கந்த சஷ்டி - 6: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
திருச்சீரலைவாய் அப்படிங்கிற ஊருக்குப் போய் இருக்கீங்களா?
இல்லியே அது எங்கப்பா இருக்கு?
அட, என்னங்க கடல் கொஞ்சும் செந்தூர்-ன்னு சொல்லுவாங்களே!
ஓ...திருச்செந்தூரைச் சொல்லுதீயளா? போயிருக்கோம்! போயிருக்கோம்!
போயிருக்கீங்க சரி...சூர சம்ஹாரம் என்னும் சூரனுக்கு அருளலைத் திருச்செந்தூரில் யாராச்சும் பார்த்திருக்கீங்களா?
பார்க்கலைன்னா, பதிவின் இறுதியில் அசைபடத்தில் (வீடியோவில்) காணுங்கள்! வாரியார் சுவாமிகளின் இளமைக் குரலும் கடைசியில் கேட்கிறது!
சரி, அது என்ன திருச்-சீர்-அலை-வாய்?
"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்" என்று புறநானூறு சொல்கிறது.
வெள்ளலைகள் வீசி வீசி அலைக்கும் வாய்ப்புறம் = அலைவாய்!
-"திரு" என்னும் வெற்றித் திருமகள் விளங்க,
-"சீர்" (புகழ்) பெற்று
-"அலைவாயிலே" ஊர் விளங்குகிறது!
ஆம். இந்த ஊர் வெற்றிப் பட்டினம்! அதுவே இந்தச் செந்தில்!
ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன.
இப்படி ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது.
ஏமகூடத்தில் போர் நடந்தாலும், திருச்சீர்+அலைவாயின் கரையோரத்தில் தான், தமிழ்வேள் முருகன் பெற்ற அந்த வெற்றி கொண்டாடப்படுகிறது!

சூரன் ஆணவ மலம்!
மும்மலங்கள்=ஆணவம், கண்மம், மாயை; இதில் ஆணவம் மட்டும் வந்து விட்டால், மற்ற ரெண்டும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்துரும்!
செய்தது தவறு என்று தெரிந்த பின்னரும் கூட, ஆமாம்டா, செஞ்சேன்; இப்ப அதுக்கு என்னாங்குற-ன்னு பேச வைப்பது ஆணவம்!
குறைந்த பட்சம், குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்ற விடாது தடுப்பது தான் இந்த ஆணவம்!
இதுவே இராவணன், சூரன் ஆகியோரின் இயல்புகளாகச் சொல்லப்பட்டது!
சைவ சித்தாந்தத்தின் அடிநாதமே, உயிர்கள் இந்த மும்மலங்களை அறுத்து இறைவனிடம் சேர வேண்டும் என்பது தான். அதற்கும் இறைவன் அருள் தேவை! - அதைத் தான் முருகன் செய்தான். ஆணவத்தால் ஆடி விட்டுக், கடைசியில் தனி மரமாய் நின்றவனை, மருள் செய்து அருளினான். ஆணவம் அழிந்ததால், அவனடி தெரிந்தது.
திருச்செந்தூர் தலத்துக்கு இதுவரையிலும் செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை. அப்படியே மனத் திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!
திருச்செந்தூர் கோவிலின் முதல் மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :-)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனைக் கடலோரத்தில் லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!

முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது.
அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்;
பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,
தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்! பாலமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும், திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ, அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...
கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!
உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!
செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!
இன்று கந்த சஷ்டி இறுதி நாள்!
இதோ இன்றைய பாட்டு! கேட்டு மகிழுங்கள்! - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
TMS-உம், சீர்காழியும் சேர்ந்து பாடுவது! தெய்வம் படத்துக்காகத் திருச்செந்தூரிலே படமாக்கப்பட்டது! குன்னக்குடி இசையில், கண்ணதாசன் எழுதியது!

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்
முருகா!!! - சஷ்டியின் ஆறு நாளும் அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!
சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!






































