Thursday, January 20, 2011

201. தைப்பூசம்: பழநி மலை மேல் நின்ற பெருமாளே!

இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!


200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

முருகனருள் - பாடல்கள் வலைப்பூ தோன்றிய நாள் முதலாய், இன்று வரை பல்கிப் பெருகி, ஆதரவளித்த வாசகர்கள், இனி வரப் போகும் வாசகர்கள்
- அனைவருக்கும் இவ்வமயத்தில், முருகனருள் குழுவினராகிய நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்! பல்லாண்டு முருகனருளில் திளைப்போம்!



தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)

"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது! அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!

இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!

எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!


சுப்பையா சார் ஒளிவருடிக் கொடுத்து, SK ஐயா தட்டச்சித் தந்த 200ஆம் பதிவு இங்கே!

இந்த 200ஆம் சிறப்புப் பதிவில், சிறப்பான ஒரு திருப்புகழ்ப் பாட்டை, சி்றப்பான ஒருவரின் குரலில் கேட்போமா?
* தைப்பூசம் என்றாலே அது பழனி தானே! இதுவும் பழனித் திருப்புகழ் தான்!
* தைப்பூசம் என்றாலே காவடிகள் அல்லவா! இதுவும் காவடி மெட்டு தான்!
பாடுபவர் = பித்துக்குளி முருகதாஸ்!
காவடிச் சந்தம் வரவேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் வரிகளை மாற்றியும் போடுகிறார்! :)

திருப்புகழ் வரிகளை இப்படியெல்லாம் மாற்றலாமா என்று ஒரு சிலர் கேட்கக் கூடும்! ஆனால் பித்துக்குளியார் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு!

காவடியைப் பற்றிய கதைகளும், காவடிச் சிந்தின் தோற்றமும் முன்பே பார்த்துள்ளோம்!

என்ன காரணமோ தெரியவில்லை, முருக இயக்கத்தில் இத்தனை செல்வாக்கு பெற்ற காவடி, ஏனோ முருக இலக்கியத்தில் இடம் பெறவில்லை!

நக்கீரர் சங்க காலப் புலவர்! அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை! பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி! ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு திருப்புகழைக் கூடக் காவடிச் சிந்திலே அவர் அமைத்தாரில்லை!

திருமங்கை ஆழ்வார் (8th CE) மட்டும், "வழிநடைச் சிந்து" என்ற பொது மக்கள் இசையை இலக்கியத்தில் கொண்டு வந்தார்! ஆனால் அதில் "காவடி" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை! சந்த ஓசையை மட்டும் "வழிநடைச் சிந்து" என்ற பேரில் பயன்படுத்தினார்!

மிகவும் பின்னாளில், 19th CE-இல் தான், அண்ணாமலை ரெட்டியார், "காவடிச் சிந்து"க்கென்றே பாடல்கள் பல எழுதி, காவடியை இலக்கியத்துக்குள் முழுவதுமாய்க் கொண்டு வந்து சேர்த்தார்! தமிழ்க் காவடிச் சிந்து, தெலுங்கு ரெட்டியாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது!

அதனால் தான் பித்துக்குளியாரும், திருப்புகழ் வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசை மாற்றி....
காவடிச் சிந்திலே தர வேண்டும் என்பதற்காக, பழனித் திருப்புகழை இப்படி மாற்றித் தருகின்றார்!

பித்துக்குளி பாடும் மெட்டு, அப்படியே என்னவனின் தங்க ரதம் அசைந்து வராப் போலவே, அசைந்து அசைந்து வருது! நீங்களே கேட்டு மகிழுங்கள்!



இசைக்காக முன்னே சேர்க்கும் வேறொரு பகுதி....

கருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட, முக்குண விபாக நிலை
கருத அறியா வஞ்சகக் கபடம் மூடி - உடல் வினை தானே

கலகம் இடவே பொங்கு, குப்பை மன வாழ்வு
நிஜம் என உழலும், மாயம் செனித்த குகையே
உறுதி கருதும், இந்த அசுர மா மட்டை...
முருகா....சண்முகா....பழனியாண்டவா....

அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!


பழனித் திருப்புகழ்:

கருவின் உருவாகி வந்து
வயது அளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்தும் ...... அதனாலே

கரியகுழல் மாதர் தங்கள்
அடிசுவடு மார் புதைந்து
கவலை பெரிதாகி நொந்து ...... மிக வாடி

கருவில் பிறந்து, பின்பு வெளியே வந்து, பலவும் கற்று வளர்கிறோம்!
ஆனால் அந்தக் கல்வியும் செல்வமும் எதற்குப் பயன்படுத்துகிறோம்? = வெறும் போகம் அனுபவிக்க மட்டும் தானா?
கருங்கூந்தல் மங்கையர் மார்பிலே மயங்கி, பலதும் "மகிழ்ச்சி" என்று செய்து விட்டு, ஆனால் "கவலை" என்று மிஞ்சி வாடுகிறேனே! ஏனோ?

அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்

அசனம் இடுவார்கள் தங்கள்
மனைகள் தலைவாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?

அரகரா! சிவாய! என்று நினைக்க மாட்டேன்! அறு சமய நீதி அறிய மாட்டேன்!
சோறுக்கு ஒரு வீடும், வேறுக்கு வேறு வேறு வீடும் கண்ட நான்,
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ? அரகரா என்று சொல்லாமல் அழிவேனோ?

குறிப்பு: அரோகரா என்ற மக்கள் வழக்கு மொழியை, இங்கு அருணகிரி எடுத்தாளுகிறார் பாருங்கள்! அரகரா என்று பழனியில் மக்கள் ஒலிக்கும் ஒலி, இந்தத் திருப்புகழிலும் ஒலிக்கிறது!



உரகபடம் மேல் வளர்ந்த
பெரிய பெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே!

பெரிய பாம்பின் மேல் கண் வளரும் பெருமாள்! = அரங்கன்!
அவன் உலகளந்த உத்தமன்! அவன் ஆசை மருகனே, முருகனே!

குறிப்பு: அருணகிரி பல இடங்களில் முருகனை, "பெருமாளே" என்று விளித்துப் பாடுவார்!

பெரும்+ஆள் = பெருமை மிக்கவன்!
இதுவே, முருகனைப் "பெருமாள்" என்று விளித்துப் பாடக் காரணம் என்று "மேம்போக்காகச்" சொல்வார்கள் சிலர்! ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள்! :)

உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் = பாம்புப் படுக்கையில் கண் வளரும், காவிரிக் கரை அரங்கன்!
முருகனைப் பெருமாள் என்னும் அருணகிரி, பெருமாளையும் "பெருமாள்" என்கிறாரே! எப்படி? :)

திருவரங்கத்தில் உள்ள முலவரை = "பெரிய பெருமாள்" என்று அழைப்பதே வழக்கம்!
ஊருலா உற்சவரை "நம்பெருமாள்" என்று அழைப்பது வழக்கம்!
அனைத்து வைணவ இலக்கியத்திலும் இப்படியே புழங்கும்!
இதை அருணகிரியும் அறிந்து வைத்துள்ளார்! அதை அப்படியே "பெரிய பெருமாள் அரங்கன்" என்றே ஆளுகிறார் பாருங்கள்!

பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!

ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!

இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது! அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?

* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "கந்த ரஹீம்"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளமையே உருவான முருகனை, "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)

ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)
ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
பின்னொரு நாள் சொல்கிறேன்! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!

* அருணகிரியார், அறிந்தே தான், என் காதல் முருகனை, "பெருமாளே" என்று விளிக்கிறார்!
* பெருமாள் என்ற சொல், அருணகிரியின் காலத்தில், திருமாலை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
* அதை அருணகிரியே, இந்தப் பாட்டில் பெரிய "பெருமாள் அரங்கன்" என்று சான்று காட்டுகிறார்!
* இருந்தாலும், முருகனையும், "பெருமாளே" என்று வரிக்கு வரி சொல்வது...அருணகிரியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை!



உபயகுல தீப துங்க
விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே!

உபய குலம் = இரண்டு குலத்திலும், அதாச்சும் தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஒரு சேரப் பெருமை மிக்க முருகா! = உபய குல தீப துங்கா!

தாய் மூலம் இல்லாது, தந்தையால் மட்டுமே "தோன்றியவர்" முருகன் என்பார்கள் ஒரு சிலர்! "கருவில் பிறப்பு" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி! :(
"பிறவான் இறவான்" என்பதில் பெருமை காண்பவர்கள் இவர்கள்! அதற்கு கச்சியப்பரின் "உதித்தனன் உலகம் உய்ய" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்! மற்றவரைப் போல் பிறக்கவில்லையாம், "உதித்தானாம்"!
அடியார்களின் பொருட்டு, கீழே இறங்கிப் பிறந்தால் தான் என்ன-என்பதை நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே! கருணை முக்கியமா? பெருமை முக்கியமா??

கருவிலே பிறக்கவில்லை! தாய் மூலம் இல்லை - என்று முருகனுக்கு ஏதோ ஏற்றம் கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள்! ஆனால் அருணகிரி அதை மறுக்கிறார்!
தந்தையின் ஒளியிலே தோன்றியவன், தாயின் அணைப்பில் தான் உருவமே காண்கிறான்! அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன்! = உபய குல தீப துங்கன்!

விருது கவி ராஜ சிங்கன் = தேவாரம் என்னும் தமிழ்க் கவியிற் சிறந்த ஞான சம்பந்தப் பெருமான், முருகனின் அம்சம் என்றே சொல்வாரும் உண்டு!
அதான் அருணகிரியும், புகலியூர் என்னும் சீர்காழியில் அன்று வருவோனே, என்று பாடுகிறார்!



பழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்),
சின்னக்குமாரர் (உற்சவ புகைப்படம்)


பரவை மனை மீதில் அன்று

ஒருபொழுது தூது சென்ற
பரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா!

தம்பிரான் தோழரான சுந்தரர், தான் காதலுக்கும் காமத்துக்கும் கூட, தோழனையே நம்பினார்! அவனையே தூது நடக்க வைத்தார்!

சங்கிலி நாச்சியை இரண்டாம் காதலியாக மணந்த அவர், முதல் மனைவியான பரவை நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க, பரமனையே தூது செல்வீரா என்று வேண்டினார்! அதைத் தான் இங்குப் பாடுகிறார் அருணகிரி!

எல்லாம் சரி! ஆனால் இறைவன், பரவை வீட்டுக்கு இரண்டு முறை அல்லவா நடந்தான்?
அவளும், ஒரு முறை கதவைச் சார்த்தி, அடுத்த முறை தானே திறந்தாள்?
அருணகிரியோ, "பரவை மனை மீதில் அன்று *ஒருபொழுது* தூது சென்ற" என்கிறாரே! = ஒரு பொழுதா? இரு பொழுதா?

பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! 200ஆம் பதிவில் புதிர் போடும் அருணகிரியார் வாழ்க! வாழ்க! :)


பகை அசுரர் சேனை கொன்று
அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே!!

பகை அசுரர்களின் சேனையை அழித்து, அமரர்களை சிறை மீட்ட புவன சுந்தரன் எங்கள் முருகன்! அவன் பழனி மலை மீது ஒய்யாரமாய் நிற்கிறான்!


ஒய்யாரம் என்றால் எப்படி?
பிறந்த மேனியில், ஆணழகனாய்...
தலையை முழுக்க ஷேவ் செய்து...
குறு குறு கண்ணும், கூரிய நாசியும்
கடிக்க இனிய காதுகளுமாய்...
வழித்த முகமும், சிரித்த சிரிப்புமாய்
பஞ்சாமிர்தத்தை விட இனிப்பான அவன் செவ்விதழில்...
ஹேய் என்று அழைத்து...
அதி பயங்கர வளைவான இடுப்பிலே கையை வைத்து
என்னிடம் வா,.....உனக்கு யார் இல்லீன்னாலும் நான் இருக்கேன்-ன்னு

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகப் போனது இனிப் போதும்,
வா என்னிடம் வா...என்று கொஞ்சும்...
முருகா, என் கண்ணாளா.....என் இன்பமே!

அவனை, அவனை, அவனை....
என் ஆவியைக் கண்குளிரப் பாருங்கள்! கண்குளிரப் பாருங்கள்!

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
எங்கள் 200 பதிவுகளின் மேலும் நிற்கும் முருகோனே!


200ஆம் பதிவுக் கொண்டாட்டங்களுக்கு வந்துவிட்டு, பஞ்சாமிர்தம் இல்லாமல் உங்களை அனுப்புவோமா? இதோ:

Sunday, January 16, 2011

200. பழநிப் பதிகம்



இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!


தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)

200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!


"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது!
அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!

இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!

எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!



வரிகள்: டாக்டர் - அர. சிங்கார வடிவேலன்
சுப்பையா சார், புத்தகத்தில் இருந்து ஒளி வருடிக் கொடுக்க,
VSK ஐயா தட்டச்சித் தந்தது...

தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா
தங்கநிறச் செங்கதிர்போல் மின்னும் வேலா
அமிழ்தூறும் ஆறுமுகம் அமைந்த கோவே
அன்பூறும் மனந்தோறும் மலரும் பூவே
உமிழூறும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி
உள்ளுருகி வருகின்றோம் வினையைத் தீர்க்கச்
சிமிழுக்குள் குங்குமம்போல் பழநி யப்பா
சிந்தைக்குள் முகங்காட்டிச் சிரிப்பா யப்பா

விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்
வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா
அலைவீசும் திருச்செந்தூர்க் கடலைப் போல
ஆயிரநூ றாயிரமாய் அன்பர் கூடி
மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம்
மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்
கலைவாழும் பழநிமலை ஆண்டி யப்பா
கதிகாட்டி மனங்களிலே கனிவா யப்பா

சீர்தோறும் சிறந்துவரும் தமிழுக் குள்ளே
தினந்தோறும் குளிப்பதனால் சிவந்த வேலா
கார்தோய வளர்ந்துவரும் மலையின் மேலே
கணந்தோறும் வாழ்வதனாற் பொழியும் கையா
நீருயர மலர்கின்ற பூவைப் போல
நெஞ்சுயர மலர்பவனே உன்னைக் காண
ஊர்கூடி வருகின்றோம் பழநி யப்பா
உளந்தேடிக் கால்பாவி ஒளிர்வா யப்பா.

வழிநெடுகப் பலகாரம் தந்து நிற்பார்
வாயார உன்புகழே பாடி நிற்பார்
ஒளிபெறவே உன்னருளைப் போலி னிக்கும்
உண்ணீரும் இளநீரும் உதவி நிற்பார்
களிபெருகி உன்னடியார் செல்லும் காட்சி
கலிதீர்க்கும் உன்னினிய காட்சி என்பார்
வழிநடப்பார் எல்லாரும் பழநி யப்பா
வழிநடக்க மனந்தோறும் மலர்வா யப்பா.

முருகப்பா! வேலப்பா! பழநி யப்பா!
முத்தமிழால் வைதாலும் உவந்து நெஞ்சம்
உருகப்பா! கந்தப்பா! உயிருக் குள்ளே
உயிரப்பா எனவிளங்கும் ஒப்பில் அப்பா!
பருகப்பா! தருகின்ற பாட்டை யெல்லாம்
பண்புடையோர் சிறந்தோங்கப் பார்ப்பா யப்பா!
திருகப்பா! வேரோடு வினையை என்று
சேவிப்பார் சிந்தையிலே திகழ்வா யப்பா.

கதிர்காட்டும் பச்சைநிறக் கழனி எல்லாம்
கண்காட்டும் உன்மயிலின் தோகை காட்டும்
முதிர்காட்டும் தன்குலையால் வளைந்த தென்னை
முன்வணங்கும் உன்னடியார் முதிர்ச்சி காட்டும்
புதிர்காட்டும் உலகத்தில் அன்பே ஆண்டால்
புழுவுடலும் உன்னருளின் புனிதம் காட்டும்
குதிகாட்டும் நீரருவி மலையில் வாழ்வாய்
குறைநீக்கும் உன்னருளிற் குளிக்கச் செய்வாய்.

பாலான வெண்ணீற்றில் படியும் போது
பழமான உன்மேனி பளிங்காய்த் தோன்றும்
மேலான சந்தனத்தில் விளங்கும் போது
விரிகதிரோன் முகஞ்சிவந்து வெட்கிப் போவான்
காலான தாமரையில் பாலும் தேனும்
கரைபுரண்டு நிற்கையிலே கடலுந் தோற்கும்
வேலாஉன் பேரழகைப் பழநிக் குன்றில்
விரைந்துண்ண வருகின்றோம் விருந்து வைப்பாய்.

தாய்பிரிந்த குழந்தைக்குத் தாயே ஆவாய்!
தாளிழந்த முடவனுக்குக் காலே ஆவாய்!
வாயிழந்த ஊமைக்கு வாயே ஆவாய்!
வகையிழந்த ஏழைகளின் வங்கி ஆவாய்!
நோயுற்ற உடலுக்கு மருந்தே ஆவாய்!
நொந்தழுதால் முந்திவரும் கந்த வேளே!
சேய்காண வருகின்ற தாயைப் போலத்
திசைநோக்கி வருகின்றோம் தினமும் காப்பாய்.

வடிவேலா என்னாத வாயும் வாயோ?
மயிலேறும் உனைக்காணாக் கண்ணும் கண்ணோ?
படியேறி வாராத காலும் காலோ?
பண்பாளன் பெயர்கேளாக் காதும் காதோ?
அடிமலரை வணங்காத கையும் கையோ?
அருள்மணத்தை முகராத மூக்கும் மூக்கோ?
படிமீது மானிடராய் வாய்த்த தோற்றம்
பயன்பெறவே அருள்கொடுப்பாய் பழநி யப்பா.

வேலெடுத்த உன்னருமைப் பெயர் எடுத்தால்
வினையெடுத்த இப்பிறவி நடை எடுக்கும்
பாலெடுத்த உன்முகத்தைப் பார்த்தி ருந்தால்
பசியெடுத்த அன்பருயிர் பண்பெ டுக்கும்
வாலெடுத்த உன்மயிலின் வனப்பைக் கண்டால்
வளமெடுத்து வாழ்க்கையிலே வண்மை ஓங்கும்
காலெடுத்தான் திருமகனே பழநி யப்பா
கையெடுத்து வருவோரைக் காப்பா யப்பா.

Thursday, January 13, 2011

பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!


பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!





மலை தெரியுது மலை தெரியுது கண்ணிலே - பழனி
மகராஜன் முகம் தெரியுது விண்ணிலே!
அலை தெரியுது அலை தெரியுது வழியிலே - வேலன்
அருள் தெரியுது அருள் தெரியுது ஒளியிலே!

இருள் விலகுது இருள் விலகுது வாருங்கள் - அங்கே
இலை நடுவினில் கனி தெரியுது தேடுங்கள்!
பொருள் குவிந்திடப் பொருள் குவிந்திடப் பாடுங்கள் - அவன்
புகழ் மலையினைக் கால் நடையினில் நாடுங்கள்!


வயது சென்றவர் இளைஞர் என்பவர் யாவரும் - அந்த
வானுலகத்து தேவர் தம்மொடு மூவரும்
வயலில் மீன்கள் குதிக்கும் இந்தக் கழனியை - நாடி
வந்து நிற்பார் வணங்கி நிற்பார் பழனியை!

கட்டியதோ ரெண்டு தாரம் அவனுக்கு - ஒண்டிக்
கட்டையாக வந்தது இந்தப் பழனிக்கு
வட்டியோடு முதலும் சேர்த்து மனதுக்கு - வாரி
வழங்கத் தானே வந்து விட்டான் தனிமைக்கு!

செட்டி என்னும் ஒரு பெயரைச் சுமந்தவன் - கந்தன்
தேவியையே அதன் வழி தான் மணந்தவன்
எட்டுத் திக்கும் நமது சேவை அறிந்தவன் - நாம்
இன்று வரும் நேரம் கூடத் தெரிந்தவன்!

வரி: கவிஞர் கண்ணதாசன்
(பழம் நீ நூலுக்காக எழுதியது)

இன்னும் இது போல் இதர பாடல்களை ஒளிவருடி அனுப்பிய, வாத்தியார் சுப்பையா சாருக்கு நன்றி!

Wednesday, January 12, 2011

நான் காணும் பொருள் யாவும் நீயாகவே


நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே!
ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே
அதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே! முருகா....!
குருவாக நீ வந்து அருள்வாயயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!


நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!

உண்ணாது உறங்காது உனையே நான் நினைத்திருக்க - உனை
எண்ணாத பொழுதெல்லாம் எனையே நான் சபித்திருக்க
பண்ணாக, இசையாக உனையே நான் படித்திருக்க நான்
மண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்க..
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!


என் மனமென்னும் ஒருவீடு உனக்காகக் காத்திருக்க! - அதில்
நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க
தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்
பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க
"சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!

Tuesday, January 11, 2011

சீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்!

இந்தச் செவ்வாயில், வெங்கலக் குரலில்...அதிகம் அறிந்திராத பாடல் ஒன்னு!

முருகனின் உடம்பில் என்னென்ன இருக்கு? = ஒவ்வொருவரும் ஒன்னொன்னு சொல்வாங்க! திருநீறு, சிவப்பு, அழகு, இளமை, நகை, மாலை, அலங்காரம்-ன்னு!
ஆனால்....ஆனால்...ஆனால்.....அதெல்லாம் அப்புறம் தான்!

என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!
அவனை அணு அணுவாக....
* மனத்தாலும்
* கையாலும்
* கண்ணாலும்
* மூக்காலும்
* இதழாலும் ஏந்தி ஏந்தி, ஏங்கி ஏங்கி....
அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ!

அவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது? அவன் அபிஷேகத்தில் கரைய, எனக்கு ஏன் குளிர்கிறது?
அவன் சிலிர்க்கும் போது, எனக்கு ஏன் கூச்செறிகிறது? அவன் முந்துகையில் எனக்கு ஏன் வியர்க்கிறது?

ஓ....என் உடலே அவன் சன்னிதானம் ஆகிப் போனதோ!!
தங்க மயம் முருகன் சன்னிதானம்!
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!

சீர்காழிக்கே உரிய முருகக் குரலில்...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!



தங்க மயம் முருகன் சன்னிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்!!
(தங்க மயம் முருகன்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே!
அவன் ஈராறு கைகளாம் தாமரையே!
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே!
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே!
(தங்க மயம் முருகன்)

கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
(தங்க மயம் முருகன்)



அவன் தேகத்தில்...
முதல் பத்தியில் மாணிக்கம், புஷ்பராகம்-ன்னு மணிகளைச் சொன்னார்! - இதைக் காசு கொடுத்து வாங்கிடலாம்!
அடுத்த பத்தியில் தாமரை, மாலை-ன்னு மலர்களைச் சொன்னார்! - இவை இன்றிருக்கும், நாளை வாடி விடும்!

அதனால் தான், அடுத்து....இதெல்லாம் சொல்லாது,
அவன் உடல் உறுப்"பூ"க்களைச் சொன்னார்!!!

அந்த உறுப்"பூ"க்கள் வாடுமோ? என்னைக் கூடுமோ? நம் உறவைப் பாடுமோ? மனம் அவனையே நாடுமோ?
கருணை மழை பொழியும் கரு விழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெரு வழிகள்!

தங்க மயம் முருகன் சன்னிதானம்!
அவன் மேனியே என் சன்னிதானம்!
அவன் கரு விழியே, என் பெரு வழி!
அவன் உறுப்"பூ"வே, நான் சூடும் பூ!

உன் நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்ட, முருகா...நூறு முறை பூத்திருப்பேன்!

Thursday, January 06, 2011

தளிர்போலே நடைநடந்து...

முருகனருளில் இடமளித்த ச்செல்லக் குழந்தைக்கும், குழுவினருக்கும், மனமார்ந்த நன்றிகளுடன்...


தளிர்போலே நடைநடந்து கந்தனவன் வருவான்
குளிர்பொழியும் நிலவணிந்த அன்னைமடி அமர்வான்
வேலெடுத்து வினையறுத்து வேதனைகள் களைவான்
கால்பிடித்த பக்தர்களைக் காக்கஓடி வருவான்

ஆடும்மயில் மீதினிலே தானுமாடி வருவான்
பாடுங்குயில் போலடியார் போற்றுவதில் மகிழ்வான்
சந்தமுடன் செந்தமிழைப் பாடிடவே அருள்வான்
சந்ததமும் பணிந்திருந்தால் சக்திவேலன் மகிழ்வான்

தந்தைக்கு உபதேசம் செய்வித்தான் அவனே
சிந்தைக்குள் ஒளியானான் ஆடல்சிவன் மகனே
அவன்பேரைச் சொல்லிடுவோம் அன்புடனே தினமே
அவனடிகள் நினைவொன்றே தரும்நமக்கு பலமே!


--கவிநயா

Tuesday, January 04, 2011

சரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு!

மார்கழி மாதத்தை "நீராடல்" மாதமாகவே சொல்வது வழக்கம்!
இந்த மார்கழி-க்கு மாதவிப் பந்தலில், மார்கழிப் பதிவுகள் ஏதுமில்லை! என்றாலும் முருகனருளில் ஒரு மார்கழிப் பாட்டு - "நீராடல்" பாட்டு, இதோ அளிக்கிறேன்!

இது பலரும் அறிந்த பாட்டு! ஆனால் முருகனருளில் இது வரை வராதது வியப்பிலும் வியப்பே! சிபி அண்ணா, இராகவன் போன்ற முருக அன்பர்கள் இங்கே கோலாச்சிய காலத்தில் கூட, இந்தப் பாட்டு எப்படி மிஸ் ஆனது-ன்னு தான் தெரியலை! :)

அதனால் என்ன? இப்போது குமரன் அண்ணா கோலோச்சும் காலத்தில் வந்ததாக இருக்கட்டும்! :)



இந்தப் பாடல் ஒரு அதிகாலைப் பாடல்!
அதுவும் சுசீலாம்மா-வின் Humming-ஓடு தொடங்கும் அழகிய பாடல்!
அப்படியே நியூயார்க்கில் உள்ள முருகனின் காதலி...தன் மனசில் உள்ளதையெல்லாம், இதமாகப் பதமாகக் கொட்டுவது போலவே இருக்கும்! :)

சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்!
= பாவை நோன்பு!

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!!
= பாவைக்கு அருளல்!

Youtube வீடியோ கிடைக்கவில்லை! என் கிட்ட இருந்த பழைய சிடி-யை, Kates Video Cutter-இல் வெட்டி ஏத்தியுள்ளேன்! தரம் சுமாராத் தான் இருக்கும்! சொல்ப அட்ஜஸ்ட் மாடி! :) கேட்டுக்கிட்டே படிங்க!



சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!!
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)


படம்: இது சத்தியம்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்

இதுல ஒரு சிறப்பு என்ன-ன்னா, மருந்துக்குக் கூட முருகன் படமோ, கோயிலோ பாட்டில் தென்படாது!
குளித்துக் கொண்டே பாடுவதோடு சரி! வெறும் உள்ளத்து உணர்ச்சி மட்டுமே! - அதான் எனக்கு மிகவும் பிடிச்சிப் போச்சி!

நீங்களே சொல்லுங்க, காதலி என்னைக்காச்சும் தன் காதலனை ஊர் அறிய புகழ்ந்து எழுதி இருக்காளா? எப்பமே பொறந்த வீட்டுப் பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கும்!
ஆனா, அவனுக்கு-ன்னு ஒன்னு-ன்னா, அப்போ மட்டும் பதறிப் போய் ஓடியாருவா! மத்தபடி எப்பமே அவனோடு மோதலோடு கூடிய காதல் தான்!
அந்தக் காதலின் ருசியே ருசி! கண்ணாலம் ஆயிருச்சி-ன்னா இப்படியெல்லாம் இருக்க முடியாதே! புகுந்த வீடு வந்துருமே! :))

சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்!
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!!

முருகா - இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்!!
என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க!!

Saturday, January 01, 2011

Happy New Year! சிந்தனை செய் மனமே!

அனைவருக்கும் & முருகனருள் வலைப்பூ நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011
புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)



அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)

சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு மகிழ்வான பாடலைப் பார்ப்போமா? அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!

ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!

செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!

படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: KD சந்தானம்

ராகம்: கல்யாணி

பாடலை இங்கு கேளுங்கள்!

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!


செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!



திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி மாற்றி விட்டார்! :)

மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

Tuesday, December 28, 2010

முருகன்-ஆண்டாள் சினிமாப் பாட்டுக்கு அன்றே எதிர்ப்பு!

இந்த செவ்வாய் - Dec 28, பலரும் வெறுத்த முருகன் பாட்டு! பல எதிர்ப்புகள் கிளம்பிய சினிமாப் பாட்டு!......என்ன முருகன் பாட்டின் மேல் வெறுப்பா?

ஆமாம்! அது முருகன்-முதலிரவுப் பாட்டு என்பதால்! :)
ச்சீ! தெய்வத்துக்கு முதலிரவா? அதை சினிமா வேறு எடுத்துக் காட்டுவதா?

பாடலின் வரிகளைப் பலருக்குப் பிடிக்கவில்லை! "காமம்" தூக்கலாக இருக்கும் பாட்டா முருகனுக்கு?
பாவம், என்ன செய்வார் கண்ணதாசன்? தோழி கோதையே துணை! அவள் "அன்புத் துணிவே துணை"!

ஆண்டாள் சொன்ன வரிகளை, அப்படியே ஆண்டார் பாட்டில்!
யார் வெறுத்தார்களோ, அதுவே பெரிய ஹிட்-ஆகி, படத்துக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தது, சிறிது நாளில்!
அன்று பிடிக்காதவர்கள், இன்று புரிந்து கொண்டார்கள்! அன்று வெறுத்தவர்கள், இன்று விரும்பிக் கொண்டார்கள்! - முருகனருள்!

இந்த மோன நாளான Dec-28 இல்...மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு...முருகா!



படம்: கந்தன் கருணை
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரி: கண்ணதாசன்



மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
(மனம் படைத்தேன்)

மத்தள மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் - அந்த
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!
(மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் - தோழீ
தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!
(மனம் படைத்தேன்)

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் - இரு
கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!
(மனம் படைத்தேன்)


சுசீலாம்மா, மிகவும் கிறங்கிப் பாடிய அழகிய பாடல்! அழகன் முருகன் பாடல்!

இந்தப் பாட்டு - தோழி கோதையின் கனவு போலவே அமைந்திருக்கும்! அப்படியே நினைத்து எழுதியதாக, கண்ணதாசன் பல பேட்டிகளில் சொல்வார்! = தோழீ, தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!

மத்தள ஓசையும் (தவில் ஓசை) நிறைய ஒலிக்கும் பாட்டில்!
* மத்தள மேளம் முரசொலிக்க, வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க = மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
* கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் = கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!

அன்று ஆவி காத்தது போல், இன்றும் ஆவி காத்து அருள்!
மனம் படைத்தேன்....உன்னையே நினைப்பதற்கு...முருகா!

Thursday, December 23, 2010

பழமுதிர் சோலையிலே தோழி! - ஜெய்சங்கர், ஜமுனா!

இந்தச் செவ்வாயில் விட்டுப் போன பதிவு, ஆனால் அவன் பேர் என் செவ் வாயில் விட்டுப் போகுமா? இதோ, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!


அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்...பாட்டு தெரியும் தானே? அந்தப் படத்தில் இருந்து ஒரு முருகன் பாடல்! பார்க்கலாமா?

குழந்தையும் தெய்வமும் என்ற படம்! ஜெய்சங்கர், ஜமுனா நடிச்சது! குட்டி பத்மினி பாடுற பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்குமே?

கல்லூரிக் குறும்பில் தொடங்கி, கல்யாணம் ஆகி, பெண்ணின் அம்மாவால் குழந்தைகளைப் பிரிந்து, ஒரு குழந்தை தனியே வளர்ந்து.....
அது நாட்டியம் கற்கும் இடத்தில், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒரு காதலா?

நடன ஆசிரியை யாரை நோக்கிப் பாடுகிறார் - முருகனையா? ஜெய்சங்கரையா? :) நீங்களே கேளுங்கள்! சுசீலாம்மா பாடும் அழகிய பரதநாட்டியப் பாடல்களில் இதுவும் புகழ் பெற்ற பாடல்!





பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!

வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?

நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
(பழமுதிர் சோலையிலே தோழி)

படம்: குழந்தையும் தெய்வமும்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரி: வாலி


பி.கு: கவிநயா அக்கா, இப்பல்லாம் நான் பதிவே எதுவும் போடுறதில்லை-ன்னு குறைபட்டுக்கறாங்க! :) நான் என்னத்த சொல்ல! என் தோழன் இராகவன் கூடத் தான் பதிவே போடுறதில்ல!
முருகா, நீயே நியாயத்தைக் கேளுடா! பந்தல்-ல்ல பல்சுவை நகைச்சுவை கூட்டி ஆன்மீகம் எழுதுனாத் தான் பதிவா? அதான் என் சொந்தச் சரக்கை எல்லாம் குறைச்சிக்கிட்டு, சினிமாப் பாட்டு மட்டும் உனக்கு முருகனருள்-ல்ல போடறேன்-ல்ல? கவி-க்கா கிட்ட எடுத்துச் சொல்லு! அவுங்க கூட சேர்ந்து நீயும் பந்தலில் பதிவு போடு-ன்னு கட்சி மாறினே...பிச்சிருவேன் பிச்சி! :)

Tuesday, December 14, 2010

பித்துக்குளி - ஈழத் திருப்புகழ் - முருகனா? பெருமாளா?

இன்றைய செவ்வாய்க் கிழமை, ஒரு எளிமையான...ஆனால் மிக அழகான திருப்புகழைப் பார்க்கப் போறோம்!
அதுவும் பித்துக்குளி முருகதாஸ் பாடப் பாடக் கேட்பது...சுகமோ சுகம்! வாடும் மனசுக்கு நிதமே இதம்!



பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாசின் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)

பித்துக்குளி முருகதாஸ்! இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! :)
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக இசைப் பாடல்களை, இழு இழு-ன்னு இழுக்காம, பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி / நாதநாமக் கிரியை-ன்னு கர்நாடக இசையில் போடறது தப்பே இல்லை! ஆனா காவடியின் ஜீவனான அந்த "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)
பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! அவரும் என்னையப் போலத் தானோ? :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ, கார்த்தி-கேயா கலியுக வரதா & அலைபாயுதே கண்ணா பாட்டுக்கள் தான்! சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்!
ஆனால்....சுமார் அறுபது வயதில்....
உடன்பாடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணம் செய்து கொண்டார்!

முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும்,
கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின!
தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, "கண்ணன்-ராதா கல்யாணம்" பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" (வெண்ணைய்) தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப் பையன்!
அடிபட்ட பெரியவரோ, பெருமாள் பக்தர்-மகா ஞானியான பிரம்மானந்த பரதேசியார்! அவரு நெற்றியில் இரத்தம் வடிய...

"அடேய்.....நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? சும்மா போற என் மேல் கல்லு எறியற? ஒரு நாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்லி வைக்க...

* அப்படியே ஆகி, பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!


ஈழத்து ஆலயங்கள் - கதிர்காமம் கீழே..
(சொடுக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்)


கதிர்காமம், ஈழத்தின் கீழே.....தென் கிழக்குக் கோடியில் உள்ளது!
எப்படித் தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல கதிர்காமம்! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!

கதிர்காம முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும்...
மொத்தம் 3 மதங்கள் = இந்து மதம், இஸ்லாம், பெளத்தம் என்று சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் இது! அதன் தகவல்கள் பற்றி முன்னர் இட்ட பதிவு, இங்கே!

நாம பாட்டுக்கு வருவோமா? கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ, சொடுக்குங்கள்!
குறிப்பாக, சேர்ந்து பாடும் கட்டமான, பாட்டின் கடைசியைத் தவற விடாதீர்கள்!



பாடல்: திருமகள் உலாவும் (திருப்புகழ்)
வரி: அருணகிரிநாதர்
குரல்: பித்துக்குளி
தலம்: ஈழம் - கதிர்காமம்

திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!
செக தலமும் வானும், மிகுதிபெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!

அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!!

இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!
இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு தன விநோதப் பெருமாளே!!


பாட்டைப் பிரிச்சி மேயலாமா? :)


பொதுவா, அருணகிரி, பல திருப்புகழையும் "பெருமாளே"-ன்னு தான் முடிப்பாரு! ஆனா, இந்தத் திருப்புகழில் மட்டும்....
வரிக்கு வரி, பெருமாள் காண், பெருமாள் காண்-ங்கிறாரு! = இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?:))

பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!

ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!

இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது!
அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?

* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "முருக ரஹீம்"-ன்னு நாம வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளைய முருகனை "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)

ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)

ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
மார்கழி மாதப் பதிவுகளில் சொல்லுறேன்! நீங்களும் முடிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! சூப்பர் பாட்டு, கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)


திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!

பொதுவா நான்கு கைகள் உடைய திருமால் = தெய்வம்!
ஆனா ரெண்டே கைகள் இருந்தா? = மனிதன்!

"இரு புய" முராரி = இரண்டு கை கண்ணன்!
அவன் தெய்வம் அல்ல! மனிதன்!

நல்லதும் செய்து காட்டுவான்! தவறும் செய்து காட்டுவான்!
ஆனால் தவறுக்கான பொறுப்பையும் சேர்த்தே ஏற்றுக் கொள்வான்!
தான் தெய்வம் என்று சொல்லித் தப்பிக்காது...
அதற்கு கழுவாய் செய்வது எப்படி-ன்னு நடந்தும் காட்டுவான்!

காலம்பு வாங்கி, பாலாழி பாய்ந்தான் "பாதகன்" = கண்ணன்!
நம்மைத் "தெய்வ" நிலைக்கு உயர்த்த...
தெய்வம் "மனித" நிலைக்கு, "பாதகனாய்", தாழ்ழ்ழ்ழ்ழ்ந்து போகிறது!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்: 50)

பிறவா-இறவா இறைவன் = அவதாரமாக, பிறப்பதும்-இறப்பதும் இந்தக் "கருணையால்" தான்!
"கருணை" என்பது ஒருவருக்குப் புரிந்தால், பா.பா.பா-வைப் புரிந்து கொள்ள முடியும்! (அதாங்க, பாலாழி பாய்ந்த பாதகன்)

சும்மா ஒரு எடுத்துக்காட்டு-க்கு வீரேந்திர சேவாக்-கை வச்சிக்குவோம்!
தான் பந்து வீசும் போது, எதிரே இருப்பவன் அடிக்கும் ரன்னில், பாதி என் கணக்குக்கு அப்பறமா ட்ரான்ஸ்ஃபர் ஆயிறணும்! - இப்படி ஒரு வரம் வாங்கி வந்தால் எப்படி இருக்கும்? :)) வாலி வாங்கிய வரம் அப்படி!

நண்பன் என்று ஏற்றுக் கொண்ட சுக்ரீவன்,...
இதோ கொஞ்ச நேரத்தில் சாகப் போகிறான்!
அப்போ நண்பன்-ன்னு சொன்னவனை, இப்போ கழட்டி விட்டுறலாமா? :)

ஹிஹி! ஆனா வாலியின் முன்னால் போனா??? எவ்ளோ தான் வீரம் காட்டினாலும் வரமும் பேசுமே! சரி, முன்னாடி போகாமல், மறைஞ்சி இருந்து கொன்னா? அய்யய்யோ, அது மகா பாவம்!
தப்புத் தப்பா வரம் வாங்கியது பாவம் இல்ல! ஆனால் இது பாவம்! ஏன்-ன்னா செய்யறது ராகவன் ஆச்சே! உம்ம்ம்ம்....என்ன பண்ணலாம்?

சரி, நண்பனுக்காகப் பாவமும் செய்வோம்!
ஆனால்..ஆனால்....
அதை ஒளிக்காது மறைக்காது, தெய்வம்-ன்னு நியாயப் படுத்தாது......

பாவத்தை ஏற்றுக் கொள்வோம்! கழுவாய்-க்கு நடந்தும் காட்டுவோம்!
* அதே வாலி, வேடன் ஜராவாய் வந்து, இவன் உயிரையே முடிப்பான்!
* இவனும், மானம் பார்க்காது, அதை ஊரறிய ஏற்பான்! = இது தான் "இரு புய" மனிதன்! நால் கரக் கடவுள் அல்ல!

அருணகிரியின் கற்பனை வளத்தைப் பாருங்க!
இந்தப் பாதகனின் "இரண்டு புயங்களில்" தான், காதலிக்கு மிகுந்த ஆசையாம்! அவனின் ரெண்டு கைகளையும் "தழுவ" வில்லையாம்! "உலாவு"கிறாளாம்!
திருமகள் "உலாவும்" + "இரு புய" முராரி = ஒரு காதலி, மொத்தமாய் நம்ம கையில் "உலாவு"றா-ன்னா என்ன அர்த்தம்? :)
இதுக்கு மேல சொல்ல முடியாது! சென்சார் :) அவ்ளோ ஆசை! காதல் :)

திருமகள் உலாவி விளையாடும், ரெண்டு கை "மனிதன்" கண்ணன்!
பா.பா.பா-வின் "ஆசை மருமகன்" என்ற பேரை வாங்கிக் கொண்டவன் முருகன்!
* மருக நாமப் பெருமாள் காண் = "முருக" நாமம் அல்ல! "மருக" நாமம்!
அந்த மருகப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!

செக தலமும் வானும், மிகுதி பெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

செகதலமும் = பூமி; வானும் = வானம்
மிகுதி பெறு பாடல் = வானும் மண்ணும் போற்றும் தமிழ்ப் பாடல்

தெரி தரு குமாரப் பெருமாள் காண் = அந்தத் தமிழைத் தந்த குமரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!

மருவும் அடியார்கள் = அவனையே சுற்றி வரும் அடியார்கள்
மனதில் விளையாடு = அவங்க மனத்தில் விளையாடும் முருகன்

மரகத மயூரப் பெருமாள் = மரகதப் பச்சை போல் மயில்! அந்த மயிலேறு பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!!

மணி = மாணிக்கம்; தரளம் = முத்து;
மாணிக்க கங்கை ஆற்றிலே, இரத்தினங்களை அள்ளி வீசி, அலைகள் ஆர்ப்பரிக்க...அணி அருவி சூழ....

மருவு கதிர்காமப் பெருமாள் காண் = எங்கள் ஈழத் தமிழனான, கதிர்காமப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத, வீரப் பெருமாள் காண்!

அரு வரைகள் நீறு பட = கிரவுஞ்ச மலை பொடிப் பொடியாக
அசுரர் மாள = மலையைச் சுற்றி நின்ற அசுரர்கள் எல்லாம் அழிய
அமர் பொருத = போர் செய்த
வீரப் பெருமாள் காண் = எங்கள் வீரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!



அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குருநாதப் பெருமாள் காண்!!

அருணகிரியின் சொல்லாட்சி, கற்பனைக்கு இதுவும் ஒரு சாட்சி!
சிவபெருமான், நடனமாடும் போது, தன்னுடைய தலை கலையாமல் இருக்க, என்னமோ செய்கிறாராம்? என்னது? அரவு = பாம்பு; பிறை = சந்திரன்;

பாம்பு -Ribbon போட்டுக் கட்டி,
பிறை -Hair Pin-ஐ குத்தி,
அரவு பிறை வாரி....விரவு சடை வேணி = செஞ்சடை சீவிக் கொள்ளும் பிரான்! :)

அமலர் குருநாதப் பெருமாள் காண் = அந்தச் சிவனார், அமலன்=குற்றம் நீங்கியவர்! அவருக்கே தகப்பன் சாமியான எங்கள் குருநாதப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!

இரு வினை இலாத = நல்-வினை/தீ-வினை என்று இரண்டு செயல்களுமே, நமக்கு உலகத்தோடு பந்தம் ஏற்படுத்தி விடும்! ஆனால் முருகனுக்கு?
இரண்டு வினைகளும் இல்லாதவன்! சூரனை......கிளையோடு, ஊரோடு அழித்த வினைகள் எதுவுமே முருகனை அண்டாது! அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!

* முருகன் = வினைகளைக் கடந்தவன், கடவுள்!
* கண்ணன் = வினைகளின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்பவன், மனிதன்! - வானுறையும் தெய்வத்துள் "வைக்கப்பட்டவன்"!

தரு வினை விடாத = வினை ஆற்றினால் விளைவு விளையும்! நம் வினைகளுக்கு, பதில் வினைகளைத் தருவார்கள், பொறுப்பில் உள்ள இமையவர்கள் / கிரகங்கள் முதலானோர்! அவர்கள் குலேச = குல+ஈச; அந்த இமையவர் குல ஈசனான பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!



இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு-தன விநோதப் பெருமாளே!!

சிலை=வில்! இலகு சிலை வேடர் = ஆற்றல் மிக்க வில்லுடைய வேடர்!
கொடியின் அதி பார = அந்த வேடர் குலக் கொடி!

* அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் = ஆண்டாள்
* வேடர் குடிக்கொரு சந்ததியாய் = வள்ளி

இருவருமே, அவர்கள் காதலனை, முன்னே பின்னே, பார்த்தது கூட இல்லை!
தங்கள் காதல் "ஏற்றுக் கொள்ளப்படுமா"-ன்னு கூட இருவருக்குமே தெரியாது! ஆனாலும்.....
உள்ளத்து உண்மையோடு, அவனுக்கென்றே வாழ்ந்தவர்கள்!
மருந்தாம் என்று தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்....

கொடியின் அதி பார = அந்த வள்ளிக் கொடி!
இரு தன = அதில், அதி பாரமான இரு மார்பகங்கள்! :)

ஹைய்யோ...முடிக்கும் போது, என்னைக் கிளுகிளு விளக்கம் சொல்ல வைக்கிறாரே இந்த அருணகிரி! அருணையடிகளே, மேடைக்கு வரவும்! :))

ஒரு கொடியில், எப்பமே, அது தாங்கும் அளவேயான கனிகளே பழுக்கும்!
ஆனால் ஒல்லியான வள்ளிக் கொடியிலோ....?
அதிக பாரமான இரு மார்புக் கனிகள்! :)
எதனால் இந்தப் பாரம்? அவள் மெல்லிய-ஒல்லியானவள் தானே?
ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனையே தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவள்...
அவன் புரிஞ்சிக்கிட்டான்! அவளை ஏற்றுக் கொள்ள வந்துட்டான்! - என்று தெரிந்தால், என்ன ஆகும் அந்தப் பேதைக்கு?

இயற்கை என்ன கொடுத்ததோ, அதுவே ஆகும்! = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!
ஊன் இடை, ஆழி சங்கு உத்தமர்க்கு என்றே = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!

அதனால் வந்த "திடீர்ப் பாரம்" தான் இது!
அவன் ஏற்றுக் கொண்டான் என்று கண்ட மாத்திரத்தில், இப்படி ஒரு "விநோதமா" இந்தப் பேதைக்கு? = இயற்கை விநோதம்!
ஹேய், இதுக்கு மேலச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு முருகா! :)


* கொடியின் அதி பார...இரு தன வினோதம்! = அந்த விநோதப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!
* மருக நாமப் பெருமாள் காண் = அந்த மருக-முருகப் பெருமாளை.... என் ஆசை முருகனை......எல்லாரும் காணுங்கள்! காணுங்கள்! முருகாஆஆஆ!

Sunday, December 12, 2010

முருகா இங்கே வா வா!

"அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா"-ன்னு எப்பவோ வெட்கத்தை விட்டுக் கத்தி பாடியிருக்கோம்-ல்ல? :)
அது போல கவிநயா அக்கா ஒரு பாட்டு எழுதி இருக்காங்க! அதை இன்னிக்கி முருகனருளில் போடுறேன்!

இந்தப் பாட்டை யாரு கிட்ட பாடப் போறீக? எந்தக் குழந்தை? = கந்தக் குழந்தை! :)




சின்னச் சின்ன முருகா
சிங்கார முருகா
வண்ண எழில் முருகா வாடா
வந்து அன்பு முத்தம் ஒன்றெனக்கு தாடா

செல்லச் செல்ல முருகா
செந் தமிழின் தலைவா
பண்ணில் உன்னைப் பாடுகிறேன் வாடா
வந்து பாச முத்தம் ஒன்றெனக்கு தாடா

சின்னச் சிலம் பொலிக்க
‘கல்கல்’ என்று சிரிக்க
துள்ளித் துள்ளி என்னிடத்தில் வாடா
வந்து வெல்ல முத்தம் ஒன்றெனக்கு தாடா

எண்ண மெல்லாம் இனிக்க
உள்ள மெல்லாம் களிக்க
வண்ணமயில் ஏறி இங்கு வாடா
வந்து வாய் மணக்க ஆசை முத்தம் தாடா

Monday, December 06, 2010

கண்ட நாள் முதலாய்...நட்பு or காதல் பெருகுதடி??

கண்ட நாள் முதல் என்னும் அழகிய தமிழ்த் திரைப்படம்! இந்த வார இறுதியில், மீண்டும் 50-ஆவது முறையாய், ஆர்வத்தோடு பார்த்து முடித்தேன்! :)
பிரசன்னா-லைலா, ரெண்டு பேருமே நட்புக் கோழிகளான சண்டைக் கோழிகள்!
ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொள்வது மட்டுமே வாடிக்கை! = இவர்களுக்குள் காதல்???
சேச்சே, நட்பு காதலாய்ப் பூக்குமா என்ன? அதுவும் சண்டையே வாடிக்கையாய்ப் போன இந்த நட்பு?

பூக்கும்! முருகனருள் தவழும் போது...



சரி, அதை விடுங்க!

நட்பு எப்படிங்க காதல் ஆகலாம்?
அது தவறு இல்லையா? அசிங்கம் இல்லையா?
நேற்று வரை நட்பு-ன்னு சொல்லிட்டு...
இன்னிக்கி காதல்-ன்னு சொன்னாக்கா, அதுல Trust எப்படிங்க வரும்? :)

உம்...நல்ல கேள்வி!
வெறுமனே நட்பில்...காதல் வராது!
ஆனால்...ஆனால்...ஆனால்...

அதீத நட்பு...காதலாய்த தான் மலரும்! எப்படீங்கறீங்களா?

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு
ஆனால், தானே உடுக்கையாய் மாறி விட்டால்??? = காதல்!

ஆடையை இழக்கும் போது, துளியும் தாமதிக்காமல், கை, தாமே சென்று ஆடையைப் பற்றும் அல்லவா?
ஐயோ! அவனுக்கு ஆடை கொடுப்போம் என்ற வரை நினைப்பது = நட்பு!
கொஞ்சம் மணித்துளி வித்தியாசமாச்சும் தேவைப்படும் ஆடை கொடுக்க!

அந்தக் கொஞ்சம் மணித்துளி கூடத் தாங்க மாட்டாது....
ஐயோ! அவனுக்கு ஆடை போகிறதே என்ற மாத்திரத்தில், தன்னையும் அறியாமல், ஓடிச் சென்று...
அவனுக்கே ஆடையாகி விட்டால்??? நட்பு -> காதல் ஆவது இங்கே தான்!

இரண்டுமே இடுக்கண் களைவது தான்! ஆனால்
* ஆடை கொடுப்பது = நட்பு
* ஆடை ஆவது = காதல்


* நட்பில் = அவனுக்கு"ம்"!
* நட்பு அதீதமாகிய காதலில் = அவனுக்"கே"!

கதியாய் விதியாய் வருவாய் அவ"னே"!
கதியாய் விதியாய் வருவாய் குக"னே"!!


படத்துக்கு வருவோம்! பிரசன்னா-லைலா நட்பு (அ) சண்டை!
இது காதலா?? அது அவர்களுக்கே தெரியாது!
அதனால் தான் கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி என்று இவர்கள் பாடாமல், பின்னணிப் பாடலாக மட்டும் ஓடுகிறது!

அவளுக்கு, அவனின் நண்பன் ஒருவனையே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு ஆவதும்,
அவளும் சிரித்தபடியே, வழக்கமான வயசுப் பொண்ணு போல் ஜாலியாய் ஒப்புக் கொள்வதும்,
மாப்பிள்ளைக்குப் பெண்ணை, நிச்சயத்துக்குப் பின் பிடிக்காமல் போவதும்,

சீண்டிய தோழனைச் சிந்தையில் வைத்திருந்தாலும்,
அப்படி அவன் சிந்தையில் இருக்கிறான் என்பதே தெரியாமல்...
இப்போதும் அவனுடன் சண்டை போடுவதும்...

சண்டை முடிந்து, நட்பு மலர்ந்தாலும்,
அதில் சண்டையின் சாயல்கள் அவ்வப்போது எழுந்தாலும்...
கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை, திடீரென மனம் மாறி, ஒப்புக் கொள்வதும்...

அந்தத் தருணம் தான் = ஆடை நழுவும் நேரம்!
சிந்தையில் இருந்த "ரகசிய சிநேகிதன்"...
அவனுக்காக நெஞ்செல்லாம் துடிதுடித்துப் போய்...
அவனுக்கே ஆடையாகி விட்டால்???

நட்பு -> காதல் ஆனது இங்கே தான்!
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த...கருணை முருகாஆஆஆ!



கண்ட நாள் முதல் - திரைப்படத்தில் பாடலைக் கண்டு/கேட்டுக் கொண்டே மேலும் வாசியுங்கள்...




கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)

வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)

நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)

படம்: கண்ட நாள் முதல்
குரல்: சுபிக்ஷா, பூஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
வரி: என்.எஸ்.சிதம்பரம் (முரளீதரா, நினைத்த போது நீ வர வேண்டும் போன்ற பாடல்களை எழுதியவர்)

ராகம்: மதுவந்தி
தாளம்: ஆதி


இன்னும் சில பாடகர்களின் குரலில்...

* சுதா ரகுநாதன் - கர்நாடக இசையில்..

* GNB ஸ்டைலில் - அவர் மாணவர் தஞ்சாவூர் கல்யாணராமன்

* ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...அகிலா


என்னாங்க, பதிவு பிடிச்சி இருந்துச்சா? :)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு

உடுக்கை இழந்தவன் மெய்மேல் ஆங்கே
உடுக்கை ஆவதாம் = காதல்


கண்ட நாள் முதலாய்...
கந்த நாள் முதலாய்...
கருணை முருகன் அருள்-காதல்ல்ல்ல்ல் பெருகுதடீடீடீடீ!

Thursday, December 02, 2010

சுவாமிமலை

சுவாமிமலை பற்றி நான் புதிதாக எதுவும் எழுதி விடப் போவதில்லை. இது என் அனுபவங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சியே. மேலும் தந்தைக்கு உபதேசிக்கும் தத்துவம் பற்றி எனக்குத் தோன்றிய சில விஷயங்களையும் எழுதியுள்ளேன்.

முதன்முதலாக எப்போது சென்றேன் என்பது நினைவில் இல்லை. இது வரை எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்பதும் நினைவில் இல்லை. எல்லாம் அவனருள்.

பொங்கல், தீபாவளி விடுமுறைகளின்போது மாமா பையன்களும் நானும் கும்பகோணத்தில் இருந்து மிதி வண்டியிலேயே சென்று விடுவோம். அப்போதெல்லாம் தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு அவ்வளவாகக் கிடையாது. புதிதாக வரும் திரைப்படங்களின் மேலும் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததில்லை.

விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். கொஞ்சம் போலக் காசு வசூலாகும். இரண்டு மூன்று வாடகை மிதிவண்டிகள். ஒரு மிதிவண்டிக்கு மூவராகக் கிளம்பி விடுவோம். நாங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கும்பகோணம்-தாராசுரம்-வளையப்பேட்டை-மாங்குடி-சுவாமிமலை வழிதான். போக்குவரத்து அதிகமிருக்காது. வழிதோறும் சோலைகள். பணி, கல்வி காரணங்களுக்காகக் கடல் கடந்து எத்தனையோ வெளி நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் இருப்பினும் அந்த இளவயது பயண அனுபவம் தந்த சுகமே வேறு.

ஓரிரு சமயங்களில் நடந்தே கூட சென்றிருக்கிறேன். பாதை தெரியும். இலக்கும் தெரியும். கோவில் நெருங்க நெருங்க நடந்து வந்த துன்பமெல்லாம் மறைந்து போகும்.

இது அறுபடை வீடுகளில் ஒன்று (நான்காவது). பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்த ஸ்தலம். இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதன் தகப்பன் சுவாமி என்ற பெயர் பெற்றவர்.

இப்போதைக்குப் பிரணவத்தை விட்டுவிடுவோம். முடிந்தால் வேறொரு சமயத்தில் ஒரு பதிவு போடுகிறேன் அதைப் பற்றி.

தந்தைக்கு உபதேசித்தல் என்பது ஒரு பெரிய தத்துவம். நம்மை விடப் பெரியவருக்கு உபதேசம் செய்வது என்பது நம் நடைமுறை வழக்கில் பொதுவாக இல்லாத ஒன்று. அப்படியே நாம் சொல்வதாக இருந்தாலும் ஒரு ஆலோசனை வடிவத்தில்தான் அதை நாம் முன்வைப்போம். உபதேசிக்க என்றுமே துணிந்ததில்லை.

இந்த இடத்தில் சுவாமிநாதனை விட்டுவிடுங்கள். நாம் நிறையப் புரிந்து கொள்ள வேண்டியது தகப்பன் சுவாமியிடம் இருந்துதான். யார்ரா இவன், சுவாமிமலை பற்றி எழுதுமிடத்தில் சிவனைப் போற்றி எழுதுகிறானே. இவனுக்கு ஒரு கூடை எலுமிச்சம் பழம் வாங்கி அனுப்பினால் என்ன என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஒரு விஷயம் நமக்குத் தெரியாத பட்சத்தில் அதைத் தெரிந்து வைத்துள்ள வேறொருவரிடம் இருந்து கற்பது தவறே இல்லை. சிவன் வாய்பொத்தி நிற்பது முருகனுக்கு அடங்கி நிற்பது என்கிற பொருளில் நாம் இதைப் பார்க்கக் கூடாது. இவன் என்ன சின்ன பையன், நமக்குத் தெரியாததா என்ற எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் சொல்ல வரும் விஷயத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற தத்துவத்தின் குறியீடு அது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயம் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நம்மை விட வயதில் குறைந்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த வித ஈகோவும் பார்க்காமல் நாம் நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை இந்த ஸ்தலம் நமக்கு உணர்த்துகிறது.

இதைச் சொல்லும்போதே

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்ற குறளும் ஞாபகம் வராமல் இல்லை.

இந்தத் தத்துவத்தின் நீட்சியாக ஒரு சீனப் பழமொழியும் ஞாபகம் வருகிறது.

உனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ளும்வரை நீ முட்டாளாக இருக்கிறாய் அந்த விஷயத்தைப் பொருத்தவரை. எனக்குத் தெரியவில்லை, விளங்க வையுங்கள் என்று கேட்கும் தருணம் முதல் புத்திசாலி ஆகிறாய். எவ்வளவு நாட்கள் முட்டாளாக இருக்கவேண்டும் என்பது உங்கள் கையில்தான் (வாயில்?) உள்ளது.

இந்தத் தத்துவத்திற்கு இன்னொரு முகமும் உண்டு (dimension). பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலில் பிரம்மன் ஈடுபடுவது ஏற்புடையதன்று. இது நம் எல்லோருக்குமே பொருந்தும். ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள நாம் அதன் அடிப்படை விஷயங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிரம்மன் போலக் கஷ்டப் பட வேண்டி வரும்!

பெயர்தான் சுவாமிமலையே தவிர மலையொன்றும் கிடையாது. ஏகப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் இந்த ஸ்தலத்தில் விளக்கப்படுவதால் இந்த ஸ்தலத்தின் சிறப்பைக் கூறும் பொருட்டு, இவ்விடத்தை மலை (உயர்ந்த என்ற பொருளில்) என்று அழைப்பதில் தவறே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

வேலன் போல ஒரு ஞானக்கொழுந்து பிள்ளையாக வாய்க்கும் பட்சத்தில் அவன் சொல்வதைக் கேட்க யாருக்குத்தான் மனமில்லாமல் போகும்? இந்தத் தருணத்தில் பட்டிணத்தார் படத்தில் வரும் ஒரு பாடல் (பாடல் மருதகாசி, இசை ஜி. ராமநாதன் , பாடியது டிஎம்எஸ், பெண் குரல் யாரென்று தெரியவில்லை) ஞாபகம் வருகிறது. பட்டிணத்தார் சிறந்த சிவபக்தர். குழந்தை இல்லாதது குறித்து அவரும் அவர் மனைவியும் முறையே சிவனுக்கும், உமைக்கும் நிலவைத் தூது விடுவர் குழந்தை வரம் வேண்டி.

அதில் ஒரு இடத்தில்

…கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
நிலவே...

வேலன் தந்தை என்று இங்குக் குறிப்பிடுவது மிக விசேஷம். வெறும் ஓசை நயத்திற்காகக் (பாலன், வேலன்) குறிப்பிடப்பட்ட ஒரு விஷயமாக இல்லாமல் ஞானக் கொழுந்தான வேலன் போன்ற ஒரு பையன் உங்களுக்கு உண்டு, அது போல உங்கள் பக்தனுக்கும் ஒரு குழந்தையை வரமாக அளிக்க வேண்டும் என்று சிவனிடம் எடுத்துச் சொல்லுமாறு நிலவை வேண்டுகிறார் பட்டிணத்தார்.

வேலன் போன்ற ஒரு பாலனும் (புத்திசாலி) சிவன் போன்ற ஒரு தந்தையும் (நல்ல விசயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்பவர்) அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் பெரும் பேறு பெற்று விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஆலயம் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளது (ஆறு கிமீ). சுவாமிமலைக்குப் போகும் பட்சத்தில் பக்கத்திலேயே இருக்கக் கூடிய திருவலஞ்சுழி (ஸ்வேத விநாயகர்), பட்டீஸ்வரம் (துர்க்கை), திருசக்திமுற்றம் கோவில்களையும் தரிசித்து விடுங்கள்.

மற்றபடி திருக்கோவிலின் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை சொடுக்குங்கள்.

மேலும் அதிக விவரங்களுக்கு இந்த தினமலர் இணைப்பைப் பாருங்கள்.

எல்லாம் வல்ல முருகன் அருள் நமக்குக் கிட்டட்டும்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP