Tuesday, November 12, 2013

செய்ய நிறத்தோனே! சேவற் கொடியோனே!


 
செய்ய நிறத்தோனே
சேவற் கொடியோனே
துய்ய உள்ளத்தில்
மெய்யொளியாய் ஒளிர்வோனே!

செல்லக் குமரனே
செந்தில் வடிவேலவனே
வெல்லத் தமிழாலே
வேந்தனுன்னைப் போற்றுகின்றேன்!

பால முருகனே
பன்னிருகை வேலவனே
பரமசிவன் புத்திரனே
பதம் பணிந்து போற்றுகின்றேன்!

பையத் தமிழ் பாடி
பார்வதியின் மைந்தனுன்னை
மையிட்ட மடமாதர்
மணாளனுன்னைப் போற்றுகின்றேன்!

நீல மயிலேறி
நித்தம் வலம் வருகின்ற
கோல எழிலோனே
கொஞ்சு வேளே போற்றுகின்றேன்!

மலர்க் கையில் வேலெடுத்து
மதிகெட்ட சூரபன்மன்
ஆணவத்தைப் பிளந்திட்ட
ஆண்டவனே போற்றுகின்றேன்!

அடியார்கள் வல்வினையை
அடியோடு களைந்து விடும்
ஆனைமுகன் சோதரனே
ஆறுமுகா போற்றுகின்றேன்!

செந்நெருப்பில் தோன்றிடினும்
தண்ணிலவாய்க் குளிர்வோனே
கண்மணியே கதிர்வேலா
கசிந்துருகிப் போற்றுகின்றேன்!

அமரரிடர் தீர்த்திடவே
சமர் புரிந்த ஷண்முகனே
புகல் தருவாய் புண்ணியனே
பொன்னடிகள் போற்றுகின்றேன்!

சதுர் முகனைச் சிறையிலிட்ட
சேந்தனே சேயோனே
தகப்பன் சுவாமியே
தண்டனிட்டுப் போற்றுகின்றேன்!

ஆறுபடை வீடு கொண்ட
அழகு மிகும் அற்புதமே
அம்பிகையின் அரும் புதல்வா
அன்புடனே போற்றுகின்றேன்!

முத்தமிழின் காவலனே
முந்தி வந்து அருள்பவனே
சித்தத்துள் உன்னை வைத்து
நித்தம் நித்தம் போற்றுகின்றேன்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE.jpg

Thursday, November 07, 2013

திருச்செந்தூரின் கடலோரத்தில்!

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
(ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)

ஆனா, அதுக்கு முன்னாடி...
சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?


முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?




அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.

கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க,
வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!

தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை!
எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.

சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான்.
எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது.
முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.

மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார்.
பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து,
தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!

தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை!
தேவ இளவரசன் "ஜெயந்தனைத்" தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கு ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் படைபலத்தைச் சொல்கிறான்;

பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்!
ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தால் தூது முறிகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார்.
ஈழத்தில், 
ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.

பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக,
கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.

கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது.
சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!

முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, அசுர குலமே மூழ்கிப் போகிறது;
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.

இப்படிச் சூரனை அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க,
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!

ஆக, "கதைப்படி", சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் தான்! 
ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? 
யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!

திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!

இது ஈழத்துக்கும், முருகனுக்குமே உள்ள தொடர்பு....



இன்றைய சட்டிப் பாடல்...
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!

படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!



இந்தச் சட்டி விரதம் துதிப்போர்க்கு....
வல்வினை போம்! துன்பம் போம்!

நம்பியவர் வந்தால்,
நெஞ்சுருகி நின்றால்
...

மனம் கனிந்தருள் வேல் முருகா!


வெற்றி வடிவேலனே! சக்தி உமை பாலனே!
வீரம் விளைத்த குகனே!
உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்! அருள்வாய்!

மனம் கனிந்தருள் வேல் முருகா! புள்ளி
மயிலேறும் மால் மருகா! முருகா!
(மனம்)

குறத்தி மணாளா! குணசீலா! ஞான
குருபரனே! செந்தில் வடிவேலா!
செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!

வேதனே - ஞான போதனே - சுவாமி நாதனே - எமது வேதனை தீர
(மனம்)

தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர - மாகி நின்றாயடா!
வேலெடுத்து விளை - யாடி மாமலையைத் - தூளடித்த முருகா
சூரபத்மன் இரு - கூறு பட்டொழிய - போர் முடித்த குமரா!

படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
குரல்: எஸ். வரலட்சுமி
வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

Wednesday, November 06, 2013

மலைகளில் சிறந்த மலை மருதமலை!


முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி 
முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை! திருவண்ணாமலை!
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் 
முருகனைக் கண்ட இடம் மருதமலை!
(நித்தம்)

மலைகளில் சிறந்த மலை மருதமலை! சிவன்
மகன் வந்து விளையாடும் அழகு மலை!
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை! பிள்ளை
அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!
(மலைகளில்)

அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை! பெற்ற
அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை!
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை! இனி
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!
(மலைகளில்)

தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு - இந்தத் தேவனுக்கு - குமார தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்!
வளமும் நலமும் இவன் பெறணும்!
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்!

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

பொங்கும் வளமும் பல நலமும் அனைவரும் பெற மருதமலையான் துணை!

Tuesday, November 05, 2013

பழனி என்னும் ஊரிலே...

நண்பர் ஒருவரின் மடிக்கணினியில் இருந்து நிறைய பாடல்களை என்னுடைய பென் டிரைவிற்குச் சில வாரங்களுக்கு முன் மாற்றிக்கொண்டு வந்தேன்.
நேற்று இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. கையில் இருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு முழுதும் கேட்டபிறகு வேலையைத் தொடர்ந்தேன்.
சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு அருமையான மெலடி.

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர

தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர

சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர

செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர

குமரன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே

பரங்குன்றில் மலையோரம்
சேவற்கொடி ஆடிவர

குன்றக்குடியில் எந்நாளும்
வண்ணமயிலும் ஆடிவர

மயிலத்தின் மலைமேலே
மணியோசை முழங்கிவர

விராலிமலை மேலிருந்து
வீரவேலும் வெற்றிபெற

கந்தன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

அறுபடை வீடுகளும் ஒரே பாடலில் வருகின்றன. மேலும் குன்றக்குடி, மயிலம், விராலிமலைத் தலங்களும்.

பாடல் குறித்து மேலதிகத் தகவல்கள் நான் தேடியவரை இணையத்தில் கிடைக்கவில்லை. யாரேனும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன்.



Monday, October 28, 2013

நடிகர் நாகையா பாடும்: திருமுருகா ஒருதரம்..

நடிகர் நாகையா - நம்ம எல்லாருக்குமே தெரியும்!
சென்ற காலத்து நல்ல குணச்சித்திர நடிகர்...

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
-ன்னு உருக்கமாகப் பாடும் காட்சியில், அவர் நடிப்பைத் தான் பாத்துருக்கோமே?

*கண்ணன் பாட்டில் அவர் நடிச்சாரு; பாடவில்லை!
*கந்தன் பாட்டில் நடிக்கிறாரு; அவரே பாடவும் பாடுறாரு!

வியப்பா இருக்கா?
எதிர்பாராதது -ன்னு ஒரு படம்; பாட்டும் எதிர்பாராதது தான்:)

சிவாஜி-பத்மினி காதல்!
சிவாஜி வெளிநாட்டுப் படிப்புக்குச் சென்றிருக்கும் வேளையிலே... ஏழை வீட்டுப் பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது:(

மணமகன் யாரு? = சிவாஜியின் அப்பா!
என்ன.............. எதிர்பாராதது தானே?

(இன்றும் சினிமாவில், இரு மனம் ஒத்த காதலர்கள்..
ஆனா, தகப்பன் என்னைக்கோ பண்ண தப்பால், "அண்ணா-தங்கை" முறை-ன்னு பின்னாடி தெரிய வருமாம்;
பிரிஞ்சிடணும் = ஹிந்து தர்ம சாஸ்திரம்!
அடேய், "தர்மத்தை", ஆட்டின அப்பனுக்குச் சொல்லு, மனங் குடுத்த காதலர்க்கு அல்ல)

காதலி பத்மினியா? = "அம்மா" பத்மினியா?
சிவாஜியால் மறக்க முடியலையே! என்ன தான் பண்ணுவாரு?

கற்பனையான வாழ்வு; கற்பனையான காதல்!
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?????
= அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா!



திருமுருகா என்று
ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம்
பெருகுது கண்ணீர்

சிறுமதியால் உள்ளம்
இருண்டிடும் வேளையில்
அருளொளி வீசும்
ஆண்டவன் நீயே
(திருமுருகா என்று..)

அப்பனும் பிள்ளையும்,  நீதான் ஐயா
அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?
கருணா நிதியே கதிர் வடிவேலா
(திருமுருகா என்று..)

திருமுருகா, திருமுருகா, திருமுருகா



படம்: எதிர்பாராதது
வரி: ?
குரல்: சித்தூர் V. நாகையா
இசை: CN பாண்டுரங்கன்

(இதே படத்தில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, மிக அழகான Melody பாடல், கேட்டுப் பாருங்கள்..)

தியாகய்யா, பக்த ராமதாசு -ன்னு ஆரம்ப காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் = நாகையா
வயதான பின்..
நாகையா நடிக்காத பெரும் படங்களே இல்லை எனலாம்! அதுவும் நடிகர் திலகம் சிவாஜியோடு!

*சம்பூர்ண ராமாயணத்தில் தசரதன் ஆகட்டும் - சிவாஜி பரதன்
*தில்லானா மோகனாம்பாளில் குரு - சிவாஜி சிக்கல் சண்முகசுந்தரம்

தெனாலி ராமன், பாவ மன்னிப்பு,
ஆலய மணி, பச்சை விளக்கு...

தியாகய்யர், பக்த ராமதாசு போன்ற படங்களில் தானே இசையமைத்து, பாடியும் இருக்காரு நாகையா!

Legends எனப்படும் விழுமம்!
அவர்களை அறிந்து கொள்ள, நமக்கு வயாசாகிப் போகத் தேவையில்லை; அதுவும் Internet யுகத்தில்!
வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன?

இசைஞானி இளையராஜா, ரஹ்மான் புகழ் பாடும் வேளையிலே...
தமிழ்ச் சினிமாவின் இசை மேதைகள் = ஜி.ராமநாதன், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று விழுமங்களையும் அறிந்து கொள்வோம்!

Legends are Legends!

Friday, October 25, 2013

பார்த்திபன் கனவு: வண்ண மயிலே, வண்ண மயிலே!

பார்த்திபன் கனவு -ன்னு ஒரு நாவல்!
அமரர் கல்கி எழுதி, பின்பு திரைப்படமா எடுத்தாங்க;
"தமிழ் - தெலுங்கு - சிங்களம்" -ன்னு மும் மொழிகளில் வந்த முதல் படம் (1960);
மாமல்லபுரம் சிற்பங்கள் அமைக்கும் காட்சியெல்லாம் காணலாம்!
Ponniyin Selvan Fame ஓவியர். மணியம் தான், படத்தின் கலை இயக்குநரும் கூட!

படத்தில் அப்பர் பெருமான் கூட வருவாரு!
பிள்ளைக் கறி தந்த பரஞ்சோதி/ சிறுத்தொண்டர், தான் அவ்வாறு செய்தது "தவறு" -ன்னு ஒப்புக் கொள்ளும் படமும் கூட:)


சிவகாமியின் சபதம் -நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தான்; ஆனா கதைக்களம் வேற!
கரிகால் பெருவளத்தானின் சோழ மரபில் வந்த பார்த்திபன்;

பல்லவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, "தனிச்சோழம்" காணவேண்டும் என்பதே அந்தப் பார்த்திபனின் கனவு;

ஆனால் போதுமான படைபலம் இல்லை;
பின்னாளில்.. அவன் மகன் விக்கிரமன், பல்லவனின் மகளையே காதலித்துக் கைப்பிடித்து, அந்தக் கனவையும் நனவாக்குகிறான்!

சோழன் கனவு நனவாகப், பல்லவனே (நரசிம்ம வர்ம பல்லவனே) பலப் பல உதவிகள் செய்கிறான்:)
இது போன்ற "வரலாற்றுத் திரிபு"களுக்கு, கல்கியைப் பிலுபிலு என்று பின்னாளில் பிடிச்சிக்கிட்டாங்க!:)


ஜெமினி, கணேசன் வைஜயந்திமாலா,
ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன்,
(ஆரம்ப கால) சரோஜா தேவி, ராகினி, குமாரி கமலா
-ன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே உண்டு!

பாடகர்களும் = நட்சத்திரப் பாடகர்களே;
பி.சுசீலா, பி.லீலா இவர்களுடன் சேர்ந்து கொண்டது = பிரபல மேடைப் பாடகி, ML வசந்தகுமாரி!

ஆயனாரின் மகள் சிவகாமியாக = குமாரி கமலா ஆட..
அதற்கு MLV பாடும் பாட்டே = இன்றைய பாடல்!

வள்ளியின் முருகக் கனவை, 
ஆயன் மகள் ஆடிக் காட்டுகிறார்! பாருங்கள்!



அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே, வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத் துன்பத்தைக்
கொத்தி எடுத்திடவே, உதடு அவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?
கள்ளச் சிரிப்பாலே கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே, அவர் வரக் காணேனே
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

குரல்: M.L. வசந்தகுமாரி
வரி: விந்தன்
இசை: வேதா
படம்: பார்த்திபன் கனவு

முருகனின் செவ்வாயில் இட வேண்டிய பதிவு;
ஆனா மருத்துவமனையில் இருந்தேன்;
நேற்றே வீடு வந்து சேர்ந்தேன்; அதான் வெள்ளியில் வருது; தாமதத்துக்கு மன்னிக்க:)
தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

Tuesday, October 15, 2013

மதுரை சோமு: துணைவன்! வழித் துணைவன்!

மதுரை சோமு -ன்னாலே நினைவுக்கு வரும் பாடல்:
தெய்வம் படத்தில் - மருதமலை மாமணியே முருகய்யா தான்!


அந்தப் பாட்டின் வரிகளும், வேகமும்,
கனத்த குரலின் உருக்கமும், அப்படியே ஆளைக் கட்டிப் போடும்!

ஆனால் அதே மதுரை சோமு, தேவர் பிலிம்ஸின், சஷ்டி விரதம் என்கிற இன்னொரு படத்திலும் பாடி இருக்காரு! அதான் இன்றைய பாடல்!


அடிப்படையில் மதுரை. சோமசுந்தரம் (எ) சோமு = கர்நாடக இசைக் கலைஞர்;
வேறு சில முருகன் பாடல்களும் பிரபலம் தான்!
ஆனால் அவை கச்சேரிப் பாடல்கள்; சினிமாப் பாடல்கள் அல்ல! - என்ன கவி பாடினாலும், நினைக்காத நேரமில்லை முருகா - போன்ற பாடல்கள்!

வாங்க, நாம சினிமாப் பாட்டுக்குப் போவோம்!
சிவகுமார் - பூர்ணிமா ஜெயராம் நடித்த படம்;


இந்தப் படத்தைப் பார்த்தால், திருச்செந்தூர் ஆலயத்தின் பல உள் நிகழ்வுகளைத் தெரிஞ்சிக்கிடலாம்;
அப்படிச் செந்தூர் அலயத்துக்குள்ளேயே சுத்திச் சுத்தி வரும் காட்சிகள்!

இந்தப் பாடலில், திருச்செந்தூர்க் கோயிலின் குடமுழுக்கு விழாவையும் காட்டுவார்கள்; கண்டு களியுங்கள்!
பாடலின் காணொளிச் சுட்டி இதோ:
http://www.youtube.com/watch?v=C7ByT4Oa3qc (cannot be embedded)

கேட்டுக் கொண்டே வரிகளைத் தட்டச்சினேன்; சில இடங்களில் சிற்சில சொற்கள் புரியவில்லை; கேட்போர் திருத்தி உதவவும்; நன்றி!


(நினைத்திருந்தேன் - நானும் உன்னை நினைத்திருந்தேன் 
கும்பிட்டால் காத்தருளும் குமரனுக்குக் குடமுழுக்கு!
ஈராறு வருடம் அதில் ஓர்முறை தான் பாருங்கள்
சீராரும் செந்தூரின் சந்நிதிக்கே வாருங்கள்)

துணைவன், வழித் துணைவன்,
வாழ்க்கைத் துணைவன்!

திக்கற்ற பேர்க்கெல்லாம் தக்கநலம் புரியும்
அழகன் முருகன் - எழில் 
குன்று தோறும் நின்றிருக்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
தாய்க்குத் தாயான தெய்வம் அவன்
தந்தைக்குக் குருவான பிள்ளை அவன்
வாய்க்கு உணவாக, விழிக்கு ஒளியாக
நோய்க்கு மருந்தாக, நல்லருள் விருந்தாக..

உதவும் தலைவன் - அன்பர்க்கு என்றும் பூத்து 
கண்ணில் நிற்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
மந்திர நீர்க்குடம் மண்டபம் அங்கு விளங்க
மங்கல வாத்தியம் தத்தள ஓசைகள் முழங்க
செந்தூர் அழகனின் சந்நிதி பூஜைகள் தொடங்க
கச்சிக் குமாரனை வக்ர கணங்கள் வணங்க

தகதக தகவென திருமுடி ஜொலிக்க
கணகண கணவென மணிகளும் ஒலிக்க
பளபள பளவென ஒளிவிளக்கு எரிய
பலப்பல வினைகளும் பொடிபட அழிய

தொழுதால் அழுதால் நிலைத்தல் தருவானே
மலைமேல் இருக்கும் மயில்மேல் வருவானே

துணைவன்
வள்ளித் துணைவன்
துணைவன், வழித் துணைவன்
வாழ்க்கைத் துணைவன்!
------------------------

குரல்: மதுரை சோமு
வரி: வாலி
இசை: சங்கர் கணேஷ்
ப்டம்: சஷ்டி விரதம்


திருச்செந்தூர் உற்சவர் - சண்முகரின் அணுக்கத் தோற்றம்
***
என்னவன் திருமுகம்!
என் துணைவா -  வழித் துணைவா 
என் ஐயா - எனக்கொரு துணை வா! 
என் வாழ்க்கைத் துணைவா!!

Wednesday, October 09, 2013

பி.சுசீலா: முருக நம்பி!

"ஓடும் நதி" -ன்னு ஒரு படம்; MSV Music;
ரவிச்சந்திரன் - சரோஜா தேவி நடிச்சது! அதிலிருந்து ஒரு முருகன் பாட்டு இந்தச் செவ்வாய்க்கிழமை:)

வயலூர் = மிக அற்புதமான முருகத் தலம்!
கோயில் சிறுசு தான்; ஆனா சூழ் வயல்கள் பெருசு!

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளும் நாயக - "வயலூரா" -ன்னு திருப்புகழ்!
அந்தத் "திருப்புகழ்" -ன்னு அமைப்பு உருவானதே இந்த வயலூரில் தான்!


பொதுவா, "நம்பி" (எ) சொல், வைணவத்தில் அதிகம்! (சைவத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உண்டு)
திரு-மாலவன் ஆசை மகளாம் வள்ளி = அவளைப் புணர்ந்த அவனும் = "நம்பி" ஆகி விட்டானோ?:))

பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்:
Yourlisten.com - odum nathi - psusheela



(முருகா அறிவோம் முருகா
வருவோம் முருகா வயலூர் 
முருகா வயலூர் முருகா)

குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி - தன்னை
என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி

கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது?

நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?
நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?

சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக் கைகள் "அஞ்சல்" என்று காட்டு!

நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா


படம்: ஓடும் நதி
குரல்: பி.சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: MSV

Tuesday, October 01, 2013

சீர்காழி: காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது!

இந்தச் செவ்வாய்: ஒரு அபூர்வமான சீர்காழி பாடல்! அவருக்கே உரிய கணீர் என்ற குரலில்!

காதலில் மட்டும்: "காலையும் நீயே, மாலையும் நீயே" அல்ல!
முருகனிலும் உண்டு: "காலையும் நீயே, மாலையும் நீயே":))


காலை, மாலை -ன்னு..
ஒவ்வொரு பொழுதாக, முருகனை அடுக்கும் பாட்டைக் கேளுங்க!



காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!
(காலை இளம் கதிரில்)



கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!
(காலை இளம் கதிரில்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது - அந்தக் 
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!
(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது - சிவ 
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!
(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
"வெற்றி வேல், சக்தி வேலா" என்றே சேவல் கூவுது
"சக்தி வேல் சக்தி வேல்" என்றே சேவல் கூவுது
வினை ஓடுது! வடி வேல் அது,  துணையாகுது!!
(காலை இளம் கதிரில்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது 
குருநாதனே முருகா ...
(காலை இளம் கதிரில்)

குரல்: சீர்காழி
இசை: ?
வரி: ?
Album Song

Tuesday, September 24, 2013

இளையராஜா செய்து வைக்கும்: "வள்ளித் திருமணம்"!

சென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) "six-o-six"-ன்னு சொல்லியிருந்தேன்!

ஒடனே.. நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,
மூச்சடக்கி, முத்துக் குளித்து,
6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)

So.. இளையராஜா-முருகன் = 9 songs!
பதிவின் இறுதியில், ஒரு பட்டியலாய் இட்டு வைக்கிறேன்! போதுமாய்யா?:)

பெண் ஜென்மம் (எ) பழைய படம் பார்க்க நேரிட்டது;
அதன் விளைவு: ஒரே Family சினிமாவில் = இரண்டு முருகன் பாடல்கள்!
*முதற் பாடல் = சென்ற வாரம்
*இரண்டாம் பாடல் = இந்த வாரம்!

இன்றைய செவ்வாய், ஒரு கதா காலட்சேபம்!
= செய்வது: பி.சுசீலா

என்ன வியப்பா இருக்கா?:)
இளையராஜா செய்து வைக்கும் = வள்ளித் திருமணம்!


vaLLi kodi - creeper
வள்ளித் திருமணம் = சங்கத் தமிழில் ஊறி விட்ட ஒன்னு!
கொடிநிலை கந்தழி வள்ளி -ன்னு தொல்காப்பியம்!

கந்து (எ) நடுகல்லில் படர்ந்த வள்ளிக் கொடி
= தமிழ்த் தொன்மத்தின் "யாரோ"
= குடி காத்த முன்னோர்கள்! ஆணும்-பெண்ணுமாய்!

விநாயகர், நாரதர் எல்லாம் பின்னாள் சம்ஸ்கிருதக் கலப்பு;
இந்தக் கலப்பெல்லாம் இல்லாமலேயே, வள்ளித் திருமணம் = உள்ளம் உருக்குவது!

வள்ளி:
= முல்லை நில நடுகல், திருமாலின் மகள்!
= குறிஞ்சி நில முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!

மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை!

இப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக...
பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்...
சில சமயம் வீரத் தமிழச்சியாய், விரட்டவும் விரட்டினாள்! :)


* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* இது கைக்கிளையா? one-sided? = தெரியாது...
* முருகன் வருவானா? = தெரியாது...
= இருப்பினும், "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

காடு - மேடு - குகைகள் தோறும்,
கால் தேயத் தேய,
மனமும் தேயத் தேய..

அதனால் தான் முருகன், "தேய்ந்த போன வள்ளி" - அவள் பாதத்தை இன்றும் பிடித்து விடுகிறான்!
என்னாது? பொம்பளை காலை, ஆம்பிளை, சதா பிடிச்சி விடுவதா?

ஆமாம்!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
-ன்னு அருணகிரி மட்டுமே, இயைந்து பாடுவாரு! மதப் பிடிப்புள்ள வேறு யாரும், முருகன், அவ காலைத் தொட்டான் -ன்னு பாட மாட்டாங்க!

காதல் பாதங்களுக்கு, முருகன் செய்யும், "பாதுகா பட்டாபிஷேகம்"!
பாதம் வருடிய மணவாளா! 
பாதம் வருடிய மணவாளா!

வள்ளியின் காதல் = "கைக்கிளை" -ன்னு சொல்ல மனசு வருமா?
கைக்கிளை = Not Just one-sided Love!
முல்லை/ குறிஞ்சி அகத் திணைகளுக்கும் = முற் சொல்லப்படுவது கைக்கிளையே! = ஏன்?
Try reading tholkaapiyar's heart & sangam landscape = here

இதுவே வள்ளித் திருமணம்! அவன் வருவானா?-ன்னு கூட அறியாது,
* அவள் = அவனே அவனே!
* அவனுக்கு = அவளே அவளே!



பொதுவா, வள்ளித் திருமணத்தைத் தொடாத, சொற்பொழிவாளர்களே இல்லை! (சம்ஸ்கிருதம் கலந்து தொட்டாலும்)
வாரியார் முதற்கொண்டு..., புலவர் கீரன், தேச மங்கையர்க்கரசி, நாகை முகுந்தன் -ன்னு பலரும் தொடும் Topic!

அதைச் சுசீலாம்மா தொட்டால்?
பாட்டுக்கு அரசி = கதா காலட்சேபத்துக்கும் அரசி ஆகிறார்:))

முருகன் பாமாலை (எ) Album - அதில், சுசீலாம்மா, முருகன் வரலாற்றைப் பாட்டாத் தான் பாடுவாங்க! ஆனா, கதா காலட்சேபமாக???
= வாரியார் போல் செய்து காட்டும் வாய்ப்பு?
= இளையராஜா உருவத்தில் வந்தது!

கீழே, நீங்களே கேட்டு மகிழுங்கள்! = ராஜாவின் "காலட்சேப" இசையை;
Subtle Veenai & Violin - ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா, ஏய்ச்சுப் புட்டேனே!:)))



வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள் - அந்தப்
புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்!

(நம்பிராசன் திருமகளான வள்ளியின் பேரழகை, நாரத மாமுனி வந்து, முருகனிடம் சென்று...)

கண்டேன், கனியொன்று கண்டேன்
வடிவேலனே, சிவபாலனே,
உன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம்..
கண்டேன், கனியொன்று கண்டேன்

அழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்!
கண்டேன், கனியொன்று கண்டேன்

(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)

எந்த மான்? தேடி வந்த மான்?
(- என்று வள்ளி கேட்க...)
மேயாத மான் - புள்ளி
மேவாத மான்

பாயும் நடையழகும், பின்னல் நடையழகும்
கண் கவரும் முகமும் இதழும் - பொன்
செங் கமலம் எனவே திகழும் - தனில்
அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...

(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)

மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா - சரி தான் போடா - உன்
கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா? - அட
மானைத் தேடி வந்த வேடா!

(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)

ஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்
பாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே!
ஆயல் ஓட்டும் பெண்ணே! - பெண்ணே! பெண்ணே!

(வள்ளி என்ன இந்தக் காலத்து Modern Girlஆ,
சரியென்று உடனே சொல்ல? சாரியென்று மறுத்து விட்டாள்;
வாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்!
வள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)

விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி
(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி!

(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா  என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)

ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா
ஏய்ச்சுப் புட்டேனே!

(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..
அவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,
வள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;
மனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்!)

வள்ளியம்மை நாதனுக்கும் 
புள்ளி மயில் வேலனுக்கும்
மங்களம், சுப மங்களம்!
மங்களம், சுப மங்களம்!


(பாட்டைக் கேட்டுக் கொண்டே தட்டச்சியது;
பிழைகள் இருப்பின், தயங்காது சுட்டிக் காட்டவும்; திருத்தி வைக்கிறேன்- நன்றி)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

*கதா காலட்சேப மெட்டில் = இளையராஜா இசை
*கதா காலட்சேப மெட்டில் = சுசீலாம்மா பாடல்
= இது அபூர்வம்!

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela



சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:

1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம்மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது (Bhairavi Ragam)

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

4. தெய்வ வாக்கு படத்தில் - வள்ளி வள்ளி என வந்தான், வடிவேலன் தான் - இளையராஜாவே பாடியது, ஜானகியுடன்

5. கும்பக்கரை தங்கய்யா படத்தில் - என்னை ஒருவன் பாடச் சொன்னான் - இளையராஜாவே பாடியது (kalyani ragam)
----------

6. ஊமை உள்ளங்கள் படத்தில் - மனதினில் புதிய அருவி (வேலனின் தோளில் வேடனின் செல்வி) - சசிரேகா பாடியது (திருத்தணி, பரங்குன்றம் எல்லாம் வரும்)

7. புயல் பாடும் பாட்டு படத்தில் - வேல் முருகனுக்கு மொட்டை ஒன்னு போடப் போறோம் டோய் - மலேசியா வாசுதேவன் பாடியது (Mohana Ragam)

8. பெண் ஜென்மம் படத்தில் - செல்லப் பிள்ளை சரவணன் - யேசுதாஸ்/ பி. சுசீலா பாடியது (Maand Ragam) 

9. அதே பெண் ஜென்மம் படத்தில் - வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள் - பி.சுசீலா பாடியது (கதா காலட்சேபமாக)

= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே!

Tuesday, September 17, 2013

"இளையராஜ முருகன்": செல்லப் பிள்ளை சரவணன்!

பொதுவா...
முருகனைப் பற்றிய இளையராஜா பாடல்கள் மிகவும் குறைவு (சினிமாவில்)

தனிப்பட்ட Album-களில், இசைஞானி அவர்கள், சில பல பாடி/ இசையமைத்து இருக்கலாம்!
(கீதாஞ்சலி Album - முருகனை நினை மனமே)

ஆனால் சினிமாவில்?


1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது

2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது

3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது

வள்ளி வள்ளி என வந்தான் என்ற "பொதுவான" பாட்டும் உண்டு!
But, இவ்ளோ தான் "ராஜா-முருகன்" கூட்டணியா?:(


அல்ல!
பெண் ஜென்மம்!

அண்மையில் ஒரு தேடலில், அபூர்வமான ராஜா பாடல் ஒன்னு கிடைச்சுது = ராஜா & சுசீலாம்மா Solo
நீண்ட நாள் கழிச்சிக் கேக்குறேன்; மிக்க இனிமை!

ஒரு கோயிலின் இரு தீபங்கள், இரு வேறு திசை பார்ப்பது என்ன?
ஒரு பாடல் தான் நாம் பாடினோம்; இறு வேறு இசை கேட்பதென்ன?

This song is very close to my feelings!
ஆனா, அப்படியே நூல் பிடிச்சிப் போனாக்கா.....
Wow! அதே படத்தில் = 2 முருகன் பாடல்கள்!
Dei Loosu Muruga, two more Raja Songs for u da!:)

Someone lucky to have u, my honey:) .. And you are lucky to have Raja Songs = 6 in total:))


பெண் ஜென்மம் என்ற படம்!
ராஜாவின் அபூர்வங்களில் ஒன்று! ஆனா இந்தப் படம் பேசப்படாமலே போனது ஏனோ?
*"ஓய் மாமா" என்ற ஜானகி பாடலும் உண்டு, with SPB:)
*சுசீலாம்மா பாடலும் உண்டு, with Yesudass

இது ஆரம்ப இளையராஜா! அதனால் MSV வாடை அடித்தாலும் அடிக்கலாம்:)
ஆனா, Tabla & Guitar காட்டிக் கொடுத்துரும்!
பாடலின் சரணம் அழகோ அழகு! = வள்ளி மான் - புள்ளி மான்! 
செம்மான் மகளைத் திருடும் திருடன் என்ற அநுபூதி போலவே வரும்!

ஒரே படத்தில் = 2 முருகன் பாடல்கள், ராஜ இசையில்:
1. செல்லப் பிள்ளை சரவணன் -  Susheelamma & Yesudass
2. வண்ணக் கருங்குழல் வள்ளி - Susheelamma

இரண்டாம் பாட்டில், இளையராஜா சொல்லித் தரச், சுசீலாம்மா, ஒரு கதா காலட்சேபமே பண்ணுறாங்க:)
So different :)) மேயாத மான்! = அதை, அடுத்த வாரம் பார்ப்போம்!
இன்னிக்கி "செல்லப் பிள்ளை சரவணனுக்கு" hai சொல்லுவோமா?:) வாங்க....



செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
கோபத்தில் மன ஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்!!
(செல்ல)

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் - பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்!
கூந்தலில் மலர் சூடியே - அவன்
கூட நான் வர வேண்டுவான்!
மயங்கி நான் மெல்லத் தடை சொல்ல
சினம் கொள்வான்!!

செல்லப் பிள்ளை சரவணன் திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்!
வள்ளியை இன்ப வல்லியை
அள்ளிக் கொண்ட மன்னவன்!
(செல்ல)

மாலையில் ஒரு மல்லிகை - என
மலர்ந்தவள் இந்தக் கன்னிகை!
மன்மதன் கணை ஐவகை - அதில்
ஓர் வகை இவள் புன்னகை!!

இடை துவள
கலை பயில
(செல்ல)

கார்குழல் உந்தன் பஞ்சணை - இரு
கைகளே உந்தன் தலையணை!
வேலவன் கொஞ்சும் புள்ளி மான் - அதன்
வடிவம் தான் இந்த வள்ளி மான்!

அருகில் நான் வந்தேன்..
இதழ்ச் செந்தேன்
இதோ தந்தேன்
(செல்ல)

படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா

ராகம்: மாண்ட்

Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela

Monday, September 09, 2013

குழந்தை முருகன்! ஸ்ரீதேவி முருகன்!

குழந்தை முருகன்-களிலேயே மிக அழகான முருகன் யார்?

* "கந்தன் கருணை" மாஸ்டர் ஸ்ரீதர் = சாட்சாத் சிவபெருமானையே, கொஞ்சம் ஓவராப் பேசுவாரு:)
* ஆனால், "அகத்தியர்" ஸ்ரீ தேவி = அப்பாவி முருகனாய், "இப்ப என்ன நாரதரே செய்யலாம்?" -ன்னு ஏக்கமாய்க் கேட்கும் காட்சி:)


என் முருகன் = ஓவராப் பேசுறவனா?
(அ) அப்பாவி-செல்லம்-புஜ்ஜூ-ஜூஜ்ஜூ வா?:)))
IMHO, Sridevi is very apt for My Murugan Darling!

பெரியவர்களில்: சிவகுமார் முருகன் பொருத்தம்!
கண்ணனுக்கு எப்படி ஒரு NTR அமைஞ்சாரோ, முருகனுக்கு அப்படி ஒரு சிவாஜி அமையவில்லை!
எனினும், இருப்பவர்களில்... சிவகுமார், கொஞ்சம் நன்கு பொருந்தி வருவாரு!

பேசாம, என் அபிமான நடிகை.. சிலுக்கே முருகனா நடிச்சீறலாம்:)
சிலுக்கின் கண்ணும் = முருகன் வேலும் ஒன்னு தான்:))

ஆனால், சிலுக்கை முருகனா நடிக்க, ஆச்சாரக் காராள் விடுவாங்களோ என்னமோ?
சிவகுமாரையே, பல நிபந்தனைகளின் பின், முருகனா நடிக்க விட்டவங்களாச்சே:)

வாங்க, இன்னிக்கி "அப்பாவி முருகன் - ஸ்ரீ தேவி முருகனைப்" பார்ப்போம்:)



மலை நின்ற திருக்குமரா மால்மருகா - தமிழ்க்
கலை தந்த தவச்செல்வா வேல்முருகா!
 (மலை நின்ற)

அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்!
(மலை நின்ற)

தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு!
(மலை நின்ற)

படம்: அகத்தியர்
வரி: உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
குரல்: TR மகாலிங்கம்
இசை: குன்னக்குடி


பாட்டெல்லாம் நல்லாத் தான் இருக்கு! அழகான வீணை இசை..
ஆனா, மயிலு மேல நாரதர் எப்படி ஏறலாம்?

என்னடா மயிலாரே? என்னவன் ஊர்தியில் இன்னொருவன்(ர்) ஏறுவதா?:))


Thursday, September 05, 2013

Pop Music Murugan!

தமிழ் பாப் (Pop) இசைச் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்ற = சிலோன் மனோகர்;
AE Manoharan என்பதே முழுப் பெயர்;


சுராங்கனி - சினிமாப் பாடலாக அல்லாமல், Album பாடலாகப் பாடிப் புகழ் பெற்றவர்;
இன்னும் பல துள்ளல் பாடல்கள்:
அன்பு மச்சாளே என் ஆசை மச்சாளே, பிராந்தி பியர் விஸ்கி போடாதே... :))

அந்த ஈழக் கலைஞர், முருகன் மேல் பாடிய பாடல்
= மால் மருகா, எழில் வேல் முருகா! Pop Music Murugan!
அதுவே இன்றைய பாடலாக.. முருகனருள் வலைப்பூவில்!


என்ன திடீர்-ன்னு Pop இசை? -ன்னு பாக்காதீங்க!:)

ஈழத்தின் மிகப் பிரபலமான முருகன் ஆலயம் = நல்லூர்க் கந்தசாமிக் கோயில்! (யாழ்ப்பாணம்)
அங்கு நடைபெறும் 21 நாள் உற்சவம்.. இப்போது!
அதை முன்னிட்டே, இந்த நல்லூர் முருகன் பாடல்!

இந்த நல்லூர் முருகன் முன்பு தான், திலீபன் எனும் ஈழப் போராட்ட இளைஞன், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தான்..
நல்லூர் முருகனை நினைக்கும் போதெல்லாம், திலீபன் நினைவும் எனக்கு வந்து சேரும்!

*கதிர்காமத்தில் பல பண்பாடுகளின் ஒத்திசைவு = பெளத்தம்/ இஸ்லாம்/ முருகன்!
"உருவாய் அருவாய்" என்பதில் அருவம்! காண முடியாது முருகனை! சித்திர முருகன் மட்டுமே!

*நல்லூரில் = தமிழ் மட்டுமே பரவும் முருகனைக் காணலாம்!
இன்று உருவ வழிபாடு வந்து விட்டாலும், ஈழத்தில் வேல் வழிபாடே மிகத் தொன்மையானது!



நல்லூர் 21 நாள் உற்சவப் பதிவுகளுக்கு:
என் இனிய நண்பர், இசைமிகு, கானா பிரபா-வின் தளத்துக்குச் சென்று ரசிக்கவும்;

முன்பு, கதிர்காமத்துக்கு என்று தனிப்பதிவு இட்டது போல்...
பின்பு ஒரு நாள், நல்லூர்க் கந்தசாமிக் கோயிலுக்கும் இடுகிறேன்..

இப்போது, பாடலை மட்டும் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!



Pop Music Murugan:

மால்மருகா - எழில் வேல்முருகா - நீயே!
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே!
முருகா வடிவேலா!
தருவாய் அருள் குமரா!

நல்லூர் நாயகனே - நல்வழி காட்டும் ஐயா!
நம்பிய பேர்களது - துன்பங்களைத் தீரும் ஐயா!
நல்லூர் எம்பதியே!
நம்பிக்கையின் ஒளியே!

கனிமலைக் கந்தவேளே - காப்பது நீ ஐயா!
கதியே நீயென்றால் - பதியே சரணம் ஐயா!
கந்தா கதிர்வேலா!
வருவாய் சிவபாலா!

ஏழுமலை இறையினிலே - எழுந்திடும் குமரேசா!
ஆறுதலைத் தந்திடுவாய் - ஆறுமுகா அழகேசா!
குமரா எழில் முருகா!
குறுகுறு நகை அழகா!

தோகைமயில் ஏறிவரும் - சேவல் கொடியழகா!
பழமுதிர் சோலைகளில் - பவனி வரும் வடிவழகா!
அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!

லண்டன் பாரிஸ் சுவிஸ் - ஜேர்மனி நோர்வே ஆஸி
கனடா வாழ்த் தமிழன் - நாயகனே முருகைய்யா!
உலகாள் தமிழ்த் தலைவா!
உமையாள் திருக் குமரா!

சிவனின் மைந்தன் ஐயா - சிங்கார வேலன் ஐயா!
தகப்பனுக்கு உபதேசம் - செய்த சுவாமி நீ ஐயா!
தவறுகள் பொறுத்திடுவாய்!
தமிழரைக் காத்திடுவாய்!!

அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!

குரல்: சிலோன் மனோகர்
வரி: ?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP