சிந்தையிலே கந்தனை வை!
என்றனுயிர் உன்றனுக்கு
கன்னிமகன் கந்தனுக்கு
வண்ணமயில் வேலனுக்கு
வேதியனின் பாலனுக்கு!
காவடிகள் ஆடிவரும்;
கந்தனுன்னைத் தேடிவரும்;
சேவடிகள் கண்டுவிட்டால்,
சென்மம்கடைத் தேறிவிடும்!
பக்தரெல்லாம் பாடிவர,
சித்தரெல்லாம் நாடிவர,
கத்துங்குயில் புள்ளினமும்
கந்தன்புகழ் கூறிவர!
பால்குடங்கள் கூடவரும்;
பாலனுன்னைத் தேடிவரும்;
வேலன்முகம் கண்டுவிட்டால்
பாவமெல்லாம் ஓடிவிடும்!
கந்தன்முகம் கண்டிடவே
சிந்தையிலே கந்தனைவை
பந்தம்விட்டு வந்தவனை
சொந்தமிவன் என்றேவை!
--கவிநயா
17 comments:
\\கன்னிமகன் கந்தனுக்கு\\
முதல்மகன் என்ற பொருளிலா?
வாங்க கோபி.
கந்தன் முதல் மகன் இல்லையே?
"அகிலாண்டம் ஈன்ற அன்னை என்றும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே" என்று தாயுமானவர் பாடுவார்; அப்படியே அம்மாவை நானும் கன்னி என்றேன்.
வாசிப்பிற்கு நன்றி :)
/கந்தன்முகம் கண்டிடவே
சிந்தையிலே கந்தனைவை
பந்தம்விட்டு வந்தவனை
சொந்தமிவன் என்றேவை!
/
அருமை!
பந்தம்விட்டு வந்தவர்க்கெல்லாம் சொந்தமாய் கந்தன் இருப்பான்!
அருமையான பாடல்
கலக்கலான கந்தன் கவிதை! வாழ்த்துக்கள்!
( என் முந்தைய பின்னோட்டத்தை நீக்கவும்; என் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்)
மிக்க நன்றி அருணையடி, லோகன், மற்றும் ப்ரசாத் :)
கந்தனைப் பாடிய
கன்னல் வரிகள்
கருத்துக்கள்
காவடிகள் ஆடிவர
நாடிவந்த சொந்த
கந்தனின் பாடல்
நிறைந்த அற்புதம்.
உங்களின் இனிய கவிதை பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி :)
"sevadigal kanduvittaal
janmam kadaitherividum"
"velanmugam kanduvittaal
paavamellaam odividum"
what else do we need beyond this?
saravanabhavaa!saranam!
ஆகா அருமை. அருமை
கந்தனைக்
கன்னித்தமிழில் பாடிய தங்களின்
கற்கண்டு கவிதையைக்
கண்டு களிப்புற்றேன்
நன்றி அக்கா
கன்னிமகன் கந்தனா? கன்னிமகன் என்றவுடன் ஏசுநாதர் தான் என்றும் நினைவிற்கு வருவார்! இனிமேல் கந்தனும் வருவான். :-)
கத்தும் குயிலோசைன்னு பாரதியார் சொன்னதுக்கு ஒரு பொருள் உண்டு. நீங்க சொன்னதுக்கு என்ன பொருள் அக்கா?
//what else do we need beyond this?//
நன்றாகச் சொன்னீர்கள் லலிதாம்மா.
//saravanabhavaa!saranam!//
சின்னக் குழந்தையின் திருவடிகளை நானும் வணங்கிக் கொள்கிறேன்.
//ஆகா அருமை. அருமை//
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நன்றி சிவகுமாரன் :)
//கந்தனைக்
கன்னித்தமிழில் பாடிய தங்களின்
கற்கண்டு கவிதையைக்
கண்டு களிப்புற்றேன்//
மிக்க நன்றி திகழ்!
//கன்னிமகன் கந்தனா? கன்னிமகன் என்றவுடன் ஏசுநாதர் தான் என்றும் நினைவிற்கு வருவார்! இனிமேல் கந்தனும் வருவான். :-)//
நல்லது குமரா :) அந்த வார்த்தைகள் இயல்பாக வந்து விழுந்தவைதாம்.
//கத்தும் குயிலோசைன்னு பாரதியார் சொன்னதுக்கு ஒரு பொருள் உண்டு. நீங்க சொன்னதுக்கு என்ன பொருள் அக்கா?//
இவையும் அப்படியே. பாரதியாரோட சொற்றொடர் அப்படியே வந்திடுச்சோ என்னவோ. எழுதும் போது அப்படி யோசிச்சு எழுதலை.
'பந்தம் விட்டு வந்தவனை' மட்டுமே இருபொருள் நினைச்சு எழுதினேன்... 'பந்தம் விட்டு வந்து, அவனை' / 'பந்தம் விட்டு வந்தவனை', என்று...
வாசித்தமைக்கு நன்றி குமரா :)
Post a Comment