செய்ய நிறத்தோனே! சேவற் கொடியோனே!
செய்ய நிறத்தோனே
சேவற் கொடியோனே
துய்ய உள்ளத்தில்
மெய்யொளியாய் ஒளிர்வோனே!
செல்லக் குமரனே
செந்தில் வடிவேலவனே
வெல்லத் தமிழாலே
வேந்தனுன்னைப் போற்றுகின்றேன்!
பால முருகனே
பன்னிருகை வேலவனே
பரமசிவன் புத்திரனே
பதம் பணிந்து போற்றுகின்றேன்!
பையத் தமிழ் பாடி
பார்வதியின் மைந்தனுன்னை
மையிட்ட மடமாதர்
மணாளனுன்னைப் போற்றுகின்றேன்!
நீல மயிலேறி
நித்தம் வலம் வருகின்ற
கோல எழிலோனே
கொஞ்சு வேளே போற்றுகின்றேன்!
மலர்க் கையில் வேலெடுத்து
மதிகெட்ட சூரபன்மன்
ஆணவத்தைப் பிளந்திட்ட
ஆண்டவனே போற்றுகின்றேன்!
அடியார்கள் வல்வினையை
அடியோடு களைந்து விடும்
ஆனைமுகன் சோதரனே
ஆறுமுகா போற்றுகின்றேன்!
செந்நெருப்பில் தோன்றிடினும்
தண்ணிலவாய்க் குளிர்வோனே
கண்மணியே கதிர்வேலா
கசிந்துருகிப் போற்றுகின்றேன்!
அமரரிடர் தீர்த்திடவே
சமர் புரிந்த ஷண்முகனே
புகல் தருவாய் புண்ணியனே
பொன்னடிகள் போற்றுகின்றேன்!
சதுர் முகனைச் சிறையிலிட்ட
சேந்தனே சேயோனே
தகப்பன் சுவாமியே
தண்டனிட்டுப் போற்றுகின்றேன்!
ஆறுபடை வீடு கொண்ட
அழகு மிகும் அற்புதமே
அம்பிகையின் அரும் புதல்வா
அன்புடனே போற்றுகின்றேன்!
முத்தமிழின் காவலனே
முந்தி வந்து அருள்பவனே
சித்தத்துள் உன்னை வைத்து
நித்தம் நித்தம் போற்றுகின்றேன்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE.jpg
1 comments:
கந்த குரு கவசம் போலவே மெட்டுல வருது-க்கா:)
போற்றுகின்றேன், போற்றுகின்றேன் -ன்னு மீண்டும் மீண்டும் முடிப்பதும் ஒரு அழகு!
கந்த சட்டிக்கு, நீங்கள் இங்கில்லாத குறையை, இன்று தீர்த்து வச்சிட்டீங்க:)
Post a Comment