உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்
இன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன். இப்படியெல்லாம் அழைக்கப்படுபவன்.
இப்படி நினைத்து பாடினால் முருகனுடன் திருமாலையும் சிவனயும் சேர்த்து வணங்கும் பயனும் வரும். அது மட்டுமா அவனை நினந்து உருகாத நெஞ்சத்தில் ஒரு நாளும் வராதவன்.
ஆனால் உத்தமமான திருத்தணியில் கருப்பொருளாய்இருக்கும்
அவனை கருத்தில் வைத்து பஜித்தால் நிச்சயம் நெஞ்சகத்தில் வருவான் .
அவன் என்ன திருத்தணியில் மட்டும்தான் இருப்பானோ? இல்லை இல்லை செந்திலாண்டவனும் அவன்தான் சிக்கில் சிங்கார வேலனும் அவன்தான்.
தாமரை இதழ் போன்ற கால்களை உடைய சிவபாலன் அவன்.கண்பதற்கு எளியவன் அல்லன் அவன், ஆனால் எள்ளிற்குள் எண்ணை இருப்பது போலும், மலருக்குள் மணம் இருப்பதுபோலும் மறைந்திருந்தாலும் எங்கும் நிறைந்தவன். சரி அப்படியென்றால் அவனை அண்டவே முடியாதா. யார் சொன்னது தூய அன்பிற்கு கட்டுப்படுவான். நம்ப வேண்டுமானால் வள்ளிக்கதையைப் பாருங்கள். வேடுவர் குலத்தில் பிறந்த அவளுடைய அன்பிற்கு இரங்கி தன் உள்ளத்தை பறி கொடுத்து திருத்தணியில் அவளை திருமணம் புரிந்தான்.
அவன் சிலை வடிவில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானே அதனால் தூங்குகிறானோஎன்றுஎண்ணவேண்டாம். அவனுக்கு
தூக்கமே கிடையாது. அடியவர்களுக்கு அருள் புரிய எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறான். நாம்தான் நம்முடைய அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையான தூக்கத்திலிருந்து எழுந்து அடியவர்கள் மனத்தில் விளையாடும் கார்த்திகை பெண்களால்
நேர்த்தியாய் வளர்ந்த குழந்தையான குமரனை, பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து
பாடிப் புகழ வேண்டும்.
சிவனின்காலத்தால் அழியாத பாடல் இதோ
ராகம் ஜோன்புரி தாளம் ஆதி
பல்லவி
முருகனைப் பஜி மனமே-திருமால்மருகனைப் பஜி மனமே வடிவேல்
முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)
அனுபல்லவி
உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாதஉத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)
சரணம்
செந்தில் நாதனை அரவிந்த பாதனை
சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)
எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குறவள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)
பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)
பாடலைதிருமதி சுமதி சுந்தர் பாடுவதை <"இங்கே கேட்கலாம்"> ">
14 comments:
பதிவிற்கு நன்றி அய்யா!
பாடல் நன்றாக உள்ளது!
பஜி மனமே என்ற வரியில் வரும்
அந்தப் 'பஜி' என்ற சொல்லிற்கு
என்ன பொருள் என்று கூறாமல் விட்டு விட்டீர்களே ஸ்வாமி!
@வங்க சுப்பைய்யா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பஜின்னா எண்ணயில் மிதந்து இதயத்துக்கு கேடு விளைவிக்கும் பஜ்ஜின்னு நினைக்க கூடாதுன்னுதான் கடசிலே பொருள் கொடுத்து இருக்கேன்
"பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து
பாடிப் புகழ வேண்டும்"
உள்ளத்தால் உருகி நினந்து பாடுதல்" பஜி என்ற வார்த்தையில் இருந்துதான் பஜனை என்ற வார்த்தையும் வந்தது
//மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான்.//
மனம் பஜ்ஜியை நினைக்க வாய் அவனைப் பாடுவதைச் சொல்கிறீர்களா தி.ரா.ச. :-)
பாபநாசம் சிவனின் அருமையான பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் தி.ரா.ச.
ஆமாம் குமரன் சரியாச்சொன்னீங்க. அருணகிரிநாதரும் "சரணகமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும்" என்றுதான் சொன்னார். அதுவே மிகக்கடினமான கரியம்.
ஆண்டாளும் வாயினால் பாடி மனதினால் சிந்தித்து. ஆனாலிரண்டும் ரயில் தண்டாவாளம் போலத்தான் ஒன்றுசேரவே மாட்டேன் என்கிறது
இப்பல்லாம் கிருத்திகைக்கு காலண்டர் பாக்குறத்துக்குப் பதிலா ப்ளாக்கர் தான் பாக்குறோம்! :-)
திராச ஐயா தான் கரெக்டா பதிவு போட்டுடுவாரே! அப்புறம் எதுக்கு காலண்டர்?
//எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்//
அருமையான கருத்தை எவ்வளவு எளிமையான பாட்டாச் சொல்லி இருக்காரு பாபநாசம் சிவன்! நன்றி திராச கிருத்திகைப் பதிவுக்கு!
அடியேனும் ப(ஜ்)ஜித்தேன்! :-)
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தேன்!
அருள் சிந்திய தேனைச் சிந்தித்தேன்!
நற் சிந்தைத் தேன் அவனைச் சிந்தித்தேன்!
சிந்தாது சிந்தையில் வந்தித்தேன்!
முருகா! முருகா!!
//வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தேன்!
அருள் சிந்திய தேனைச் சிந்தித்தேன்!
நற் சிந்தைத் தேன் அவனைச் சிந்தித்தேன்!
சிந்தாது சிந்தையில் வந்தித்தேன்!
முருகா! முருகா!!
//
ஜிரா சீடர் கேயாரெஸ் வாழ்க வாழ்க.
முருகா.. இன்றைக்கு தி.ரா.ச. சிக்கல் சிங்காரவேலனை நமக்கு கை காட்டியிருக்கிறார். பஜ்ஜியோ, பஜியோ அது என் அப்பன் முருகனைத்தான் சென்றடையுமெனில் எதுவாக இருந்தால் என்ன..?
மனதிற்கினிய பாடலும், இசையும் எப்பவும் என் அப்பனையே சென்று சேரும்..
தி.ரா.ச. அவர்களே அப்பன் முருகனை வணங்க வைத்தமைக்கு எனது நன்றிகள்..
@கேஆர்ஸ் வாங்க. காலனை அண்டவிடாதவன் கந்தன்.அவன் அருளாலே அவன் தாள் வணங்க வைக்கிறான்.உங்களைப் போன்றோரின் ஆதரவும் இருக்கும்வரை எனக்கென்ன மனக்கவலை.
தேன் தேன் என்று "பார்த்தேன் சிரித்தேன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க.
@குமரன் மறு வருகைக்கு நன்றி. ஜிராவுக்கு கேஆர்ஸ் சிஷ்யன்,கேஆர்ஸ்க்கு குமரன் சிஷ்யன்,குமரனுக்கு நான் சிஷ்யன். இப்படியே சிஷ்ய பரம்பரை நீண்டு கொண்டே போகட்டும். கேஆர்ஸ் வந்தால்தான் களை கட்டுது.
@கேஆர்ஸ் போனவருடம் இதே நாட்களில் நாம் இருவரும் கந்தக்கோட்டம் சென்றது நினைவுக்கு வருகிறது.
@வாங்க உண்மைத்தமிழன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அவன் ஆனைமுகத்தோனின் அன்புச்சகோதரன்,ஞானபண்டிதன், தீனதயாபரன்.
@குமரன் நாம் செய்யும் பூஜை எப்படி இருக்கிறது தெரியுமா பட்டினத்தார் சொல்படி
கையொன்றுசெய்ய,
விழியென்று நாட
கருத்தொன்று எண்ண
பொய்யொன்றுவஞ்சக நாவொன்னுபேச பேச,
புலால் கமழும் மெய்யொன்று சார
செவியொன்று கேட்க
விரும்பும் நான் செய்கின்ற பூஜை
எவ்வாறு கொள்வாய்
வினைதீர்த்தவனே
இதைத்தான் சிவனும் உருகாத நெஞ்சம் என்கிறார்.
உண்மை தான் தி.ரா.ச. பல நேரங்களில் நானும் அவ்வாறே உணர்ந்திருக்கிறேன். இறை வழிபாடு என்று உட்காரும் போது தான் இந்தத் தேவையில்லாதவை எல்லாம் முன் வந்து நிற்கின்றன.
துதி வணங்கு பணி
Post a Comment