Tuesday, July 29, 2008

தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்


தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே (2)


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே ... முருகய்யா...
அங்கம் மணக்கவில்லையே (2)

சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே ... குமரய்யா ...
சீர் மணம் வேறு இல்லையே

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே ... முருகய்யா ...
முதற் பொருளாகவில்லையே

சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே ... குமரய்யா ...
மெய்ப் பொருள் வேறு இல்லையே

எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே ... முருகய்யா...
எண்ணத்தில் ஆட வில்லையே

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே ... குமரய்யா ...
மற்றொரு தெய்வமில்லையே


தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே

டி.எம்.எஸ் அவர்கள் பாடிய இப்பாடலைக் கேட்டு மகிழ

Saturday, July 26, 2008

செந்தில்நகராதிபனை சிந்தை செய்வாய் மனமே தினமே.

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா



இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்








பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.











ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி

பல்லவி

திருத்தணி முருகன் திருவருள் புரிவான்

திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)

அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே

குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)

சரணம்

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)



இன்று கிருத்திகை(27/07/08). வழக்கம்போல் பதிவு முருகன் அருளால்.இன்று கேட்கப் போகும் பாடல் திரு. பாபநாசம் சிவன் அவர்களுடையது.இதைப் பாடியிருப்பவர் சிவன் அவர்களுடன் நெடுநாட்கள் வாழ்ந்து அவர்பாடல்களை எழுத்துவடிவில் வெளியிடக் காரணமானவர், அவரின் சிஷ்யருமானவர். அவர்தான் திரு செதலபதி. பாலசுப்ரமணியன்.

அப்பா முருகா உன் சோதனை சுமை விளையாட்டுக்கு இந்தா ஏழைதான் கிடைத்தேனா.உன்னுடைய பாதகமலம் மறவாத என்னுடைய பாதக மலத்தை போக்கமாட்டாயா. பதகமலம் என்ற வார்த்தையில் சொல் விளையாட்டு அபாரம்.என்னுடைய வினை உன்னுடைய அருளைக்காட்டிலும் வலிமை கொண்டதா? இரக்கமேஇல்லயா உனக்கு? வா குமரா, பலா,வேலா வந்து காப்பாய்.



ராகம்:- காபி தாளம்:- ஆதி




பல்லவி



சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா



ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)



சரணம்



பாத கமலம் மறவாத அடிமை என்பாதக மலம் அகலாதா வாதா (சோதனை)



உனதருளினும் என் வினைவலி பெரிதோ



உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)



காம ஸம்ஹார சிவகுமரா குருபரா

ராமதாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)





<"திருமதி மும்பை ஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள்">">



திரு. பாலுவின் குரலில்">

Tuesday, July 15, 2008

100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!

முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் வரவேற்கிறேன்.

என்றைக்குமே தமிழ் என்றாலே முன்னால் நிற்பது முருகனே. பிரெஞ்சு லாத்தீன் மொழிகளை விடுங்கள். ஏன் கன்னடக் கடவுள் என்றோ தெலுங்கு தேவுடு என்றோ பெங்காலி பகவான் என்றோ அஸ்ஸாமி ஆண்டவன் என்றோ இல்லையென்று யோசித்தீர்களா? அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லையென்றா பொருள்? இல்லையே. அப்படியிருக்க முருகனை மட்டும் ஏன் தமிழ்க் கடவுள் என்று சிறப்பு அடைமொழி கொடுத்து தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கின்றார்கள்?

வெறுமனே தமிழர் வணங்கும் கடவுளாக மட்டும் இல்லாமல் தமிழாக நின்ற தனிப்பெருங்கருணை முருகப் பெருமான். அதாவது தமிழன் தான் வணங்கும் கடவுளை மொழியின் வடிவமாகவே கண்டதன் விளைவு முருகப்பெருமானுக்குத் தமிழ்க் கடவுள் பட்டத்தைத் தந்துள்ளது. அது பெயரிலேயே தெரியும். முருகு என்று மூன்றெழுத்து. அதில் மகரம் என்ற மெல்லினத்தில் தொடங்கி ரகரம் என்ற இடையினத்தை நடுவில் வைத்து ககரம் என்ற வல்லினத்தில் முடிகின்றது பெயர். இப்படி எழுத்துக்களின் மூன்று இனத்தை வைத்துச் சொன்ன பெயருக்குப் பொருள் "குன்றாத இளமை".

அப்படியிருக்கும் பொழுது... தமிழில் வலைப்பூக்கள் எழுதத் தொடங்கிய வேளையில் முன்னின்றது எதுவாக இருந்திருக்கும்? முருகனருள் முன்னிற்கும். ஆம். முதன்முதலில் தமிழில் எழுந்தது முருகனருள் வலைப்பூவே.

வாரியார் சுவாமிகள் சொன்ன கதையொன்று நினைவிற்கு வருகிறது. அறுவை சிகிச்சையில் நிபுணர் அவர். மகப்பேறு மருத்துவத்தில் சிறந்தவர் அவரது மனைவி. இருவருக்கும் பிறந்தது ஒரு குழந்தை. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியைக் கொஞ்சிக் கொண்டாடுவதில் பொழுது பறந்தது. அப்பொழுது மகளை மடியில் வைத்து அப்பா கேட்டார். "செல்லம். கண்ணெங்கே?" சிரித்துக் கொண்டே கண்ணைத் தொட்டுக் காட்டியது குழந்தை. இப்பொழுது அம்மா கேட்டாள். "தங்கம்...மூக்கெங்கே?" கிணிகிணியென்று சிரித்து விட்டு மூக்கைத் தொட்டுக் காட்டியது மகளின் பிஞ்சுக் கை. மறுபடியும் அப்பா கேட்டார். "வைரம். வாய் எங்க இருக்கு?" பறக்கும் முத்தம் கொடுப்பது போல வாயைத் தொட்டுக் காட்டினாள் மகள். உடலைத் திறந்து மூடிச் சரி செய்யும் அறுவை சிகிச்சையாளருக்காத் தெரியாது சிமிட்டும் கண்ணெங்கே என்று! குழந்தை கருவாகி அதன் ஒவ்வொரு அங்கங்களும் உருவாகி..நல்லதொரு பொழுதாகிப் பிறப்பது எப்படியென்று தெரிந்து அதற்கு மருத்துவமும் பார்க்கும் அம்மைக்கா தெரியாது நாசி எதென்று! அனைத்தும் அறிந்தும் மகவின் வாயில் அதைச் சொல்லிக் கேட்பதில் எத்தனையெத்தனை ஆனந்தம். மகிழ்ச்சி. "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கட் மழலை சொல் கேளாதவர்" என்றாரே வள்ளுவர்.

இந்த நிலை அருணகிரிக்கும் வந்தது. கணிகையரைக் கட்டிலில் கூடும் பணியே பணி என்றிருந்த நிலை மாறி முருகனருள் கிட்டிய பிறது பாடச் சொல்கிறார் முருகன். முத்துமுத்தாகப் பாடச் சொல்கிறார். திருப்புகழ் பிறக்கிறது. அப்படி அருணகிரி வாயில் திருப்புகழ் கேட்டு மகிழ்ந்த முருகன் எங்கள் வழியாகப் பதிவுகள் காண விரும்பினான் போலும். எது எப்படியானாலும் "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

இந்த முயற்சியை முன்னின்று தொடங்கிய சிறப்பு நாமக்கல் சிபியையே சேரும். 9-12-2006ல் மூன்று பாடல்களைப் பதிந்து முருகனருள் வலைப்பூ முருகன் பாடல்களை தமிழன்பர்களிடன் கொண்டு செல்லத் தொடங்கியது. விநாயகனை வணங்கிய சிபி, சொல்லாத நாளில்லைச் சுடர்மிகு வடிவேலா என்று பதிந்தார். பின்னாலேயே தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி. அதைத் தருவதுதான் முருகா உன் சந்நதி என்று ஜிரா தொடர்ந்தார். ஊர் கூடித்தானே தேர் இழுபடும். குமரன், கே.ஆர்.எஸ், தி.ரா.ச, சுப்பையா ஐயா, வி.எஸ்.கே என்று ஊரும் கூடியது. தேரும் ஓடியது.

நூறு பதிவுதான் இலக்கா? இந்தக் கேள்விக்கு விடை "இல்லை". எண்ணிக் கைகூடிச் செய்யும் இந்தச் செயலில் எண்ணிக்கை கூடுவதில் மகிழ்ச்சியே என்றாலும் எல்லாப் பதிவுகளும் ஒரே தரத்தில்தான் எண்ணப்படுகின்றன. ஆனாலும் ஏன் இந்தப் பதிவு? எல்லா நாளும் நல்லநாள் என்றாலும் நடுநடுவே திருநாள் என்றால் கொண்டாட்டம் தானே. அதற்காகத்தான். (எல்லாம் ஒரு வெளம்பரந்தான்)

சரி. நூறாவது பதிவு. அதற்கு என்ன செய்ய வேண்டும்... அட.. என்ன செய்தோம் என்பதைக் கே.ஆர்.எஸ் தொடர்வார்.



நன்றி ராகவா!...

காவடி-ன்னா என்னாங்க? அட, காவடி பல பேருக்குத் தெரியும்! ஆனால் எத்தனை பேர் காவடி எடுத்திருக்கீங்க? உம்...ஹூம்...ஹூஹூம்....

சரி, பரவாயில்லை! இவ்வளவு நாள் முருகனருளை வாயினால் மட்டுமே பேசி மகிழ்ந்தோம்! முருகனருள்-100ஆம் இடுகையில், பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்றாய்ச் சேர்ந்து காவடி எடுப்போம் வாரீகளா?

முருகனருள் குழு-வலைப்பூவின் அன்புப் பதிவர்கள் பலர். இன்று அவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு காவடிச் சிந்தினைப் பாடித் துதிக்கப் போகிறார்கள்!

முருகனருள்-100 மகிழ்ச்சியில், ஆறுபடை முருகன்களும் ஒரே வரைபடத்தில் கிடைப்பார்களா? என்று கூகுள் இமேஜில் தேடத் துவங்கினேன்!
"ஆறு படைக்கு ஒரே படம் எதற்கு? ஒரே பாட்டாய் வரட்டுமே!
ஒரு படைக்கு ஒரு சிந்தாக, அறு படைச் சிந்து - எனக்குப் பாட்டாய் எழுதிக் கொடுடா கேஆரெஸ்!" - என்று கேட்டான் போலும்!

வேலன் மருங்கே இருக்க, ஒருங்கே வந்து விழுந்தன வரிகள்!
மருகன் முத்தமிழ் கொடுக்க, காவடிச் சிந்தை என் சிந்தையில் வைத்தான்!
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில், முற்பட எழுதிய முதல்வோன் தந்திடக் காவடிச் சந்தம்! அதைப் பயிலவே வேண்டாம்! பாட்டில் தானே அமைந்து விடும்!

நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள்! கால்கள் தானே ஆடுகிறாதா என்றும் பார்த்து விடுங்கள்! :-)


வாழ்க்கையின் பாரத்தை இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி!
எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!

பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்! ஆண்கள்-பெண்கள் என்று பேதமில்லாமல் எல்லாரும் எடுக்கும் காவடி!
(கிராமத்தில் எடுக்கும் காவடி நிகழ்ச்சியை அப்படியே வார்த்தைகளில் தந்துள்ளேன்! அசைபடம் முயன்றோம்; உடனே கிட்டவில்லை; காவடியின் வகையைப் பொறுத்தும், அலகு குத்தல் போன்ற நேர்ச்சைகளைப் பொறுத்தும் ஊருக்கு ஊர் காவடி பூசை வேறுபடும்!)

முந்தி முந்தி வினாயகரே! முப்பத்து முக்கோடி தேவர்களே!
வந்து வந்தனஞ் சொன்னோமைய்யா! கந்தக் காவடி கொண்டோமைய்யா!


* அரசரடிப் பிள்ளையாரையும், நாக கன்னிகைகளையும், பச்சையம்மனையும், அவள் அண்ணன் மாயோன் எனும் மாயாண்டித் தேவரையும், வாமுனி-செம்முனி எனும் முனீஸ்வரனையும், சுடலைமாட சாமியையும், கம்பத்து ஆஞ்சநேயரையும், ஊர் முன்னோர்களையும் பறை அறைந்து, தீபம் காட்டிக் கும்பிட்டு...

* விரதம் இருந்து, விபூதி பூசி, செவ்வாடை-மஞ்சளாடை கட்டிக் கொண்டு, எலுமிச்சை-செவ்வரளி மாலை சூட்டிக் கொண்டு,

* நேர்ச்சை கொண்டோர் மட்டும் முருகாஆஆஆ என்று அலறி அலகு குத்திக் கொள்ள,
* மணமாகாத விடலைப் பெண்களும் விடலைப் பையன்களும், ஆடுவோர் கால்களில் சதங்கைகளைக் கட்ட,

* ஊரிலேயே பெரிய தாயி-தகப்பன் மற்றும் மணியக்காரர், பூசையில் வைத்த மயில் காவடிகளை ஆண்களுக்கும், பால் காவடிகளைப் பெண்களுக்குமாய் எடுத்துக் கொடுக்க,

* தவில் கொட்ட, நாதசுரம் முழங்க.....ரெண்டும் சேர்ந்து ஒரு சந்தத்தை மெள்ளமாய் உருவாக்க,

* எங்கள் ஆயா, கடைசிக் காவடியை எடுத்துக் கொடுத்து, அரோகரா என்று கூவ....வயதானாலும் தன் கணீர்க் குரலில் பாட்டெடுக்க.....
பச்சைக் கலைமயில் ஆட்டம் - புகழ் பாடும் அடியவர் கூட்டம்
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா! என வருவார்
பல கோடி அருள் தேடி....

* வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தலையினால் வந்தித்து, கையினால் சுற்றி, தோளினால் ஏற்றி, காலினால் ஆடி, சுழன்றுச் சுழன்று, காவடி ஆடுவோம், வாருங்கள் நண்பர்களே! - இதோ ஆறுபடை வீட்டுக்கும் பொதுவான காவடிச் சிந்து! அருமை நண்பர்களின் குரலில்!

* என் வாசகம் - ஜீவாவின் குரலில்!
kavadi_jeeva.mp3

* ஆத்திகம் VSK ஐயா இசைப்பது!
kavadi1.mp3

* கெளசிகம் திராச ஐயாவின் சிந்திசை!
Voice recording from 07 13, 2008 12:38:42
Voice recording fr...
Hosted by eSnips

* நம் ஜிராவின் குரலில்
kavadi_ragavan.mp3

* கூடல் குமரனின் குரலில்
kavadi_kumaran_1.m...

* அடியேன், கேஆரெஸ் குரலில்....
kavadi_murugan_krs...




ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!

முருகன் அருளினை ஆக்கி - வலைப்
பூவினில் காவடி தூக்கி - நல்ல
அடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட
வாராய் அருள் தாராய்!


மன்றத்தில் மாலையைச் சூடி - பரங்
குன்றத்தில்
பாவையைக் கூடி - என்றன்
மனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்
மயிலே பூங் குயிலே!


செந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்
செந்தூர்
முருகனின் கலைகள் - கந்த
வேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய
வீரா அதி தீரா!


பழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்
கழனி உழும் வய லாளன் - எங்கள்
சீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்
ஆண்டி அவன் தான்டி!

சாமி மலை எனும் வீடு - பொன்னி
தாவி வரும் வயற் காடு - அங்கே
தப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய
வேதன் சாமீ நாதன்!

வில்லிய மான் மகள் வள்ளி - அவள்
மெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை
கரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட
பணிகை திருத் தணிகை!

மாமனின் சோலையின் மீதில் - மட
மங்கையர் காதலை ஓதில் - நாவல்
படுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என
மாலை உதிர் சோலை!

ஆறு படை களில் வீடு - அங்கு
ஆறு முகங் களில் கூடு - அந்தச்
சேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி
ஆடு சிந்து பாடு!
காவடி யாடு சிந்து பாடு! காவடி யாடு சிந்து பாடு!


வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரகரோகரா!



கதை இல்லாமல் நூறாம் பதிவா?

இடும்பன்! முருகனிடம் பக்தி பூண்டவன்! அகத்தியரின் மாணாக்கன்! ஆனால் குருவால் முருகனைக் காண முடிந்து, சீடனால் முருகனைக் காணவே முடியவில்லை!

அகத்தியரோ சிவகிரி-சக்திகிரி என்னும் இரு குன்றுகளைத் பொதிகையில் கொண்டு போய் தம் இருப்பிடத்தில் வைக்குமாறு அவனைப் பணித்து விட்டார்! நெடுங் கோலின் இரு முனைகளிலும் கட்டினான் குன்றுகளை! தோன்றிற்று காவடி! வந்தான் ஆவினன்குடிக்கு!

அந்த நேரம் பார்த்து அங்கேயே வருகிறான் பழத்துக்குச் சினங் கொண்ட ஆண்டி!.....வந்தவன், சொல்லாமல் கொள்ளாமல், பாரம் இறக்கியவனின் மலையில் போய் நின்று கொண்டான்!

பாரத்தை மீண்டும் தூக்கியவனுக்குப் பாலனையும் சேர்த்து, தூக்கிச் செல்லும் உரிமை இல்லையே! பிள்ளை பிடிக்கிறான் என்று யாராவது சொல்லிவிட்டால்?.....எவ்வளவு சொல்லியும் இறங்கிச் செல்ல மாட்டேன் என்கிறான் பாலகன்! அவன் தான் கயிலை மலைக் கோபத்தில் உள்ளானே!

அந்த மலை தான் இல்லை! இந்த மலையுமா எனக்கு இல்லை?
அந்த மலை, இந்த மலை எனாது, எந்த மலையும் கந்தன் சொந்த மலை அல்லவா?
இடும்பனின் பந்த மலையைத் தனக்குச் சொந்தமாக்க வந்த மலை! அந்தக் கந்த மலை! மனம் உந்த மலை! அருள் தந்த மலை!

மாணாக்கனின் நெடுநாள் வேட்கையைத் தீர்த்து வைக்க இதுவே தக்க சமயம்! பாரம் தூக்குவோனுக்குக் கோபத்தை உண்டாக்கித் தாபத்தைத் தீர்த்து வைத்தான் வடிவேலவன்!
இன்றும் சிவ கிரியில் சிறுவன் ஆண்டியாய் நிற்கிறான்!
சற்றுத் தள்ளி சக்தி கிரியிலும் ஓர் ஆலயம் நிற்கிறது!!

அந்தப் பழனியில் தோன்றிய காவடி,
ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!


பதிவர் ஜீவா-வின் வாழ்த்துச் செய்தி
Muruganarul-vAzhth...

"சரி, நூறாம் இடுகையை நிறைக்கும் முன்னர் ஒரு கேள்வி! - முருகனுக்கு மொத்தம் எத்தனை முகம் நண்பர்களே?"

"என்ன கேஆரெஸ் இது விளையாட்டு? பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் முருகனுக்கு ஆறுமுகம்-னு! உனக்குத் தெரியாதா?"

"ஓ! அடியேனுக்குத் தெரியாதே! எங்க ஆறுமுகனுக்கு ஆறு முகமா?
ஆறு முகம் இல்லீங்க! இன்னிக்கி செல்லக் குழந்தைக்கு நூறு முகம்!

முருகனருள் வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையும் அவன் சிங்காரத் திருமுகம் தானே!
ஆறுமுகம் ஆன பொருள், நூறு பதிவருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


இந்த நூறாம் இடுகை பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல கோடி நூறாயிரம் முகங்களாகப் படர்ந்தோங்கி,
ஒவ்வொரு பதிவும் அவன் திருமுகத்தையே காட்டி அருள் புரியுமாறு அருள் புரிவானாக!
சரணம் சரணம் சரவண பவ ஓம்! சரணம் சரணம் சண்முகா சரணம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரோகரா!

Sunday, June 01, 2008

ஓம் முருகா

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா


இன்று கிருத்திகை நாள். முருகனுக்கு உகந்த நாள். இந்நாளில் குமரனின் படத்தையும் பார்த்து, மற்றும் அவன் மீது உள்ள ஒரு பாடலையும் கேட்டு அவனை நினைப்போம்.தணிக்கை விஷயமாக சுற்றுப்பயணத்தில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை

.ராகம்: ஷண்முகப்பிரியா

விருத்தம்

ஓம் முருகா

ஒரு முகம் சலித்தால்
மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ

நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா

ராகம்:ஸஹாணா

ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா

ராகம் :-ஹம்ஸநாதம்

ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா



-

Saturday, May 24, 2008

What more can I ask My Dear Muruga!!!



Thanks: myrachi, Youtube

Thursday, May 22, 2008

"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"

நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!


Get this widget Track details eSnips Social DNA

Sunday, May 18, 2008

Happy Birthday முருகா! - ஆறு முருகன்களின் காட்சி!

வைகாசி பொறந்தாச்சு! மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
இன்று வைகாசி விசாகம் (May 19, 2008)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு? - சைவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! வைணவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! இப்படி ஒரு இனிய சைவ-வைணவ ஒற்றுமை!

வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்! இறைவன் திருவடிகளின் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்! அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் இன்னொரு அழகன். அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாருமே அழகா இருப்பாங்களா-ன்னு கேக்கறீங்களா? ஜோதிட விற்பன்னர்கள் யாராச்சும் சொல்லுங்கப்பா!)

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வு அருள் பெருமாளே!

என்று அருணகிரியும் இவனை "விசாகன்" என்றே கொண்டாடுகிறார்! அவன் தான் விசாகன் என்னும் முருகன்! அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!

So....
Happy Birthday, Dear Muruga! :-)
முருகா, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
என்று முருகனுக்கு பிறப்பிறப்புகள் கிடையாது என்று சொல்லுவார்கள்!

பொதுவாகவே கந்தக் கடவுளுக்கு மட்டுமில்லை, எந்தக் கடவுளுக்குமே பிறப்பிறப்புகள் கிடையாது! - இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது எல்லாம் மனிதனாய் கீழறங்கி வரும் அவதாரங்களுக்கு மட்டுமே! கிறிஸ்துமஸும் அப்படியே! மத்தபடி ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு ஏது பிறப்பும் இறப்பும்?

பிறவான்-னு என்ன தான் அருணகிரியார் சொன்னாலும், நாம அன்பா Happy Birthday-ன்னு முருகனுக்குச் சொல்லுறதை அவரும் தடுப்பாரா என்ன?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! அதனால் பிறந்தநாள் பரிசு வைத்தேன்! :-)



கந்தன் கருணை படத்தில் மிக அழகான ஒரு காட்சி! ஒரு முருகனைப் பார்த்தாலே அழகு கொஞ்சும்! ஒரு சேர, ஆறு முருகன்களைப் பார்த்தால்?
கள்ளமில்லாச் சிரிப்பு சிரிக்கும் ஆறு முருகன்களைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்கும் காட்சி!

ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே!

என்பது தான் திருப்புகழ்...
அதைத் திரைப்படத்துக்காகச் சற்றே மாற்றி...மிக அழகாக இசை அமைத்திருக்காங்க! சூலமங்கலம் சகோதரிகள், மற்றும் ஜமுனாராணி போன்ற மற்ற பாடகிகள் சேர்ந்து பாடறாங்க!
(கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)
பாடலை இங்கு கேளுங்க! வீடியோவில் ஆறு முருகன்களையும் ஒரு சேரப் பார்த்து மகிழுங்க!



ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்


காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க!
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!
(ஆறுமுகமான)

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று


பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று


வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

(ஆறுமுகமான)

படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்

வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து

எந்தவேளையும் கந்தவேளைத் தொழுவோர்க்கும் சொந்தவேளை என்ற ஒன்றே இல்லாதவர்க்கும் நாளும் கிழமையும் ஒன்றே. அப்படியிருப்பினும் ஒருவேளையாவது இறைவனின் திருவேளை என்றுண்ணி வாழ்கின்ற பேர்களுக்கு அவ்வேளையும் செவ்வேளையாக வாழ்த்துவோமாக. அவ்வகையில் வைகாசி விசாகத் திருநாளாகிய இன்று தமிழ்வேளைத் தொழுது இவ்வேளையைத் தமிழ் வேளை என்று ஆக்கும் பெருமையை வேண்டுவதே சிறப்பாகும்.

கண்டோரும் விண்டோரும் சொல்லில் பொருளில் இறைவனைப் பாடிய வேளையில் அன்புண்டோரும் பாடலாம். இறைவன் அருளினைக் கூடலாம் என்ற கருத்தினை ஒப்புக் கொண்டு செம்மொழியும் நல்லன்பும் மட்டுமே உளத்தில் நிறுத்தி முருகன் அருளால் செய்த பாடல் இது. காவடிச் சிந்து மெட்டில். பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த இந்த விளையாட்டுச் சிந்தினைச் செந்திலை நினைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்


இந்தப் பாடலை அன்பர்களோ நண்பர்களோ பாடித் தந்தால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Friday, May 16, 2008

சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்....


சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்
ஒருமுகமாய் தரும் அருள் ஒன்றே (சண்முக)

சிவனார் கண்பொறியில் வந்துதித்த சரவணன்
சிக்கல் சிங்கார வேலனாம் ஆறுமுகன்
சிறைதனில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணன்
சின்னிக் கிருஷ்ணனாய் தோன்றும் குருவாயூரப்பன் (மோகன)

வேலினை ஏந்திடும் வண்ண மயில் வாகனன்
வள்ளி தெய்வானையை மணந்த வேல்முருகன்
சூரசம்ஹாரம் செய்த சக்திவடிவேலன்
பிரணவம் எடுத்துரைத்த சுவாமிநாதன்




வேய்ங்குழல் ஊதிடும் வேணுகோபாலன்
பாங்குடனே பாமை ருக்மிணியை மணந்த மாயவன்
கம்சனை வதம் செய்த கார்மேக வண்ணன்
கீதோபதேசம் செய்த சாரங்கன்

சரவணன் நின்ற மலையது பழமுதிர்ச்சோலை
அரங்கன் உறையும் எழில்வனமது மாலிருஞ்சோலை
அருணகிரிக்கருளி திருப்புகழைப் பாடவைத்த குகன்
ஆழ்வார் திவ்யப்ரபந்தமதில் எழுந்தருளிய நம்பி

ஷடாக்ஷரம் கொண்டவன் சரவணபவ குகனாம்
அஷ்டாக்ஷரம் கொண்டவன் ஓம் நமோ நாராயணனாம்
குன்றாடிய குருபரா வேங்கட மலையின் எழிலுருவே
பழனி நின்ற பழமே கோகுல பாலா கோபாலா (மோகன)


***

முருகன் திருவுருவப்படம் பெற்றது திரு.கானா பிரபாவின் பதிவிலிருந்து. பெருமாள் திருவுருவப்படம் பெற்றது திரு.கைலாஷி பதிவிலிருந்து. இருவருக்கும் எனது நன்றிகள்.

Monday, May 05, 2008

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள்



தென் பழனி வாழ் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா

கிருத்திகை முருகனுக்கு உகந்தநாள்.அதுவும் முருகனுக்குரிய செவ்வாயன்று வரும் சிறப்புநாள் முருகனை பணிந்து அவன் பாடலைக் கேட்டு பார்த்து ரசிப்போம். அலுவல் நிமித்தமாக சுற்றுபயணத்தில் இருப்பதால் இருக்கும் வசதியைக் கொண்டு இடப்பட்ட பதிவு.குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ராகம்:- கல்யாணி தாளம்:-
ஆதி
பல்லவி

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள் செய்ய வா

அனுபல்லவி

இணையடி வேண்டி தினம் தொழும் அடிமை நான்

சரணம்

அழகு வடியும் ஆறுமுகனே

அன்னை உமையவளின் அருமை மகனே

கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்

பழனிமலை மீதமர் கந்தா பரிசோதனை போதும்

இந்தப்பாடல் மறைந்த பாடகர் திரு. கல்யாணராமன் இயற்றி மெட்டமைத்து பாடியது





-

Thursday, May 01, 2008

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன்!


அம்மையார் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் முன்னும் பின்னும் பொருத்தமான சொற்களைக் கூட்டிக் குறைத்துப் பாடும் போது 'ஆகா. அது தரும் ஆனந்தமே ஆனந்தம்'. இந்தப் பாடலும் அப்படியே. அம்மையார் கே.பி.சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள்.

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன் - என்னைக்
காப்பதுன் கடமையையா பழனிக் (கந்தா)

சிந்தையில் விளையாடும் தேவாதிதேவனே
இந்தா என்று நல்வரம் ஈந்தருளும் கருணைக் (கந்தா)



பந்த பாசங்களில் என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே
சந்தோசம் தந்திடும் சண்முகனே குகனே
தந்தைக்குபதேசம் செய்த சுவாமிநாதனே (கந்தா)

Saturday, April 05, 2008

முருகா முருகா என்றால்

செந்தில் வாழ் நகர் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா



நாளை கிருத்திகைத் திருநாள் . வழக்கம்போல் பதிவு. முருகனடி பணியும் வாய்ப்பு.அருமையான சாவேரி ராகத்தில் முருகனின் இரக்க குணத்தை புகழ்ந்து பாடிய ஒருபாடல். பாடலை எழுதியவர் திரு. பெரியசாமி தூரன் அவர்கள்.
முருகா முருகா என்று கூறினாலே உந்தன் உள்ளம் உருகிவிடும் நான் இப்படி உருகி அழைத்தால் பரிவோடு வரமாட்டாயா? வராமல் எங்கே போய்விடுவாய். ஒருதரம் உன்னிடம் என் குறையைச் சொன்னாலும் அல்லது உன்னுடைய பாதத்தை நினந்தாலும் அருள் தரும் கந்தா நான் இப்படி அல்லும் பகலும் உன் நாமத்தை சொல்லும்போது வரமலிருக்கலாமா.
ஒருவேளை, அறியாமல் நான் செய்த பிழைக்காக என்னை நீ வெறுக்கின்றாயோ அதனால்தான் அழகே உருவான ஐய்யா உனக்கு கோபம் வந்ததோ. எப்படியிருந்தாலும் சிறியவனான நான் செய்த பிழையைப் பொறுத்து அருள்செய்யப்பா வளமை பொருந்திய தெருச்செந்தூர் நகரத்தின் அதிபதியே தேவர்களுக்கெல்லாம் தேவனே.

இப்படி தனித்தமிழில் இனிமையாகவும், உள்ளம் உருகிப் பாடினால் கந்தன் வராமலா இருப்பான் இனிபாடலை பாருங்கள். கந்தன் வராவிட்டாலும் குமரனும்,குமரனின் மாமவும்(ராகவன்) வருவார்களா பார்ப்போம்?



ராகம்: சாவேரி தாளம்:ஆதி
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாரயோ...(முருகா முருகா என்றால்)


அனுபல்லவி

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்

அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்....(முருகா முருகா என்றால்)

சரணம்
தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே.....(முருகா முருகா என்றால்)





-

-/<" திருமதி. மும்பைஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

Tuesday, March 25, 2008

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...


அண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.

இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: திருப்புகழ்
பாடல் பெற்ற தலம்: பழனி
பாடியவர்: எஸ்.பி. இராம்
இராகம்: குந்தவராளி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை

ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)

பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே

என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்

உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா

அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)

நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா

சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த

ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)

சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே

பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!

***

அண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.

Saturday, March 22, 2008

ஆனந்த நடனம் ஆடுவதேன்.....






-

ராகம்:- ஹம்ஸாநந்தி தாளம்:- ஆதி
பல்லவி

ஆனந்த நடனம் ஆடுவதேன் மயிலே
அழகன் முருகனை கண்டதனாலோ............( ஆனந்த நடனம்)

அனுபல்லவி

மான்விழியாள் குறவள்ளி மயிலாள்
மடிமீது உனை இருத்தி வருடியதாலோ.........(ஆனந்த நடனம்)

சரணம்

குன்று தோராடிடும் குமர வடிவேலன்
உந்தனின் மீது அமர்ந்ததனாலோ
மீன்விழியாள் குலமங்கை குஞ்சரியாள்
கடைக்கண்அருள் பார்வை கிடைத்ததினாலோ ..ஆனந்த நடனம்)

Thursday, March 20, 2008

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)


முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.




இந்தத் திருப்புகழ் பாடலுக்கு அருமையாக பொருள் சொல்லியிருக்கிறார் எஸ்.கே. ஐயா. அருணகிரிநாதர் இயற்றிய இந்தப் பாடலை 'அருணகிரிநாதர்' திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார்.

Tuesday, March 18, 2008

காற்றின் அணுவை மூச்சாக்கி

வேலுண்டு வினையில்லை என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய இந்தப் பாடல் உள்ளத்தை உருக்கும்.

திரைப்படங்களில் எத்தனையோ பாடல்கள் இன்னிசையோடு இறைவனைத் துதித்து வெளி வந்துள்ளன. துன்பப்படும் கதாபாத்திரங்கள் தங்களைக் கடவுளே காக்க வல்லார் என்று அழுது தொழுது பாடுகையில் உள்ளம் உருகும் படி இசையமைத்திருப்பார்கள்.

இதோ பாடலைக் கேளுங்கள். நமது நெஞ்சமே உருகும் பொழுது தமிழ்வேளின் திருவுளம் இழகாதா? உருகாதா?



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

(திருமலைக் குமார சுவாமி, திருவடி சரணம் ஐயா - உன்
அருளினால் பிறவி பெற்றேன், அடைக்கலம் நீயே ஐயா!)

காற்றின் அணுவை மூச்சாக்கி - என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்!
மூச்சே காற்றாய் முடியும் வரை - உன்னைப் போற்றிப் பாடிடக் குரல் கொடுத்தாய்!

பாலூட்டும் அன்னை இல்லை! தந்தை சீராட்டும் நிலையில் இல்லை!
ஊரோடு உறவும் இல்லை! இங்கு உனை அன்றி எதுவும் இல்லை!
போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை!
வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!

வானூரும் வெள்ளி மலையில் - தந்தை தாயோடு வீடும் உண்டு!
கணநாதன் அண்ணன் உண்டு! - சபரி மலை மீது தம்பி உண்டு!
ன் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு?
குன்றாடும் குமர வேலே - அருள் கொடுத்தாள வேண்டும் இன்று!

Friday, March 14, 2008

அருளாளன் வடபழநி ஆண்டி!


வடபழநி முருகன்

======================================================================

அருளாளன் வடபழநி ஆண்டி!

காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்
கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லி
கோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்கு
குவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டி
ஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்
உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!

ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள்;
நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய்;
ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான்
அடியேன்நான் கண் விழிப்பேன்; அலறிஓடிப்
போயிற்று உலகநினை வென்கின் றாற்போல்
பொங்கிவரும் கண்ணீரில் எனையி ழப்பேன்!
வாயற்று நின்றுவட பழநிக் குள்ளே
வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன்!

பாகாக உருகுகின்ற கிளியென் றென்னைப்
பதமாக இள்முருகன் வருடி விட்டான்;
சாகாத கவலையினைச் சாக வைத்தான்;
சந்ததமும் மெய்ப்பொருளைக் காண வைத்தான்;
போகாத ஊருக்குப் போக வைத்து
புகழ்மலையின் உச்சியிலே வாழ வைத்தான்;
ஆகாத தென்னவெனக் காட்டி விட்டான்
அருளாளன் வடபழநி ஆண்டி தானே!

நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!

தண்டத்தை ஏந்துகிறான்; உலகம் போற்றும்
தவக்கோலம் தாங்குகிறான்; தனியே நின்றிவ்
வண்டத்தை ஆளுகிறான்; நம்பி னோர்க்கிங்(கு)
ஆனந்தம் அருளுகிறான்; அனுப வித்துக்
கண்டத்தை எழுதுகிறேன்; அவனை விட்டால்
கதியில்லை நிம்மதியைக் காண! திங்கள்
துண்டத்தை அணிந்தவனின் மைந்த னைநீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!

- ஆக்கம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்

”தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!” என்று என்னவொரு
அழுத்தத்துடன் சொன்னார் பாருங்கள். அதுதான் இப் பாடலின்
முத்தாய்ப்பான வரிகள்

Wednesday, March 12, 2008

தீனசரண்யா.... சுப்ரமண்யா.....

கார்த்திகைத் திருநாள் இன்று/நாளை அதோடு ஷஷ்டியும் இன்றே . பருத்தி புடைவையாய் காய்த்தது என்பார்கள் பெரியோர்கள்.
கேஆர்ஸ் வேறு சொல்லிவிட்டார் நான்தான் காலண்டர் என்று. ஆமாம் காலபயத்தை அண்டவிடாத முருகனின் பக்தர்.
குமரனை கண்டவர்க்கு கனவிலும் கால பயம் ஏதைய்யா
திரு.பாபநாசன் சிவனின் பக்தியின் பெருமையையும் அவருடைய தமிழ்ப் பற்றையும் பறைசாற்றும் முருகனின் மீது மற்றோரு பாடல்.

இந்தப் பாடல் எனக்காவே எழுதியது போல நான் நினைத்துக்கொள்வேன்

நெஞ்சம் உருகி (நெக்குருகி) உன்னை பணியாத கல்நெஞ்சன் நான். இருந்தாலும் எனக்கு நீ அருளவேண்டும். ஏன் தெரியுமா. சூரனனின் கொடுமைதாங்காமல் முனிவர்களும் தேவர்களும் உன்னைத்தான் பணிந்தார்கள். நீ தட்டாமல் அவர்களுக்கு அருள் புரிந்தாய். அப்படிப்பட்ட தீன சரண்யன் நீ. அதனால்தான் கூறுகிறேன் எனக்கு வேறு திக்குஇல்லை. நீ தான் காப்பாற்றி அருளவேண்டும்


நீ யாரென்று நினைத்தாய். மூன்று கண்களை உடைய சிவனின் மூன்றாவது கண்ணாகிய அக்னியிலிருந்து ஆறு பொறிகளால் உமாதேவியின் அருளால் உண்டானவன்.ஆறுமுகன்,திருமாலின் அருமை மருமகன்,சிக்கல் சிங்கார வேலன், வள்ளி தெய்வானை மகிழும் மணவாளன்.

பாபநாசம் சிவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். ஆகையால் பக்கத்து ஊரான சிக்கில் சிங்கார வேலன் மேல் அளவிடமுடியாத காதல் கொண்டவர் அதனால்தான் பல பாடல்களில் சிக்கலாரை சிக்கல் வரும்போதெல்லாம் வம்புக்கு இழுப்பார்.

ராகம்:- ஆபோகி தாளம்:- ஆதி

பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சன் எனக்கருள்வாய்
-முருகா.. (நெக்குருகி)

அனுபல்லவி

திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸுப்ரம் மண்யா..... (நெக்குருகி)

சரணம்

முக்கண்ணன் உமைஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே -வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து... (நெக்குருகி)








-

மறைந்த திரு. D.K ஜெயராமன் குரலில் /<"இங்கே கேட்கலாம்">

Thursday, February 21, 2008

மாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்?

மாசி மகம் என்பது பொதுவாக ஒரு நீராடல் விழா! இந்த ஆண்டு, இன்று!(Feb 21, 2008).
இந்த நீராடல் விழா பழந்தமிழ் வழக்கமாக இருக்கலாம் என்று இராம.கி ஐயாவும் தன் நட்சத்திரப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் கண்ணுற்றால் கூட, இது சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
மாசி மகம் அன்று செய்யப்படும் நீராடலுக்கு (தீர்த்தவாரி),
சைவ-வைணவ ஆலயங்களில் இருந்து ஊருலா மூர்த்திகள் (உற்சவர்கள்),
குளம்/நதி/கடல் கரைகளுக்கு தத்தம் வாகனங்களில் கொண்டு வரப்படுவது வழக்கம்!

அனைத்து ஆலய பக்தர்களும் பேதமில்லாமல், அடுத்தடுத்து நின்று கொண்டு செய்யும் தீர்த்தவாரிக் காட்சி, கண் கொள்ளாக் காட்சி தான்!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!

பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!



* திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!

* கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு!

* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!

* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!

* எங்கள் கிராமம் வாழைப்பந்தலில், செய்யாற்றங்கரையில் எழுந்தருளும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, ஊர் மாதா கோவிலில் இருந்து பட்டும், பன்னீரும், ரோஜா மாலைகளும் தரப்படும்!

மாசி மகம் அன்று எல்லாருக்கும் பொதுவில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? அதுவும் இங்கே அமெரிக்கக் கடுங்குளிரில்? :-)
ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!

மனத்து ஈரமும், கண் ஈரமும் வரவழைக்கும் ஒரு எளிமை இனிமையான பாட்டை, மாசி மகத்தன்று, முருகனருள் வலைப்பூவில் கேட்டு மகிழ்வோம்!
T.N. ராமையா தாஸ் எழுதிய ஒரு சில பாடல்களில் இது மிகவும் புகழ் பெற்ற பாடல்-அதிசயத் திருடன் என்ற படத்துக்காக! இன்னொன்று மாயா பஜார் - கல்யாண சமையல் சாதம்! :-)

முருகா என்றதும் உருகாதா மனம்...மோகன குஞ்சரி மணவாளா
பாடலை இங்கு கேட்கலாம், TMS அவர்களின் குழையும் குரலில்! யூட்யூப் அசைபடம் கீழே!


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

(உருகாதா)

முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா

(உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

(உருகாதா)

ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமும் பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

(உருகாதா)

வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்
இசை: K. பிரசாத் ராவ்
படம்: அதிசயத் திருடன்




Thursday, February 14, 2008

உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

இன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன். இப்படியெல்லாம் அழைக்கப்படுபவன்.

இப்படி நினைத்து பாடினால் முருகனுடன் திருமாலையும் சிவனயும் சேர்த்து வணங்கும் பயனும் வரும். அது மட்டுமா அவனை நினந்து உருகாத நெஞ்சத்தில் ஒரு நாளும் வராதவன்.
ஆனால் உத்தமமான திருத்தணியில் கருப்பொருளாய்இருக்கும்
அவனை கருத்தில் வைத்து பஜித்தால் நிச்சயம் நெஞ்சகத்தில் வருவான் .
அவன் என்ன திருத்தணியில் மட்டும்தான் இருப்பானோ? இல்லை இல்லை செந்திலாண்டவனும் அவன்தான் சிக்கில் சிங்கார வேலனும் அவன்தான்.

தாமரை இதழ் போன்ற கால்களை உடைய சிவபாலன் அவன்.கண்பதற்கு எளியவன் அல்லன் அவன், ஆனால் எள்ளிற்குள் எண்ணை இருப்பது போலும், மலருக்குள் மணம் இருப்பதுபோலும் மறைந்திருந்தாலும் எங்கும் நிறைந்தவன். சரி அப்படியென்றால் அவனை அண்டவே முடியாதா. யார் சொன்னது தூய அன்பிற்கு கட்டுப்படுவான். நம்ப வேண்டுமானால் வள்ளிக்கதையைப் பாருங்கள். வேடுவர் குலத்தில் பிறந்த அவளுடைய அன்பிற்கு இரங்கி தன் உள்ளத்தை பறி கொடுத்து திருத்தணியில் அவளை திருமணம் புரிந்தான்.

அவன் சிலை வடிவில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானே அதனால் தூங்குகிறானோஎன்றுஎண்ணவேண்டாம். அவனுக்கு
தூக்கமே கிடையாது. அடியவர்களுக்கு அருள் புரிய எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறான். நாம்தான் நம்முடைய அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையான தூக்கத்திலிருந்து எழுந்து அடியவர்கள் மனத்தில் விளையாடும் கார்த்திகை பெண்களால்
நேர்த்தியாய் வளர்ந்த குழந்தையான குமரனை, பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து
பாடிப் புகழ வேண்டும்.
சிவனின்காலத்தால் அழியாத பாடல் இதோ

ராகம் ஜோன்புரி தாளம் ஆதி

பல்லவி

முருகனைப் பஜி மனமே-திருமால்மருகனைப் பஜி மனமே வடிவேல்

முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)

அனுபல்லவி

உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாதஉத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)

சரணம்

செந்தில் நாதனை அரவிந்த பாதனை

சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)

எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குறவள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)

பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)

பாடலைதிருமதி சுமதி சுந்தர் பாடுவதை <"இங்கே கேட்கலாம்"> ">

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP