Wednesday, February 23, 2011

பாம்பன் சுவாமிகள் - பகை கடிதல்!

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்!



திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும் ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன் முதல்மயிலே, கொணர்திஉன் இறைவனையே

திரு=செல்வம்; என்ன செல்வம்?
திரு வளர் சுடர் = வளர்ந்த சுடர்; வளர்கின்ற சுடர்; வளரும் சுடர்
இப்படி, எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வம் எது?

செல்வம்-ன்னா செல்வம், செல்வோம், செல்வோம் அல்லவா? செல்வம் தேயும் அல்லவா? இன்னிக்கே இல்லீன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா!
அது எப்படி செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கும்! திரு வளர் சுடர் என்கிறாரே பாம்பன் சுவாமிகள்? என்ன செல்வத்தைச் சொல்லுறாரு? = நீங்காத செல்வம்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! அது என்ன நீங்காத செல்வம்?

எம்பெருமானே நம்மை விட்டு நீங்காத செல்வம்!
மற்ற எதுவாயினும், தாயே ஆயினும் நீங்க வல்லது! இந்தப் பிறவிக்கு ஒரு தாய்! ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் கூட வரும் ஒரே தாய்! அதுவே நீங்காத செல்வம்! தேயாமல் வளர் செல்வம்! = முருகச் செல்வம்!

அதான் "திரு" என்று மந்திரப் பூர்வமாக, இந்தத் துதியின் துவக்கத்தில் திருவை வைக்கிறார்! கூடவே இறைவனைச் சுடராக வைக்கிறார்! = அருட் பெருஞ் ஜோதி!

ஒளிக்குப் பேதம் ஏது?
சிவன், பெருமாள், முருகன், கணபதி, அம்பிகை, அல்லா, பிதா-சுதன்-பரிசுத்த ஆவி, இயேசுநாதப் பெருமான், தீர்த்தங்கரர், மகாவீரர், புத்தர் என்று சொல்லிப் பாருங்கள்! ஆட்கள் தனித்தனியாக அணி பிரிவார்கள்!
ஆனால் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் என்று சொல்லிப் பாருங்கள்! அனைவருக்கும் ஏற்புடைத்தாகவே இருக்கும்!

பரிபூர்ண இருள் என்று ஒன்று இல்லவே இல்லை! எத்தனை இருட்டிலும், கொஞ்சம் கண் பார்க்கப் பழகிய பின், சிறு ஒளியாவது தென்படும்!
அது போல், எத்தனை துன்பத்திலும், இறைவன் சிறிதாவது தென்படுவான்! அதுவே ஒளியின் பெருமை! அதனால் தான் பல இலக்கியங்கள் உலகத்தை வைத்தே துவங்கினாலும், அதோடு கூடவே ஒளியையும் சேர்த்து வைத்தே துவங்குகின்றன!

உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு = திருமுருகாற்றுப்படை
திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் = சிலப்பதிகாரம்
வையம் தகளியா, வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய சுடராழியான் அடிக்கே = ஆழ்வார் அருளிச் செயல்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், அலகில் சோதியன் = பெரிய புராணம்

இப்படித் தோற்றமாய் நின்ற சுடரையே, பாம்பன் சுவாமிகளும் துவக்கத்தில் வைக்கின்றார்!

திரு வளர் சுடர் உருவே = முருகச் செல்வம் சுடராய் ஒளி வீ்சும் உருவே
சிவை கரம் அமர் உருவே = சிவையாகிய உமை அன்னையின் கரத்தில் தவழும் உருவே
அரு மறை புகழ் உருவே = மறைகள் புகழும் உருவே
அறவர்கள் தொழும் உருவே = அறமே உருவான சான்றோர்/அறவர் தொழும் உருவே

இருள் தபும் ஒளி உருவே = தபு-ன்னா மறைந்து போதல்! (சினிமா நடிகையின் பெயர் அல்ல :) இருள் தபும் = இருளைப் போக்கும் ஒளி உருவே
என நினை எனது எதிரே = என்று ஒளி வண்ணமாக என் முருகனை நினைத்த மாத்திரத்தில், எனது எதிரே...அவன்!

குரு குகன் முதல் மயிலே = குருவான குகப் பெருமானின் முதலான மயிலே!
அது என்ன முதல் மயில்? ஏதாச்சும் ஓட்டப் பந்தயத்தில் மயிலார் முதலில் வந்தாரா என்ன? :)
வியாபாரத்தில் முதல் போடுகிறோமே! அது போல்...நம்மை ஆட்கொள்ளும் வியாபாரத்தில் முருகன், மயிலையே முதலாக வைக்கின்றான்!

முதலை வைத்துத் தான் பல செயல்களை நிகழ்த்த முடியும்! உழைப்பவர்க்கு கூலி கொடுக்க முடியும்!
முன்பு சூரனை அழித்தாலும், ஆணவம் மட்டுமே அழித்து, அவனை அழிக்காது, மயிலாய் தன்னிடமே இருத்திக் கொண்டதைப் போல, நம்மையும், நம் பாவங்களை மட்டுமே அழித்து, நம்மை அழிக்காது ஆட்கொள்வான்! இந்த நம்பிக்கை நமக்கு வருவதற்குத் தான், இந்த வியாபாரத்தில், மயிலை முதலாய் வைக்கிறான் முருகன்! அதான் குருகுகன் முதல்மயிலே!

கொணர்தி உன் இறைவனையே = உன் இறைவனை வேகமாகக் கொணர்ந்து, என் முன்னே நிறுத்து! முருகனை முன்னே நிறுத்து!

4 comments:

Kavinaya February 22, 2011 10:33 PM  

அருமை, அருமை.

//பரிபூர்ண இருள் என்று ஒன்று இல்லவே இல்லை! எத்தனை இருட்டிலும், கொஞ்சம் கண் பார்க்கப் பழகிய பின், சிறு ஒளியாவது தென்படும்!
அது போல், எத்தனை துன்பத்திலும், இறைவன் சிறிதாவது தென்படுவான்!//

நீங்கள் சொன்னதும் அருமை.

நன்றி கண்ணா!

Anonymous February 23, 2011 12:34 AM  

whatever i was about to write ,"varththikku varththai appadiye"kavinayaa has told!is she my mind reader?

Lalitha Mittal February 23, 2011 12:36 AM  

my finger pressed wrong button.iam
lalithaammaa and not anonymous!

sury siva February 27, 2011 12:12 AM  

பரிபூர்ண இருள் என்று ஒன்று இல்லவே இல்லை! எத்தனை இருட்டிலும், கொஞ்சம் கண் பார்க்கப் பழகிய பின், சிறு ஒளியாவது தென்படும்!
அது போல், எத்தனை துன்பத்திலும், இறைவன் சிறிதாவது தென்படுவான்! அதுவே ஒளியின் பெருமை! அதனால் தான் பல இலக்கியங்கள் உலகத்தை வைத்தே துவங்கினாலும், அதோடு கூடவே ஒளியையும் சேர்த்து வைத்தே துவங்குகின்றன!//

அருமை.
அதைப் புரியாதவர்,
எருமை.
su. ra.
http://Sury-healthiswealth.blogspot.com

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP