் தந்தனைத் தானானே போட்டு பாடும் குறவள்ளி பாடல்களைக் கேட்டபடி, அவர்களுடன் சேர்ந்து கோவிலுக்குப் போன நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தத் தருணத்தில், உங்கள் தெள்ளத் தெளிவானப் படங்களுடனான பதிவு மன நிறைவைத் தருகிறது. வேல் வேல். வேல் மயில். வடிவேல் முருகனுக்கு அரோகரா!
அண்ணா,
rapidfire.de போன்ற ஒரு தளத்தில் தரவேற்றம் செய்து சுட்டியைத் தந்தால் தேவைப்படுபவர்கள் (என் போல) தரவிறக்கிக் கொள்வது எளிதாக இருக்குமே.
மன்னிக்கவும் அந்தத் தளம் rapidshare.de என்று இருக்க வேண்டும்.
// .:: மை ஃபிரண்ட் ::. said...
பக்தி பாடலும், பத்துமலை முருகனின் படங்களும் அருமை. :-) //
நன்றி மை ஃபிரண்ட். மிக அருமையான அனுபவம் அது.
// VSK said...
என்ன சொல்லிப் போற்றுவது!
எப்படி உம்மைப் புகழ்வது?
முருகா முருகா முருகா! //
அனைவரும் சொல்லிச் சொல்லிப் புகழ்வது போல நாமும் முருகா முருகா என்று சொல்வோம். அது போதும் அவனுக்கு.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
"அறுபடை வீடு கொண்ட திருமுருகா" - பாடலை இப்படி அறுவரை வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் புகழ் பத்துமலைக்குத் தான் செல்ல வேண்டும் என்று மருகன் மனம் வைத்தான் போலும்!
புதியனவற்றுக்குத் தானே புகழொளியைத் தூண்டி விட வேண்டும்! இயற்கையாய் அமைந்து விட்டது! //
அதென்னவோ உண்மைதான் ரவி. முருகனைப் பற்றி திரைப்படங்களில் ஒரு பாட்டா இரண்டு பாட்டா? கவிஞர்கள் சொல்லால் தமிழால் எழுதிய பாக்களுக்கு இசையமைப்பாளர்கல் அழகு மெட்டிட்டு மகிழ்ந்திருந்தாலும் முதன் முதலாக பத்துமலைக்குத்தான் இந்தப் பெருமை போக வேண்டும் என்றிருந்திருக்கிறது பாருங்க. தெய்வம் திரைப்படத்தில் ஆறுபடை வீட்டிற்கும் ஆறு பாடகர்கள். ஆனால் அவை தனித்தனிப் பாட்டுகள். அத்தோடு அதில் பழமுதிர்ச்சோலை வராது.
// இனியது கேட்கின்-இல் இனி எது கேட்க விழைந்த போது, இனி அது இங்கும் கேட்க வழி செய்தீர்கள்! நன்றி! //
கந்தன் தருவதைத் தந்தேன். அவன் ஓவர்ஹெட் டேங்க். நான் குழாய். திறந்தான் தண்ணீர் வருகிறது. டேங்க் இல்லையென்றால் தண்ணீர் இல்லை. ஆனாலும் குழாயில் தண்ணீர் வருகிறது என்றுதான் வழக்கில் சொல்வது. :-)))))
// குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன் இராகவன். இந்தப் பாடலில் கடைசியில் அவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார்களே. அது மிக அருமையாக இருக்கிறது. //
வாய்ப்பிருக்கிறது குமரன். இந்தத் திரைப்படத்தில் உள்ள மற்ற சில பிரபல பாடல் "வருவான் வடிவேலன்", "நீயின்றி யாருமில்லை வழிகாட்டு முருகா"
// உங்கள் தயவால் குகையில் அமர்ந்திருக்கும் குகனைத் தரிசித்தேன். மிக்க நன்றி. //
அங்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் குமரன். குன்றின் மேல் குமரன் அமர்ந்ததை எங்கும் காணலாம். குன்றுக்குள்ளே அமர்ந்ததை திருப்பரங்குன்றத்திலும் பத்துமலையிலும் காணலாம். துப்புரவாகவும் இருக்கிறது. மலைநடுவே இருப்பதால் பறவை எச்சங்கள் அங்கங்கு கண்டாலும் பொதுவில் சிறப்பாகவே பராமரிக்கப்படுகிறது. சிறப்பு வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. இறைவன் முன்னின்று வணங்கலாம்.
வணக்கம் ராகவன்,
உங்கள் பாணியில் பாடல் பிறந்த கதையைச் சிறப்பாகச் சொல்லிடயிருக்கிறீர்கள். கில்லிக்குத் தொடுப்புக் கொடுத்திருக்கிறேன்.
இந்தப்பாடல் பிறந்த கதையை ஏற்கனவவே என் குரற்பதிவு செய்து பாடலோடு வைத்திருக்கிறேன். அதைப் பின்னர் என் ஒலித்தளத்தில் ஏற்றுகிறேன்.
இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்.
http://www.cooltoad.com/go/song?id=301009&get=bin
இந்த அருமையான பாடலின் வீடியோ இணைப்பைக் கொடுத்துள்ளேன். பத்துமலைக் கோலத்தின் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.
பத்து மலைக்காட்சிகளைக் கண்டு களித்தேன். மிக்க நன்றிகள் இராகவன். சிறுவயதில் மதுரை நியூசினிமா திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்த போது கூட இவ்வளவு நன்றாகப் பார்க்கவில்லை.
அன்பின் ராகவன்
அழகுதமிழ்ப் பாடல் - அருமையான பதிவு - பத்து மலைக் குமரனைப் பற்றிய பதிவு. தெய்வம் படத்தினில், மதுரை சோமு, டி.எம்.எஸ், சீர்காழி, பெங்களூர் ரமணியம்மாள். சூலமங்கலம் சகோதரிகள் என பல பாடகர்கள் அறுபடைவீட்டினைப் பற்றிப் பாடி இருப்பார்கள். அத்தனையும் அருமையான பாடல்கள். அவரவர் பாடும் முறைக்கேற்றபடி பாடல் எழுதும் திறமை கவியரசு ஒருவருக்கே உண்டு.
ஆனால் இங்கோ ஒரு நீண்ட பாடலுக்கு (10 மணித்துளிகள்), ஆறு பேர் பகுதி பகுதியாகப் பாடும் படி பாடலைத் தந்த கவியரசின் கறபனைத் திறனும் பாடல் எழுதிய விதமும் பாராட்டத்தக்கவை.
இப்படத்தினை நாங்கள் காரைக்குடி பாண்டியன் தியேட்டரிலோ அருணாச்சலாவிலோ பார்த்ததாக நினைவு.
முழுப்பாடலையும் கேட்டு மகிழ்ந்தோம். கண் கொள்ளாக் காட்சி - வீடியோ அருமையாகக் காட்ட ஆடியோ அழகாக ஒலித்தது. ரசித்தோம். மகிழ்ந்தோம்,
மற்றுமொரு மகிழ்ச்சி. என் மைத்துனர் மலேசியாவில் இருப்பவர் - இப்பாடலின் நடுவினில் மூன்று இடங்களில் நாயகன் நாயகி அருகினில் இருக்கிறார். நானும் எனது மனைவியும் மறுபடியும் கண்டு மகிழ்ந்தோம்.
முருகனருள் பரப்பும் முருக பக்தர்கள் அனவரையும் வணங்கி வாழ்த்துகிறோம்.
வலைச்சர வாயிலாக வ்ந்தோம்
பத்து மலை முருகன் பாடல் கேட்கும் போது உடலெல்லாம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
பதிவிறக்கம் செய்ய முடியவில்லையே
செயற்கரிய மிக ஈடுபாட்டுடன் ஆற்றிய தொண்டு முருகபக்த்தர்களுக்கும், MSV ,TMS, S GJ,ரசிகர்களுக்கும் விருந்து பாராட்ட பதங்கள் போதவில்லை
Post a Comment