இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!
200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!
முருகனருள் - பாடல்கள் வலைப்பூ தோன்றிய நாள் முதலாய், இன்று வரை பல்கிப் பெருகி, ஆதரவளித்த வாசகர்கள், இனி வரப் போகும் வாசகர்கள்
- அனைவருக்கும் இவ்வமயத்தில், முருகனருள் குழுவினராகிய நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்! பல்லாண்டு முருகனருளில் திளைப்போம்!

தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)
"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது! அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!
எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!
சுப்பையா சார் ஒளிவருடிக் கொடுத்து, SK ஐயா தட்டச்சித் தந்த
200ஆம் பதிவு இங்கே!இந்த 200ஆம் சிறப்புப் பதிவில், சிறப்பான ஒரு திருப்புகழ்ப் பாட்டை, சி்றப்பான ஒருவரின் குரலில் கேட்போமா?* தைப்பூசம் என்றாலே அது பழனி தானே! இதுவும் பழனித் திருப்புகழ் தான்!
* தைப்பூசம் என்றாலே காவடிகள் அல்லவா! இதுவும் காவடி மெட்டு தான்!
பாடுபவர் = பித்துக்குளி முருகதாஸ்!
காவடிச் சந்தம் வரவேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் வரிகளை மாற்றியும் போடுகிறார்! :)
திருப்புகழ் வரிகளை இப்படியெல்லாம் மாற்றலாமா என்று ஒரு சிலர் கேட்கக் கூடும்! ஆனால் பித்துக்குளியார் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு!

காவடியைப் பற்றிய கதைகளும், காவடிச் சிந்தின் தோற்றமும்
முன்பே பார்த்துள்ளோம்!
என்ன காரணமோ தெரியவில்லை, முருக இயக்கத்தில் இத்தனை செல்வாக்கு பெற்ற காவடி, ஏனோ முருக இலக்கியத்தில் இடம் பெறவில்லை!
நக்கீரர் சங்க காலப் புலவர்! அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை! பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி! ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு திருப்புகழைக் கூடக் காவடிச் சிந்திலே அவர் அமைத்தாரில்லை!
திருமங்கை ஆழ்வார் (8th CE) மட்டும், "வழிநடைச் சிந்து" என்ற பொது மக்கள் இசையை இலக்கியத்தில் கொண்டு வந்தார்! ஆனால் அதில் "காவடி" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை! சந்த ஓசையை மட்டும் "வழிநடைச் சிந்து" என்ற பேரில் பயன்படுத்தினார்!
மிகவும் பின்னாளில், 19th CE-இல் தான், அண்ணாமலை ரெட்டியார், "காவடிச் சிந்து"க்கென்றே பாடல்கள் பல எழுதி, காவடியை இலக்கியத்துக்குள் முழுவதுமாய்க் கொண்டு வந்து சேர்த்தார்!
தமிழ்க் காவடிச் சிந்து, தெலுங்கு ரெட்டியாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது!
அதனால் தான் பித்துக்குளியாரும், திருப்புகழ் வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசை மாற்றி....
காவடிச் சிந்திலே தர வேண்டும் என்பதற்காக, பழனித் திருப்புகழை இப்படி மாற்றித் தருகின்றார்!
பித்துக்குளி பாடும் மெட்டு, அப்படியே என்னவனின் தங்க ரதம் அசைந்து வராப் போலவே, அசைந்து அசைந்து வருது! நீங்களே கேட்டு மகிழுங்கள்!
இசைக்காக முன்னே சேர்க்கும் வேறொரு பகுதி....கருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட, முக்குண விபாக நிலை
கருத அறியா வஞ்சகக் கபடம் மூடி - உடல் வினை தானே
கலகம் இடவே பொங்கு, குப்பை மன வாழ்வு
நிஜம் என உழலும், மாயம் செனித்த குகையே
உறுதி கருதும், இந்த அசுர மா மட்டை...
முருகா....சண்முகா....பழனியாண்டவா....
அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
பழனித் திருப்புகழ்:கருவின் உருவாகி வந்துவயது அளவிலே வளர்ந்துகலைகள் பலவே தெரிந்தும் ...... அதனாலேகரியகுழல் மாதர் தங்கள்அடிசுவடு மார் புதைந்துகவலை பெரிதாகி நொந்து ...... மிக வாடிகருவில் பிறந்து, பின்பு வெளியே வந்து, பலவும் கற்று வளர்கிறோம்!
ஆனால் அந்தக் கல்வியும் செல்வமும் எதற்குப் பயன்படுத்துகிறோம்? = வெறும் போகம் அனுபவிக்க மட்டும் தானா?
கருங்கூந்தல் மங்கையர் மார்பிலே மயங்கி, பலதும் "மகிழ்ச்சி" என்று செய்து விட்டு, ஆனால் "கவலை" என்று மிஞ்சி வாடுகிறேனே! ஏனோ?
அரகர சிவாய என்றுதினமும் நினையாமல் நின்றுஅறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்அசனம் இடுவார்கள் தங்கள்மனைகள் தலைவாசல் நின்றுஅனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?அரகரா! சிவாய! என்று நினைக்க மாட்டேன்! அறு சமய நீதி அறிய மாட்டேன்!
சோறுக்கு ஒரு வீடும், வேறுக்கு வேறு வேறு வீடும் கண்ட நான்,
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ? அரகரா என்று சொல்லாமல் அழிவேனோ?
குறிப்பு: அரோகரா என்ற மக்கள் வழக்கு மொழியை, இங்கு அருணகிரி எடுத்தாளுகிறார் பாருங்கள்! அரகரா என்று பழனியில் மக்கள் ஒலிக்கும் ஒலி, இந்தத் திருப்புகழிலும் ஒலிக்கிறது!

உரகபடம் மேல் வளர்ந்தபெரிய பெருமாள் அரங்கர்உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே!
பெரிய பாம்பின் மேல் கண் வளரும் பெருமாள்! = அரங்கன்!
அவன் உலகளந்த உத்தமன்! அவன் ஆசை மருகனே, முருகனே!
குறிப்பு: அருணகிரி பல இடங்களில் முருகனை, "பெருமாளே" என்று விளித்துப் பாடுவார்!
பெரும்+ஆள் = பெருமை மிக்கவன்!
இதுவே, முருகனைப் "பெருமாள்" என்று விளித்துப் பாடக் காரணம் என்று "மேம்போக்காகச்" சொல்வார்கள் சிலர்! ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள்! :)
உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் = பாம்புப் படுக்கையில் கண் வளரும், காவிரிக் கரை அரங்கன்!
முருகனைப் பெருமாள் என்னும் அருணகிரி, பெருமாளையும் "பெருமாள்" என்கிறாரே! எப்படி? :)
திருவரங்கத்தில் உள்ள முலவரை = "
பெரிய பெருமாள்" என்று அழைப்பதே வழக்கம்!
ஊருலா உற்சவரை "
நம்பெருமாள்" என்று அழைப்பது வழக்கம்!
அனைத்து வைணவ இலக்கியத்திலும் இப்படியே புழங்கும்!
இதை அருணகிரியும் அறிந்து வைத்துள்ளார்! அதை அப்படியே "பெரிய பெருமாள் அரங்கன்" என்றே ஆளுகிறார் பாருங்கள்!
பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!
ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!
இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது! அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?
* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "கந்த ரஹீம்"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளமையே உருவான முருகனை, "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)
ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
பின்னொரு நாள் சொல்கிறேன்! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!
* அருணகிரியார், அறிந்தே தான், என் காதல் முருகனை, "பெருமாளே" என்று விளிக்கிறார்!
* பெருமாள் என்ற சொல், அருணகிரியின் காலத்தில், திருமாலை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
* அதை அருணகிரியே, இந்தப் பாட்டில் பெரிய "பெருமாள் அரங்கன்" என்று சான்று காட்டுகிறார்!
* இருந்தாலும், முருகனையும், "பெருமாளே" என்று வரிக்கு வரி சொல்வது...அருணகிரியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை!
உபயகுல தீப துங்கவிருதுகவி ராஜ சிங்கஉறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே!உபய குலம் = இரண்டு குலத்திலும், அதாச்சும் தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஒரு சேரப் பெருமை மிக்க முருகா! = உபய குல தீப துங்கா!
தாய் மூலம் இல்லாது, தந்தையால் மட்டுமே "தோன்றியவர்" முருகன் என்பார்கள் ஒரு சிலர்! "கருவில் பிறப்பு" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி! :(
"பிறவான் இறவான்" என்பதில் பெருமை காண்பவர்கள் இவர்கள்! அதற்கு கச்சியப்பரின் "உதித்தனன் உலகம் உய்ய" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்! மற்றவரைப் போல் பிறக்கவில்லையாம், "உதித்தானாம்"!
அடியார்களின் பொருட்டு, கீழே இறங்கிப் பிறந்தால் தான் என்ன-என்பதை நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே! கருணை முக்கியமா? பெருமை முக்கியமா??
கருவிலே பிறக்கவில்லை! தாய் மூலம் இல்லை - என்று முருகனுக்கு ஏதோ ஏற்றம் கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள்! ஆனால் அருணகிரி அதை மறுக்கிறார்!
தந்தையின் ஒளியிலே தோன்றியவன், தாயின் அணைப்பில் தான் உருவமே காண்கிறான்! அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன்! =
உபய குல தீப துங்கன்!விருது கவி ராஜ சிங்கன் = தேவாரம் என்னும் தமிழ்க் கவியிற் சிறந்த ஞான சம்பந்தப் பெருமான், முருகனின் அம்சம் என்றே சொல்வாரும் உண்டு!
அதான் அருணகிரியும், புகலியூர் என்னும் சீர்காழியில் அன்று வருவோனே, என்று பாடுகிறார்!
பழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்),
சின்னக்குமாரர் (உற்சவ புகைப்படம்)
பரவை மனை மீதில் அன்றுஒருபொழுது தூது சென்றபரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா!தம்பிரான் தோழரான சுந்தரர், தான் காதலுக்கும் காமத்துக்கும் கூட, தோழனையே நம்பினார்! அவனையே தூது நடக்க வைத்தார்!
சங்கிலி நாச்சியை இரண்டாம் காதலியாக மணந்த அவர், முதல் மனைவியான பரவை நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க, பரமனையே தூது செல்வீரா என்று வேண்டினார்! அதைத் தான் இங்குப் பாடுகிறார் அருணகிரி!
எல்லாம் சரி! ஆனால் இறைவன், பரவை வீட்டுக்கு இரண்டு முறை அல்லவா நடந்தான்?
அவளும், ஒரு முறை கதவைச் சார்த்தி, அடுத்த முறை தானே திறந்தாள்?
அருணகிரியோ, "பரவை மனை மீதில் அன்று
*ஒருபொழுது* தூது சென்ற" என்கிறாரே!
= ஒரு பொழுதா? இரு பொழுதா?
பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! 200ஆம் பதிவில் புதிர் போடும் அருணகிரியார் வாழ்க! வாழ்க! :)பகை அசுரர் சேனை கொன்றுஅமரர் சிறை மீள வென்றுபழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே!!பகை அசுரர்களின் சேனையை அழித்து, அமரர்களை சிறை மீட்ட புவன சுந்தரன் எங்கள் முருகன்! அவன் பழனி மலை மீது ஒய்யாரமாய் நிற்கிறான்!
ஒய்யாரம் என்றால் எப்படி?பிறந்த மேனியில், ஆணழகனாய்...
தலையை முழுக்க ஷேவ் செய்து...
குறு குறு கண்ணும், கூரிய நாசியும்
கடிக்க இனிய காதுகளுமாய்...
வழித்த முகமும், சிரித்த சிரிப்புமாய்

பஞ்சாமிர்தத்தை விட இனிப்பான அவன் செவ்விதழில்...
ஹேய் என்று அழைத்து...
அதி பயங்கர வளைவான இடுப்பிலே கையை வைத்து
என்னிடம் வா,.....உனக்கு யார் இல்லீன்னாலும் நான் இருக்கேன்-ன்னு

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகப் போனது இனிப் போதும்,
வா என்னிடம் வா...என்று கொஞ்சும்...
முருகா, என் கண்ணாளா.....என் இன்பமே!
அவனை, அவனை, அவனை....
என் ஆவியைக் கண்குளிரப் பாருங்கள்! கண்குளிரப் பாருங்கள்!
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
எங்கள் 200 பதிவுகளின் மேலும் நிற்கும் முருகோனே!
200ஆம் பதிவுக் கொண்டாட்டங்களுக்கு வந்துவிட்டு, பஞ்சாமிர்தம் இல்லாமல் உங்களை அனுப்புவோமா? இதோ: