முருகன்: அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து
200ஆம் பதிவின் பழனித் திருப்புகழைக் கண்டு, இந்தப் பதிவின் பாடலையும், ஒலிச் சுட்டியோடு அனுப்பி வைத்த திரு.பிரகாசம் ஐயா அவர்களுக்கு என் முருக நன்றிகள்!
பல முறை, தானாகவே முன் வந்து, பல திருப்புகழ்ப் பாடல்களின் ஒலிக்குறிப்பை முருகனருள் வலைப்பூவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்...
இந்த வலைப்பூ, அன்பர்களின் மத்தியில் எத்தனை அன்பைப் பெற்றிருக்கு-ன்னு நல்லாவே தெரிய வருது!
அதை நல்ல முறையில் கட்டிக் காத்து,
பொங்கு நீர் புரந்து பாயும் பூம்பொழில் அரங்கமாக,
என்றும் முருக மணம் கமழும் சோலையாக,
அடியார்கள் அவனுக்காக இளைப்பாறும் முருக இடமாக...
இதை நடத்திச் செல்ல வேண்டும் என்றும் முருகனருள் குழுவினைப் பிரார்த்தித்து...இதோ!
கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
இந்தத் திருப்புகழைப் பாடுபவர்: பாண்டிச்சேரி திரு சம்பந்த குருக்கள்
தேவாரப் பண்ணிசை மிகச் சிறப்பாகப் பாடக் கூடியவர்! திருச்செங்கோட்டில் பெண் எடுத்துள்ளார்! சென்ற ஆண்டு சிவராத்திரி தினத்தில் இரவு முழுதும் திருச்செங்கோடு திருமலையில் தேவாரப் இசையை மிகச் சிறப்பாகப் பாடினார்! அப்போது ஒரு நண்பர் கொடுத்த CDயில் இருந்து இவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களைப் பிரதி எடுத்து வைத்து, இது இடப்படுகின்றது!
அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ...... இளையோனாய்
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்
அவனியில் பிறந்து, குழந்தை போல் தவழ்ந்து, பின்பு நடந்து, உளறி, பேச்சு வந்து, இளமை முறுக்கு பெற்று, விதம் விதமாய் வளர்கிறோம்...
சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்
16 சிவகலைகள், ஆகமம், மறையோதுபவர்களை நினைக்காது, சில பெண்கள் பால் ஆசை மிஞ்சிப் போய்....அவர்கள் வேண்டும் வரை சிரித்து பின்பு புறக்கணித்து...அதனால் கவலையால் உழன்று திரிகிறேன்! தேவையா? உன் அடியில் சேர்த்து விடேன்!
மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்
மன மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா
மாணிக்கவாசகருக்கு, விரலை மட்டுமே காட்டி, மவுன உபதேசம் செய்த சம்பு (ஈசன்), பிறையைக் கட்டி வைத்துள்ளான் சடையில்!
தும்பைப் பூ போல் உள்ள வெண்சடையில், அதுவும் வெளீர் என்றே ஒளிர்கிறது!
அந்தச் சிவபெருமான் மனம் மகிழ, அவனை ஒரு பக்கம் இடித்துக் கொண்டு இருக்கிறாய் = அப்பா பிள்ளையாய்!
மலைமகள், எங்கள் உமையன்னையை இன்னொரு புறம் இடித்துக் கொண்டு இருக்கிறாய் = அம்மா பிள்ளையாய்!
இப்படி நடு நின்ற நடுவே! வடிவே! வடி வேலவா!
பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா
பரமபதம் ஆய செந்தில், முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!
பவனி வர ஆசைப்படும் முருகனே! அதற்காகவே மயிலின் மீது திகழ்கிறாயோ?
வேகமாகப் பறக்காது, தாவும், அதனால் மெல்ல பவனி வரலாம் என்று தானோ?
மயில் தாவும் போது, வேண்டுமென்றே காலைத் தரையில் ஊன்றுகிறாயே! அதனால் காலில் உள்ள வீரக் கழல் சல் சல் சல் என்று பழநி மலைப் படிகளின் மீது அதிருகிறதே முருகா! கொஞ்சம் அடங்குடா! இம்புட்டுச் சத்தம் போடாதே! அடியார்கள் நாங்கள் மலைப்படிகளில் நடந்து செல்கிறோம் அல்லவா?
ஹேய் முருகா!
பரமபதம் தான் என் பிறந்தவீடு! ஊருக்கே அங்கு தான் மோட்சம்!
ஆனால் உன்னை நான் கைப்பிடித்தேன்! = என் முருகன் எனவே உகந்தேன்!
செந்திலே என் புகுந்தவீடு!
அதனால் உன் செந்திலே என் பரமபதம்! பரம பதம் ஆய செந்தில்...
ஐயா, பழனி மேல் "அமர்ந்த" பெருமாளே!
பழனிமலை மேல் "நின்று" இருக்கும் உன்னை,
"அமர்ந்த" முருகா என்கிறாரே அருணகிரி! உனக்குப் புரிகிறதா?
7 comments:
அழகான திருப்புகழும், அழகான விளக்கமும். நன்றி கண்ணா. ஆடியோ வேலை செய்யலை :(
oru pakkam appaavaiyum maru pakkam
ammaavaiyum idiththukkondu avan jollyyaa ukkaanthirukkarathaip paaththu sokkipponen!
avan 'amarntha'thu nallathuthan;
'ninra'enru paadiyirunthaal
'ready,steady, go'enru solii vittu odippoyiruppaano?ippo ethukkum gettiya pudichchu vechchikko!
முருகனருள் அன்பர்களுக்கு:
இது அடியேன் பதிவு அல்ல! பிரகாசம் ஐயா அனுப்பி வைத்த பாடலை, draft இல் இருந்து எடுத்து, இப்பதிவாக இட்ட சிபி அண்ணாவுக்கு என் நன்றி.
கவிக்கா - ஒலிச்சுட்டி இப்போது கேட்குதான்னு பாருங்கள்!
அருமையான குரல். மெய்மறக்கச் செய்துவிட்டது.
நன்றி KRS
(((பழனிமலை மேல் "நின்று" இருக்கும் உன்னை,
"அமர்ந்த" முருகா என்கிறாரே அருணகிரி! உனக்குப் புரிகிறதா?)))
ஒருவேளை பக்தர்களுக்கு நின்றுகொண்டே அருள்புரிந்து கால் வலிப்பதால் ஓய்வு நேரத்தில் அமர்ந்திருக்கும்போது அருணகிரியார் பார்த்திருப்பாரோ?
//முருகனருள் அன்பர்களுக்கு:
இது அடியேன் பதிவு அல்ல!//
'முருக நன்றிகள்' என்கிற பிரயோகம் பார்த்து நீங்கதான்னு தோணுச்சு :)
//கவிக்கா - ஒலிச்சுட்டி இப்போது கேட்குதான்னு பாருங்கள்!//
கேட்க முடிந்தது கண்ணா. மிக அருமை. மிக்க நன்றி.
சொக்க வைக்கிறது திருப்புகழ் வர்ணனை. நன்றிகள் பல.
Post a Comment