201. தைப்பூசம்: பழநி மலை மேல் நின்ற பெருமாளே!
இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!
200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!
முருகனருள் - பாடல்கள் வலைப்பூ தோன்றிய நாள் முதலாய், இன்று வரை பல்கிப் பெருகி, ஆதரவளித்த வாசகர்கள், இனி வரப் போகும் வாசகர்கள்
- அனைவருக்கும் இவ்வமயத்தில், முருகனருள் குழுவினராகிய நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்! பல்லாண்டு முருகனருளில் திளைப்போம்!
தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)
"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது! அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!
எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!
சுப்பையா சார் ஒளிவருடிக் கொடுத்து, SK ஐயா தட்டச்சித் தந்த 200ஆம் பதிவு இங்கே!
இந்த 200ஆம் சிறப்புப் பதிவில், சிறப்பான ஒரு திருப்புகழ்ப் பாட்டை, சி்றப்பான ஒருவரின் குரலில் கேட்போமா?
* தைப்பூசம் என்றாலே அது பழனி தானே! இதுவும் பழனித் திருப்புகழ் தான்!
* தைப்பூசம் என்றாலே காவடிகள் அல்லவா! இதுவும் காவடி மெட்டு தான்!
பாடுபவர் = பித்துக்குளி முருகதாஸ்!
காவடிச் சந்தம் வரவேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் வரிகளை மாற்றியும் போடுகிறார்! :)
திருப்புகழ் வரிகளை இப்படியெல்லாம் மாற்றலாமா என்று ஒரு சிலர் கேட்கக் கூடும்! ஆனால் பித்துக்குளியார் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு!
காவடியைப் பற்றிய கதைகளும், காவடிச் சிந்தின் தோற்றமும் முன்பே பார்த்துள்ளோம்!
என்ன காரணமோ தெரியவில்லை, முருக இயக்கத்தில் இத்தனை செல்வாக்கு பெற்ற காவடி, ஏனோ முருக இலக்கியத்தில் இடம் பெறவில்லை!
நக்கீரர் சங்க காலப் புலவர்! அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை! பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி! ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு திருப்புகழைக் கூடக் காவடிச் சிந்திலே அவர் அமைத்தாரில்லை!
திருமங்கை ஆழ்வார் (8th CE) மட்டும், "வழிநடைச் சிந்து" என்ற பொது மக்கள் இசையை இலக்கியத்தில் கொண்டு வந்தார்! ஆனால் அதில் "காவடி" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை! சந்த ஓசையை மட்டும் "வழிநடைச் சிந்து" என்ற பேரில் பயன்படுத்தினார்!
மிகவும் பின்னாளில், 19th CE-இல் தான், அண்ணாமலை ரெட்டியார், "காவடிச் சிந்து"க்கென்றே பாடல்கள் பல எழுதி, காவடியை இலக்கியத்துக்குள் முழுவதுமாய்க் கொண்டு வந்து சேர்த்தார்! தமிழ்க் காவடிச் சிந்து, தெலுங்கு ரெட்டியாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது!
அதனால் தான் பித்துக்குளியாரும், திருப்புகழ் வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசை மாற்றி....
காவடிச் சிந்திலே தர வேண்டும் என்பதற்காக, பழனித் திருப்புகழை இப்படி மாற்றித் தருகின்றார்!
பித்துக்குளி பாடும் மெட்டு, அப்படியே என்னவனின் தங்க ரதம் அசைந்து வராப் போலவே, அசைந்து அசைந்து வருது! நீங்களே கேட்டு மகிழுங்கள்!
இசைக்காக முன்னே சேர்க்கும் வேறொரு பகுதி....
கருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட, முக்குண விபாக நிலை
கருத அறியா வஞ்சகக் கபடம் மூடி - உடல் வினை தானே
கலகம் இடவே பொங்கு, குப்பை மன வாழ்வு
நிஜம் என உழலும், மாயம் செனித்த குகையே
உறுதி கருதும், இந்த அசுர மா மட்டை...
முருகா....சண்முகா....பழனியாண்டவா....
அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
பழனித் திருப்புகழ்:
கருவின் உருவாகி வந்து
வயது அளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்தும் ...... அதனாலே
கரியகுழல் மாதர் தங்கள்
அடிசுவடு மார் புதைந்து
கவலை பெரிதாகி நொந்து ...... மிக வாடி
கருவில் பிறந்து, பின்பு வெளியே வந்து, பலவும் கற்று வளர்கிறோம்!
ஆனால் அந்தக் கல்வியும் செல்வமும் எதற்குப் பயன்படுத்துகிறோம்? = வெறும் போகம் அனுபவிக்க மட்டும் தானா?
கருங்கூந்தல் மங்கையர் மார்பிலே மயங்கி, பலதும் "மகிழ்ச்சி" என்று செய்து விட்டு, ஆனால் "கவலை" என்று மிஞ்சி வாடுகிறேனே! ஏனோ?
அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்
அசனம் இடுவார்கள் தங்கள்
மனைகள் தலைவாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?
அரகரா! சிவாய! என்று நினைக்க மாட்டேன்! அறு சமய நீதி அறிய மாட்டேன்!
சோறுக்கு ஒரு வீடும், வேறுக்கு வேறு வேறு வீடும் கண்ட நான்,
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ? அரகரா என்று சொல்லாமல் அழிவேனோ?
குறிப்பு: அரோகரா என்ற மக்கள் வழக்கு மொழியை, இங்கு அருணகிரி எடுத்தாளுகிறார் பாருங்கள்! அரகரா என்று பழனியில் மக்கள் ஒலிக்கும் ஒலி, இந்தத் திருப்புகழிலும் ஒலிக்கிறது!
உரகபடம் மேல் வளர்ந்த
பெரிய பெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே!
பெரிய பாம்பின் மேல் கண் வளரும் பெருமாள்! = அரங்கன்!
அவன் உலகளந்த உத்தமன்! அவன் ஆசை மருகனே, முருகனே!
குறிப்பு: அருணகிரி பல இடங்களில் முருகனை, "பெருமாளே" என்று விளித்துப் பாடுவார்!
பெரும்+ஆள் = பெருமை மிக்கவன்!
இதுவே, முருகனைப் "பெருமாள்" என்று விளித்துப் பாடக் காரணம் என்று "மேம்போக்காகச்" சொல்வார்கள் சிலர்! ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள்! :)
உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் = பாம்புப் படுக்கையில் கண் வளரும், காவிரிக் கரை அரங்கன்!
முருகனைப் பெருமாள் என்னும் அருணகிரி, பெருமாளையும் "பெருமாள்" என்கிறாரே! எப்படி? :)
திருவரங்கத்தில் உள்ள முலவரை = "பெரிய பெருமாள்" என்று அழைப்பதே வழக்கம்!
ஊருலா உற்சவரை "நம்பெருமாள்" என்று அழைப்பது வழக்கம்!
அனைத்து வைணவ இலக்கியத்திலும் இப்படியே புழங்கும்!
இதை அருணகிரியும் அறிந்து வைத்துள்ளார்! அதை அப்படியே "பெரிய பெருமாள் அரங்கன்" என்றே ஆளுகிறார் பாருங்கள்!
பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!
ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!
இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது! அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?
* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "கந்த ரஹீம்"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளமையே உருவான முருகனை, "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)
ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)
ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
பின்னொரு நாள் சொல்கிறேன்! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!
* அருணகிரியார், அறிந்தே தான், என் காதல் முருகனை, "பெருமாளே" என்று விளிக்கிறார்!
* பெருமாள் என்ற சொல், அருணகிரியின் காலத்தில், திருமாலை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
* அதை அருணகிரியே, இந்தப் பாட்டில் பெரிய "பெருமாள் அரங்கன்" என்று சான்று காட்டுகிறார்!
* இருந்தாலும், முருகனையும், "பெருமாளே" என்று வரிக்கு வரி சொல்வது...அருணகிரியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை!
உபயகுல தீப துங்க
விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே!
உபய குலம் = இரண்டு குலத்திலும், அதாச்சும் தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஒரு சேரப் பெருமை மிக்க முருகா! = உபய குல தீப துங்கா!
தாய் மூலம் இல்லாது, தந்தையால் மட்டுமே "தோன்றியவர்" முருகன் என்பார்கள் ஒரு சிலர்! "கருவில் பிறப்பு" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி! :(
"பிறவான் இறவான்" என்பதில் பெருமை காண்பவர்கள் இவர்கள்! அதற்கு கச்சியப்பரின் "உதித்தனன் உலகம் உய்ய" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்! மற்றவரைப் போல் பிறக்கவில்லையாம், "உதித்தானாம்"!
அடியார்களின் பொருட்டு, கீழே இறங்கிப் பிறந்தால் தான் என்ன-என்பதை நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே! கருணை முக்கியமா? பெருமை முக்கியமா??
கருவிலே பிறக்கவில்லை! தாய் மூலம் இல்லை - என்று முருகனுக்கு ஏதோ ஏற்றம் கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள்! ஆனால் அருணகிரி அதை மறுக்கிறார்!
தந்தையின் ஒளியிலே தோன்றியவன், தாயின் அணைப்பில் தான் உருவமே காண்கிறான்! அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன்! = உபய குல தீப துங்கன்!
விருது கவி ராஜ சிங்கன் = தேவாரம் என்னும் தமிழ்க் கவியிற் சிறந்த ஞான சம்பந்தப் பெருமான், முருகனின் அம்சம் என்றே சொல்வாரும் உண்டு!
அதான் அருணகிரியும், புகலியூர் என்னும் சீர்காழியில் அன்று வருவோனே, என்று பாடுகிறார்!
பரவை மனை மீதில் அன்று
ஒருபொழுது தூது சென்ற
பரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா!
தம்பிரான் தோழரான சுந்தரர், தான் காதலுக்கும் காமத்துக்கும் கூட, தோழனையே நம்பினார்! அவனையே தூது நடக்க வைத்தார்!
சங்கிலி நாச்சியை இரண்டாம் காதலியாக மணந்த அவர், முதல் மனைவியான பரவை நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க, பரமனையே தூது செல்வீரா என்று வேண்டினார்! அதைத் தான் இங்குப் பாடுகிறார் அருணகிரி!
எல்லாம் சரி! ஆனால் இறைவன், பரவை வீட்டுக்கு இரண்டு முறை அல்லவா நடந்தான்?
அவளும், ஒரு முறை கதவைச் சார்த்தி, அடுத்த முறை தானே திறந்தாள்?
அருணகிரியோ, "பரவை மனை மீதில் அன்று *ஒருபொழுது* தூது சென்ற" என்கிறாரே! = ஒரு பொழுதா? இரு பொழுதா?
பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! 200ஆம் பதிவில் புதிர் போடும் அருணகிரியார் வாழ்க! வாழ்க! :)
பகை அசுரர் சேனை கொன்று
அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே!!
பகை அசுரர்களின் சேனையை அழித்து, அமரர்களை சிறை மீட்ட புவன சுந்தரன் எங்கள் முருகன்! அவன் பழனி மலை மீது ஒய்யாரமாய் நிற்கிறான்!
ஒய்யாரம் என்றால் எப்படி?
பிறந்த மேனியில், ஆணழகனாய்...
தலையை முழுக்க ஷேவ் செய்து...
குறு குறு கண்ணும், கூரிய நாசியும்
கடிக்க இனிய காதுகளுமாய்...
வழித்த முகமும், சிரித்த சிரிப்புமாய்
பஞ்சாமிர்தத்தை விட இனிப்பான அவன் செவ்விதழில்...
ஹேய் என்று அழைத்து...
அதி பயங்கர வளைவான இடுப்பிலே கையை வைத்து
என்னிடம் வா,.....உனக்கு யார் இல்லீன்னாலும் நான் இருக்கேன்-ன்னு
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகப் போனது இனிப் போதும்,
வா என்னிடம் வா...என்று கொஞ்சும்...
முருகா, என் கண்ணாளா.....என் இன்பமே!
அவனை, அவனை, அவனை....
என் ஆவியைக் கண்குளிரப் பாருங்கள்! கண்குளிரப் பாருங்கள்!
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
எங்கள் 200 பதிவுகளின் மேலும் நிற்கும் முருகோனே!
200ஆம் பதிவுக் கொண்டாட்டங்களுக்கு வந்துவிட்டு, பஞ்சாமிர்தம் இல்லாமல் உங்களை அனுப்புவோமா? இதோ:
57 comments:
அன்பின் கேயாரெஸ்
அருமை அருமை - தைப்பூச சிறப்பு இடுகை - 200க்கு நல்வாழ்த்துகள் = பாராட்டுகள் - முருகனின் கோலத்தினை விவரைக்கும் விதம் பிடித்திருந்தது. பஞ்சாமிர்தம் சூப்பர் - வாழ்க வளமுடன். நட்புடன் சீனா
கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா
R. கோபி
அருணையடி
SP.VR.சுப்பையா
VSK
குமரன்
தி.ரா.ச (TRC)
G.Ragavan
kannabiran,RAVI SHANKAR(KRS)
தங்களின் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.
சபரிமலை விபத்தில் ம்றைந்த உயிர்களுக்கு, மோட்ச தீபமாய், இந்தப் பதிவு அமையட்டும்! - முருகா!
//முருகனின் கோலத்தினை விவரைக்கும் விதம் பிடித்திருந்தது//
:)
நன்றி சீனா ஐயா! தாங்கள் முருகனருளின் பல நாள் வாசகர்! முதல் பின்னூட்டமும் தங்களுடையதே என்பது மெத்த மகிழ்ச்சி!
@லோகன்
வாழ்த்துக்கும், குழுவினரின் பேர்களைக் குறிப்பிட்டுச் சொன்னமைக்கும் நன்றி! இந்தப் பெயர்களோடு, இன்னும் பல பெயர்கள், இனி வரும் காலங்களில் சேரட்டும்!
வாழ்த்துகள்!
நிறைய முருகன் பாடல்கள் நினைவுகளில் வந்து பளிச்சிடுகையில் தேட/கேட்க வரும் தளமாக முருகனருள் இருப்பதும் அதை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டவன் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளினை தெரிவித்துக்கொள்கிறேன் ! தொடருங்கள் ! :)
நான் அடிக்கடி கேட்டு மகிழும் இந்தப் பாடலை இட்டமைக்கு நன்றி, திரு.ரவி.
'பெருமாள்' பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சுவையாக இருப்பினும், முறையாக இல்லையெனக் கருதுகிறேன், ரவி.
மேலான பெருமைகள் பொருந்தியவனே பெருமாள்
அது அரங்கர் பெருமாளாகவும் இருக்கலாம்.
முருகப் பெருமாளாகவும் இருக்கலாம்.
ஏன்? பூதப் பெருமாளாகவும் இருக்கலாம்.
ஒரு பெயரின் அடைமொழியாக அவரை உயர்த்திச் சொல்லும் ஒரு சொல்லே பெருமாள்.
இது பொதுவாக திருமாலைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் மாறிப்ப்போனதே உண்மை.
இந்தப் பாடலில் கூட அரங்கர் பெருமாள் என்பதைத்தான் மாற்றிப் போட்டுச் சொல்லியிருக்கிறார் அருணையார்.
அடுத்து,
'பொழுது' என்பதற்கு 'முறை, தடவை எனப் பொருள் கொள்ளலாம்.
எனவே 'ஒருபொழுது' என்பதை, 'ஒரு முறை, ஒரு தடவை' எனப் பொருள் கொள்ளணும்.
அப்படிப் பார்த்தால், முன்பொரு சமயம், முன்பொரு தடவை, முன்பொரு முறை என்னும் பொருளிலேயே இங்கு வந்திருக்கிறது.
@ஆயில்ஸ் அண்ணாச்சி!
//நிறைய முருகன் பாடல்கள் நினைவுகளில் வந்து பளிச்சிடுகையில் தேட/கேட்க வரும் தளமாக முருகனருள் இருப்பதும் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டவன் என்ற வகையில்//
சூப்பரு! வாழ்த்துக்கள்!
முருகன் பாடல்கள் - அது சினிமாவோ, மரபிசையோ, குத்துப்பாட்டோ, கும்மிப்பாட்டோ...
= மொத்த முருகக் களஞ்சியம் நம்ம முருகனருள் வலைப்பூ என்பதை...ஒரு பயனாளி நீங்க சொல்லிக் கேட்பதில், மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! :)
முருகனருள் வலைத்தளத்தில் தைப்பூச சிறப்பு இடுகை - 200க்கு
உளமார்ந்த வாழ்த்துகள்!
முருகனுக்கு கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தாஆஆஆஆ...
@ R. கோபி , அருணையடி , SP.VR.சுப்பையா, VSK
குமரன், தி.ரா.ச (TRC), G.Ragavan ,
kannabiran,RAVI SHANKAR(KRS)
This blog is very useful to me. I enjoy reading, learning and listening in this blog. Thanks and Wish for this good work to continue.
thiruthani murukan vazhithunai varuvaan
aayirathukku melum thuna varuvaan
//VSK said...
நான் அடிக்கடி கேட்டு மகிழும் இந்தப் பாடலை இட்டமைக்கு நன்றி, திரு.ரவி//
திருப்புகழ் வித்தகரான உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு தெரியும் SK ஐயா! :)
//'பெருமாள்' பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சுவையாக இருப்பினும், முறையாக இல்லையெனக் கருதுகிறேன், ரவி//
:)
சுவைக்கு நன்றி!
முறைக்கு, நீங்கள் தாராளமாக கருத்தில் மாறுபடலாம்! :)
//ஒரு பெயரின் அடைமொழியாக அவரை உயர்த்திச் சொல்லும் ஒரு சொல்லே பெருமாள்//
இதை நானும் பதிவில் சொல்லி விட்டேனே!
நீங்கள் என் கருத்தில் முறை இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்! ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், நீங்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது!
1. பெருமாள் என்ற சொல் வெறும் "அடைமொழி" என்றால், "முருகன்" என்ற சொல்லும் அடைமொழி தானே?
* பெருமாள் = பெருமை மிக்கவன்!
* முருகன் = அழகு மிக்கவன்!
2. பெருமாள் என்ற சொல் வெறும் "அடைமொழி" என்றால், ரஹீம் என்ற சொல்லும் அடைமொழி அல்லவா? ரஹீம் = கருணை!
முருகனை, ரஹீம் என்றும் அருணகிரியார் பாடி இருக்கலாமே! சரி இஸ்லாமியப் பெயரா, விடுங்கள்! பிள்ளையாரே என்றாச்சும் பாடி இருக்கலாம் அல்லவா? பிள்ளை=இளமை!
எதுக்கு அத்தனை பேர் இருக்க, வலிந்து, "பெருமாள்" என்ற சொல்லில் பாட வேணும்? அதுவும் அச்சொல், இன்னொரு தெய்வத்தைக் குறிக்க மக்கள் பரவலாகப் புழங்குகிறார்கள் என்னும் போது...?
இதற்கான விடையை நீங்கள் இங்கு அவசியம் சொல்ல வேணும்! அதன் பிறகு, என் கருத்தில் பிழை இருப்பின் தயங்காமல் திருத்திக் கொள்கிறேன்!
@SK ஐயா
//'ஒருபொழுது' என்பதை, 'ஒரு முறை, ஒரு தடவை' எனப் பொருள் கொள்ளணும்.
அப்படிப் பார்த்தால், முன்பொரு சமயம், முன்பொரு தடவை, முன்பொரு முறை என்னும் பொருளிலேயே இங்கு வந்திருக்கிறது//
அருமை!
கிட்டத்தட்ட வந்துட்டீங்க! ஆனால் இன்னும் சில மக்களுக்கு வெயிட் மாடுவோம்! குமரன்/கோவி போன்ற சூப்பர் ஸ்டார்கள் என்ன சொல்றாங்க-ன்னு பார்ப்போம்! :)))
@ Prasad said...
//முருகனுக்கு கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தாஆஆஆஆ...//
இது என்ன டகால்ட்டி? :)
ஒழுங்காச் சொல்லுங்க!
முருகனுக்கு அரோகரா! அரோகரா! அரோகரா!
@பிரசாத்
//This blog is very useful to me. I enjoy reading, learning and listening in this blog//
Happy to see, ppl find this Murugan KaLanjiyam useful and pleasing - both to eyes and ears :)
முருகனருள் குழுவினரின் சார்பாக உங்களுக்கு எங்கள் நன்றியும், மகிழ்ச்சியும்! :)
//தி. ரா. ச.(T.R.C.) said...
thiruthani murukan vazhithunai varuvaan//
வாங்க திராச!
நீங்கள் அல்லவோ முருகனருள் வலைப்பூவின் கிருத்திகை நாட்காட்டி!
முருகனருள்-200 Logo பாருங்க! அந்த வேலில் திருத்தணி முருகன் தான்! :)
//aayirathukku melum thuna varuvaan//
ஆசிக்கு நன்றி!
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே அல்லவா!
@KRS : தைப்பூச சிறப்பு இடுகை - இது ஜுப்பறுஊஊ
பொழுதா? இரு பொழுதா? இப்படி கேக்குறது எல்லாம் டெரறுஊஊ
முருகனருள் வலை தலத்தில் அரங்கன், பெருமாள் எல்லாம் பேசுறது ரொம்ப ஓவருஊஊ
இப்படி பின்னோட்டம் நான் போடவில்லை..
இப்போ என்னக்கு தெரியறது எல்லாம்
முருகனுக்கு கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தாஆஆஆஆ
இதுதான் வாதத்திலிருந்து வி.வாதத்துக்குக் கொண்டு செல்லுவதோ?
பெருமாள் அடைமொழிதான்.
இப்ப வேணும்னா எல்லாருக்கும் இதுவிஷ்ணுவைக் குறிப்பதுன்னு புரியுதே தவிர, ஒரு காலத்தில் இது பெருமையுடையவரைக் குறிக்கும் சொல்லாகத்தான் இருந்தது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
மேலும் அருணையார் எந்தச் சொல்லை எடுத்தாளணும்னு சொல்ல அவருக்கு மட்டுமே உரிமை.
அவர் காலத்தில் இது திருமாலை மட்டும் குறிக்கும் சொல்லாக இல்லை என மட்டும் நாம் புரிந்தால் போதும்.
ரஹீம், பிள்ளையார் என்பதெல்லாம் வெறும் வாதத்துக்கு மட்டுமே பயன்படலாமே தவிர, அவரை நிர்ப்பந்திக்காது!:))
வெறும் 'பெருமாள்' என மட்டுமே திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களை நீங்கள் தான் அளிக்கணும். ஏதோ ஒரு பெயருடன் இணைத்துத்தான் ,... சௌந்தர்ராஜப் பெருமாள், வரதராஜப் பெருமாள், என அழைத்திருக்கின்றனர். நடராஜ ஐயரை, ஐயர் எனவும், லோகனாத முதலியாரை முதலியார் எனவும் அழைப்பது போல, பின்னாளில் இது விஷ்ணுவைக் குறிக்கும் சொல்லாகிப் போனது.
அவ்வளவுதான்!
@பிரசாத்
இது என்ன TR இஷ்டைல்? :)
//முருகனருள் வலை தலத்தில் அரங்கன், பெருமாள் எல்லாம் பேசுறது ரொம்ப ஓவருஊஊ//
அப்படீன்னா, ஒவ்வொரு திருப்புகழிலும், அட முதல் திருப்புகழ் உட்பட...அரங்கன்-ன்னு பேசறது இந்த அருணகிரி தான்! அருணகிரி ரொம்ப ஓவர்-ன்னு இங்கே யாரேனும் ஒருத்தரைச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்! :)))
23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.
தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!
//மேலும் அருணையார் எந்தச் சொல்லை எடுத்தாளணும்னு சொல்ல அவருக்கு மட்டுமே உரிமை//
பொது வழக்கில் இன்றுள்ள ரஹீம் (கருணை) என்ற சொல்லை, முருகனுக்கு நான் எடுத்தாளட்டுமா? என் கவிதையில் எனக்கு மட்டுமே உரிமை-ன்னு சொல்ல முடியுமா? :)
//ரஹீம், பிள்ளையார் என்பதெல்லாம் வெறும் வாதத்துக்கு மட்டுமே பயன்படலாமே தவிர, அவரை நிர்ப்பந்திக்காது!:))//
யாருமே - நீங்களாகட்டும், நானாகட்டும் அருணகிரியை நிர்ப்பந்திக்க முடியாது!
//ஏதோ ஒரு பெயருடன் இணைத்துத்தான் ,... சௌந்தர்ராஜப் பெருமாள், வரதராஜப் பெருமாள், என அழைத்திருக்கின்றனர்//
எதையும் இணைக்காமல், பெருமாள்/பெரிய பெருமாள் என்றெல்லாம் புழங்கத் துவங்கி விட்டனர், from 10th CE!
//நடராஜ ஐயரை, ஐயர் எனவும், லோகனாத முதலியாரை முதலியார் எனவும் அழைப்பது போல//
ஹா ஹா ஹா
நடராஜ ஐயரை, "ஐயர்"-ன்னு அவங்க ஏரியாவில் வேணும்-ன்னா கூப்புடுக்கலாம்! அவரை மட்டுமே குறிக்கும்!
ஆனா சுவாமி மலைக்கு யாத்திரை போய், அங்கே கடையில் எல்லாம் ஐயர் எங்கே-ன்னு கேட்டா, நடராஜ ஐயருக்கா வழி காட்டுவார்கள்? :))
பொது இடத்தில் ஒரு பேரைச் சொன்னா, அது தனித்த அடையாளமுடைய பேரா இருந்தாத் தான் செல்லும்!
பொது இடத்தில், ஐயர் எங்கே-ன்னு கேளுங்க! எந்த ஐயரு-ம்பாங்க!
பொது இடத்தில் பெருமாள் கோயில் எங்கே-ன்னு கேளுங்க! வழி காட்டுவாங்க! :)
@SK ஐயா
//பெருமாள் அடைமொழி தான்//
:)
//இப்ப வேணும்னா எல்லாருக்கும் இதுவிஷ்ணுவைக் குறிப்பதுன்னு புரியுதே தவிர, ஒரு காலத்தில் இது பெருமையுடையவரைக் குறிக்கும் சொல்லாகத்தான் இருந்தது//
அட, சரிங்க! "ஒரு காலத்தில்" அது பொதுச் சொல்லாகத் தான் இருந்துச்சி! அப்படியே வச்சிப்போம்! ஆனால் அருணகிரி காலத்தில்? (15th CE)
அருணகிரி காலத்தில் தான், "பெருமாள்" என்ற சொல், திருமாலைக் குறிக்கத் துவங்கி விட்டதே!
அருணகிரி காலத்துக்கும் முன்னாடியே, நாதமுனி/ஆளவந்தார் காலத்திலேயே (10th CE), "பெருமாள்" என்று பரவலாகப் புழங்க ஆரம்பித்து விட்டார்களே!
அப்பறம் எப்படி/எதுக்கு அருணையார் இந்தச் சொல்லை எடுத்தாண்டாரு?
அட, அருணகிரியே, அரங்கனை "பெருமாள்"-ன்னு தானே கூப்பிடறாரு, இந்தப் பாட்டில்?
//இதில் மாற்றுக் கருத்தே இல்லை//
அதை மாற்றுக் கருத்து உடையவர்கள் சொல்லணும்! நீங்களே சொல்லிக்கப்பிடாது! :)
இல்லீன்னா தரவு தாருங்கள்...
1. அருணகிரி காலத்தில், "பெருமாள்" என்ற சொல் பல தெய்வங்களையும் குறித்தது என்பதற்கான தரவு!
2. அருணகிரி காலத்திலோ, அவருக்கு முன்னாலோ, முருகனை, "பெருமாள்" என்று இதர கவிஞர்கள் அழைத்ததற்கான தரவு!
- தர இயலுமா?
கச்சேரி நல்லா கலை கட்டுது...
//பொது இடத்தில், ஐயர் எங்கே-ன்னு கேளுங்க! எந்த ஐயரு-ம்பாங்க!
பொது இடத்தில் பெருமாள் கோயில் எங்கே-ன்னு கேளுங்க! வழி காட்டுவாங்க! :)//
நீங்க சொன்ன அதே வகையில்தான் //நடராஜ ஐயரை, "ஐயர்"-ன்னு அவங்க ஏரியாவில் வேணும்-ன்னா கூப்புடுக்கலாம்! அவரை மட்டுமே குறிக்கும்!
ஆனா சுவாமி மலைக்கு யாத்திரை போய், அங்கே கடையில் எல்லாம் ஐயர் எங்கே-ன்னு கேட்டா, நடராஜ ஐயருக்கா வழி காட்டுவார்கள்? :))// வைணவர்கள் மட்டும் தங்கள் ஏரியாவில் திருமாலைப் 'பெருமாள்' எனப் பாடினர். அந்தக் காலத்தில், வேறு யாராவது பெயரேதும் குறிக்காமல் 'பெருமாள்' எனப் பெருமாளைப் பாடிய தரவை நீங்கதான் தரணும்!
//அந்தக் காலத்தில், வேறு யாராவது பெயரேதும் குறிக்காமல் 'பெருமாள்' எனப் பெருமாளைப் பாடிய தரவை நீங்கதான் தரணும்!//
ஹிஹி! இதுதான் வாதத்திலிருந்து வி.வாதத்துக்குக் கொண்டு செல்லுவதோ? :)))
ஆக மொத்தம், தரவை நீங்க தர மாட்டீங்க!
ஆனால் //இதில் மாற்றுக் கருத்தே இல்லை//-ன்னு மட்டும் சொல்லிக்கிட்டே இருப்பீங்க! அடா அடா அடா! :)))
//வேறு யாராவது 'பெருமாள்' எனப் பெருமாளைப் பாடிய தரவை நீங்கதான் தரணும்//
அதான் வைணவர் அல்லாத அருணகிரியும், பெருமாளை, "பெருமாள்"-ன்னு பாடறாரே! தரவைப் பதிவிலேயே தந்து விட்டேனே! :)
* உரக படம் மேல் வளர்ந்த
பெரிய "பெருமாள்",
* அரங்கர், உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே!
இங்கே அருணகிரி அரங்கப் பெருமாள்-ன்னும் சொல்லலை! உலகளந்த பெருமாள்-ன்னும் சொல்லலை! நேரடியாகவே "பெருமாள்" என்கிறார்!
இப்போ, நீங்க, நான் கேட்ட தரவை, எஸ்கேப் ஆகாமல் கொடுங்க பார்ப்போம்!
கொறைஞ்ச பட்சம்...அருணகிரி காலத்திலோ, அவருக்கு முன்னாலோ, முருகனை, "பெருமாள்" என்று இதர கவிஞர்கள் அழைத்ததற்கான தரவு! - தாங்க! தாங்க! தைரியம் இருந்தா தாங்க! :)
இதைத்தான் நான் எனது முதல் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டேன். பெருமாள்னு சொல்லலை அரங்கர் பெருமாள் என்பதை மாற்றியிருக்கிறார் என!
இப்ப வந்து திரும்பவும் அதையே சொல்றீங்களே!
பெருமாள்னு மட்டும் அருணகிரி பாடியிருந்தா நன் இந்த விவாதத்துக்கே வந்திருக்க மாட்டேன்
அரங்கர் பெருமாள்னு தெளிவாக் கூப்பிடறார். சௌந்தர்ராஜ, கோவிந்தராஜ, வரதராஜப் பெருமாள்கள் போல!
@SK
//அரங்கர் பெருமாள்னு தெளிவாக் கூப்பிடறார்//
எங்கேங்க "தெளீவாக்" கூப்புடறாரு?
நீங்களா, முன்னுள்ள சொல்லைப் பின்னாலும், பின்னுள்ள சொல்லை முன்னாலும், ஒங்க வசதிக்கு மாத்திப் போட்டுப்பீங்களா? :)
உரக படம் மேல் வளர்ந்த
பெரிய "பெருமாள்"-ன்னு முதலில் சொல்லிட்டு
அப்பறம் தான் அரங்கர், உலகளந்த என்றெல்லாம் சொல்கிறார்!
பெரிய பெருமாள்-அரங்கர்-ன்னு தான் இருக்கே தவிர...
நீங்க "தெளீவா"ச் சொல்றா மாதிரி, அரங்கப் பெருமாள்-ன்னு எங்கே இருக்கு? காட்டுங்க பார்ப்போம்! :)
இன்னும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலை நீங்க!
"பெருமாள்" பொதுவான சொல் என்றால், முருகனைப் பெருமாள் என்று பாடிய இன்னொரு கவிஞரைக் காட்டுங்க பார்ப்போம்!
தரவு ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே வைக்கப்பட மாட்டாது!
ஐயரைக் கூப்பிடுங்கன்னதும் எந்த ஐயரைன்னு கேள்வி வர இந்த ஐயருங்க அதான் நடராஜுன்னு பேருன்னு சொல்றமாதிரி,......
பெருமாள்னதுமே, இந்த அரங்கனைத்தான் சொல்றேன்னு தெளீவாக் காட்டியிருக்காரு. புரிஞ்சும் புரியாத மாதிரி எப்படி இப்படில்லாம் இருக்க முடியுது?:)))
சேரமான் பெருமாள் என்னும் சிவபக்தரைத் தெரியும் தானே?
//சௌந்தர்ராஜ, கோவிந்தராஜ, வரதராஜப் பெருமாள்கள் போல!//
அப்போ கூட...
சுப்ரமணியப் பெருமாள், சதாசிவப் பெருமாள், வைத்தியலிங்கப் பெருமாள்-ன்னு இருக்கா? :)
//சேரமான் பெருமாள் என்னும் சிவபக்தரைத் தெரியும் தானே?//
அட, பெருமாள் என்பது 5-10 CE வரை பொதுச் சொல் தான்-பா! அதான் நானே பதிவில் சொல்லி இருக்கேனே! சேரமான் பெருமாள், சமண குருக்களில் ஒரு பெருமாள்-ன்னு! பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டமா? :)
ஆனால், அருணகிரி காலத்தில் (15th CE), அது பெருமாளை மட்டுமே குறிக்கும் சொல் ஆகி விட்டது! இருந்தும் அச்சொல்லை அருணகிரியார் பயன்படுத்துகிறார்! அவருக்கு முன்னோ, பின்னோ எந்த முருகக் கவியும் இப்படிப் பாடினார்கள் இல்லை!
---------------
இல்லை, அருனகிரி காலத்திலும் பலவற்றையும் குறிக்கும் சொல் தான் என்றால், அதற்கான சான்றைக் கொடுங்களேன்! அதுவும் குடுக்க மாட்டீங்க! ஆனா சொன்னதையே பத்து முறை சொன்னா?? :)))
Very Very Simple!
Can you give one song before Arunagiri, who has called Murugan as Perumal?
உங்கள் வாதப்படி "பொதுவான சொல்லு" தானே? பலரும் பயன்படுத்தி இருப்பாங்க-ல்ல? ஒருத்தர் கூடவா உங்களுக்கு அம்புடல? :))
இது உங்கள் வாதம். வேறு எவரும் பாடினரா இல்லையா எனவெல்லாம் தேட இப்போது நேரமில்லை என்பதே உண்மை!
ஆனால், அருணகிரி காலத்தில் அது திருமாலை மட்டுமே குறிக்கும் சொல் என்பது ஏற்புடையதல்ல.
ஒரு 'ட்ரான்ஸிஷன்' நிகழும் காலத்தில் இந்தச் சொல் திருமாலுக்கு மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ளாத அருணகிரி இப்படி முருகனையும் பாடியிருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் தெரிவித்துக் கொண்டு, இந்த வாதத்திலிருந்து இப்போதைக்கு விடை பெறுகிறேன்.
\இன்று முருகப் பெருமாளின் தைப்பூசத் திருவிழா என்பதையே நினைத்து!:))
Very very simple!
Can you give me one song where Vishnu was addressed simply as perumaL before this time period?
//பெருமாள்னதுமே, இந்த அரங்கனைத்தான் சொல்றேன்னு தெளீவாக் காட்டியிருக்காரு//
இதான் உங்க "தெளிவா"? :)
ஏன், கூடவே உலகளந்த-ன்னு வருதே! அதைக் கூடக் காட்டி இருக்கலாமே?
//சௌந்தர்ராஜ, கோவிந்தராஜ, வரதராஜப் பெருமாள்கள் போல//
அரங்கப் பெருமாள்-ன்னு எந்த ஊர்லயும் பேரு கிடையாது!
ஒன்னு அரங்கன், இல்லீன்னா ரங்கநாத சுவாமி or ரங்கநாதன்!
அருணகிரி, வரிசைப்படுத்திப் பாடுகிறார், அவ்வளவே!
1. உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள்
2. அவன் அரங்கன்
3. அவன் உலகளந்த மால்
4. அந்த மால் மகிழ்ந்த மருகோனே!
புரிஞ்சும் புரியாத மாதிரி எப்படி இப்படில்லாம் இருக்க முடியுது?:)))
இவிங்க தரவே கொடுக்க மாட்டாங்களாம்!
ஆனா, மாற்றுக் கருத்தே இல்லை-ன்னு மார் தட்டிப்பாங்களாம்! சூப்பர் ஆட்டம்ப்போவ்! :)
SK
பொது இடத்தில், ஐயர் எங்கே-ன்னு கேளுங்க! எந்த ஐயரு-ம்பாங்க!
ஆனா, பொது இடத்தில் பெருமாள் கோயில் எங்கே-ன்னு கேளுங்க! வழி காட்டுவாங்க! நிச்சயமா முருகன் கோயிலுக்கு அல்ல! :)
முருகா!
முத்துக்குமரா!
கருணைக்கந்தா!
கார்த்திகைபாலா!
நீ வாழ்க, வாழ்க!!
(கஷ்டப்பட்டு ஒருவழியா குழுவில் சேர்ந்தும், என் பேரை மட்டும் இருட்டடிப்பு செய்த இந்தப் பசங்களைக் கொஞ்சம் கண்டிச்சு வை!)
இன்னும் பதிவு படிக்கலை.
//ஒரு 'ட்ரான்ஸிஷன்' நிகழும் காலத்தில் இந்தச் சொல் திருமாலுக்கு மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ளாத அருணகிரி இப்படி முருகனையும் பாடியிருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் தெரிவித்துக் கொண்டு//
அப்படி வாங்க வழிக்கு!
ஒரு 'ட்ரான்ஸிஷன்' நிகழும் காலத்தில் அருணகிரி இப்படி முருகனையும் பாடியிருக்க "வாய்ப்புண்டு"....
அப்படீன்னா, 'ட்ரான்ஸிஷன்'-க்கு முன்னாடி, எத்தனை எத்தனை முருகக் கவிஞர்கள் அப்படிப் பாடி இருக்க வாய்ப்புண்டு! அதில் ஒரு கவிஞரையாச்சும் காட்டுங்கய்யா, காட்டுங்க! :)
இப்போ மட்டும், கரெக்ட்டா, நேரமில்லை-ன்னு எஸ்கேப் ஆவீங்களே! :))
//Very very simple!
Can you give me one song where Vishnu was addressed simply as perumaL before this time period?//
தோடா...
அதான் அருணகிரி பாட்டையே கொடுத்தேனே!
அவரே அரங்கனை = பெருமாள், பெரிய பெருமாள், பெருமாள்-அரங்கர்-உலகளவு மால்-ன்னு எல்லாம் பாடறாரே!
இன்னொரு பாட்டும் வேணுமா?
நாளும், பெரிய பெருமாள், அரங்கர் நகை முகமும்,
தோளும், தொடர்ந்து எனையாளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு-ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே, தமியேனை வளைந்து கொண்டே!
- திரு அரங்கத் திருவந்தாதி (11th CE)
இன்னொரு பாட்டும் வேணுமா?
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து
பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக்கோதையுடன் ஆடிர் ஊசல்
கோயில் பெருமாள் நீவிர் ஆடிர் ஊசல்!
- ஊசற் பாட்டு
Now, very very simple...
I have given you proof that the word "perumaaL" existed for perumaaL, from different authors!
Pl, give me proof, that the word "perumaaL" existed for murugan, from one person, other than Arunagiri!
That too, Arunagiri uses this word, not here and there, but almost every other place. Show me an instance, where such prevalence existed before Arunagiriyaar!
SK Ayya
Actually, I didnt want to discuss this in the 200th post for my murugan! :)
But,your sheer intolerance on a "single word"...dragged me in! :)
இந்த விவாதத்தை இன்னொரு பதிவில் வைத்துக் கொள்வோம்! அங்கேயும் தரவுகளே தராமல், எதிர் தரப்பை மட்டுமே தொடர்ந்து தரவு கொடுக்கச் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! :)
மக்களே!
முத்தாய்ப்பாக....அருணகிரியாருக்கு, "பெருமாள்" என்ற சொல்லின் மீது அத்தனை காதல்! Fantasy! :)
அவர் "பெருமாளே" என்று பாடினாலும், அவர் அவ்வாறு குறித்தது, என் ஆசை முருகப் பெருமானைத் தான்! அதில் ஐயமே இல்லை! - இதைப் பதிவிலும் சொல்லி உள்ளேன்!
ஆனால் அவர் அந்தச் சொல்லை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதில் தான் அவர் உள்ளக் கிடக்கை அடங்கி இருக்கு! - இதைப் பதிவில் சொன்னதற்குத் தான் இத்தனை விவாதங்கள் செய்கிறார்கள்! :))
அருணகிரியின் உள்ளம்...சாத்திரக் கோட்பாடுகள், சமயக் குறுகல்கள்-களுக்குள் அடங்கிய உள்ளம் அல்ல! அவர் உள்ளம் மென்மையான பேதை உள்ளம்!
முருகன் வள்ளியின் காலைத் தொட்டு வருடுவதாக அடிக்கடிப் பாடுவார்! வேறு யாரும், அவருக்கு முன்னோ பின்னோ, இப்படிப் பாடினாரில்லை! காதலன் முருகன் எப்படி இருப்பான்-ன்னு கூடத் தெரியாது, அவனுக்காகவே காத்துக் கிடந்த பேதை, தினைப்புனத்தில் நடையாய் நடந்த கால்கள் - அதை முருகன் பிடித்து விடுகிறான்! - இவ்வாறு சொல்ல அருணகிரியால் மட்டுமே முடியும்! - பேதையுள்ளம், கருணையுள்ளம்!
"பெருமாள்" என்ற சொல்லை விட்டுத் தள்ளுங்கள்!
பெருமாளை, பல திருப்புகழ்களில் வலிய இழுத்துப் பாடுவார் அருணையார்! அதுவும் அவர் ஆழமான உள்ளக் கிடக்கையே!
இல்லீன்னா, முதல் முதல் திருப்புகழில், முத்தைத் தரு பத்தித் திருநகை-ன்னு துவங்கி, முருகனின் பெருமை/வரலாற்றை முழுதும் பாடாது...முதல் இரண்டே பத்திகளில் சொல்லி விட்டு....உடனே தற்கொலையில் தோழனைக் காத்த கண்ணனைப் பாடுவாரா?
மற்ற திருப்புகழில் அங்கொன்னு இங்கொன்னு-ன்னு பாடினா, சமய நல்லிணக்கம்-ன்னு சொல்லிட்டுப் போயீறலாம்! ஆனா முதல் முதல் புகழிலுமா இப்படி? அதுவும் முருகனைப் பாட வந்த நூலில்?
வேறு யாரேனும் இப்படிச் செய்து இருக்கிறார்களா? = No!
அருணகிரியின் உள்ளம் "வேறு" உள்ளம்! அதை அறியாதார் அறியாதாரே!!
அருணகிரியாரின் அந்த மென்மையான உள்ளத்துக்கு, அடியேன் தலை வணங்கி, ஒரு அன்பு முத்தமும் வைத்துக் கொள்கிறேன்! முருகா! உன் காமங்கள் அன்றி, மற்றை என் காமங்கள் மாற்று!
//கவிநயா said...
முருகா!
முத்துக்குமரா!
கருணைக்கந்தா!
கார்த்திகைபாலா!
நீ வாழ்க, வாழ்க!!//
அக்கா...
அவனை வாழ்த்தினா, என்னையும் வாழ்த்தினா மாதிரி தானே! :)
//(கஷ்டப்பட்டு ஒருவழியா குழுவில் சேர்ந்தும், என் பேரை மட்டும் இருட்டடிப்பு செய்த இந்தப் பசங்களை//
OMG! இருட்டடிப்பா? நம்ம எல்லார் சார்பாகவும் தானே, இப்பதிவில் நன்றி சொல்லியுள்ளேன்! நேற்று நம்ம குழுமத்துக்குள் மின்னஞ்சல் வேற அனுப்பிச்சேனே!
அன்னையின் பாடகியான நீங்கள் இல்லாமலா? பதிவில் பாருங்க! முருகனை அம்மா பையன்-ன்னு தான் வாதாடி இருக்கேன்! :))
பழனி முருகர் மூலஸ்தான போட்டோ எடுத்து போட்ட படமா பதிவில் இருப்பது.
அருமை:)
முருகனருள் 200-vthu பதிவிற்கு கண்ணனுக்கு வாழ்த்துகள் .
கண்ணன் நான்தான் முருகர்னு சொல்றாரு! நீங்க அவரையே புடிச்சி கேட்டுக்குங்க:)
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!
அரோகரா! அரோகரா! அரோகரா!
அன்பு ரவி வாழ்த்துகள் மா. 200 பதிவுகள் ஓடிவிட்டதா:)
தைப்பூசத்துக்கு முருகனைக் கண்ட மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.
நன்றிமா.
//Narasimmarin Naalaayiram said...
பழனி முருகர் மூலஸ்தான போட்டோ எடுத்து போட்ட படமா பதிவில் இருப்பது. அருமை:)//
இல்லை!
அது தெய்வம் படத்துக்காக செட் போட்டு எடுத்தது! அதை வீடியோவில் இருந்து கட் பண்ணி, படமாக இங்கே கொடுத்தேன்! :)
பழனி மூலவர்....இதை விட தேய்ஞ்சு போய் ரொம்ப ஒல்லியா இருப்பாரு! ஆனாலும் என்-அவர், ரொம்ப அழகு, இந்த செட்டில் உள்ளதை விட! :)
//கண்ணன் நான்தான் முருகர்னு சொல்றாரு! நீங்க அவரையே புடிச்சி கேட்டுக்குங்க:)//
:)
//கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!//
இதென்ன வம்பாப் போச்சு!
சரி, மாமன் சொத்து மருகனுக்குத் தானே! எங்க அப்பா வேங்கடவன் சொத்தெல்லாம் என்-அவருக்கே! என்-முருகனுக்கே! :)
//வல்லிசிம்ஹன் said...
அன்பு ரவி வாழ்த்துகள் மா. 200 பதிவுகள் ஓடிவிட்டதா:)//
ஆமாம் வல்லிம்மா ஆமாம்!
சொந்தமாப் பதிவு-ன்னா எவ்ளோ வேண்டுமானாலும் போட்டுக்கலாம்! ஆனா ஒவ்வொரு பதிவும், முருகன் பாட்டாவே தேடிப் போடணும்-ன்னா...அதான் இந்த 200-இல் இத்தனை மகிழ்ச்சி!
இருநூறு இடுகைகளில் பேசப்பட்ட கந்தன் கருணை இன்னும் பலநூறு இடுகைகளையும் கண்டு அவன் அருள் மணத்தை பரப்பட்டும்.
இதில் பங்கேற்கும் வலைப்பூ ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.
மூன்றாவது படத்தில் இருப்பது பழனி மலை தானா? படிகள் தொடங்கும் அடிவாரம் பக்கமாகத் தான் பழனிமலை படங்கள் பார்த்திருக்கிறேன். இது வேறு திசையில் இருந்து எடுத்த படம் போலும். வித்தியாசமாக இருக்கிறது. :-)
உரகபடம் மேல் கண் மூடித் தூங்காமல் தாமரைக்கண்களை நன்கு விரித்துப் படுத்திருப்பதால் 'உரக படம் மேல் கண் வளர்ந்த பெரிய பெருமாள்' என்று சொல்லாமல் 'உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள்' என்று சொன்னாரோ? :-)
இல்லை அந்த 'வளர்ந்த'வை தூக்கி 'உலகளவு'க்குப் பின்னாடி போட்டு திரிவிக்கிரமனைச் சொன்னதாகக் கொள்ள வேண்டுமோ? :-)
உரகபடம் மேல் பெரிய பெருமாளாகிய அரங்கர்! உலகளவு வளர்ந்த மால்! மால் மகிழ்ந்த மருகோனே! நல்லா தான் இருக்கு இதுவும். :-)
பழனிமலை மீதில் நின்றது பகையசுரர் சேனை வென்ற பிறகா முன்னாடியா? :-) இந்த அடியார்களுக்கு இப்படி முன்னுக்குப் பின்னாய் மாற்றி மாற்றி பாடுவதே வழக்கமாகப் போய்விட்டது! அடியார் என்றாலே இப்படித் தான் போலும்! ரொம்ப ஏரணத்தை எல்லாம் பார்க்கக் கூடாது! பார்த்தால் வாதம் விவாதமாகப் போய்விடும்! பகையசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்றது ஒரு செய்தி; பழனி மலை மீது நின்றது இன்னொரு செய்தி! இரண்டுமே அருணகிரிநாதர் காலத்துக்கும் முன்னால் நடந்தது. அம்புட்டு தான். அதுக்கு மேலே அவை இரண்டிற்கும் என்ன தொடர்பு இருக்குன்னு பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் கண்ணனையும் இராமனையும் போட்டு குழப்புபவர்களுடன் நாமும் குழம்பிவிடுவோம் நாலாயிரத்தில். :-)
நல்ல பாடல் இரவி. இரண்டு மூன்று முறை கேட்டேன். முதல் பகுதியில் வரும் பாடற்பகுதி வேறு திருப்புகழில் வரும் வரிகளா?
200-வது பதிவுக்கு முருகனருள் அடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இருனூறு இரண்டாயிரமாய் வளர முருகன் அருள் செய்யட்டும்.
முருகனருள் முன் நிற்கும்!
@ கபீரன்பன் ஐயா
இருநூறு பலநூறு ஆசிக்கு நன்றி!
@ தக்குடு
//இருனூறு இரண்டாயிரமாய் வளர முருகன் அருள் செய்யட்டும்//
நன்றி! இரண்டாயிரம் பதிவுக்கும் வந்து வாழ்த்து சொல்லு! சரியா? :)
@குமரன்
//மூன்றாவது படத்தில் இருப்பது பழனி மலை தானா? //
சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்க! ஆலயம் ரவுண்டாத் தெரியும்! :)
//இது வேறு திசையில் இருந்து எடுத்த படம் போலும். வித்தியாசமாக இருக்கிறது. :-)//
உங்க பெருமாள் பெருமாளுக்குப் பின்னழகு-ன்னா, எங்க முருகப் பெருமாளின் மலைக்குக் கூடப் பின்னழகு உண்டு! :)
அவன் பின்னழகு..வேணாம் சென்சார்! :)
//'உரக படம் மேல் கண் வளர்ந்த பெரிய பெருமாள்' என்று சொல்லாமல் 'உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள்' என்று சொன்னாரோ? :-)//
கண் வளர்ந்தாரோ இல்லீயோ, வம்பு தும்பெல்லாம் வளர்ப்பாரு போல! :)
பெரிய பெருமாள் = கண்ணன்; நம்பெருமாள் = இராகவன் என்பது ஆசாரியர்கள் அனுபவம்!
//இல்லை அந்த 'வளர்ந்த'வை தூக்கி 'உலகளவு'க்குப் பின்னாடி போட்டு திரிவிக்கிரமனைச் சொன்னதாகக் கொள்ள வேண்டுமோ? :)//
அப்படியும் போடலாம்!
ஆனால் அதெல்லாம் SK ஐயா போட மாட்டாரு! அவர் "பெருமாள்" என்பதை மட்டுமே பார்த்த, "பெருமாள்" என்பதை மட்டுமே போடுவாரு! :)
"அரங்கர் பெருமாள்"-ன்னு எந்தக் கோயில்லவாச்சும் சொல்றாங்களா என்ன? :)
அட, பெருமாள் is only a விகுதி for அரங்கன்!
அரங்கப் பெருமாள், வேங்கடவப் பெருமாள்-ன்னு எல்லாம் கேள்வியே படலீன்னாலும், கேள்விப்பட்டதாய்ச் சொல்லணும் என்பது கோவி ஸ்டைல்! :))
//பகையசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்றது ஒரு செய்தி; பழனி மலை மீது நின்றது இன்னொரு செய்தி!//
ஏன், இன்னொரு தபா, லவ்ஸைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து, இங்க தான் நான் கோச்சிக்கிட்டு நின்னேன்-ன்னு முருகன் சொல்லி இருக்கலாம்-ல்ல? :)
அப்படிப் பார்த்தா order of padai veedus கூட குழம்பும்!
முதல் வீடு = பரங்குன்றம் (கல்யாணம்); மூன்றாம் வீடு தான் = ஆவினன்குடி! அப்படின்னா கண்ணாலத்துக்கு அப்புறம் கோவணம் கட்டிக்கிட்டு....Hey too bad but sexy, Muruga :)))
//அப்படிப் பார்த்தால் கண்ணனையும் இராமனையும் போட்டு குழப்புபவர்களுடன் நாமும் குழம்பிவிடுவோம் நாலாயிரத்தில். :-)//
நாலாயிரக் குழப்பம் சான்ஸே இல்லை! இராகவன் பண்ண தப்பெல்லாம் பாவம்...இந்த அப்பாவிக் கண்ணன் மேலே! :))
//குமரன் (Kumaran) said...
நல்ல பாடல் இரவி. இரண்டு மூன்று முறை கேட்டேன்//
திருப்புகழ்-ன்னா அதைப் பாட பித்துக்குளி என்பது தான் சிறப்பு குமரன்!
//முதல் பகுதியில் வரும் பாடற்பகுதி வேறு திருப்புகழில் வரும் வரிகளா?//
ஆமாம்! இன்னொரு பழனித் திருப்புகழ்!
இங்கு வி.எஸ்.கே ஐயாவின் விதண்டாவாதம் கண்டேன்.
ஐயா, பாட்டில் "பெரியபெருமாள் அரங்கர்" என்று தெளிவாக வருகிறது. ஆனால் அதை அரங்கப் பெருமாள் என்று நீங்களாக மாற்றிப் போடுகிறீர்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் , பெரிய என்ற சொல் மீதம் இருக்கிறதே. அதை நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?
"பெரியபெருமாள்" என்பது அரங்கனுக்கே உள்ள பெயர். ஸ்ரீரங்க மூலவர் பெரியபெருமாள். உத்ஸவர் நம்பெருமாள். இது பல காலமாக , அருணகிரிநாத ஸ்வாமிகளுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் முன்னால் இருந்தே நூல்களில் வருகிறது.
அதை அவர் அறிந்து வைத்துள்ளதால் தான் , அரங்கர் என்று பாட்டில் காட்டும் போது, அவனைப் பெரிய பெருமாள் என்றே விளிக்கிறார்.
பெருமாள் என்பது வெறும் விகுதிச் சொல்லே என்று காட்டுவது உங்கள் எண்ணம். அதற்காக, அருணகிரிநாதரின் வரிகளை உடைத்து, அவர் "பெரியபெருமாள் அரங்கர்" என்றால், நீங்கள் "அரங்கர் பெருமாள்" என்று தலைகீழ்ப் பாடம் செய்கிறீர்கள். அப்போது மீந்து இருக்கும் "பெரிய" என்ற சொல்லை என்ன செய்யப் போகிறீர்கள்?
அரங்கப் பெருமாள் என்று அழைக்கும் வழக்கம் எங்குமே இல்லை. அரங்கன் என்று சொல்வதே சொலவடை. ரங்கநாதன், ரங்கநாத ஸ்வாமி என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வதுண்டு. ஆனால் அரங்கப் பெருமாள் என்ற சொல் வழக்கே இல்லை. உலகளந்த பெருமாள் உண்டு, செளந்திரராஜப் பெருமாள் உண்டு, அரங்கப் பெருமாள் என்று எங்கும் இல்லை.
அருணகிரிநாத ஸ்வாமிகள் காலத்தில், பெருமாள் என்ற சொல், திருமாலை மட்டுமே பரவலாகக் குறிக்கத் துவங்கிவிட்டது.இருப்பினும் அந்தச் சொல்லை ஸ்வாமிகள் துணிந்து பயன்படுத்துகிறார். அவர் மட்டுமே பயன்படுத்துகிறார்.
இது ஏன் என்பதற்கு இந்தக் கட்டுரை ஆசிரியர் சொல்லும் விளக்கத்தை நீங்கள் தகுந்த ஆதாரம் காட்டி மறுத்துச் சொல்லுங்கள். வேண்டாம் என்று சொல்லலை. அதற்காக உங்கள் வசதிக்கு பெரியபெருமாளையும் திரித்து திருப்புகழையும் சேர்த்து திரிக்க வேணாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(அதே சமயம், இந்தக் கட்டுரை ஆசிரியர் அருணகிரிநாத ஸ்வாமிகள் மன பாவனை பற்றிச் சொல்வது ஒரு சமரச பாவனை போல் தோன்றினாலும், அதை எத்தனை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்றும் எனக்குத் தெரியாது)
- ஸ்ரீவத்ஸன் சேஷசாயி
ஸ்ரீவத்சன்,
உங்கள் கருத்துக்கு நன்றி! முருகனருள் உட்பட எந்தப் பதிவுகள் பக்கமும் நான் இப்போ வர இயலாத நிலை! அதனால் சுருக்கமாக இதோ:
1. அருணகிரியார் பெரியபெருமாள்-ன்னு இங்கு அரங்கனைக் காட்டுவது, அரங்கர்+பெருமாள் என்று பிரித்து அல்ல!
திருவரங்கத்து மூலவர் = பெரியபெருமாள் என்ற அளவிலே தான் காட்டுகிறார்! நீங்களும் அதையே உறுதிப் படுத்துகிறீங்க, நன்றி!
SK ஐயா, தரவே கொடுக்காமல், வெறுமனே ஒட்ட வைக்கப் பார்த்தார்! அது முடியவில்லை! விட்டு விடுங்கள்!
2. அருணகிரி காலம் கிபி 15 CE! அதற்கும் முன்பே, 10 CE-இல் இருந்தே, பெருமாள் என்னும் சொல், திருமாலைக் குறிக்கத் துவங்கி விட்டது!
அதற்கான பாடல்களையும் கொடுத்தாகி விட்டது! அதில் ஊசல் பாட்டு, வைணவம் சார்ந்த தரவு அல்ல! பொதுத் தரவே!
தரவுகளை, அதுவும், பொதுவான தரவுகளை...நாம் மட்டுமே கொடுக்க வேணுமாம்! ஆனால் முருகன் சார்ந்த தரவுகள் கூட இவிங்க கொடுக்க மாட்டாங்களாம்!
ஆருயிர் முருகனை, பெருமாள் என்று, அருணகிரிக்கு முன் (before 15 CE) யாராவது ஒருத்தராச்சும் அழைச்சாங்களா என்பதற்கு ஒரே ஒரு தரவு???
ஆனாலும் "மாற்றுக் கருத்தே இல்லை"-ன்னு மட்டும் மார் தட்டுதல்! இது காலங்காலமாக பெரும்பான்மையினர்/அதிகாரச் சாதியினர் செய்து வரும் வாடிக்கை தான்! Burden of Proof and Struggle is always on minorities!
எழுத்தாளர் ஜெயமோகனை ஒரு பெரும்பான்மையவர் இப்படித் தான் திராவிட வேதம் பற்றிக் கேட்டு வைக்க, அதற்கு ஜெமோ சொல்லியுள்ள அருமையான பதிலையும் பாருங்க!
சிறுபான்மையினர், பெரும்பான்மைக்கு உட்பட்டே தங்கள் மரபுச் சிறப்பைப் பேண வேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மை அம்புட்டுச் சீக்கிரம் போய் விடாது! :( இன்னொரு பெரியார் தான் வர வேணும்!
3. இங்கு முக்கியமாக SK ஐயா சொன்னதை உற்று நோக்க வேணும்! அவரிடம் தொலைபேசியிலும் இது குறித்து அப்போதே உரையாடி விட்டேன்!
அதாச்சும் அது ஒரு Transition ஆம்! அது என்ன "பெரும்+ஆள்" என்ற சொல் திருமாலுக்கு மட்டும் பொது மக்களிடையே புழங்குகிறது? நானும் போட்டியா வரிக்கு வரி பாடி வைக்கிறேன் பார்-ன்னு, அருணகிரியார் அப்படி எழுதி வைச்சாராம்! Revolution ஆம்!
அடக் கொடுமையே...அருணகிரியின் நல்ல உள்ளத்தை, இதை விட மோசமாக நோகடிக்க முடியாது!
போட்டிக்கும் வீம்புக்கும் எழுதுபவரா அருணகிரி? அது தற்கொலையில் தப்பி வந்த உள்ளம்-ங்க!
முத்தைத் தரு பத்தி என்னும் முதன்முதல் முருகன் பாட்டிலேயே, தற்கொலையிலிருந்து தோழனைக் காத்த கண்ணனையும் முதல் பத்தியில் வைத்தே பாடுகிறார்! அப்படிப்பட்டவர் செய்யும் வீம்புப் புகழா இந்தத் திருப்புகழ்? ஐயோ முருகா!
அப்படியே Revolution என்று வைத்துக் கொண்டாலும், அருணகிரிக்கு முன்னும் பின்னும் யாருமே முருகனை, இப்படிப் பெருமாள் என்று சுட்டவில்லை! ஆக, அருணகிரி ஆரம்பித்து வைத்த ஒரு Revolution தோல்வியிலா முடிந்தது?
திருமுருகா! மேலாதிக்க மனங்கள் எப்படியெல்லாம் சிந்திக்கின்றன? தங்கள் நிறுவன வீம்புக்காக, சாதி/சமய வீம்புக்காக, முருகனையே காவு கொடுப்பதா? :(
இப்படித் தான் முன்பு ஓம் என்பது எங்களுக்கே சொந்தம், சிவ குடும்பத்துக்கு மட்டுமே பிரணவப் பொருள் தெரியும், பிரமன் இன்று வரை அறியாமல் படைக்கிறான், அதான் உயிர்கள் குறையோடே பிறக்கின்றன, பிரமன் சிறையில் இருந்த காலத்தில் முருகனால் படைக்கப்பட்ட போது மட்டும் உயிர்களுக்குக் குறையில்லை-ன்னு எல்லாம் சொன்னார்கள்! அடக் கொடுமையே, முகம் பொழி கருணையான முருகனா, குறையோடே உயிர்களைப் படைக்கவிட்டு, பிரணவம் தனக்கு மட்டுமே தெரியும்-ன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான்? :(
கிட்டத்தட்ட, நானும் SK ஐயாவும் ஒரே புள்ளியில் தான் கருத்தாக்கத்தை முன் வைத்தோம்!
* நான் சொன்னது = அருணகிரி உள்ளத்தில், ஏனோ ஒரு தனியான திருமாலன்பு/வள்ளியன்பு...வேறு யாருமே செய்யாதவொரு வித்தியாசமாக, பெருமாளே என்றும், குறமகள் பாதம் வருடிய-ன்னும் பாட்டுக்குப் பாட்டு எழுதிச் சென்றது!
* SK ஐயா சொன்னது = அது என்ன பெருமாள்-ன்னு திருமாலை மட்டும் சொல்லுறது? நானும் வரிக்கு வரி சொல்றேன் பார்-ன்னு அருணகிரி எழுதியது! :)
ஒன்னு அன்பின் பாற்பட்டது!
இன்னொன்னு வீம்பின் பாற்பட்டது!
இதுல அருணகிரி எப்படிப்பட்டவர்-ன்னு அவரவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!
ஆனால் எனக்குத் தெரியும், என்ன தான் அருணகிரி ஒரு முன்னாள் ஷோக்குப் பேர்வழி, பெண்கள் சபலிஸ்ட் என்றாலும்....
அருணகிரியின் உள்ளம், அந்தச் சபலத்துக்காகத் தன்னை இழக்குமே அன்றி, தற்கொலையே செய்து கொள்ளுமே அன்றி, ஒரு நாளும் வீம்பு காட்டியதில்லை! அருணகிரியின் உள்ளம் பேதை உள்ளம்! அதை **உணர**வும் ஒரு மனம் வேண்டும்!
ஸ்ரீவத்சன்
நீங்க போகிற போக்கில் இன்னொன்னும் சொல்லி இருக்கீங்க! ஏதோ சம பாவனை-என்கிற நோக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கேன்! ஆனால் அதை "வைஷ்ணவர்களே" ஒப்புக்கிடுவாங்களா-ன்னு தெரியாது-என்றும் சொல்லி இருக்கீங்க!
ஒப்புக்கிடறதுக்கு, அவிங்க யாரு? பெருமாளே என்று வரிக்கு வரி முடித்த அருணகிரி போன்ற ஞானப்-பேதை உள்ளங்களை ஒப்புக்க அவிங்க யாரு?
பெருமாளை "வைணவத்திலும்" கட்டி அடக்கி விட முடியாது!
என் முருகனை "சைவத்திலும்" கட்டி அடக்கிவிட முடியாது!
சங்க காலம் தொட்டே தமிழ்க்குடிக்கு இயற்கைத் தெய்வங்களாய் திகழ்ந்தவர்கள் மாயோனும் சேயோனும்!
இறைவனை உள்ளது உள்ளபடியே அனுபவிக்க, எந்த நிறுவனப்படுத்தலின் ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை! அருணகிரிக்கும் அப்படியே! அதான் முருகனை பெருமாளே என்று வரிக்குவரி அழைக்கவும் அவரால் முடிந்தது!
அருணகிரியின் பேதை உள்ளத்தைப் பேச எனக்கு எந்த "வைஷ்ணவ" நிறுவனப்படுத்தலின் ஒப்புதலும் தேவையில்லை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
உங்கள் பின்னூட்டத்தை மின்னஞ்சலில் பார்த்ததால் தாங்க இந்த மறுமொழி! நன்றி! இது போன்ற விளக்கங்கள் ஏதும் இனித் தந்து கொண்டு இருக்காது, இதுவே என் கடைசிப் பின்னூட்டாக இருக்கட்டும்! முருகா!
" ஒரு பொழுது தூது சென்ற " - இதற்கு ஒரு இரவுப்பொழுது முழுவதும் தூது சென்ற என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா ? கால் கடுக்க இறைவனை நடக்க வைத்த காரணத்தால் தானே சுந்தரர் மீது ஏயர்கோன் கலிக்காம நாயனார் கோபம் கொண்டார். - மா. சட்டநாதன் , கழுகுமலை
Post a Comment