ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்! - சஷ்டி 2
ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்! [சஷ்டி-2]
திருமுருகன் உருவினில்தான் எத்தனையெத்தனை வடிவங்கள்
தீப்பொறியில் புறப்பட்டான் கங்கைமடி தவழ்ந்திட்டான்
சரவணத்தில் சேர்ந்தங்கு ஆறுகமலத்தில் மலர்ந்திட்டான்
கார்த்திகப் பெண்டிரின் முலைப்பால் குடித்திருந்தான்
அன்னையவள் அணைப்பினிலே ஆறுமுகன் எனத் திகழ்ந்தான்
முன்னைவினை தீர்த்திடவே முருகனென அவதரித்தான்
ஒருபழத்தை வேண்டியே ஆண்டியாகக் கோலம் கொண்டான்
குறும்பாக அவ்வைக்குச் சுட்டபழம் வேண்டுமா என்றான்
அறிவிழந்த பிரமனையே சிறையிட்டுச் செயல் புரிந்தான்
குருவாகி அப்பனுக்கே பாடம்சொன்ன சுப்பனானான்
தனிவேலைத் தாங்கியந்த சூரனையும் அழித்திட்டான்
மயிலேறும் முருகனாகத் திருவருளும் புரிந்திட்டான்
தேவர்குறை தீர்த்திருந்து தெய்வானையை மணமுடித்தான்
மூவருக்கும் மேலான சேனாபதியாய்த் திகழ்ந்திருந்தான்
குன்றுதோறும் கோயில்கொண்ட குமரனாக அருள்புரிந்தான்
சென்றந்தத் தினைப்புனத்தில் வள்ளியைத்தேடி அலைந்திருந்தான்
வேடனாக வேங்கைமரமாக விருத்தனாக வளைச்செட்டியாக
வேடங்கள் பலதாங்கி வேலனாக வள்ளியை மணம் கொண்டான்
எத்தனையோ வடிவங்கள் அத்தனையும் அவனுருவே
இத்தரையில் எனக்காக அவன்கொண்ட வடிவங்கள்
எவ்வுருவில் வந்தாலும் திருவருளுக்கோர் குறைவில்லை
மன்னுயிரைக் காத்திடவே அவனென்றும் பிறழ்ந்ததில்லை
அவரவர்க்குப் பிடித்தவண்ணம் அவ்வுருவைக் காட்டிடுவான்
ஆனாலும் அவனென்றும் குழந்தையென மகிழ்ந்திருப்பான்
குருவாகி வந்தவனும் குழந்தையாகிச் சிரித்திருந்தான்
திருவருளைத் தந்தவனும் குழந்தையெனக் கைக்கொட்டினான்
எல்லாமும் தந்தவனே குழந்தையெனைக் கொஞ்சச் சொன்னான்
நல்லோர்கள் ஆசியிலே நான் மகிழ்வேன் எனச்சொன்னான்
குழந்தைக் குமரனிவன் கொஞ்சிடவோர் தயக்கமில்லை
ஆசிவழங்கிடவோ அருளுக்கோர் பஞ்சமில்லை
எடுப்பதுவும் கொடுப்பதுவும் குழந்தைக்கு மிகப்பிடிக்கும்
கொடுப்பவனே எடுக்கச் சொன்னால் எனக்கதிலே மகிழ்வுதானே
பாலமுருகன் இவனையே மடியிலிட்டுக் கொஞ்சிடுவேன்
நாளுமிவனைச் சீராட்டி நல்லாசிகள் தந்திடுவேன்
ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தினிலே!
கொடுத்திடும் குழந்தையைக் கொஞ்சியே மகிழ்ந்திடுவேன்!
முருகனருள் முன்னிற்கும்!
5 comments:
ரோஜாவைத் திட்டினார்க்கும் ரோஜா மணம் வீசவே செய்யும்!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்போன் முருகன்!
அதை அழகாக இரண்டாம் நாள் சஷ்டிப் பதிவாக இட்டமைக்கு நன்றி SK ஐயா!
"சிறு பேர் அழைத்தனவும்" சீறி அருளாத
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
////கொடுத்திடும் குழந்தையைக் கொஞ்சியே மகிழ்ந்திடுவேன்!/////
அடுத்துக் கொஞ்சிட அடியேனிடமும் அக்குழந்தையைச் சற்றுத் தாருங்கள்!
பொருத்தமாக்ச் சொல்லி அழகு சேர்த்தீர்கள் ரவி!
மு.மு.!!
கொடுத்தவரே கேட்கையில் கொடுக்காதிருப்பேனோ! அவன் நம் எல்லார்க்குமே செல்லக் குழந்தை ஆசானே!
ஆசைதீர எடுத்துக் கொஞ்சி மகி்ழுங்கள்! நான் இன்னொரு வடிவை எடுத்துக் கொள்கிறேன்!:))்
எத்தனை அலங்காரம் ஐயா என் முருகனுக்கு என்று ஒரு பாடல் உள்ளது. அதிலும் இவ்வாறே திருமுருகனுடைய பல்வேறு அலங்காரங்கள் வரும்.உங்கள் பதிவைக் கண்டதும் அது தான் ஞாபகத்திற்கு வந்தது.
முருகனருள் அனைவரையும் காக்கட்டும்.
Post a Comment