நான் காணும் பொருள் யாவும் நீயாகவே
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே!
ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே
அதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே! முருகா....!
குருவாக நீ வந்து அருள்வாயயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
உண்ணாது உறங்காது உனையே நான் நினைத்திருக்க - உனை
எண்ணாத பொழுதெல்லாம் எனையே நான் சபித்திருக்க
பண்ணாக, இசையாக உனையே நான் படித்திருக்க நான்
மண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்க..
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
என் மனமென்னும் ஒருவீடு உனக்காகக் காத்திருக்க! - அதில்
நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க
தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்
பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க
"சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
4 comments:
Sooper Song!
//நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!//
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்....நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்....நானாக வேண்டும்
உம்ம்ம்ம்...உம்ம்ம்ம்! அந்தப் பாட்டு மாதிரியே இருக்கு-ல்ல? :)
//எண்ணாத பொழுதெல்லாம் எனையே நான் சபித்திருக்க//
:)
//மண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்க..//
அருமை!
இந்தப் பாடலை எழுதியது யாருன்னு சொல்லவே இல்லீயே! கவிஞர் வாலியா? இல்லை அருணையடி (எ) கவிஞர் சிபியா? :)
'காணும் பொருள் யாவிலும் கண்ணா உன் முகம் காண்கிறேன்' அப்படின்னு முந்தி ஒரு கவிதை எழுதினேன். அது நினைவு வந்தது :)
பாடல் அருமை!
இந்தப் பாடலை எழுதியது அருணையடி
எழுத வைத்தவன் வேலன் :))
Post a Comment