Tuesday, March 25, 2008

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...


அண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.

இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: திருப்புகழ்
பாடல் பெற்ற தலம்: பழனி
பாடியவர்: எஸ்.பி. இராம்
இராகம்: குந்தவராளி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை

ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)

பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே

என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்

உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா

அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)

நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா

சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த

ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)

சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே

பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!

***

அண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.

Saturday, March 22, 2008

ஆனந்த நடனம் ஆடுவதேன்.....






-

ராகம்:- ஹம்ஸாநந்தி தாளம்:- ஆதி
பல்லவி

ஆனந்த நடனம் ஆடுவதேன் மயிலே
அழகன் முருகனை கண்டதனாலோ............( ஆனந்த நடனம்)

அனுபல்லவி

மான்விழியாள் குறவள்ளி மயிலாள்
மடிமீது உனை இருத்தி வருடியதாலோ.........(ஆனந்த நடனம்)

சரணம்

குன்று தோராடிடும் குமர வடிவேலன்
உந்தனின் மீது அமர்ந்ததனாலோ
மீன்விழியாள் குலமங்கை குஞ்சரியாள்
கடைக்கண்அருள் பார்வை கிடைத்ததினாலோ ..ஆனந்த நடனம்)

Thursday, March 20, 2008

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)


முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.




இந்தத் திருப்புகழ் பாடலுக்கு அருமையாக பொருள் சொல்லியிருக்கிறார் எஸ்.கே. ஐயா. அருணகிரிநாதர் இயற்றிய இந்தப் பாடலை 'அருணகிரிநாதர்' திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார்.

Tuesday, March 18, 2008

காற்றின் அணுவை மூச்சாக்கி

வேலுண்டு வினையில்லை என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய இந்தப் பாடல் உள்ளத்தை உருக்கும்.

திரைப்படங்களில் எத்தனையோ பாடல்கள் இன்னிசையோடு இறைவனைத் துதித்து வெளி வந்துள்ளன. துன்பப்படும் கதாபாத்திரங்கள் தங்களைக் கடவுளே காக்க வல்லார் என்று அழுது தொழுது பாடுகையில் உள்ளம் உருகும் படி இசையமைத்திருப்பார்கள்.

இதோ பாடலைக் கேளுங்கள். நமது நெஞ்சமே உருகும் பொழுது தமிழ்வேளின் திருவுளம் இழகாதா? உருகாதா?



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

(திருமலைக் குமார சுவாமி, திருவடி சரணம் ஐயா - உன்
அருளினால் பிறவி பெற்றேன், அடைக்கலம் நீயே ஐயா!)

காற்றின் அணுவை மூச்சாக்கி - என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்!
மூச்சே காற்றாய் முடியும் வரை - உன்னைப் போற்றிப் பாடிடக் குரல் கொடுத்தாய்!

பாலூட்டும் அன்னை இல்லை! தந்தை சீராட்டும் நிலையில் இல்லை!
ஊரோடு உறவும் இல்லை! இங்கு உனை அன்றி எதுவும் இல்லை!
போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை!
வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!

வானூரும் வெள்ளி மலையில் - தந்தை தாயோடு வீடும் உண்டு!
கணநாதன் அண்ணன் உண்டு! - சபரி மலை மீது தம்பி உண்டு!
ன் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு?
குன்றாடும் குமர வேலே - அருள் கொடுத்தாள வேண்டும் இன்று!

Friday, March 14, 2008

அருளாளன் வடபழநி ஆண்டி!


வடபழநி முருகன்

======================================================================

அருளாளன் வடபழநி ஆண்டி!

காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்
கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லி
கோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்கு
குவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டி
ஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்
உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!

ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள்;
நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய்;
ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான்
அடியேன்நான் கண் விழிப்பேன்; அலறிஓடிப்
போயிற்று உலகநினை வென்கின் றாற்போல்
பொங்கிவரும் கண்ணீரில் எனையி ழப்பேன்!
வாயற்று நின்றுவட பழநிக் குள்ளே
வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன்!

பாகாக உருகுகின்ற கிளியென் றென்னைப்
பதமாக இள்முருகன் வருடி விட்டான்;
சாகாத கவலையினைச் சாக வைத்தான்;
சந்ததமும் மெய்ப்பொருளைக் காண வைத்தான்;
போகாத ஊருக்குப் போக வைத்து
புகழ்மலையின் உச்சியிலே வாழ வைத்தான்;
ஆகாத தென்னவெனக் காட்டி விட்டான்
அருளாளன் வடபழநி ஆண்டி தானே!

நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!

தண்டத்தை ஏந்துகிறான்; உலகம் போற்றும்
தவக்கோலம் தாங்குகிறான்; தனியே நின்றிவ்
வண்டத்தை ஆளுகிறான்; நம்பி னோர்க்கிங்(கு)
ஆனந்தம் அருளுகிறான்; அனுப வித்துக்
கண்டத்தை எழுதுகிறேன்; அவனை விட்டால்
கதியில்லை நிம்மதியைக் காண! திங்கள்
துண்டத்தை அணிந்தவனின் மைந்த னைநீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!

- ஆக்கம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்

”தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!” என்று என்னவொரு
அழுத்தத்துடன் சொன்னார் பாருங்கள். அதுதான் இப் பாடலின்
முத்தாய்ப்பான வரிகள்

Wednesday, March 12, 2008

தீனசரண்யா.... சுப்ரமண்யா.....

கார்த்திகைத் திருநாள் இன்று/நாளை அதோடு ஷஷ்டியும் இன்றே . பருத்தி புடைவையாய் காய்த்தது என்பார்கள் பெரியோர்கள்.
கேஆர்ஸ் வேறு சொல்லிவிட்டார் நான்தான் காலண்டர் என்று. ஆமாம் காலபயத்தை அண்டவிடாத முருகனின் பக்தர்.
குமரனை கண்டவர்க்கு கனவிலும் கால பயம் ஏதைய்யா
திரு.பாபநாசன் சிவனின் பக்தியின் பெருமையையும் அவருடைய தமிழ்ப் பற்றையும் பறைசாற்றும் முருகனின் மீது மற்றோரு பாடல்.

இந்தப் பாடல் எனக்காவே எழுதியது போல நான் நினைத்துக்கொள்வேன்

நெஞ்சம் உருகி (நெக்குருகி) உன்னை பணியாத கல்நெஞ்சன் நான். இருந்தாலும் எனக்கு நீ அருளவேண்டும். ஏன் தெரியுமா. சூரனனின் கொடுமைதாங்காமல் முனிவர்களும் தேவர்களும் உன்னைத்தான் பணிந்தார்கள். நீ தட்டாமல் அவர்களுக்கு அருள் புரிந்தாய். அப்படிப்பட்ட தீன சரண்யன் நீ. அதனால்தான் கூறுகிறேன் எனக்கு வேறு திக்குஇல்லை. நீ தான் காப்பாற்றி அருளவேண்டும்


நீ யாரென்று நினைத்தாய். மூன்று கண்களை உடைய சிவனின் மூன்றாவது கண்ணாகிய அக்னியிலிருந்து ஆறு பொறிகளால் உமாதேவியின் அருளால் உண்டானவன்.ஆறுமுகன்,திருமாலின் அருமை மருமகன்,சிக்கல் சிங்கார வேலன், வள்ளி தெய்வானை மகிழும் மணவாளன்.

பாபநாசம் சிவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். ஆகையால் பக்கத்து ஊரான சிக்கில் சிங்கார வேலன் மேல் அளவிடமுடியாத காதல் கொண்டவர் அதனால்தான் பல பாடல்களில் சிக்கலாரை சிக்கல் வரும்போதெல்லாம் வம்புக்கு இழுப்பார்.

ராகம்:- ஆபோகி தாளம்:- ஆதி

பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சன் எனக்கருள்வாய்
-முருகா.. (நெக்குருகி)

அனுபல்லவி

திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸுப்ரம் மண்யா..... (நெக்குருகி)

சரணம்

முக்கண்ணன் உமைஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே -வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து... (நெக்குருகி)








-

மறைந்த திரு. D.K ஜெயராமன் குரலில் /<"இங்கே கேட்கலாம்">

Thursday, February 21, 2008

மாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்?

மாசி மகம் என்பது பொதுவாக ஒரு நீராடல் விழா! இந்த ஆண்டு, இன்று!(Feb 21, 2008).
இந்த நீராடல் விழா பழந்தமிழ் வழக்கமாக இருக்கலாம் என்று இராம.கி ஐயாவும் தன் நட்சத்திரப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் கண்ணுற்றால் கூட, இது சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
மாசி மகம் அன்று செய்யப்படும் நீராடலுக்கு (தீர்த்தவாரி),
சைவ-வைணவ ஆலயங்களில் இருந்து ஊருலா மூர்த்திகள் (உற்சவர்கள்),
குளம்/நதி/கடல் கரைகளுக்கு தத்தம் வாகனங்களில் கொண்டு வரப்படுவது வழக்கம்!

அனைத்து ஆலய பக்தர்களும் பேதமில்லாமல், அடுத்தடுத்து நின்று கொண்டு செய்யும் தீர்த்தவாரிக் காட்சி, கண் கொள்ளாக் காட்சி தான்!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!

பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!



* திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!

* கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு!

* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!

* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!

* எங்கள் கிராமம் வாழைப்பந்தலில், செய்யாற்றங்கரையில் எழுந்தருளும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, ஊர் மாதா கோவிலில் இருந்து பட்டும், பன்னீரும், ரோஜா மாலைகளும் தரப்படும்!

மாசி மகம் அன்று எல்லாருக்கும் பொதுவில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? அதுவும் இங்கே அமெரிக்கக் கடுங்குளிரில்? :-)
ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!

மனத்து ஈரமும், கண் ஈரமும் வரவழைக்கும் ஒரு எளிமை இனிமையான பாட்டை, மாசி மகத்தன்று, முருகனருள் வலைப்பூவில் கேட்டு மகிழ்வோம்!
T.N. ராமையா தாஸ் எழுதிய ஒரு சில பாடல்களில் இது மிகவும் புகழ் பெற்ற பாடல்-அதிசயத் திருடன் என்ற படத்துக்காக! இன்னொன்று மாயா பஜார் - கல்யாண சமையல் சாதம்! :-)

முருகா என்றதும் உருகாதா மனம்...மோகன குஞ்சரி மணவாளா
பாடலை இங்கு கேட்கலாம், TMS அவர்களின் குழையும் குரலில்! யூட்யூப் அசைபடம் கீழே!


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

(உருகாதா)

முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா

(உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

(உருகாதா)

ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமும் பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

(உருகாதா)

வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்
இசை: K. பிரசாத் ராவ்
படம்: அதிசயத் திருடன்




Thursday, February 14, 2008

உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

இன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன். இப்படியெல்லாம் அழைக்கப்படுபவன்.

இப்படி நினைத்து பாடினால் முருகனுடன் திருமாலையும் சிவனயும் சேர்த்து வணங்கும் பயனும் வரும். அது மட்டுமா அவனை நினந்து உருகாத நெஞ்சத்தில் ஒரு நாளும் வராதவன்.
ஆனால் உத்தமமான திருத்தணியில் கருப்பொருளாய்இருக்கும்
அவனை கருத்தில் வைத்து பஜித்தால் நிச்சயம் நெஞ்சகத்தில் வருவான் .
அவன் என்ன திருத்தணியில் மட்டும்தான் இருப்பானோ? இல்லை இல்லை செந்திலாண்டவனும் அவன்தான் சிக்கில் சிங்கார வேலனும் அவன்தான்.

தாமரை இதழ் போன்ற கால்களை உடைய சிவபாலன் அவன்.கண்பதற்கு எளியவன் அல்லன் அவன், ஆனால் எள்ளிற்குள் எண்ணை இருப்பது போலும், மலருக்குள் மணம் இருப்பதுபோலும் மறைந்திருந்தாலும் எங்கும் நிறைந்தவன். சரி அப்படியென்றால் அவனை அண்டவே முடியாதா. யார் சொன்னது தூய அன்பிற்கு கட்டுப்படுவான். நம்ப வேண்டுமானால் வள்ளிக்கதையைப் பாருங்கள். வேடுவர் குலத்தில் பிறந்த அவளுடைய அன்பிற்கு இரங்கி தன் உள்ளத்தை பறி கொடுத்து திருத்தணியில் அவளை திருமணம் புரிந்தான்.

அவன் சிலை வடிவில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானே அதனால் தூங்குகிறானோஎன்றுஎண்ணவேண்டாம். அவனுக்கு
தூக்கமே கிடையாது. அடியவர்களுக்கு அருள் புரிய எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறான். நாம்தான் நம்முடைய அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையான தூக்கத்திலிருந்து எழுந்து அடியவர்கள் மனத்தில் விளையாடும் கார்த்திகை பெண்களால்
நேர்த்தியாய் வளர்ந்த குழந்தையான குமரனை, பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து
பாடிப் புகழ வேண்டும்.
சிவனின்காலத்தால் அழியாத பாடல் இதோ

ராகம் ஜோன்புரி தாளம் ஆதி

பல்லவி

முருகனைப் பஜி மனமே-திருமால்மருகனைப் பஜி மனமே வடிவேல்

முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)

அனுபல்லவி

உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாதஉத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)

சரணம்

செந்தில் நாதனை அரவிந்த பாதனை

சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)

எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குறவள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)

பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)

பாடலைதிருமதி சுமதி சுந்தர் பாடுவதை <"இங்கே கேட்கலாம்"> ">

Monday, February 04, 2008

037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை

ஒரு பாடல் இசையமைக்கப்பட வேண்டும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட படக்காட்சிக்கு. படக்காட்சியின் நீளம் கிட்டத்த பத்தரை நிமிடங்கள். அந்தப் படக்காட்சியும் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுத்தது. ஆகவே காட்சிகள் ஒழுங்குக்குள் வராமல் இருக்கும். தேங்காய் உடைப்பார்கள். சூடம் காட்டுவார்கள். காவடி தூக்குவார்கள். அலகு குத்துவார்கள். நடுநடுவே கதாநாயகனும் நாயகியும் கூட்டத்தில் தென்படுவார்கள். இப்படி ஒரு படச்சுருளை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்தார் இயக்குனர் சங்கர். சொன்ன வேலையைச் செய்வார் என்ற நம்பிக்கை.

மெல்லிசை மன்னரும் மலைக்கவில்லை. கவியரசர் கண்ணதாசனின் தமிழ் உதவிக்கு இருக்கையில் என்ன கவலை? பாடல் பிறந்தது. மெட்டும் போட்டாகி விட்டது. ஆனால் யார் பாடுவது? பத்தரை நிமிடங்களுக்கு? சரி. ஒருவர் பாடினால் அலுத்து விட்டால்? அறுமுகனைப் போற்றி ஆறுபேர் பாடினால்? ஆம். மெல்லிசை மன்னர், டீ.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரம்ணியம்மாள், இசையரசி பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி ஆகிய அறுவரும் பாடிப் பதிவானது பாடல். படச்சுருளுக்கு மிகப் பொருத்தமாக.

வருவான் வடிவேலன் என்ற திரைப்படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் திரைப்படம் பெருவெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இயல்பிலேயே மெல்லிசை மன்னர் முருகபக்தராம். இந்தப் பாடலில் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.



சீர்காழி கோவிந்தராஜன்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்

பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்


டி.எம்.சௌந்தரராஜன்
சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி
தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே
அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்


எல்.ஆர்.ஈசுவரி
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
அரோகரா அரோகரா
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி

சீர்காழி:
முருகா முருகா முருகா முருகா
எல்.ஆர்.ஈசுவரி
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி

டி.எம்.சௌந்தராஜன்
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி
டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்து

வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா

பி.சுசீலா
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா
வானத்தில் உன்னொளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு


டி.எம்.சௌந்தரராஜன்
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பி.சுசீலா
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணையைப் பொழிவதும் முருகனடி
சீர்காழி கோவிந்தராஜன்

தண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி


மெல்லிசை மன்னர்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
ஆனந்த தரிசனம் காணுகிறோம்
அவன் அழகிய தேரினை வணங்குகிறோம்
ஞாலத்து தேசிகன் மார்பினிலே
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்


அனைவரும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா


பெங்களூர் ரமணியம்மாள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில்
வாடிய பயிரை தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
இடம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல்
வரம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா


பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
அனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலா
பெங்களூர்: தெய்வானைக் காவலா
அனைவரும்:
வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா

இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் விரும்பினேன். ஆனால் பாடலின் நீளம் அதை வலையேற்ற விடாமல் தடுக்கிறது. ஆனால் பாடலை மெயிலில் அனுப்ப முடியும். பாடலைக் கேட்க விரும்புகிறவர்கள் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடலனுப்பவும். பாடலை நான் அனுப்புகிறேன்.

இந்தப் பாடலுக்குப் படமும் போட்டால் நன்றாக இருக்குமே! அதுவும் நான் இந்தக் கோயிலுக்குச் சென்ற பொழுது எடுத்த படங்களை இங்கே கொடுத்தால்! இதோ கொடுக்கிறேன். பத்துமலை முருகன் கோயிலில் நான் சமீபத்தில் அறுபடை வீடுகளில் கூட அனுபவிக்காத ஒரு ஆனந்த அனுபவத்தைக் கண்டேன். மலேசியத் தமிழர்களே இந்தத் திருக்கோயிலை இப்படியே சிறப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.

பத்துமலை முருகனின் பேருருவம். அளவிட முடியாத அருளுடையானுக்கு மனிதர்களால் அளவிட முடிந்த உயரத்தில் திருவுருவம்.


அதே முருகன். ஆனால் பின்புலத்தில் மலையோடும்...முன்புலத்தில் மக்களோடும் மண்டபங்களோடும்.


திருக்கோயிலுக்கும் வாழ்விற்கும் உயர்த்தி விடும் படிக்கட்டுகள்.


வரையேறி வருவோரை வரவேற்கும் வடிவேலன்.


அதே வரவேற்பு. ஆனால் குகையின் முகப்புத் தோற்றத்தோடு.


பத்துமலை முருகன் குடிகொண்ட கருவரை. இங்கு புகைப்படும் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது. அது சுற்றுலாத்தலம். அதனால் அப்படி என்று சொல்கிறவர்கள் பண்டரீபுரத்திலும் படமெடுக்க அனுமதிக்கப்படுகிறது என்ற தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.


பத்துமலை முருகன் தங்கப்பத்து அலங்காரத்தோடு.


உள்ளே எழுந்திருக்கும் மற்றொரு முருகன் கோயில்.


வள்ளி தெய்வானையுடம் அமர் சோலை. அது மலேசியப் பத்துமலை எனும் சோலை.


அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, January 23, 2008

முப்பெரும் விழாவும் முருகனும்

தென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
இன்று தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


சிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா? அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்தச் சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.

ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்
பல்லவி
ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)
அனுபல்லவி
தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)
சரணம்
பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த
...)




தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட
மகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.
இனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்
ராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி
பல்லவி
முருகனின் மறு பெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு
அனுபல்லவி
குளுமைக்கு அவன் ஒரு நிலவு
குமரா என சொல்லி பழகு
சரணம்
வேதங்கள் போற்றிடும் ஒலியே
உயர் வேலோடு விளையாடும் எழிலே
துறவியும் விரும்பிடும் துறவே
துறவியாய் நின்றிடும் துறவே
-

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் "ஒருமையுடன் நினது திருமலரடி" என்ற பிலஹரி ராகப் பாடல்
கொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்

-
இந்தப் பதிவை முதலில் கௌசிகம் பதிவில் இட்டு விட்டேன்.
பின்னர் நணபர் கே ஆர் ஸ் விருபத்தின்படி முருகன் அருளிலும் இடுகிறேன் முருகன் அன்பர்களுக்காக. இரண்டு பாடல்கள் முருகனைப் பற்றியது.

Friday, January 18, 2008

முருகன் ஒரு மலைவாசி

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

முருகனும் ஒரு மலைவாசி. பெருவாரியாக அவன் மகிழ்ந்து, சினத்து, சினம் தணிந்து, மணந்து இருந்த இடம் மலைப் பிரதேசம்தான்.இன்றே கொஞ்சம் கிருத்திகை வந்து விட்டது. சில காலண்டர்களில் இன்றைக்கும் சிலவற்றில் நாளக்கும் கிருத்திகை விரதம் என்று போடப்பட்டு இருக்கிறது.நாளைக்கு ஊரில் இல்லாததால் இன்றைக்கே பதிவை போட்டுவிடலாம்.

நேற்று ஒரு கச்சேரிக்கு சென்று இருந்தேன். அதில் பாடப்பெற்ற ஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது. அருமையான சொல்லாற்றல், கற்பனைத்திறன், கவனப்படுத்தி வழங்கிய விதம் எல்லாமே சிறப்பாக இருந்தது. அதை அப்படியே வாங்கி கீழே அளிக்கிறேன். பாடல் எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை.கேட்கவும் படிக்கவும் நன்றாக இருந்ததால் அதை முருகன் அடியார்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவினால் இடுகிறேன்

ராகம்:- சிம்மேந்திர மத்யமம் தாளம்: ஆதி

பல்லவி

கந்தா நீ ஒரு மலைவாசி

கந்தம் கமழும் நல்ல சுகவாசி......(கந்தா நீ......)

அனுபல்லவி

தந்தையின் கோலமோ பரதேசி

தத்தை சிவகாமி அம்மையோ தில்லை நகர்வாசி......(கந்த நீ ஒரு.....)

சரணம்

சோதரன் விநாயகனோ குளக்கரைவாசி

மந்தகாச மாமனோ திருமலைவாசி

அந்தமிகு மாமியோ செங்கமலவாசி

நீ எந்தவாசியானாலும் பக்தரை நேசி .......(கந்தா நீ ஒரு....).

பாடல் ஒலி அமைப்புதடை செய்யப்பட்டதால் இடமுடியவில்லை மன்னிக்கவும்.யாரவது பாடி இணைக்கலாம்

அதனால் என்ன இந்த வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் என்ற கிராமிய காவடிசிந்துவை கேட்டு,பார்த்து.ரசியுங்கள்


-

'



(திராச உத்தரவு கொடுத்துட்டாரு! இதோ அதே மலைவாசிப் பாட்டு - அதே நித்ய ஸ்ரீ - ராகம் மட்டும் வேற! - krs)

Wednesday, December 12, 2007

"தல" பில்லா 2007! முருகப் பெருமான் குத்துப்பாட்டு!!

தல பில்லா படம் இதோ நாளைக்கு ரிலீசாகப் போகுது! முருகனருள் வலைப்பூவில் ஒரு குத்துப்பாட்டு போட்டா முருகன் கோவிச்சுக்குவாரா என்ன?
பில்லா 2007 படத்தில், "சேவல் கொடி பறக்குதடா"-ன்னு இந்த முருகன் பாட்டைக் கேட்டவுடன், என் மனசு ஜிவ்வுன்னு ஒரே உசரத்துக்குப் போயிடிச்சி!

பாட்டின் வரிகளை இணையத்தில் தேடினேன்...கிட்டவில்லை!
சரி, நாமளே உக்காந்து எழுதிடுவோம்-னு கேட்டுக் கேட்டு எழுதிட்டேன்!
அப்படியே மனப்பாடமா ஆகிப் போச்சு! - பின்னே வூட்டுல யாருக்கும் தெரியாம, கதவை சாத்திப்புட்டு, வால்யூமை ஃபுல்லா ஏத்தி வச்சி, ஆடு ஆடு-ன்னு ஆடிக்கிட்டே எழுதினேன்-ல! மனப்பாடம் ஆகாம என்ன செய்யும்? :-)

பால் வடியும் பால முகம், அமைதியான பையன் (அட...என்னைப் போலவே) - இப்படி எல்லாம் பேரு எடுத்த விஜய் ஏசுதாஸ் என்னமா குத்துப்பாட்டைக் குத்திக் குத்திப் பாடுறான்!
எலே, ஏசுதாஸ் பய புள்ள! கலக்கிட்ட போ! ஒன் கச்சேரி பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன். அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடப் போகுது இந்தப் பாட்டு!

பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய், பாட்டு வரிகள்-ல பிச்சி ஒதறி இருக்காரு! குத்துப்பாட்டில் கந்த சஷ்டிக் கவசமும், அருணகிரியும் கொண்டு வரணும்-னா சும்மாவா?
இசை = நம்ம யுவன்!
சும்மா நாதஸ், தவிலு, குத்திசைன்னு, கலக்கி இருக்காரு! அப்பா தான் நாதசுரம் தவிலுன்னு பல சமயம் கலந்து கொடுப்பாரு! பையனும் அடிச்சி ஆடி இருக்கான்!


இது வரை முருகனடியார்கள், இந்த வலைப்பூவில் குத்துப்பாட்டுன்னு தனியாப் போடலைன்னாக் கூடத், துவக்கம்-னு ஒன்னு இருந்தா தானே, தொடரும்-னு ஒன்னு இருக்கும்! அதான் அடியேன் பொடியேன் ஆசையாத் துவங்கிட்டேன்!
குத்து குத்து கூர்வடி வேலால்!
குத்து குத்து குத்துப் பாட்டால்!!
:-)

பாட்டின் வரிகளைக் கேட்டுக் கொண்டே படிங்க! ஆடணும்-னு நெனச்சாலும் தப்பில்லை! கொஞ்சம் அக்கம் பக்கம் பாத்துட்டு ஆடுங்க மக்கா! :-)

Seval Kodi.mp3

பாட்டை மேலே கேக்க முடியலைன்னா, இதோ MusicIndiaOnline சுட்டி


வேல்! வேல்!! வேல்! வேல்!!

சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
(சேவல் கொடி பறக்குதடா)

கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!


தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!

வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ

காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?

(சேவல் கொடி பறக்குதடா)

மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!

ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?


விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! -
வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! -
வேல் வேல்!!


தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?

(சேவல் கொடி பறக்குதடா)







பாட்டைக் கொஞ்சம் அசை போடலாம், வாரீயாளா?


காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

= இது அப்படியே கந்த சஷ்டிக் கவசம்!
காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட...ன்னு அதே வரிகள்!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்!
= மிக அருமையான வரிகள்! தமிழ்க் கடவுள்-னு முருகனைச் சொன்னாலும், கடவுளையும் தாண்டி ஒரு பரம்பரைத் தலைவன் - பாட்டன் கணக்காத் தான் - எளிய மக்கள் முருகனைக் கருதறாங்க! காவடி தூக்கி ஓடியாறாங்க!

காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
= முருகன் காட்டுக்குள்ள வள்ளியை டாவடிக்க நடமாடினாரு! தெரியும்!
ஆனாக் கா(நா)ட்டுக்குள்ள எப்போ முடி சூடினாரு? வந்து சொல்லுங்க ஜிரா! :-)

சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு! = ஹிஹி - நெஜமாலுமே சூப்பரு!
இனி, திருச்செந்தூரில், சூர சம்ஹாரம்-னு சொல்றதுக்குப் பதிலா,
"சூரன் சுளுக்கெடுத்தல்"-னு அழகாத் தமிழ்லயே சொல்லலாம்! :-)



ஆதித் தமிழன் ஆண்டவனானான்!
மீதித் தமிழன் அடிமைகளானான்!!

= ஐயகோ! கவிஞர் இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறாரே!
முருகா, நீ ஆண்டானாப் போயிட்ட! நாங்க எல்லாம் ஒத்துமையில்லாம அடிமையாப் போனோமா? - ஈழத்துல, தமிழன் ஆண்டாண்டு காலமா அல்லல்படுவதைப் பார்த்தும் கூட, போகட்டும் அடிமைகள்-னு எங்கள எல்லாம் நீ விட்டுட்டியோ?

மனுஷன்தான் முருகனோட அவதாரம்! - என்ன ஒரு ஒற்றுமை, ஆழ்வார்கள் கருத்துடன்!
மனிதனாய் அல்லவோ இறைவன் வருகிறான்! சிறையில் பிறக்கிறான், புழுதியில் வளர்கிறான், தாய் தந்தை இல்லாமல் தவிக்கிறான்; நண்பர்களோடு லூட்டியும் அடிக்கிறான், காதல்-னா என்னன்னு கற்றும் கொடுக்கிறான்!
மனிதன் தான் இறைவனோட அவதாரம்! மனித குல மேம்பாடே இறைப்பணி!!

வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்! = பார்வதிக்கு எங்கூர்ல சிவதாரம்னு நாட்டு வழக்காச் சொல்லுவாய்ங்க! சிவதாரம் பெரியம்மா எங்க வூட்டுக்கு நாலு வூடு தள்ளி இருந்தாங்க!
சிவதாரம் வயித்துல பெக்காம, சிவன் கண்ணில் பெத்ததால், முருகனைத் "தத்து எடுத்தா சிவதாரம்"-னு கவிஞரு சிம்பிளாச் சொல்லிபுட்டாரு!

வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்! தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
= அருமை! அருமை! அப்படியே திருவிழா கண்ணு முன்னால வருது!

தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?

= நச்சுன்னு கேட்டாருப்பா!
பார்வதி பிரிய நந்தனாய நமஹ-ன்னு சொல்லுறவங்க சொல்லிக்கட்டும்! நம்ம புள்ளை முருகனை அடுத்தவங்க செல்லமாக் கூப்பிட்டா, அவிங்கள போடா டேய்-ன்னு சொல்லுவோமா? - ஆனா, நம்ம வூட்டுக்குள்ளார சிவதாரப் புள்ளையாண்டானே-ன்னு தாராளமாக் கூப்பிட எவன் வந்து தடை சொல்றது?

நம்ம புள்ளைய, பேச்சு வழக்குல, நம்ம வூட்டுல கூப்பிடாம, வேற எங்கன போயிக் கூப்புடப் போறோம்?

பெருமாக் கோயில்ல கூட, இடையறாது தமிழ்-ல ஓதறாங்க! - நீராட்டம் துவங்கி நிவேதனம் வரை பாசுரங்கள் ஓதக் காணலாம்! உற்சவப் புறப்பாடுகளில் தமிழ் முன்னால்...இறைவன் பின்னால்...அதற்கும் பின்னால் வடமொழி வேதங்கள்!
ஆனா தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லிக்கிட்டு முருகன் கோயில்ல மட்டும்...ஹூம்! இங்கும், தமிழ் இடையறாது ஒலிக்கும் நாள் எந்த நாளோ? முருகா, மனசு வையிப்பா, என் செல்வமே!

வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா! நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
= பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்; உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்-ன்னு கண்ணதாசனும் பாடினாரு!
ஆனா, "நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா"-ன்னு லோக்கலாப் பாடும் போதும், அதே கிக்கு இருக்கத் தான் செய்கிறது! என்னா சொல்றீங்க மக்களே?

குத்துப் பாட்டு முருகனுக்கு அரோகரா! பத்து மலை முருகனுக்கு அரோகரா!!

Friday, November 16, 2007

கந்த சஷ்டி- 7: வள்ளித் திருமணம் - ஜீவாவின் பதிவு!

ஆறு நாட்களில் ஆறு பதிவுகளில் ஆறு முகனுக்கு சஷ்டி சிறப்புப் பதிவுகளில் முருகனருள் முன்னிற்கிறது.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் முகம் ஒன்றே
வள்ளியயை மணம் புரிய வந்த முகம் ஒன்றே
என்று ஆனந்த பைரவியில் கண்ட சாபு தாளத்தில் அருணகிரி பாடிய ஆறுமுகமான பரம்பொருளை ஆறு பதிவுகளில் பாடிடக் கேட்டோம்:

* சரவணபவ என்னும் திருமந்திரம் ஷண்முகப்பிரியாவில் ஷண்முகன் புகழ் பாடியது.
* பரம்பொருள் அகரம் முதல் அனைத்தும் ஆனதை திருப்புகழில் புகழ்ந்தது.
* முருகு என உருகிடும் இன்பம்போல் வேறுண்டோ என சீர்காழியார் குரல் கேட்டது.
* நாத, வேத, ஞான பண்டிதனை ராஜ அலங்காரத்திலும் பார்த்தது.
* முதல் சொல் தந்து முக்திக்கு வித்தானவனை அருணகிரியாரின் சொற்சுவையில் பருகியது.
* தியான நிலையில் அகமுருகி நின்றார்க்கு அருள் பாலித்திடும் செந்தில்நாதனைப் போற்றியது.

இப்படியாக, குமரனும், கே.ஆர்.எஸ் உம் தாங்கள் தேர்ந்தெடுத்த தேனான பாடல்களை கேட்பதற்கு தோதாக தந்திட, கைமாறென்ன செய்வேன்? நன்றியோடு சேர்த்து வேறென்ன தரலாம்? பதிவு தரலாமா? வள்ளி திருமணமும், மங்களமும் கொடுத்து சஷ்டி பதிவுகளுக்கு இனிதான நிறைவினைத் தரலாமா!



வள்ளி திருமணத்தினை இசை நாடகமாக வெளியிட்டிருக்கிறார்கள் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலனின் குழுவினர். இணையத்தில் அதனை இசைக்கோப்பாக வெளியிட்டுள்ளார்கள் சிஃபி தளத்தினர். நீங்களே கேட்டு மகிழுங்கள்.
வள்ளி திருமணம் ஒலிக்கோப்பு - பதினேழு பகுதிகளில்!

பாடல்களின் வரிகள்



இறுதியில் மங்களமும் பாடிடலாமா? MSV இசையில் SPB பாடி வெளிவந்த முருகன் சுப்ரபாதம் இசைத் தொகுப்பிலிருந்து மங்களம் பகுதி:





மங்களம் தருக என்றேதான் மலரடியை வேண்டுகிறோம்
மலையேறிய குமரேசா வந்தனம் வளர்க மங்களம்

பூமியில் கலியில் பூரணமாய் தோன்றிடும் சுவாமிநாதனே
புகழாம் பெரு சாகரனே கந்தனே பொலிக மங்களம்

நாதனே வேதநாயகனே நாதாந்தமான பூரணா
நயனங்களில் அன்பாளும் முருகனே தருக மங்களம்

தாரகன் சூரபதுமனெனும் தீமையை வென்ற தீரனே
தணிகாசல பெருமாளே உந்தனுகிங்கு வந்தனம்

வாடுவார் நெஞ்சில் பதமாவாய் வள்ளலே வள்ளிநாயகா
வயலூரினில் வளர்வாயே எங்குமே பொலிக மங்களம்

மாயவன் மாலின் மருகேசா மங்களம் அருளும் வாசவா
மருதாசல முருகேசா மன்னனே நித்ய மங்களம்

பதிவு: Jeeva Venkataraman

Thursday, November 15, 2007

கந்த சஷ்டி - 6: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!

திருச்சீரலைவாய் அப்படிங்கிற ஊருக்குப் போய் இருக்கீங்களா?

இல்லியே அது எங்கப்பா இருக்கு?

அட, என்னங்க கடல் கொஞ்சும் செந்தூர்-ன்னு சொல்லுவாங்களே!

ஓ...திருச்செந்தூரைச் சொல்லுதீயளா? போயிருக்கோம்! போயிருக்கோம்!

போயிருக்கீங்க சரி...சூர சம்ஹாரம் என்னும் சூரனுக்கு அருளலைத் திருச்செந்தூரில் யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
பார்க்கலைன்னா, பதிவின் இறுதியில் அசைபடத்தில் (வீடியோவில்) காணுங்கள்! வாரியார் சுவாமிகளின் இளமைக் குரலும் கடைசியில் கேட்கிறது!

சரி, அது என்ன திருச்-சீர்-அலை-வாய்?
"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" என்று புறநானூறு சொல்கிறது.
வெள்ளலைகள் வீசி வீசி அலைக்கும் வாய்ப்புறம் = அலைவாய்!
-"திரு" என்னும் வெற்றித் திருமகள் விளங்க,
-"சீர்" (புகழ்) பெற்று
-"அலைவாயிலே" ஊர் விளங்குகிறது!

ஆம். இந்த ஊர் வெற்றிப் பட்டினம்! அதுவே இந்தச் செந்தில்!
ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன.
இப்படி ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது.
ஏமகூடத்தில் போர் நடந்தாலும், திருச்சீர்+அலைவாயின் கரையோரத்தில் தான், தமிழ்வேள் முருகன் பெற்ற அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது!


சூரன் ஆணவ மலம்!
மும்மலங்கள்=ஆணவம், கண்மம், மாயை; இதில் ஆணவம் மட்டும் வந்து விட்டால், மற்ற ரெண்டும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்துரும்!
செய்தது தவறு என்று தெரிந்த பின்னரும் கூட, ஆமாம்டா, செஞ்சேன்; இப்ப அதுக்கு என்னாங்குற-ன்னு பேச வைப்பது ஆணவம்!
குறைந்த பட்சம், குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்ற விடாது தடுப்பது தான் இந்த ஆணவம்!

இதுவே இராவணன், சூரன் ஆகியோரின் இயல்புகளாகச் சொல்லப்பட்டது!
சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே, உயிர்கள் இந்த மும்மலங்களை அறுத்து இறைவனிடம் சேர வேண்டும் என்பது தான். அதற்கும் இறைவன் அருள் தேவை! - அதைத் தான் முருகன் செய்தான். ஆணவத்தால் ஆடி விட்டுக், கடைசியில் தனி மரமாய் நின்றவனை, மருள் செய்து அருளினான். ஆணவம் அழிந்ததால், அவனடி தெரிந்தது.



திருச்செந்தூர் தலத்துக்கு இதுவரையிலும் செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை. அப்படியே மனத் திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!

திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :-)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!

முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது.
அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;

பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,
தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.

முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!

கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்! பாலமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும், திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ, அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...
கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!

உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!
செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!

இன்று கந்த சஷ்டி இறுதி நாள்!
இதோ இன்றைய பாட்டு! கேட்டு மகிழுங்கள்! - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
TMS-உம், சீர்காழியும் சேர்ந்து பாடுவது! தெய்வம் படத்துக்காகத் திருச்செந்தூரிலே படமாக்கப்பட்டது! குன்னக்குடி இசையில், கண்ணதாசன் எழுதியது!




திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!




நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்
முருகா!!! - சஷ்டியின் ஆறு நாளும் அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!

சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!

Wednesday, November 14, 2007

கந்த சஷ்டி - 5: முத்தைத்தரு பத்தித் திருநகை! ( பாடும் முன் எச்சரிக்கை!)

சின்ன வயசுல பள்ளிக் கூடத்துல ஒரு போட்டி! ஏதோ கந்த சஷ்டியாம்! அதுவோ ஒரு சமணப் பள்ளிக்கூடம்; இருந்தாலும் தமிழாசிரியர் போட்டிய வச்சிட்டாரு! சரியாச் சொல்லணும்னா, ஆசிரியர் அல்ல! ஆசிரியை! ஆ+சிரியை = சிரிச்சிக்கிட்டே ரொம்ப அன்பா, அழகா இருப்பாய்ங்க! :-) தமிழ் விழா-ங்கிற பேருல, எங்க Group மாணாக்கர்களுக்கு மனப்பாடச் செய்யுளைப் போட்டியா வச்சிட்டாங்க! முத்தைத் தரு பத்தித் திருநகையை மனப்பாடமா, தவறில்லாம, படபட-ன்னு வேகமாச் சொல்லணும்! அப்படிப் பிரமாதமாச் சொல்லி முடிக்கறவங்களுக்கு, தோகை விரித்த மயில் பொம்மை பரிசு! கம்பியில் செஞ்ச மயிலு! நிஜமான மயில்தோகை இருக்கும்! Teacher, இப்படிச் சொன்னது தான் தாமதம், வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடியாந்தேன்! என் அத்தை படிக்கும் திருப்புகழ் புத்தகத்தை எடுத்து நோட்டம் விட்டேன்! முத்தைத் தரு பத்தி - எந்தப் பக்கத்துல இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டேன்! ஆனா ஒன்னுமே புரியலை! சும்மா வாய் விட்டுப் படிச்சிப் பாத்தேன்! வாய் குழறது! தக்கத் தக தக்கத் தக தக - குக்குக் குகு குக்குக் குகு குகு...... அட என்னடா இது! ரயில்ல எவனோ 'கூட்ஸ்' வண்டிக்காரன் எழுதின பாட்டைத் தான், அருணகிரி எழுதிட்டாரு-ன்னு மக்கள் சொல்லிப்பிட்டாங்களோ? :-) இப்படிச் சின்ன வயசுக்கே உரிய அலுப்பும், குறும்பும்! முதல் பத்தியை எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள தாவு தீந்து போச்சு! :-)

அத்தை கிட்ட போயி, அந்தப் பாட்டைச் சொல்லித் தருமாறு கேட்டேன்! அவங்க மயக்கம் போட்டு விழாத குறை தான்! பின்னே, காலங்காத்தால எழுந்து, பாலும் தெளிதேனும்-னு சொல்றதுக்கே மோரும் 'போர்ன்வீட்டாவும்'-னு சொல்ற பையன் நானு! :-) பள்ளியில் எப்படியும் எனக்குத் தான் பரிசு தரணும் - அதுக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க அத்தை-ன்னு கெஞ்சிக் கூத்தாடி...கடைசியில் அந்தப் பொறுமையின் சிகரம், பாதிப் பாட்டை எனக்குச் சொல்லிக் கொடுத்தே...ஓடாய்த் தேஞ்சிப் போயிட்டாங்க! நானும், சும்மா இல்லாம, நண்பர்கள் கிட்ட அளப்பற வுடலாம்-னு...பாட்டை அவிங்க முன்னாடி மனப்பாடமா எடுத்து வுட்டேன்! பசங்க கதி கலங்கிப் போயிட்டாங்க! எப்படிடா ஒரே நாள்-ல இப்படிக் கொட்டு கொட்டு-ன்னு கொட்டற-ன்னு ஒரே பாராட்டு மழை! நானும் அதுல நனைஞ்சி போயி, பாதிப் பரிசு அப்பவே கிடைச்சுட்டதா நினைச்சுகிட்டேன்! ஆனா வந்தது பாருங்க ஒரு வினை! கோபால்-ங்கிற பையன் ரூபத்துல! இந்தப் பாட்டை அட்சரம் பிசகாம அப்படியே பாடினா... ஏதாச்சும் ஒரு பறவை, கிளியோ குருவியோ..... பாட்டைக் கேட்டு அப்படியே கீழே விழுந்து செத்துப் போகுமாம்! இப்படி-ன்னு குண்டைத் தூக்கிப் போட்டான்! அருணகிரி பாடினப்போ ஒரு கிளி விழுந்துச்சாம்டா...இன்னிக்கும் திருவண்ணாமலையில கிளி கோபுரம்னு ஒன்னு இருக்காம்-னு எடுத்து விட்டான் ஒரு Bitஐை! எனக்கு ஒரே சங்கடமாப் போச்சுது! இயற்கையிலேயே எனக்கு ரொம்பக் கருணைச் சுபாவம் பாருங்க! மனசே கேக்கலை! போட்டியிலிருந்து பேரை விலக்கிக்கிட்டு, அப்படியே வந்துட்டேன்; அத்தை, என்னடா விசயம்?; மீதிப் பாட்டை எப்ப கத்துக்கப் போற?-ன்னு கேட்க, விசயத்தைச் சொன்னேன்! ஒரு உயிரைக் கொன்னு, அப்படி என்ன சாமிப் பாட்டு வேண்டிக் கிடக்கு? ஒன்னும் தேவையில்லை! போங்க அத்தைன்னு.... சொல்ல, அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாய்ங்க! அடப் பாவி...உன்னைப் போட்டியில் இருந்து ஒதுக்க, நல்லாவே கதை விட்டுருக்கான் அந்தப் பையன்! அது புரியாம கோக்கா மாக்கானா இருக்கியே நீயி-ன்னு சொன்னதும்...ரோசம் பொத்துக்கினு வந்திருச்சு! அடப் பாவி கோபாலு...நீ கோபாலா, கோயபெல்ஸா? மீதிப் பாட்டை அன்னிக்கே கஷ்டப்பட்டு உருப் போட்டேன்! பொருளும் சொல்லிக் கொடுத்தாங்க அத்தை! ஆனா அதெல்லாம் யாருக்கு வேணும்? போட்டி நடந்தது!!! பொருள் என்னன்னே தெரியாம, கடகட வென்று ஏத்த எறக்கத்துடன் கொட்டித் தீர்த்தேன்! இடி இடிச்சு முடிஞ்சாப்பல இருந்துச்சாம்! நண்பர்கள் சொன்னாய்ங்க! பாடி முடிச்சவுடன் மறக்காம சுற்றும் முற்றும் பார்த்தேன். எந்தப் பறவையும் கீழே விழவில்லை! :-) எனக்கே முதல் பரிசு! கையெழுத்துப் போட்டியில் இன்னொரு பரிசு! ஹைய்யா! பரிசு கொடுக்க மேடைக்குக் கூப்பிட்டாங்க... வாரியார் கையால பரிசு-ன்னா சும்மாவா? ஒரே டென்சன்...அவரு சிரிச்சிக்கிட்டே கொடுத்தாரு சான்றிதழ்களையும், மயில் பொம்மைகளையும்! ரெண்டு பரிசா?...கை நிறைய இருந்துச்சா? வாங்குற பதற்றத்துல நான் மயிலைக் கீழே போட, போச்சுடா! கோபாலு சொன்னது சரி தான்! பாட்டைப் பாடினா, பறவை கீழே விழும்-னான்! விழுந்திடிச்சி!:))) நல்ல காலம் பொம்மை ஒடியலை! கம்பி மயிலு பாருங்க! வாரியார் காலடியில் குனிஞ்சு பொம்மையை எடுத்த போது...சிரிச்சிக்கிட்டே தூக்கி, தலையைத் தடவிக் கொடுத்தது...இன்றும் இனிக்கிறது! அடே கோபால், உன்னால தான்டா இந்த ஆசீர்வாதம் கிடைச்சுது... இன்னிக்கு அவனும் அமெரிக்காவுல தான் இருக்கான்! இன்றும் இது பற்றிப் பேசிச் சிரித்துக் கொள்வோம்! :-)) கந்த புராணத்தை அவர் சொல்ல, அதிலொன்றை மறுத்து நான் சொல்ல.. அப்பவே பெரியாரைத் தெரியாமலேயே பெரியாரிசம்:) உற்பத்திக் காண்டமும், அசுர காண்டமும், இந்தத் துக்குனூண்டு பையன் இப்படி ஒப்பிச்சி மடக்குறானே-ன்னு நினைச்சாரோ என்னமோ, அவர் கையால் என் வாழ்நாள் முருகப் பரிசும் கிட்டிற்று! ஈதே என் தோழா பரிசிலோ ரெம்பாவாய்!
அருணகிரிக்கு "முத்து" என்ற முதற் சொல் எடுத்துக் கொடுத்தான் முருகன்! அப்படித் தோன்றியது திருப்புகழ் - முத்தைத் தரு பத்தித் திருநகை என்று அழகிய சந்தப் பாடலாக! முத்து = அருணகிரி சிறு வயதிலேயே பறிகொடுத்த அம்மா பேரு! முத்து = குற்றயலுகரம்; முத்தி = முற்றியலிகரம்! முத்து=முத்தி தரு பத்தித் திருநகை! இன்றைய சஷ்டிப் பதிவில் அதைக் கேட்டு இன்புறுவோம்! - கீழே அருணகிரிநாதர் படத்தில் இருந்து youtube வீடியோவும் இருக்கு, பாருங்க! முடிந்தால் கூடவே படிச்சிப் பாருங்க! பிடிச்சிப் போயிடும்! - அப்படி ஒரு சொற்கட்டு! தாளக்கட்டு! ஜதிக் கட்டு! பொதுவா வடமொழி மந்திரங்கள் தான் ஓசை முழக்கம்-னு சொல்லிச் சிலாகிச்சிப்பாங்க சிலபேரு! ஆனா இந்தத் தமிழ் மந்திரத்தின் ஓசையும் கேட்டுப் பாருங்க! அப்படி ஒரு முழக்கம்! * TMS பாடுகிறார், அருணகிரிநாதர் திரைப்படத்தில் ** வீணை இசையில் பிச்சுமணி (வாசிக்க எளிதாக இருக்கட்டுமே-ன்னு பதம் பிரிச்சு தந்துள்ளேன்; சந்தத்தோடு ஒட்டினாற் போல் சேர்த்துப் படிக்கவும்/பாடவும்!)

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும் முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேணப் பத்துத் தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருது - ஒரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தர்க்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிரத்தப் பதம் வைத்துப் பயிரவி திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப் பரி அட்டப் பைரவர் தொக்குத் தொகு - தொக்குத், தொகு தொகு சித்ரப் பவுரிக்கு - த்ரி கடக ...... என ஓதக் கொத்துப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு - குக்குக், குகு குகு குத்திப் புதை - புக்குப் பிடி என ...... முது கூகை கோட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டிப் பலி இட்டுக் குல கிரி குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


சில படங்களுக்கும், பாட்டின் பொருளுக்கும் நன்றி: kaumaram.com
பாட்டின் பொருளும் தெரிந்து கொள்ள ஆசையா இருக்கா? - இங்கு செல்லவும்! கந்தனருள் கனியும்! நாளை வியாழக்கிழமை, திருச்செந்தூர் முதலான தலங்களில், சூரசங்காரம்! திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - பாட்டுடன் சஷ்டிப் பதிவுகளை நிறைவு செய்வோம்! அவசியம் வாங்க!! வெற்றி வேல் முருகனுக்கு 'அரகரோகரா'!

Tuesday, November 13, 2007

கந்த சஷ்டி - 4: தமிழில் அர்ச்சனை! நாதவிந்து கலாதி நமோநம!

இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்! - ஆலயத்தில் இந்த அறிவிப்புப் பலகை பற்றிய ஒரு சர்ச்சை, சில காலத்துக்கு முன் பதிவுலகில் எழுந்தது! அந்த "உம்" பல பேரை அசைத்துப் பார்த்தது! :-) இறை அறிவுக்கு, மொழி அறிவு தேவையா-ன்னு தொடங்கி, விவாதங்கள் பல திசையில் ஓடின!

இறைவனைப் போற்றவும், பூசிக்கவும் இது ஒன்று தான் மொழி என்பது கிடையவே கிடையாது! - இது பாமரனுக்கும் தெரியும், பண்டிதனுக்கும் தெரியும்!ஆனா நடைமுறைப் படுத்தும் போது தான், விவாதமும் அரசியலும் கலந்து, சூடு பிடிக்கின்றன! அதனால் பயன் விளைகிறதா? - ஆளுக்கொருவர் ஒரு கைப்பிடியாச்சும் அள்ளிப் போடுவார்களா?

போற்றிகள், பூசனைகள், வேள்விகள், உற்சவங்கள்-ன்னு மந்திரங்களை அனைவரும் அறியும் வண்ணம், பொருள் செய்து கொடுப்பார்களா?
இல்லை அப்படி ஏற்கனவே செய்த சிலவற்றையாவது கடைப்பிடிப்பார்களா?
இல்லை இது போன்ற முயற்சிகளுக்குத் துணை நிற்பார்களா?
பதிவுலகில் - தமிழில் தியாகராஜர், தமிழில் சுப்ரபாதம், தமிழ் வேதம் - திருவாய்மொழி எல்லாம்.....இது போன்ற சிறு சிறு முயற்சிகள் தான்! மிகவும் சிறிய முயற்சி என்று கூடச் சொல்லலாம்!

ஆனால் இதையும் தாண்டிப் பெரு முயற்சி ஒன்று உள்ளது!
அந்தப் பெரு முயற்சிகள் செய்தவர்கள் எல்லாம் விவாதப் புலிகள் அல்ல! அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லி மாளாது! - செயற்கரிய செய்வார் பெரியர் என்பது ஐயன் வாக்கு!
அப்படித் தமிழில் முதன் முதலில் அர்ச்சனை செய்தது யார் தெரியுமா?



"ஓம் திருவிக்ரமாய நமஹ" என்ற அர்ச்சனை மந்திரத்தை அப்படியே மாற்றிக் காட்டியவள் ஒரு பெண்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" என்று, நமஹ என்ற அர்ச்சனையைப் போற்றி ஆக்கிக் காட்டிய அந்தப் பெண், ஆண்டாள்!
தமிழில் அர்ச்சனை என்பதை முருக வழிபாட்டிலும் நிறைவேற்றிக் கொடுத்த நல்லவர் ஒருவர் இருக்காரு!
அவரு சந்தக் கவி, நம் சொந்தக் கவி, கந்தக் கவி, அருள் முந்தக் கவி! - அருணகிரி!!! - அர்ச்சனை என்று பெயரிட்டே, சில அருமையான மந்திரங்களைச் செய்துள்ளார்!

அவற்றில் சில சமயம் வடமொழியும் கலந்து வரும்! ஆனால் உறுத்தாது!
பீஜாட்சர மந்திர ஓசைகள் தேவைப்படும் போது தான், தமிழ் அர்ச்சனையில் இவ்வாறு செய்துள்ளார்! - அப்படிப்பட்ட தமிழ் அர்ச்சனையில் ஒன்று, நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!

இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்!
இன்றைய கந்த சஷ்டிப் பாடலாக, தமிழில் அர்ச்சனை செய்யலாம் வாங்க!
இந்த "நமோ நம" திருப்புகழ் அர்ச்சனையால், நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்! - நீங்களும் ஓதுங்கள்!

இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :)



* எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடுவது
** உன்னி கிருஷ்ணன்
*** ஜலதரங்க வாத்திய இசை
**** புல்லாங்குழல் - மாலி


நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி


நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்


மேலோட்டமான பொருள்:
நாத விந்து கலாதீ நமோநம = சிவ சக்தி தத்துவத்துக்குப் பொருளே நமோநம!
வேத மந்த்ர சொரூபா நமோநம = வேத மந்திர உருவமானவனே நமோநம!
ஞான பண்டித சாமீ நமோநம = ஞான பண்டித, சுவாமி நாதனே நமோநம!

வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம!
போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம!

நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!

பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம = சூரரைத் தண்டித்து விளையாடல் செய்தவனே நமோநம!
கீத கிண்கிணி பாதா நமோநம = இன்னொலி சதங்கைகள் கட்டிய பாதங்களைக் கொண்டவனே நமோநம!
தீர சம்ப்ரம வீரா நமோநம = தீரனே, போர்வீரனே, நமோநம!

கிரிராஜ = மலை அரசே
தீப மங்கள ஜோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம!
தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம!
தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம!
அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்
!



இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே



தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!

திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்!
தீப மங்கள ஜோதீ நமோநம! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP