கந்த சஷ்டி - 6: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
திருச்சீரலைவாய் அப்படிங்கிற ஊருக்குப் போய் இருக்கீங்களா?
இல்லியே அது எங்கப்பா இருக்கு?
அட, என்னங்க கடல் கொஞ்சும் செந்தூர்-ன்னு சொல்லுவாங்களே!
ஓ...திருச்செந்தூரைச் சொல்லுதீயளா? போயிருக்கோம்! போயிருக்கோம்!
போயிருக்கீங்க சரி...சூர சம்ஹாரம் என்னும் சூரனுக்கு அருளலைத் திருச்செந்தூரில் யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
பார்க்கலைன்னா, பதிவின் இறுதியில் அசைபடத்தில் (வீடியோவில்) காணுங்கள்! வாரியார் சுவாமிகளின் இளமைக் குரலும் கடைசியில் கேட்கிறது!
சரி, அது என்ன திருச்-சீர்-அலை-வாய்?
"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" என்று புறநானூறு சொல்கிறது.
வெள்ளலைகள் வீசி வீசி அலைக்கும் வாய்ப்புறம் = அலைவாய்!
-"திரு" என்னும் வெற்றித் திருமகள் விளங்க,
-"சீர்" (புகழ்) பெற்று
-"அலைவாயிலே" ஊர் விளங்குகிறது!
ஆம். இந்த ஊர் வெற்றிப் பட்டினம்! அதுவே இந்தச் செந்தில்!
ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன.
இப்படி ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது.
ஏமகூடத்தில் போர் நடந்தாலும், திருச்சீர்+அலைவாயின் கரையோரத்தில் தான், தமிழ்வேள் முருகன் பெற்ற அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது!
சூரன் ஆணவ மலம்!
மும்மலங்கள்=ஆணவம், கண்மம், மாயை; இதில் ஆணவம் மட்டும் வந்து விட்டால், மற்ற ரெண்டும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்துரும்!
செய்தது தவறு என்று தெரிந்த பின்னரும் கூட, ஆமாம்டா, செஞ்சேன்; இப்ப அதுக்கு என்னாங்குற-ன்னு பேச வைப்பது ஆணவம்!
குறைந்த பட்சம், குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்ற விடாது தடுப்பது தான் இந்த ஆணவம்!
இதுவே இராவணன், சூரன் ஆகியோரின் இயல்புகளாகச் சொல்லப்பட்டது!
சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே, உயிர்கள் இந்த மும்மலங்களை அறுத்து இறைவனிடம் சேர வேண்டும் என்பது தான். அதற்கும் இறைவன் அருள் தேவை! - அதைத் தான் முருகன் செய்தான். ஆணவத்தால் ஆடி விட்டுக், கடைசியில் தனி மரமாய் நின்றவனை, மருள் செய்து அருளினான். ஆணவம் அழிந்ததால், அவனடி தெரிந்தது.
திருச்செந்தூர் தலத்துக்கு இதுவரையிலும் செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை. அப்படியே மனத் திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!
திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :-)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!
முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது.
அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;
பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,
தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்! பாலமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும், திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ, அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...
கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!
உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!
செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!
இன்று கந்த சஷ்டி இறுதி நாள்!
இதோ இன்றைய பாட்டு! கேட்டு மகிழுங்கள்! - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
TMS-உம், சீர்காழியும் சேர்ந்து பாடுவது! தெய்வம் படத்துக்காகத் திருச்செந்தூரிலே படமாக்கப்பட்டது! குன்னக்குடி இசையில், கண்ணதாசன் எழுதியது!
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்
முருகா!!! - சஷ்டியின் ஆறு நாளும் அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!
சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
35 comments:
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். - திருச்செந்தூரில்.
இராவணனை கொன்ற மனக்கேதம் தீர இராமன் ஈசனை கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டது இராமேஸ்வரம்.
இராமயணத்திற்கும் கந்தபுராணத்திற்கும் ஒற்றுமைகளை யோசித்துக் கொண்டிருந்தேன் :)))
தங்களுக்கு கந்தசஷ்டி வாழ்த்துக்கள்.
ஓம் சரவணபவ.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......
ஞானவேல் முருகனுக்கு அரோகரா..
திருப்பரங்குன்றத்திலும் ஈசனுக்கே முதல் பூஜை....
"சரவணபவ எனும் திருமந்திரம்தனை சதா ஜெபி என்நாவே" அப்படின்னு ஒருபாடல் பாபநாசம் சிவன்னு நினைக்கிறேன். சந்தானம், சுதா இருவரும் பாடியிருக்கிறார்கள்...முடிந்தால் பதிவிடுங்கள்...
//இராமயணத்திற்கும் கந்தபுராணத்திற்கும் ஒற்றுமைகளை யோசித்துக் கொண்டிருந்தேன்//
Sathvigan Sir,
Netre naan ithu pattri kettirunthen. KRS avargal sirithu villaki irunthargal. Aanal vilakamaga ezhutha GR avargali kettiruthar. Ippothu ennodu neengalum serthullergal.
Nam aasaigali kUrivittom. Murugan GR avargali oru thani padhivu ida seyyattum.
அடடா.. அருமை!
இந்தப் பாட்டை நான் ஐந்து நாட்களாகத் தினமும் பார்த்து, கேட்டுப் பரவசமடைந்து வருகிறேன்.
கொள்ளை அழகு இருவரும் பாடுவது!
விளக்கமும் மிக நன்றாக இருந்தது!
நன்றிகள் பல அனைவருக்கும்!
அனைவருக்கும் என் இனிய கந்தசஷ்டி வாழ்த்துக்கள்.
முருகனருள் முன்னிற்கும்!
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
பதிவிற்கு மிக்க நன்றி! அனைவருக்கும் கந்தர் சஷ்டி வாழ்த்துக்கள்!
//சரவணபவ எனும் திருமந்திரம்தனை சதா ஜெபி என்நாவே" அப்படின்னு ஒருபாடல் பாபநாசம் சிவன்னு நினைக்கிறேன். சந்தானம், சுதா இருவரும் பாடியிருக்கிறார்கள்...முடிந்தால் பதிவிடுங்கள்...//
மதுரையம்பதி அவர்களே,
நீங்கள் விரும்பிக்கேட்ட பாடலை, கந்தர் சஷ்டி ஸ்பெஷலில் முதலாவதாக வந்த பதிவில் பார்க்கலாம்...
http://muruganarul.blogspot.com/2007/11/1.html
சுதா ரகுநாதன் பாடியது:
http://www.musicindiaonline.com/p/x/8qK2zrqQ89.As1NMvHdW/
திருச்செந்தூரைப் பற்றிய அருமையான வருணனை இரவிசங்கர். கந்தர் சஷ்டித் திருநாளான இன்று நிறையும் வண்ணம் ஆறு நாட்கள் முருகப்பெருமானை வழிபட்டு விரதம் இருப்பார்கள் அடியார்கள். என் பாட்டி வீட்டார் (தாய் வழி) அழகரப்பனை (கள்ளழகரை) குலதெய்வமாகக் கொண்டவர்கள்; ஆனால் இந்த கந்தர் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள்; என் தாய் மாமன்கள் இருவரும் இந்த ஆறு நாட்களும் மாலை மட்டும் பால் பழம் அருந்தி விரதம் இருக்கிறார்கள். புரட்டாசி போலவே கார்த்திகை முழுவதும் ஊனுணவு கொள்ளாமல் இருக்கிறார்கள்; கார்த்திகை விரதம் அவர்களுக்கு தீபாவளியன்று தொடங்கிவிடுகின்றது. :-)
வெண்டலை புணரி அலைக்கும் செந்தில் என்ற இலக்கியச் சொற்றொடரை முன்பு படித்திருக்கிறேன். ஆனால் அது புறநானூறு சொல்வது என்பதை இது நாள் வரை கவனத்தில் கொள்ளவில்லை. :-)
சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன். சிவலிங்கம் கருவறையிலேயே இருக்கிறதா? ஒரு முறை திருச்செந்தூர் சென்ற போது கருவறைக்குப் பக்கத்தில் ஒரு குகை போன்று இருந்த வழியாக அழைத்துச் சென்று ஐந்து சிவலிங்கங்களைக் காட்டீனார்கள். அவற்றைத் தான் சொல்கிறீர்களா?
சிவபெருமானுக்குப் பெயர் ஜகன்னாதரா? நன்றாக இருக்கிறது. :-) பொருத்தமான பெயரே.
பொருத்தமான பாடலை இட்டு சஷ்டி விரதப் பதிவுகளை நிறைவு செய்தீர்கள் இரவிசங்கர். அருமையான தொடர். மிக்க நன்றி.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
ஆஹா! சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்த்து என் ஷஷ்டி விரதம் பூர்த்தி அடைந்தது. நன்றிகள் பல.
//சாத்வீகன் said...
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். - திருச்செந்தூரில்.
இராவணனை கொன்ற மனக்கேதம் தீர இராமன் ஈசனை கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டது இராமேஸ்வரம்.
இராமயணத்திற்கும் கந்தபுராணத்திற்கும் ஒற்றுமைகளை யோசித்துக் கொண்டிருந்தேன் :)))//
சூப்பரு! யோசிச்சது போதும்!
ஒங்க ஸ்டைல்ல பதிவு போடுங்க தலைவா!
அப்பறம் இன்னோன்னு!
இராமன், முருகன்னு இல்ல...
கண்ணன், அம்பிகை, மற்றும் எவரும் சத்ரு சம்காரத்துக்குப் பின், அழித்தல் கடவுளான சிவனாரை ஏன் வழிபடறாங்க தெரியுமா? விடயம் இருக்கு!
//மதுரையம்பதி said...
ஞானவேல் முருகனுக்கு அரோகரா..
திருப்பரங்குன்றத்திலும் ஈசனுக்கே முதல் பூஜை....//
ஆகா, அப்படியா மெளலி!
ஆனா அங்கு முருகன் தவக் கோலம் இல்லியே! மணக் கோலம் ஆச்சே!
வைபவம் என்னவோ?
//சரவணபவ எனும் திருமந்திரம்தனை சதா ஜெபி என்நாவே//
அதான் சஷ்டிப் பதிவுகளின் முதல் பாடல்! அத ஜபிச்சிட்டு தான் ஒவ்வொண்ணா போட்டோம்! :-)
ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுங்க!
ஒங்க நேயர் விருப்பம் பாருங்க எப்படி கேக்குறதுக்கு முன்னாடியே நிறைவேறிடுச்சு! :-)
//Seenu said...
Sathvigan Sir,
Nam aasaigali kUrivittom. Murugan GR avargali oru thani padhivu ida seyyattum.
//
சீனு
சாத்வீகனே அருமையா எழுதக் கூடியவரு!
விடாதீங்க! அவரப் பிடியுங்க! :-)
ஜிராவை நான் சும்மா வம்புக்கு இழுத்தேன்! :-)
முன்னொரு முறை இராவணன் பற்றிய பதிவில் விவாதம் சூடாகச் சென்றது! இராவணனும்-சூரனைப் பற்றியும்!
அடியேனோ, இல்லை ஜிரா-வோ இந்த ஒப்பீடு குறித்து எழுதுகிறோம்!
//Raghavan alias Saravanan M said...
இந்தப் பாட்டை நான் ஐந்து நாட்களாகத் தினமும் பார்த்து, கேட்டுப் பரவசமடைந்து வருகிறேன்//
ஆகா...பதிவை இடுவதற்கு முன்னரே பாத்துட்டீங்களா இராகவன்? :-)
//கொள்ளை அழகு இருவரும் பாடுவது!
விளக்கமும் மிக நன்றாக இருந்தது!//
நன்றி தங்கள் அன்புக்கு!
முருகனருள் முன்னிற்கும்!
//பாரதிய நவீன இளவரசன் said...
பதிவிற்கு மிக்க நன்றி! அனைவருக்கும் கந்தர் சஷ்டி வாழ்த்துக்கள்!//
நன்றிங்க பாரதிய நவீன இளவரசன்,
ஆறு நாளும் அன்பா வந்து ஆதரவு தந்தீங்க!
சுதாவின் சுட்டிக்கும் நன்றி
கந்த சஷ்டியை ஒட்டி, ஆறு நாட்களும் அருமையான பாடல்களை விளக்கங்களுடனும், படங்களுடனும், விவாதங்களுடனும், தந்து ஆன்மீகத் தொண்டினை அருந்தொண்டாகக் கருதி, எங்களை எல்லாம் மகிழ்வித்த அன்பர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.
இறுதி நாளன்று, சூரசம்ஹார நிகழ்வினை ஒட்டி, முருக பக்தர் சாண்டோ சின்னப்பா தேவர் எடுத்த தெய்வம் படத்தில் ( சரிதானா ?), கவியரசு எழுதிய, டிஎமெஸ்ஸூம், சீர்காழியும், போட்டி போட்டுப் பாடி நடித்த, பாடலைத் தேர்ந்தெடுத்து தந்தமைக்கு நன்றிகள் பலப்பல.
பல ஆண்டுகளாக, பல தடவைகள் பார்த்தும் கேட்டும் இன்பமடைந்த பாடல் இது. ஒவ்வொரு வரியும் அதன் பொருளும் அருமையாக இருக்கும். தமிழ்ப் பாடலை தமிழாகப் பாடுவதில் பெயர் பெற்ற இருவரின் இனிய குரல் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். மீண்டும் அதைப் படிக்கக் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி.
எம்பெருமான் முருக வேளின் அருள் ஆத்திக அன்பர்கள் அனைவருக்கும் எப்போதும் கிட்ட முருகனருள் துணை நிற்கட்டும்.
வாழ்த்துகள்.
//குமரன் (Kumaran) said...
என் பாட்டி வீட்டார் (தாய் வழி) அழகரப்பனை (கள்ளழகரை) குலதெய்வமாகக் கொண்டவர்கள்; ஆனால் இந்த கந்தர் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள்;//
எங்கள் வீட்டிலும் இறுதி நாள் விரதம் உண்டு குமரன்! மற்ற ஐந்து நாட்கள் ஒரு பொழுது!
//சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன்.//
முன்னாலும் துதித்திருப்பார், குமரன்.
ஆனால் பின்னால் தான் லிங்கம் நிறுவி வழிபாடு!
ஜிரா எங்கப் போனாரு! இதுக்கெல்லாம் பதில் சொல்லும் பொறுப்பு அவருது அல்லவா? :-)
சேவலாரே! சிலுப்பியது போதும்! வாருமய்யா!
//சிவலிங்கம் கருவறையிலேயே இருக்கிறதா?//
ஆமாம் குமரன்.
கருவறையை ஒட்டினாற் போல உள்ள சுவரின் பின்னால் இருக்கிறார் உலகீசர். முருகனின் இடப்புறம்.
வலப்புறச் சுவரில் வெற்றித் திருமகள், அன்னை மகாலக்ஷ்மி, செதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்!
//திருச்செந்தூர் சென்ற போது கருவறைக்குப் பக்கத்தில் ஒரு குகை போன்று இருந்த வழியாக அழைத்துச் சென்று ஐந்து சிவலிங்கங்களைக் காட்டீனார்கள். அவற்றைத் தான் சொல்கிறீர்களா?//
அது பாம்பறை என்று சொல்லப்படும் குறுகலான நடையின் இறுதியில் உள்ள பஞ்ச லிங்கம்.
அங்கே பூசைகள் கிடையாது. முருகனும் அமரர்களும் மட்டும் வழிபடுவதாக ஐதீகம்.
//சிவபெருமானுக்குப் பெயர் ஜகன்னாதரா? நன்றாக இருக்கிறது. :-) பொருத்தமான பெயரே.//
பூரி ஜகன்னாதரான பெருமாள் பெயரை வைத்துக் கொண்டாரே-ன்னு பாக்கறீங்களா? :-)
திருச்செந்தூர் ஆலயத்துக்கு உள்ளேயே பெருமாள் சன்னிதி ஒன்றும் உள்ளது குமரன்.
அருகில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் பள்ளி கொண்ட பெருமாள், கடலுக்கு குறுக்கு வாட்டாகப் பள்ளி கொண்டு தன் மருகனைக் காப்பதாகவும் ஐதீகம்!
பாவம்...அவங்களுக்கு எல்லாம் வேற்றுமை பார்க்கவே தெரியவில்லை! ஏன் தான் இப்பிடி ஒத்துமையா இருக்காய்ங்களோ? :-)
//அருமையான தொடர். மிக்க நன்றி.//
உங்களுக்கும் நன்றி குமரன்! உங்க உடல் நலம் சோர்விலும் இரண்டாம் நாள் கை கொடுத்தீங்க! மாமுனிகளை வேறு கவனித்துக் கொண்டீங்க! :-)
//ambi said...
ஆஹா! சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்த்து என் ஷஷ்டி விரதம் பூர்த்தி அடைந்தது. நன்றிகள் பல//
ஆகா
அம்பி...என்னப்பா வெரதம் இருந்தீங்களா?
இல்லீன்னா வீட்டுல இருந்ததை நீங்க சொல்லுறீங்களா? :-)
ரவி சங்கர்!
அருமையான பாடல், நான் முதல் முதல் திருச்செந்தூரைத் திரையில் பார்த்தது இந்தக் காட்சியே!!
தேவருக்கு மிக்க நன்றி! ஈழத்தவர்கள்
பலருக்கு அறுபடை வீட்டைத் தருசிக்க
வைத்தவர்.
செந்தூர்க் கடற்கரையில் நின்று கைகூப்பினால், எங்கள்'மாதோட்ட நன்னகர்' திருக்கேதீஸ்வரைத் தொழலாம்.
செந்தில் என்ற பெயருக்கு வெற்றியூர் என்று பெயர் இல்லை. செந்து+இல். செந்து என்பது ஆன்மா. ஆன்மாக்கள் ஒடுங்குவது இறைவனிடத்தில் என்பதால் உலக ஆன்மாக்களுக்கான இல்லம் என்ற பொருளில் உருவானது செந்தில் என்ற பெயர். சீர்கெழு செந்தில் என்கிறார் இளங்கோ.
திருச்சீரலைவாய் பின்னால் வந்த பெயர் என்று நினைக்கிறேன்.
// ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன //
ஜெயந்திபுரம் என்று போற்றும் வடமொழி இலக்கியங்கள் எவை?
// சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன். //
குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்.
உங்கள் பதிவுகளை படிப்பது ஒரு அருமையான கதா காலேட்சபம் கேட்கும் அனுபவம். பின்னூட்டங்களை படித்தால் ஒரு சத் சங்கத்தில் பங்கேற்கு அனுபவம். வாழ்த்துகள் பல.
////சிவபெருமானுக்குப் பெயர் ஜகன்னாதரா? நன்றாக இருக்கிறது. :-) பொருத்தமான பெயரே.//
பூரி ஜகன்னாதரான பெருமாள் பெயரை வைத்துக் கொண்டாரே-ன்னு பாக்கறீங்களா? :-)
//
ஜகன்னாதரிலிருந்துதான் Jaaggernaut என்ற சொல் பிறந்தது என்று சொல்வார்கள்.
பொதுவாக சிவனுக்கு 'ஈசன்' என்றும் பெருமாளுக்கு 'நாதன்' என்றும் பெயர் அமைந்திருக்கும். இராமேசுவரத்தில் இராமலிங்கமூம், இராமநாதனும் போல.
அதனால்தான் அவர் 'உலகீசர்' போலும். உலகநாதர் எங்கு இருக்கிறார் என்று கூகுளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை :-)
//cheena (சீனா) said...
அருந்தொண்டாகக் கருதி, எங்களை எல்லாம் மகிழ்வித்த அன்பர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்//
மிக்க நன்றி சீனா ஐயா!
//முருக பக்தர் சாண்டோ சின்னப்பா தேவர் எடுத்த தெய்வம் படத்தில் ( சரிதானா ?), //
சரியே! :-)
//தமிழ்ப் பாடலை தமிழாகப் பாடுவதில் பெயர் பெற்ற இருவரின் இனிய குரல் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.//
சரியாச் சொன்னீங்க!
தமிழைத் தமிழாய்ப் பாடியவர்கள் இருவரும்!
தமிள் மூச்சு, போயியே போச்சு-ன்னு எல்லாம் ஸ்டைல் கலந்து பாடத் தெரியாதோ என்னவோ இருவருக்கும்! :-)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி சங்கர்!
அருமையான பாடல், நான் முதல் முதல் திருச்செந்தூரைத் திரையில் பார்த்தது இந்தக் காட்சியே!!//
ஆகா...
ஒருமுறை அவசியம் திருச்செந்தூர் போய் வாருங்க யோகன் அண்ணா!
என்ன தான் வீடியோவில் கண்டாலும், மூலவன் முருகனின் புன்சிரிப்பை நேரில் காணும் போது...அத்தனை அழகு!
கன்னப் பொட்டில் ஒரு மைப் பொட்டும் வைத்திருப்பார்கள்! அச்சோ!
//செந்தூர்க் கடற்கரையில் நின்று கைகூப்பினால், எங்கள்'மாதோட்ட நன்னகர்' திருக்கேதீஸ்வரைத் தொழலாம்//
ஆகா! இப்படியும் ஒரு வணக்கமா!
அடுத்த முறை செய்து விடுகிறேன்!
//Sridhar Venkat said...
உங்கள் பதிவுகளை படிப்பது ஒரு அருமையான கதா காலேட்சபம் கேட்கும் அனுபவம். பின்னூட்டங்களை படித்தால் ஒரு சத் சங்கத்தில் பங்கேற்கு அனுபவம். வாழ்த்துகள் பல.//
ஆகா காலட்சேபம் அளவுக்கா அடியேன் பதிவுகள்?
நான் ஏதோ ஆட்சேபம் அளவுக்குத் தான்-னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்! :-)
நன்றி ஸ்ரீதர்!
//பொதுவாக சிவனுக்கு 'ஈசன்' என்றும் பெருமாளுக்கு 'நாதன்' என்றும் பெயர் அமைந்திருக்கும். இராமேசுவரத்தில் இராமலிங்கமூம், இராமநாதனும் போல//
இராமேஸ்வரத்தில் இராமநாதனும் ஈசன் தான் ஸ்ரீதர்!
//அதனால் தான் அவர் 'உலகீசர்' போலும். உலகநாதர் எங்கு இருக்கிறார் என்று கூகுளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை :-)//
உலகநீதி ன்னு தேடிப் பாருங்க! :-)
You have requested for the link to listen to songs of Pithukuzhi Murugadoss in one of your posts.
The songs are available in:
http://www.raaga.com/channels/tamil/artist/Pithukuli_Murugadas.html
God Bless You and your family.
Suryanarayanan S
http://vazhvuneri.blogspot.com
//G.Ragavan said...
செந்து+இல்.
செந்து என்பது ஆன்மா//
நல்ல விளக்கம் ஜிரா; நன்றி!
செந்து = உயிர்கள் என்று முன்பு எங்கோ படித்துள்ளேன்!
செந்து = செம்மை ன்னும் பொருள் அல்லவா. செந்து தானே குறில் நீண்டு சேந்து ஆகி சேந்தன் என்று ஆகுது!
அப்படிப் பார்த்தால் சேந்தன் இருக்கும் இடம் செந்தில். சேயோன் இருக்கும் இடம் செந்தில்; சிவந்தவன் இருக்கும் இடம் செந்தில்!
//திருச்சீரலைவாய் பின்னால் வந்த பெயர் என்று நினைக்கிறேன்//
பின்னாலா?
திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் வரவில்லையா?
//ஜெயந்திபுரம் என்று போற்றும் வடமொழி இலக்கியங்கள் எவை?//
ஸ்கந்த புராணம்.
தமிழில் திருச்செந்தூர் புராணத்தில் பாருங்கள்
அருணகிரி இந்தப் பேரைச் சொல்லி உள்ளாரா என்றும் தேடிச் சொல்ல முடியுமா?
//குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்//
ஹூம்!
அந்தக் கூட்டத்தின் பெயரை நீங்க சொல்ல மாட்டீங்களோ? :-)
கச்சியப்பரின் கந்தபுராணத்துப் படியும், (திருச்செந்திப் படலம்-உற்பத்திக் காண்டம்)
மயன் கோவிலையும் ஆசனத்தையும் போருக்கு முன்னரே எழுப்புகிறான். அதில் அமர்ந்து சூரனின் கதையைக் கேட்கிறான் முருகன்.
ஈசனைத் தவக்கோலத்தில் வழிபட்டது எங்கு வருகிறது ஜிரா?
//sury said...
You have requested for the link to listen to songs of Pithukuzhi Murugadoss in one of your posts.
The songs are available in:
http://www.raaga.com/channels/tamil/artist/Pithukuli_Murugadas.html
God Bless You and your family.//
சூரி சார்
தங்கள் ஆசிக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி!
திராச ஐயாவும் ராகா.காம் சுட்டியைக் கொடுத்துள்ளார். அவருக்கும் நம் நன்றி!
//ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்//
ஹூம்!
அந்தக் கூட்டத்தின் பெயரை நீங்க சொல்ல மாட்டீங்களோ? :-)//
என்னங்க இப்படி ரெண்டு பேரும் அந்த கூட்டம் யாருன்னு சொல்லாம பேசிக்கிட்டே போனா என்ன அர்த்தம்?. சஸ்பன்ஸ் தாங்கலப்பா, யாராவது உடைச்சு சொல்லிப்புடுங்க ஆமா.
//நீங்கள் விரும்பிக்கேட்ட பாடலை, கந்தர் சஷ்டி ஸ்பெஷலில் முதலாவதாக வந்த பதிவில் பார்க்கலாம்...//
KRS & பாரதிய நவீன இளவரசன்,
நான் படிக்க விட்டுப் போன பதிவு, போய் பார்த்து/கேட்டு விடுகிறேன். நன்றி.
சுதாவின் சுட்டிக்கும் நன்றிகள் பல.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருச்சீரலைவாய் பின்னால் வந்த பெயர் என்று நினைக்கிறேன்//
பின்னாலா?
திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் வரவில்லையா?//
இருக்கிறது. நாந்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். சரியாக எடுத்துக்கொடுத்தமைக்கு நன்றி. ஆனாலும் ஆற்றுப்படையை மீண்டும் தேடுகிறேன்.
////ஜெயந்திபுரம் என்று போற்றும் வடமொழி இலக்கியங்கள் எவை?//
ஸ்கந்த புராணம்.//
இத எழுதுனது யாருங்க? எப்ப எழுதுனாரு? திருமுருகாற்றுப்படைக்கு முன்னாடியா பின்னாடியா? அட தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன்.
// தமிழில் திருச்செந்தூர் புராணத்தில் பாருங்கள் //
இதை எழுதுனது யாரு? எப்போ?
// அருணகிரி இந்தப் பேரைச் சொல்லி உள்ளாரா என்றும் தேடிச் சொல்ல முடியுமா? //
அருணகிரி சொல்லியிருக்காரான்னு தெரியலை. சொல்லியிருக்க வாய்ப்பிருக்கு. ஏன்னா அருணகிரி மிகவும் பிற்காலம். அதுவுமில்லாம என்னோட திருப்புகழ் திரட்டு பெங்களூர்ல இருக்குது.
////குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்//
ஹூம்!
அந்தக் கூட்டத்தின் பெயரை நீங்க சொல்ல மாட்டீங்களோ? :-)//
:) ஹா ஹா ஹா
// கச்சியப்பரின் கந்தபுராணத்துப் படியும், (திருச்செந்திப் படலம்-உற்பத்திக் காண்டம்)
மயன் கோவிலையும் ஆசனத்தையும் போருக்கு முன்னரே எழுப்புகிறான். அதில் அமர்ந்து சூரனின் கதையைக் கேட்கிறான் முருகன்.
ஈசனைத் தவக்கோலத்தில் வழிபட்டது எங்கு வருகிறது ஜிரா? //
திருச்சேய்ஞலூரா? அப்படித்தான் நெனைக்கிறேன்.
ஆறுநாட்கள் மிக அருமையாக முருகனைப் பற்றியும் கந்த சஷ்டி விழா பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் நல்ல திருப்பாடல்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டு இறுதியாக சூரசம்ஹாரம் நடந்ததாகச் சொல்லப்படும் திருச்செந்தூரில் விரதம் முடிக்க வைத்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திய அந்த அற்புதத் தொடருக்கு பாராட்டுகளும் நன்றியும்.
ஒவ்வொரு நாள் படித்த பிறகும் பின்னூட்டம் இடவே தோன்றவில்லை. மெய்மறந்த உள்வாங்கலுக்குப் பிறகு என்ன சொல்லத் தோன்றும்? ஏதேனும் எண்ணம் எழுந்திருந்தால் அது அடுத்தவர் வாயிலாக ஏற்கெனவே வெளியாகி இருந்தது. எனக்கு நிஜமாகவே புதிய வார்த்தைகள் எழவில்லை.
தூத்துக்குடியுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்ற காரணத்தால் திருச்செந்தூர் நான் மிக அதிகமாகப் போயிருக்கும் இடம். இயற்கையாகவே ஆரவாரமற்ற கடல் அலைகளை ரசித்த படி, கடற்காற்றையும் இதமான பக்திப்பாடல்களின் வருடும் சுகத்தையும் அனுபவித்த கையோடு . . . . என் அனுபவங்களைச் சொல்ல இந்தப் பதிவு பொருத்தமான இடம் அல்ல என்பதால் தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்.
ஒன்று மட்டும் சொல்லிக் கொள்வேன்:
முதன் முறையாக திருச்செந்தூரின் முழுமையான தரிசனத்தை உங்கள் பதிவில் தான் கண்டேன்.
நன்றி.
// // சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன். //
குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்.//
இப்படித்தான் படித்த நினைவு. அந்த நினைவை உறுதியாக எழுதியது தவறே. அதற்காக மன்னிக்கவும். சரியாகத் தெரியாத ஒன்றைத் தெளிவாகத் தெரிந்ததாக எழுதியது தவறே.
எமக்குப்
போமோ வருமோ
அதுதான் வேலன் தருமோ எனின் உவப்பே
எந்தை தருவது
கந்தையானாலும்
சந்தையானாலும்
சிந்தையாலும் கொள்வோம்
//G.Ragavan said...
இருக்கிறது. நாந்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். சரியாக எடுத்துக்கொடுத்தமைக்கு நன்றி. ஆனாலும் ஆற்றுப்படையை மீண்டும் தேடுகிறேன்.//
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும்
ன்னு வருது ஜிரா, இரண்டாம் ஆற்றுப்படையில்!
//ஸ்கந்த புராணம்.//
இத எழுதுனது யாருங்க? எப்ப எழுதுனாரு? திருமுருகாற்றுப்படைக்கு முன்னாடியா பின்னாடியா?//
ஸ்கந்த புராணங்களைத் தொகுத்தவர் வியாசர். எழுதனவர் பேரு எனக்குத் தெரியல ஜிரா! காலத்தால் எது முந்தின்னும் தெரியாது!
// தமிழில் திருச்செந்தூர் புராணத்தில் பாருங்கள் //
இதை எழுதுனது யாரு? எப்போ?//
ஒரு ஈழத்துக் கவி! பிற்காலத்தவர்! பேரு நினைவில் இல்லை!
//அருணகிரி சொல்லியிருக்காரான்னு தெரியலை. சொல்லியிருக்க வாய்ப்பிருக்கு//
தேடிப் பாக்கணும்...ஜெயந்திபுரம்னு பாடியிருக்காரான்னு
//ஈசனைத் தவக்கோலத்தில் வழிபட்டது எங்கு வருகிறது ஜிரா? //
திருச்சேய்ஞலூரா? அப்படித்தான் நெனைக்கிறேன்.
உற்பத்திக் காண்டத்தில் ஆலயம், ஆசனம் அமைத்தது மட்டுமே வருது!
சிவ பூசை வரவில்லை!
அதுக்கப்புறம் போர் தொடங்கி விடுகிறது!
//மதுரையம்பதி said...
என்னங்க இப்படி ரெண்டு பேரும் அந்த கூட்டம் யாருன்னு சொல்லாம பேசிக்கிட்டே போனா என்ன அர்த்தம்?. சஸ்பன்ஸ் தாங்கலப்பா, யாராவது உடைச்சு சொல்லிப்புடுங்க ஆமா.//
ஹிஹி
ஜிரா நான் உடைக்கட்டுமா? நீங்க உடைக்கிறீங்களா? :-)
உடையவர் உடைக்கலாம்! :-))
மெளலி...
அவரு சொன்னது தேவர் கூட்டம்!
ஓலம் ஓலம்னு ஏலம் போட்டு வராங்கன்னு ஜிரா நக்கல் அடிக்காரு!
ஆனா ஒரு சீரியஸ் கேள்வி, ஜிராவுக்கும் தான்!
அதான் தேவர் கூட்டம் எல்லாம் சிறையில் இருக்கே, சூரனின் பட்டனத்தில்! வீரபாகு அங்கிட்டு தான போயி பாக்குறாரு!
அப்போ இங்க ஓலம் ஓலம்-னு வந்தவங்க யாரு?
//G.Ragavan said...
குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்.//
இப்படித்தான் படித்த நினைவு. அந்த நினைவை உறுதியாக எழுதியது தவறே. அதற்காக மன்னிக்கவும். சரியாகத் தெரியாத ஒன்றைத் தெளிவாகத் தெரிந்ததாக எழுதியது தவறே.///
அலோ, ஜிரா!
இது என்ன மன்னிப்பு, மாங்காய் பத்தைன்னு கிட்டு!
நான் படித்த வரையில் அப்படி இல்லையே என்பதால் தான் கேட்டேன்!
செந்திலைச் செம்மையாக அறிந்தவர்களில் நீங்களும் ஒருவர். நிச்சயம் தெரிஞ்சி வச்சிருப்பீங்க-ன்னு தான் கந்த புராண நிகழ்வுகளைக் கேட்டேன்! அம்புட்டு தான்!
நாம் அறிந்ததை நம்மவர்க்கும் தந்து இன்புறுவது தானே பதிவும் பின்னூட்டமும்!
//எமக்குப்
போமோ வருமோ
அதுதான் வேலன் தருமோ எனின் உவப்பே
எந்தை தருவது
கந்தையானாலும்
சந்தையானாலும்
சிந்தையாலும் கொள்வோம்//
ஹிஹி
உமக்குப் போமோ வருமோ,
வேலவன் தருமோ,
வேலவன் சொல்ல, நாமோ தருமோ,
- உவப்பே அதுவும்!
உந்தை, கந்தை சந்தை என எது தரினும்,
நிந்தை செயாது முந்தை ஏற்கும்
பந்தை, பாங்கை யாமும் அறிவோம்!
விந்தை இலையே! விம்மிதம் தானே!
//RATHNESH said...
திருச்செந்தூரில் விரதம் முடிக்க வைத்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திய அந்த அற்புதத் தொடருக்கு பாராட்டுகளும் நன்றியும்.//
வாங்க ரத்னேஷ்! மிக்க நன்றி!
ஆறு நாளும் நீங்க வந்து படித்தின்புற்றதே இன்பம்!
அடியார்க்கு இன்பம் தான் எமக்கும் இன்பம்!
//தூத்துக்குடியுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்ற காரணத்தால் திருச்செந்தூர் நான் மிக அதிகமாகப் போயிருக்கும் இடம்.//
நம்ம தூத்துக்குடிகாரர் ஜிராவும் ஆனா ஊன்னா செந்தூர் ஓடிப்பிடுவாராம்!
//இயற்கையாகவே ஆரவாரமற்ற கடல் அலைகளை ரசித்த படி,....தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்//
இதோ, வருகிறேன்! படிக்கிறேன்!
//ஒன்று மட்டும் சொல்லிக் கொள்வேன்:
முதன் முறையாக திருச்செந்தூரின் முழுமையான தரிசனத்தை உங்கள் பதிவில் தான் கண்டேன்.//
ஆகா..
திருச்செந்தூர் தரிசனம் என் இளமைக்காலம் தொட்டு ஊறிவிட்ட ஒன்று!
இருப்பினும் அரங்கமும் திருமலையும் சென்று ஒன்றிய அளவு,
செந்தூரில் எண்ணிக்கையாகச் செல்லவில்லை; ஆனால் மிகவும் ஒன்றியுள்ளேன்!
ஜிரா செந்தூரைப் பற்றி எழுதுவதும் ஒரு சுகம் தான். மகரந்தத்தில் திருச்செந்தூரின் கடலோரத்தில்-னு பதிவைப் பாருங்க! உங்களுக்குப் பிடிக்கும்!
செந்தூர் முருகனைப் பற்றியும், கடல் காட்சியும், ஆலயம் பற்றியும், இலக்கியம் பற்றியும், அலங்காரங்கள் பற்றியும், ஜிரா இன்னும் விரிவாக எழுதணும்! நான் அவரிடம் வேண்டுகோள் வைக்கப் போகிறேன்!
முருகன் சூரனை கொள்ளவில்லை அவர் சூழலுக்கு மறு வாழ்வளித்த சூரசம்ஹாரம் என்றால் சூரனை திருத்துதல் என்று அர்த்தம்
Post a Comment