கண்ட நாள் முதலாய்...நட்பு or காதல் பெருகுதடி??
கண்ட நாள் முதல் என்னும் அழகிய தமிழ்த் திரைப்படம்! இந்த வார இறுதியில், மீண்டும் 50-ஆவது முறையாய், ஆர்வத்தோடு பார்த்து முடித்தேன்! :)
பிரசன்னா-லைலா, ரெண்டு பேருமே நட்புக் கோழிகளான சண்டைக் கோழிகள்!
ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொள்வது மட்டுமே வாடிக்கை! = இவர்களுக்குள் காதல்???
சேச்சே, நட்பு காதலாய்ப் பூக்குமா என்ன? அதுவும் சண்டையே வாடிக்கையாய்ப் போன இந்த நட்பு?
பூக்கும்! முருகனருள் தவழும் போது...
சரி, அதை விடுங்க!
நட்பு எப்படிங்க காதல் ஆகலாம்?
அது தவறு இல்லையா? அசிங்கம் இல்லையா?
நேற்று வரை நட்பு-ன்னு சொல்லிட்டு...
இன்னிக்கி காதல்-ன்னு சொன்னாக்கா, அதுல Trust எப்படிங்க வரும்? :)
உம்...நல்ல கேள்வி!
வெறுமனே நட்பில்...காதல் வராது!
ஆனால்...ஆனால்...ஆனால்...
அதீத நட்பு...காதலாய்த தான் மலரும்! எப்படீங்கறீங்களா?
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு
ஆனால், தானே உடுக்கையாய் மாறி விட்டால்??? = காதல்!
ஆடையை இழக்கும் போது, துளியும் தாமதிக்காமல், கை, தாமே சென்று ஆடையைப் பற்றும் அல்லவா?
ஐயோ! அவனுக்கு ஆடை கொடுப்போம் என்ற வரை நினைப்பது = நட்பு!
கொஞ்சம் மணித்துளி வித்தியாசமாச்சும் தேவைப்படும் ஆடை கொடுக்க!
அந்தக் கொஞ்சம் மணித்துளி கூடத் தாங்க மாட்டாது....
ஐயோ! அவனுக்கு ஆடை போகிறதே என்ற மாத்திரத்தில், தன்னையும் அறியாமல், ஓடிச் சென்று...
அவனுக்கே ஆடையாகி விட்டால்??? நட்பு -> காதல் ஆவது இங்கே தான்!
இரண்டுமே இடுக்கண் களைவது தான்! ஆனால்
* ஆடை கொடுப்பது = நட்பு
* ஆடை ஆவது = காதல்
* நட்பில் = அவனுக்கு"ம்"!
* நட்பு அதீதமாகிய காதலில் = அவனுக்"கே"!
கதியாய் விதியாய் வருவாய் அவ"னே"!
கதியாய் விதியாய் வருவாய் குக"னே"!!
படத்துக்கு வருவோம்! பிரசன்னா-லைலா நட்பு (அ) சண்டை!
இது காதலா?? அது அவர்களுக்கே தெரியாது!
அதனால் தான் கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி என்று இவர்கள் பாடாமல், பின்னணிப் பாடலாக மட்டும் ஓடுகிறது!
அவளுக்கு, அவனின் நண்பன் ஒருவனையே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு ஆவதும்,
அவளும் சிரித்தபடியே, வழக்கமான வயசுப் பொண்ணு போல் ஜாலியாய் ஒப்புக் கொள்வதும்,
மாப்பிள்ளைக்குப் பெண்ணை, நிச்சயத்துக்குப் பின் பிடிக்காமல் போவதும்,
சீண்டிய தோழனைச் சிந்தையில் வைத்திருந்தாலும்,
அப்படி அவன் சிந்தையில் இருக்கிறான் என்பதே தெரியாமல்...
இப்போதும் அவனுடன் சண்டை போடுவதும்...
சண்டை முடிந்து, நட்பு மலர்ந்தாலும்,
அதில் சண்டையின் சாயல்கள் அவ்வப்போது எழுந்தாலும்...
கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை, திடீரென மனம் மாறி, ஒப்புக் கொள்வதும்...
அந்தத் தருணம் தான் = ஆடை நழுவும் நேரம்!
சிந்தையில் இருந்த "ரகசிய சிநேகிதன்"...
அவனுக்காக நெஞ்செல்லாம் துடிதுடித்துப் போய்...
அவனுக்கே ஆடையாகி விட்டால்???
நட்பு -> காதல் ஆனது இங்கே தான்!
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த...கருணை முருகாஆஆஆ!
கண்ட நாள் முதல் - திரைப்படத்தில் பாடலைக் கண்டு/கேட்டுக் கொண்டே மேலும் வாசியுங்கள்...
கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)
வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)
நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)
படம்: கண்ட நாள் முதல்
குரல்: சுபிக்ஷா, பூஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
வரி: என்.எஸ்.சிதம்பரம் (முரளீதரா, நினைத்த போது நீ வர வேண்டும் போன்ற பாடல்களை எழுதியவர்)
ராகம்: மதுவந்தி
தாளம்: ஆதி
இன்னும் சில பாடகர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன் - கர்நாடக இசையில்..
* GNB ஸ்டைலில் - அவர் மாணவர் தஞ்சாவூர் கல்யாணராமன்
* ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...அகிலா
என்னாங்க, பதிவு பிடிச்சி இருந்துச்சா? :)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு
உடுக்கை இழந்தவன் மெய்மேல் ஆங்கே
உடுக்கை ஆவதாம் = காதல்
கண்ட நாள் முதலாய்...
கந்த நாள் முதலாய்...
கருணை முருகன் அருள்-காதல்ல்ல்ல்ல் பெருகுதடீடீடீடீ!
17 comments:
கண்ணபிரான் சார்
அழகான பதிவு. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. வடிவைப் (அழகன் – முருகன்) பற்றி எழுதும்போது வார்த்தைகள் அவையாகவே வடிவைப் (அழகு) பெற்று விடுகின்றன இல்லை!
அனந்தலக்ஷ்மி சடகோபனும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். என்னிடம் குறுந்தகடு உள்ளது. வலையில் உள்ளதா என்று தெரியவில்லை. பாம்பே ஜெயஸ்ரீயும் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
ஐம்பது முறை பார்த்தீர்களா?!
\\ஐயோ! அவனுக்கு ஆடை கொடுப்போம் என்ற வரை நினைப்பது = நட்பு! கொஞ்சம் மணித்துளி வித்தியாசமாச்சும் தேவைப்படும் ஆடை கொடுக்க!
அந்தக் கொஞ்சம் மணித்துளி கூடத் தாங்க மாட்டாது, ஐயோ! அவனுக்கு ஆடை போகிறதே என்ற மாத்திரத்தில், தன்னையும் அறியாமல், ஓடிச் சென்று...
அவனுக்கே ஆடையாகி விட்டால்??? நட்பு -> காதல் ஆவது இங்கே தான்!\\
கர்ணன் இடக் கையால் தங்க எண்ணெய்க் கிண்ணத்தைத் தானமாகக் கொடுத்த கதையும் நினைவுக்கு வருகிறது.
\\என்னாங்க, பதிவு பிடிச்சி இருந்துச்சா?\\
ரொம்பவே!
கல்யாணக் கோல முருகன் படம் கொள்ளை அழகு! அதில்தான் நாம் எல்லோருமே சொக்கிப் போகிறோமோ? ஒரு சில கணங்கள் நாம் பெண்ணாக இருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது! சமயங்களில் ஏன் புலவர்கள் நாயகி பாவம் கொண்டு பாடல் இயற்றுகிறார்கள் என்று இப்போது ஓரளவுக்குப் புரிகிறது.
கண்ணா...! எப்புடி இப்படில்லாம்! அருமை.
கந்தன் அழகைக் கண்டு களித்திடலில்
நாம் அனைவரும் பெண்டிரே!
அவன் அழகை ரசிப்போம்!
அவன் பெயரை சுவாசிப்போம்!
அவன் பெயரே வாசிப்போம்
அவனையே நேசிப்போம்!
கே.ஆர்.எஸ்
இதே மாதிரிதான் வசீகரா படத்துலயும் சண்டை பின் காதலாய் மாறும்.
"நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.
கண்கள் ஒரு முறை பார் என்றது."
:))
அனைவரையும் வசீகரிக்கும் அழகு படைத்தவன் கந்தன்.
அதனால் அவனே வசீகரன்.
நட்பினால் வரும் புரிதல் காதலாய் மிளிர்வதில் ஒன்றும் அதிசயமில்லையே!
நல்லதொரு புரிதலில் நம்பிக்கை பிறக்க, நட்பு காதலாகிப் போகும், இரு மனமும் ஒன்றுபட்டால்.
ஒருதலைக் காதல் எனின், அது ஆபத்துதான்.
ஆனால்,
முருகன் விஷயத்தில் இந்தப் பிரச்சினையே இல்லை!
அவன் என்றுமே நம்மையெல்லாம் காதலிப்பவனே!
அவன் ஆடை தருவதில்லை!
அவனுக்கு நாம்தான் ஆடையாகும் புண்ணியம் பெறுகிறோம்.
புரிந்தவர் கந்தனுக்கு ஆடையாவர்.
புரியாதவர் கந்தலாகிப் போகிறார்கள்!
கந்தன் விஷயத்தில் கந்தையகிப் போனாலும் கூட அது ஒரு வரமே!
கோபி,
கண்ணபிரான் சார் எல்லாம் வேணாம்! Sir = South Indian Rascal! :) அதுனால கே.ஆர்.எஸ் இல்லீன்னா ரவி-ன்னே கூப்பிடுங்க!
//வடிவைப் பற்றி எழுதும்போது வார்த்தைகள் அவையாகவே வடிவைப் பெற்று விடுகின்றன//
ஆமா! ஆனா பதிவில் மட்டும் அல்ல! உங்க பின்னூட்டில் கூடத் தான்! :)
//பாம்பே ஜெயஸ்ரீயும் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்//
சுட்டி கொடுங்களேன்!
//ஐம்பது முறை பார்த்தீர்களா?!//
Yessu! :)
இது வரை 50 times! இனியும் பார்ப்பேன்! Itz so feel good movie! கொஞ்சம் கொஞ்சம் என் கதையைப் போலவே :)
//\\என்னாங்க, பதிவு பிடிச்சி இருந்துச்சா?\\
ரொம்பவே!//
நன்றி!
//கல்யாணக் கோல முருகன் படம் கொள்ளை அழகு!//
வரைஞ்சது யாரு? :)
//ஒரு சில கணங்கள் நாம் பெண்ணாக இருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது! சமயங்களில் ஏன் புலவர்கள் நாயகி பாவம் கொண்டு பாடல் இயற்றுகிறார்கள் என்று இப்போது ஓரளவுக்குப் புரிகிறது//
ஹா ஹா ஹா
இது சூடான சுவையான இதமான ஆனால் விவகாரமான டாபிக்!
முன்பு எப்பவோ மாதவிப் பந்தலில் இட்டுள்ளேன்!
நாயகி பாவம், ஆண்-பெண் என்ற அடித்தள நோக்கில் அமையாது! ஆண்மை-பெண்மை, ஆளுமை-மென்மை என்ற அடித்தளமே அமைந்திருக்கும்!
உலகியலில், பெரும்பாலும் மென்மை என்பது பெண்களோடு தொடர்பாகக் காட்டப்படுவதால், "நாயகி" பாவம் என்ற பெயர் அதற்கு வந்து விட்டது!
ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், ஆண்கள் பெண்களை விட மென்மையானவர்களே! :))
//கவிநயா said...
கண்ணா...! எப்புடி இப்படில்லாம்! அருமை//
:)
சும்மா மனசுக்குத் தோனியதை உளறி வைச்சேன்-க்கா!
ஆனா, அது "மனசுக்கு" தோனியது!
வள்ளுவர் குறளும் உதவிக்கு வந்தது! மாற்றிப் பார்த்தேன்! :)
//அருணையடி said...
கந்தன் அழகைக் கண்டு களித்திடலில்
நாம் அனைவரும் பெண்டிரே!//
:)
"பெண்டிர்" என்று முடிந்த முடிபாகச் சொல்லிடத் தேவையில்லை!
கண்ணன் என் குழந்தை
கண்ணன் என் ஆசான்
கண்ணன் என் அமைச்சன்
கண்ணன் என் சேவகன்
கண்ணன் என் எதிரி
கண்ணன் என் தோழன்
கண்ணன் என் காதலன்
அவரவருக்கு ஆழ் மனத்தில் எப்படித் தோன்றுகிறதோ, அப்படி!
ஒருவருக்குத் தோன்றுவதை, இன்னொருவர் மதிக்கக் கற்றுக் கொண்டால், சிக்கலே இல்லை! :)
//அவன் அழகை ரசிப்போம்!
அவன் பெயரை சுவாசிப்போம்!
அவன் பெயரே வாசிப்போம்
அவனையே நேசிப்போம்!//
அருணையடிகள் TR இஷ்டைலுக்கு மாறீட்டாரு! :)
//அருணையடி said...
கே.ஆர்.எஸ்
இதே மாதிரிதான் வசீகரா படத்துலயும் சண்டை பின் காதலாய் மாறும்.//
ஆமாம்-ல்ல? :)
ஸ்னேகா சூப்பர்! விஜய் விஜய்! :)
//"நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.
கண்கள் ஒரு முறை பார் என்றது."//
ஒரு தடவை சொல்வாயா? :)
:))
//கந்தன். அதனால் அவனே வசீகரன்//
ஹா ஹா ஹா
எந்திரன் டாக்டர் வசீகரனா?
அப்போ சுட்டி யாரு? :)
:)
//அப்போ சுட்டி யாரு? :)//
சுட்டியா, சிட்டியாப்பா?
//கவிநயா said...
சுட்டியா, சிட்டியாப்பா?//
சிட்டியே தான்-க்கா!
Spelling Mishtake-uu :)
சமாளிக்கணும்-ன்னா,
சிட்டி சிட்டி ரோபோ, ஹே
சுட்டி சுட்டி ரோபோ! :)
@SK
நல்ல வார்த்தை சொன்னீங்க SK ஐயா!
முருகனிடத்தில் ஒரு தலை என்பதே இல்லை! அறு தலை!
அறு தலை, தலை விதி அறு தலை. தலை மேல் பிரமன் கையெழுத்தை அறு தலை! ஆறுதலைத் தரும் ஆறு தலை!
அதனால் அவன் பால், ஒரு தலை போன்று சில சமயங்களில் தோன்றினாலும்,
அது ஒரு தலை அல்ல, ஒன்றுதலை, அவனோடு ஒன்றுதலை!!
//புரிந்தவர் கந்தனுக்கு ஆடையாவர்.
புரியாதவர் கந்தலாகிப் போகிறார்கள்!//
//அருணையடி said...
கந்தன் விஷயத்தில் கந்தையகிப் போனாலும் கூட அது ஒரு வரமே!//
சிபி அண்ணா, சூப்பரு! நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க!
கந்தலாகிப் போனாலும் கசக்கிக் கட்டிக் கொள்வான் கந்தன் :)
//புரிந்தவர் கந்தனுக்கு ஆடையாவர்.
புரியாதவர் கந்தலாகிப் போகிறார்கள்!//
புரியாத சூரனும் மயிலாகிப் போனான்! கந்தலாகவில்லை! :)
/அருணையடிகள் TR இஷ்டைலுக்கு மாறீட்டாரு! :)
/
:)) Hehe!
/அறு தலை, தலை விதி அறு தலை. தலை மேல் பிரமன் கையெழுத்தை அறு தலை! ஆறுதலைத் தரும் ஆறு தலை!
அதனால் அவன் பால், ஒரு தலை போன்று சில சமயங்களில் தோன்றினாலும்,
அது ஒரு தலை அல்ல, ஒன்றுதலை, அவனோடு ஒன்றுதலை!!
/
Idhu KR Style!
நல்ல பதிவு. சுதா ரகுநாதன் பாடின "கண்ட நாள் முதலாய்" தான் என்னோட சாய்ஸ். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
Post a Comment