200. பழநிப் பதிகம்
இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!
தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)
200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!
"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது!
அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!
எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!
வரிகள்: டாக்டர் - அர. சிங்கார வடிவேலன்
சுப்பையா சார், புத்தகத்தில் இருந்து ஒளி வருடிக் கொடுக்க,
VSK ஐயா தட்டச்சித் தந்தது...
தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா
தங்கநிறச் செங்கதிர்போல் மின்னும் வேலா
அமிழ்தூறும் ஆறுமுகம் அமைந்த கோவே
அன்பூறும் மனந்தோறும் மலரும் பூவே
உமிழூறும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி
உள்ளுருகி வருகின்றோம் வினையைத் தீர்க்கச்
சிமிழுக்குள் குங்குமம்போல் பழநி யப்பா
சிந்தைக்குள் முகங்காட்டிச் சிரிப்பா யப்பா
விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்
வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா
அலைவீசும் திருச்செந்தூர்க் கடலைப் போல
ஆயிரநூ றாயிரமாய் அன்பர் கூடி
மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம்
மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்
கலைவாழும் பழநிமலை ஆண்டி யப்பா
கதிகாட்டி மனங்களிலே கனிவா யப்பா
சீர்தோறும் சிறந்துவரும் தமிழுக் குள்ளே
தினந்தோறும் குளிப்பதனால் சிவந்த வேலா
கார்தோய வளர்ந்துவரும் மலையின் மேலே
கணந்தோறும் வாழ்வதனாற் பொழியும் கையா
நீருயர மலர்கின்ற பூவைப் போல
நெஞ்சுயர மலர்பவனே உன்னைக் காண
ஊர்கூடி வருகின்றோம் பழநி யப்பா
உளந்தேடிக் கால்பாவி ஒளிர்வா யப்பா.
வழிநெடுகப் பலகாரம் தந்து நிற்பார்
வாயார உன்புகழே பாடி நிற்பார்
ஒளிபெறவே உன்னருளைப் போலி னிக்கும்
உண்ணீரும் இளநீரும் உதவி நிற்பார்
களிபெருகி உன்னடியார் செல்லும் காட்சி
கலிதீர்க்கும் உன்னினிய காட்சி என்பார்
வழிநடப்பார் எல்லாரும் பழநி யப்பா
வழிநடக்க மனந்தோறும் மலர்வா யப்பா.
முருகப்பா! வேலப்பா! பழநி யப்பா!
முத்தமிழால் வைதாலும் உவந்து நெஞ்சம்
உருகப்பா! கந்தப்பா! உயிருக் குள்ளே
உயிரப்பா எனவிளங்கும் ஒப்பில் அப்பா!
பருகப்பா! தருகின்ற பாட்டை யெல்லாம்
பண்புடையோர் சிறந்தோங்கப் பார்ப்பா யப்பா!
திருகப்பா! வேரோடு வினையை என்று
சேவிப்பார் சிந்தையிலே திகழ்வா யப்பா.
கதிர்காட்டும் பச்சைநிறக் கழனி எல்லாம்
கண்காட்டும் உன்மயிலின் தோகை காட்டும்
முதிர்காட்டும் தன்குலையால் வளைந்த தென்னை
முன்வணங்கும் உன்னடியார் முதிர்ச்சி காட்டும்
புதிர்காட்டும் உலகத்தில் அன்பே ஆண்டால்
புழுவுடலும் உன்னருளின் புனிதம் காட்டும்
குதிகாட்டும் நீரருவி மலையில் வாழ்வாய்
குறைநீக்கும் உன்னருளிற் குளிக்கச் செய்வாய்.
பாலான வெண்ணீற்றில் படியும் போது
பழமான உன்மேனி பளிங்காய்த் தோன்றும்
மேலான சந்தனத்தில் விளங்கும் போது
விரிகதிரோன் முகஞ்சிவந்து வெட்கிப் போவான்
காலான தாமரையில் பாலும் தேனும்
கரைபுரண்டு நிற்கையிலே கடலுந் தோற்கும்
வேலாஉன் பேரழகைப் பழநிக் குன்றில்
விரைந்துண்ண வருகின்றோம் விருந்து வைப்பாய்.
தாய்பிரிந்த குழந்தைக்குத் தாயே ஆவாய்!
தாளிழந்த முடவனுக்குக் காலே ஆவாய்!
வாயிழந்த ஊமைக்கு வாயே ஆவாய்!
வகையிழந்த ஏழைகளின் வங்கி ஆவாய்!
நோயுற்ற உடலுக்கு மருந்தே ஆவாய்!
நொந்தழுதால் முந்திவரும் கந்த வேளே!
சேய்காண வருகின்ற தாயைப் போலத்
திசைநோக்கி வருகின்றோம் தினமும் காப்பாய்.
வடிவேலா என்னாத வாயும் வாயோ?
மயிலேறும் உனைக்காணாக் கண்ணும் கண்ணோ?
படியேறி வாராத காலும் காலோ?
பண்பாளன் பெயர்கேளாக் காதும் காதோ?
அடிமலரை வணங்காத கையும் கையோ?
அருள்மணத்தை முகராத மூக்கும் மூக்கோ?
படிமீது மானிடராய் வாய்த்த தோற்றம்
பயன்பெறவே அருள்கொடுப்பாய் பழநி யப்பா.
வேலெடுத்த உன்னருமைப் பெயர் எடுத்தால்
வினையெடுத்த இப்பிறவி நடை எடுக்கும்
பாலெடுத்த உன்முகத்தைப் பார்த்தி ருந்தால்
பசியெடுத்த அன்பருயிர் பண்பெ டுக்கும்
வாலெடுத்த உன்மயிலின் வனப்பைக் கண்டால்
வளமெடுத்து வாழ்க்கையிலே வண்மை ஓங்கும்
காலெடுத்தான் திருமகனே பழநி யப்பா
கையெடுத்து வருவோரைக் காப்பா யப்பா.
8 comments:
முருகனருளில் 200 பதிவுகள்!
முருகனருள் அன்பருக்கெல்லாம் வாழ்த்துக்கள்! :)
முருகனுக்கு அரோகரா!
ஆர்வமுடனும் பக்தியுடனும் சிறப்புற தொடரச் செய்த முருகனருள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், வாசித்த, வாசிக்கப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி நவில்வதோடல்லாமல் எல்லாம் வல்ல முருகனருள் நிறைவாய்க் கிடைத்திட எம்பெருமான் முருகனை வணங்கி வேண்டுகிறேன்
முருகனுக்கு அரோகரா!
கந்தவேல் முருகனுக்கு அரோகரா !
முருகனருள் முன்னிற்க இருநூறும் பல நூறாகும்!
முருகனருள் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!
முருகா உன் மனம் அருட்சோலை
என்ற பாடல் இருப்பின் அப்லோடு செய்யவும்
நன்றி
Post a Comment